Thursday, May 10, 2012

வழக்கு எண் : 18/9 - விமர்சனம்


முதல் வரியிலேயே சொல்லிவிடுகிறேன். இந்தப் படத்தை நிச்சயம் நீங்க பார்க்கணும்.

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் ஒரு பெண்ணை மோட்டர் பைக்கில் துரத்திப் போய், அவள் அழகாக இல்லை என்பதற்காக அவள் முகத்திலேயே எச்சில் துப்புகிற ஹீரோக்களை கைதட்டி, விசிலடித்து ரசித்த நம்மை கன்னத்தில் அறைகிறது இந்தப் படம்.  உண்மையிலேயே நாம் காரித்துப்ப வேண்டியவர்கள் யார் என்பதை டைட் குளோசப்பில் காட்டுகிறது.


முதல்பாதி ஒரு கத்தியின் வீச்சு போல சரேலென்று முடிவடைகிறது. கச்சிதமாக ஒரு மணி நேரம்தான். ஆனால் அதற்குள் வயல்களை விழுங்கும் நகரம், கந்து வட்டி நரகம், முறுக்குத் தொழிலில் அடிமைச் சிறுவர்கள், கஞ்சா தெருக்கள், பாலியல் வடுக்கள், தெருவோர இட்லிக்கடை வாழ்க்கை என பலவற்றை மிக நெருக்கமாக ஆனால் நறுக்கென்று மனதில் தைப்பது போல சுளீரென்று சொல்லியிருக்கிறார் பாலாஜி சக்திவேல். அவரை நேரில் பார்த்தால் சல்யூட் அடிப்பேன்.  முகங்களை நேசிக்கிற உலகில், மனித மனங்களை நேசிப்பவர்களால் மட்டுமே வாழ்க்கையின் நுணுக்கங்களை இத்தனை அருகில் கவனிக்க முடியும்.

படம் முடிந்து பார்க்கிங்கை விட்டு நகரும்போது, செம படம் மச்சி. இதைப் போய் வேணாம் வேணாம்னு சொன்னியே, என்று ஒரு நண்பர் தன் நண்பேன்டா திட்டிக் கொண்டிருந்தார். இந்தப் படம் ஓடணும், அப்பதான் நல்ல தொடர்ந்து நல்ல படம் வரும், என்றார் வேறு யாரோ ஒருவர். திரும்பிப் பார்க்க முடியாத பார்க்கிங் நெரிசலில் அவர் முகத்தை கவனிக்கமுடியவில்லை.

படத்தின் ஹீரோ திரைக்கதை தான். ஒரே காட்சியின் ஒரு பாதியை மட்டும் காண்பித்துவிட்டு, மறுபாதியை இடைவேளைக்குப் பின் வேறொரு கதாபாத்திரத்தின் வழியாகத் தொடரும்போது, படம் ஜிவ்வென்று முன்னும் பின்னும் சம்பவங்களை ஒரு மாலை கட்டுவது போல, கோர்த்துக் கொண்டே வருகிறது. இந்த கதை நகர்த்தல் டெக்னிக்கை இன்னும் வேகப்படுத்துகிறது காமிரா. சில நேரங்களில், கதாபாத்திரங்களின் கண்களாகவும், சில நேரங்கள் அந்தக் கண்கள் பார்க்கும் எண்ணெய் ஊற்றப்படும் முறுக்குச் சட்டியாகவும், தேநீர் நிரப்பப்படும் கோப்பையாகவும் நம்மை உணர வைக்கிறது. ஆனாலும் பாத்திரங்களின் உடம்போடு ஒட்டிக் கொண்டு நகரும் பாடிகேம் ஷாட் (சுவாரசியமான சில கோணங்களைத் தவிர மற்றவை) எனக்குப் பிடிக்கவில்லை.

இன்ஸ்பெக்டர் குமரவேல். விளம்பரங்களில் அவர் முகத்தை அசட்டையாகக் கவனித்த போது, எஸ்.ரா என நினைத்துவிட்டேன். அருமையான இயல்பான நடிப்பு. அதே போல ஸ்ரீ. முதல்படம் என்றே தெரியவில்லை. கதாநாயகிகளின் தேர்வும் அசத்தல். ஊர்மிளா, மஹிமா! இருவருமே கச்சிதம்.  வேலைக்காரப் பெண்ணாக வரும் ஊர்மிளாவுக்கு மொத்தம் 10 வரிகளுக்குள்தான் வசனம். ஆனால் முகபாவம் அழகு. இளமை திமிரும் டீன் ஏஜ் நடுத்தர வர்க்க டீன் ஏஜ் பெண்ணாக மஹிமாவும் கண்களை விட்டு நகர மறுக்கிறார். பணக்கார வீட்டுப் பையன் தேர்வும் அட்டகாசம்.

கூத்து கட்டும் இளைஞனாக வந்து நீ கவலைப் படாதய்யா, நான் இருக்கேன்யா என்று பெரிய மனுஷத்தனத்தோடு பேசும் சின்னப் பையன் வித்தியாசமான பாத்திரப் படைப்பு. (அவன் பெயரை கவனிக்கல)

முக்கிய கதாபாத்திரங்கள் திரையை ஆக்கிரமித்திருக்க, பிண்ணனியில் நடமாடும் நபர்களின் சார்பில் ஒலிக்கும் வசனங்கள் காட்சிகளை முழுமைப்படுத்துகின்றன. அதே போல சுவாரசியமான துண்டு துண்டு ஷாட்கள். உதாரணமாக ஸ்ரீ சாப்பிட உணவின்றி மயங்கிக் கிடக்க, அவன் முகத்தைக் கடந்து போகும் டிபன் பாக்சும், ஆபீஸ் போகும் அவசரக் கால்களும்.

நீங்கள் டீன் ஏஜ் பெண்களின் பெற்றோராக இருந்தால், இந்தப் படம் பார்த்தவுடன், அவளுக்கு மொபைல் கால் வரும்போதெல்லாம், அவளை முன்பை விட அதிக அக்கறையுடன் கண்காணிப்பீர்கள்.

நீங்கள் டீன் ஏஜ் பெண்ணாக இருந்தால், உங்கள் இளமையை குறி வைத்து வீசப்படும் வசீகரங்கள் குறித்து இனி எச்சரிக்கையுடன் இருப்பீர்கள்.

நீங்கள் வெறும் சினிமா இரசிகராக இருந்தால், இந்தப் படம் பார்த்தவுடன், தரமான சினிமாக்களின் இரசிகனாக மாறிவிடுவீர்கள்.

இந்த வழக்கு ஜெயித்துவிட்டது.


Post a Comment