Friday, May 11, 2012

செல்வா ஸ்பீக்கிங் - 4


எழுதிவிட்டு போஸ்ட் பண்ணப்படாத ஒரு வாசகர் கடிதத்துடன் இக்கட்டுரை துவங்குகிறது. சென்ற IOC (In & Out Chennai) இதழின் முதல் பக்கத்தில் ஆர்த்தி மங்களா எழுதியிருந்த கட்டுரை அருமை. திடீர் மின் துண்டிப்பால் விளக்குகள் அணைந்தாலும், கார்களின் விளக்கொளியில் தொடர்ந்து தங்கள் நிகழ்ச்சிகளை நடத்தி முடித்த பள்ளிக் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களின் முயற்சி மிக மிக இன்ஸ்பயரிங். இந்தக் கடிதத்தை எழுதி போஸ்ட் பண்ணாத வாசகர் நான்தான்.

கட்டுரையும் எழுதிவிட்டு, வாசகர் கடிதமும் எழுதினால் பிரசுரிப்பார்களா எனத் தெரியவில்லை. அதனால் கடிதத்தையே என் கட்டுரையின் முதல் பாராவாக்கிவிட்டேன்.

பெரும் தலைவர்களின் சாதனைக் கதைகளை விட, இது போன்ற எளிய மனிதர்களின் எளிய வெற்றிதான் அதிகம் நம்பிக்கையும், உற்சாகமும் தருகிறது. அந்த பள்ளி மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கை தட்டி உற்சாகப்படுத்தியவர்களுக்கும், கார் லைட்டுகளுக்கும் வாழ்த்துகள்!

அந்தக் கட்டுரையில் ஒரே ஒரு விஷயம் மிஸ்ஸிங். பவர் கட் ஆனதும், ஆர்த்தி மங்களா என்ன மேஜிக் செய்தார் என்பது பற்றிய விபரம் இல்லை. சென்ற வாரம் ஒரு பவர்கட் இரவில் நான் ஒரு மாஜிக் செய்தேன். பவர்கட் ஆனதும், இருளில் யாருக்கும் தெரியாமல் டப்பாவுக்குள் இருந்த, கால்கிலோ திருநெல்வேலி ஹல்வாவை மறைய வைத்துவிட்டேன். வீட்டு வாண்டுகள் சண்டைக்கு வரும் என்பதால், எப்படி அந்த மாஜிக் செய்தேன் என்பதை திருநெல்வேலி இருட்டுகடை வாசலில் நின்று கேட்டாலும் சொல்ல மாட்டேன்.

முசோலினி
பின்னர் தேவைப்படும் எதையாவது மறக்காமலிருக்க வேண்டுமென்றால், அதை எங்காவது எழுதி வைப்பது வழக்கம். எனவே முசோலினி என்ற இந்தப் பெயரை இங்கே எழுதி வைக்கிறேன். ஏன் மறக்கக் கூடாது என்பதற்கு விடை (அ) கேள்வி கடைசி பாராவில் உள்ளது.

கழுகு - சுஜாதா எழுதிய சுருக்கமான நீதிக்கதை!
ஒரு கழுகு சுதந்திரமாகப் பறந்து சென்றுகொண்டிருந்தது. விஷ் என்ற சப்தம் கேட்டு அது என்ன என்று பார்ப்பதற்குள் ஒரு அம்பு அதைத் தாக்க, அடிபட்டு தன் இறக்கை இழந்து சுழன்று சுழன்று சொத்தென்று கீழே விழுவதற்கு முன் தன்னைத் தைத்த அம்பை ஒரு தடவை பார்த்தது. கூர்மையான முனை, நீண்ட உடல், அதன் வாலில் கழுகிறகு! ‘அடப்பாவமே!’ என்று சொல்லிகொண்டே செத்துப்போனது.

நீதி : பல தடவை நம் எதிரிகளுக்கு நம்மை அழிக்க நாமே உதவி செய்து தருகிறோம்.

சுருக்கமா எப்படி எழுதறது என்பதை தலைவர் சுஜாதாகிட்டதான் கத்துக்கணும். அதே பாணியில நானும் ஒரு கதை டிரை பண்ணப் போறேன்.

காக்கா - நான் எழுதிய சுருக்கமான நீதிக்கதை!
பாட்டி சுட்ட வடையை நைஸாக கொத்திக் கொண்டு மரத்தில் அமர்ந்தது காக்கா. அதைப் பார்த்த நரி, ஹேய் காக்கா நீ ரொம்ப அழகு என்றது. நரித் தந்திரம் தெரிந்த காக்கா, வடையை காலில் பிடித்துக் கொண்டு, நான் அழகு என்று நீ சொன்னதை அப்படியே ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸா போடு என்றது.

நீதி :
செக்புக் இல்லார்க்கும் உய்வுண்டாம் - உய்வில்லை
ஃபேஸ்புக் இல்லா நபர்க்கு.

சுஜாதாவும், வள்ளுவரும் மன்னிப்பார்களாக!

வரம்பு மீறும் சின்னத்திரை
ஜீ தமிழில் அச்சமில்லை அச்சமில்லை என்றொரு நிகழ்ச்சி. நிர்மலா பெரியசாமி, பிரிந்து கிடக்கும் குடும்பங்களை எதிரெதிர் சோபாக்களில் உட்காரவைத்து கன்னாபின்னாவென்று கேள்வி கேட்கிறார்.
உன் அப்பா உன்னை அடிக்கிறாராம்மா.. அப்பெண் அழுகிறாள். தந்தை மறுக்கிறார். உடனே அவரை வெளியே அனுப்பிவிட்டு, அப்பெண்ணிடம், ஏம்மா உன் அப்பா உன்னை தனியா கூப்பிட்டு ...... . . . . . அதற்குப் பின் வந்த வார்த்தைகள் எல்லாம் மகா வக்கிரம். தனியறைக்குள் ஆலோசனையாக சொல்ல வேண்டியவற்றை, ஏதோ பட்டி மன்றம் போல, பொதுவில் வைத்து விசாரிப்பதை உடனே தடை செய்ய வேண்டும். காமிராவின் முன்னால் தன்னை மறந்து அழும் அந்த டீன் ஏஜ் பெண், அதே நிகழ்ச்சியை டிவியில் பார்க்கும்போது மனரீதியாக எப்படியெல்லாம் பாதிக்கப்படுவாள். குழந்தைகளுடன் அமர்ந்து இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் மனதில் இந்த நிகழ்ச்சி ஏற்படுத்தும் தாக்கம் என்ன என்பதைப் பற்றி யாரும் சிறிதும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. வித்யாபாலன் நடித்த டர்ட்டி பிக்சரை இரவு 11 மணிக்கு மேல்தான் ஒளிபரப்ப வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதே ரீதியில் இந்த நிகழ்ச்சிக்கும் ஒரு கட்டுப்பாடு வேண்டும். அல்லது நிறுத்தப்பட வேண்டும்.

மீண்டும் முசோலினி
இரண்டாம் உலகப்போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. மிஸ்டர் X ஹிட்லருக்கு தந்தி அனுப்பினார்.

''நிலைமை மிக மோசம். உணவு அவசரத்தேவை. தயவுசெய்து உடனே அனுப்பி வைக்கவும்.''
ஹிட்லரிடமிருந்து பதில் தந்தி சென்றது,''உணவுப் பொருட்கள் தங்களுக்கு அனுப்ப வசதி இல்லை. வருந்துகிறேன் ஒவ்வொரு தானிய மணியும் உள்நாட்டிற்கும்,ரஷ்யப் போர்முனைக்கும் தேவைப்படுகிறது ஆகவே வயிறுகளைப் பெல்ட்டினால் இறுகக் கட்டிக் கொள்ளவும்.''
மிஸ்டர் X மீண்டும் தந்தி அனுப்பினார், ''தயவு செய்து பெல்ட்டுகளையாவது அனுப்பி வையுங்கள்.'' சரி அந்த மிஸ்டர் X யார் எனத் தெரிய வேண்டுமா? நான்காவது பாராவின் தலைப்பு அவர் பெயர்தான்.

In & Out Chennai April (15-30) இதழில் எழுதியது
Post a Comment