ஒரு அனிமேஷன் படத்திற்கு இத்தனை விசில்களும், கைதட்டல்களும், உற்சாகக் குரல்களும் இதுவரை கேட்டதில்லை.
ரஜினி! ரஜினி! ரஜினி!
ஒரு நண்பரை இழந்த சோகத்துடன்தான் படம்பார்க்கச் சென்றிருந்தேன். நண்பரை இழந்த வருத்தமும், அனிமேஷன் என்ற எண்ணமும் சூழ்ந்திருந்ததில் முதல் சில நிமிடங்களுக்கு படத்தில் ஒன்றமுடியவில்லை. அதற்குப்பின் ரஜினி குதிரையில் பறந்துவரும் அறிமுகக்காட்சியில் குழந்தைகளின் உற்சாகக் குரல்களால் சில அங்குலங்கள் படத்திற்குள் ஈர்க்கப்பட்டேன். ஆனாலும் நம்மை கூர்ந்து நோக்காத கண்களும், உடலசைவுக்கும், அளவுக்கும் ஒவ்வாத கை, கால்களும் எனது ஈர்ப்பைக் குறைத்தது.
ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக கே.எஸ்.ரவிக்குமாரின் அபாரமான கதை நகர்த்தலுடன் ரஜினியின் மேஜிக் குரலும், ஏர்.ஆர்.இரகுமானின் இசையும் கைகோர்த்துக்கொள்ள கோச்சடையான் நமக்குள் வளர ஆரம்பித்துவிடுகிறது.
நறுக்கென்று சொல்வதென்றால் தீபிகாபடுகோனின் சண்டைக்காட்சிதான் எதிர்பாராத முதல் சுவாரசிய திருப்பம். அந்த இடத்தில் துவங்குகிற பரபரப்பு இறுதிவரை ஜிவ்வென்று பரவுகிறது.
படத்தின் ஹைலைட் கோச்சடையானாக வரும் ரஜனிதான். ருத்ரதாண்டவமும், சண்டைக்காட்சிகளும் பக்கா கமர்ஷியல் ஃபிளாஷ்பேக். ரஜினிக்காகவே கச்சிதமாக யோசித்திருக்கிறார் கே.எஸ்.இரவிக்குமார்.
இத்தனை எதிர்மறை விமர்சனங்களையும், கேலிகளையும் இதுவரை எந்த ரஜனி படமும் சந்தித்ததில்லை. படத்தின் தொடர் தாமதம் ரஜினி இரசிகர்களையே கொஞ்சம் சலிப்படைய வைத்தது. ஆனால் அத்தனையையும் தவிடுபொடியாக்கி கோச்சடையான் ஜெயித்துவிட்டான். அனிமேஷனாக தோன்றினாலும் திரையில் என்றும் நான்தான் மாஸ், நான்தான் பாஸ் என்று ரஜினி நிரூபித்துவிட்டார்.
சௌந்தர்யாக ரஜினிகாந்த். ரஜியின் மகள் என்பதற்காக கிடைத்த பிரபல்யத்தைவிட, அதற்காக அவர் சந்தித்த கேலிப்பேச்சுகள் மிக அதிகம். ஆனால் அனைத்தையும் புன்னகையுடன் கடந்துவிட்டார். வென்றும்விட்டார். இந்தியாவின் முதல் மோஷன் கேப்சரிங் படத்தை இயக்கியுள்ளார் என்பதற்காக அவரை நிச்சயம் பாராட்டித்தான் ஆகவேண்டும். இன்றைக்கு வீட்டுக்கு வீடு ஒரு அனிமேட்டர் இருக்கிறார். மூன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தை கூட ஃபிளாஷ் அனிமேஷன் செய்கிறது. விஸ்காம் மாணவர்கள் டிஜிட்டலில் என்னென்னவோ மேஜிக் செய்கிறார்கள். தினம் தினம் யுடியூபில் அத்தனை டெக்னிக்கையும் பார்த்து படம் எடுக்கிறார்கள்.
சினிமா இனிமேலும் அதிசயமில்லை.. யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற பொது மனநிலை இன்று இருக்கிறது. இந்தச் சூழலில் சௌந்தர்யா எதிர்கொண்ட எதிர்மறை விமர்சனங்கள் எதிர்பாராதது அல்ல என்றாலும், அளவுக்கு அதிகமானது என்பதையும் மறுக்க முடியாது. ஆனால் படத்தை தொடரும் டைட்டிலில் அவர் நிறைவாக கையசைத்து விடைபெறுவது போல, தற்போது நிச்சயம் நிறைவாக உணர்வார். படம் ஹிட்.
கோச்சடையான் ரஜினி இல்லாமல் சாத்தியப்பட்டிருக்காது. ஆனாலும் ஏ.ஆர்.இரகுமானின் வரவு எப்படி டிஜிட்டல் இசை அமைக்கும் முறையை இந்தியாவில் பரவலாக்கியதோ அதுபோல மோஷன் கேப்சரிங் என்கிற டிஜிட்டல் துறைக்கு புதிய வாசல்களை திறந்துவிட்டிருக்கிறது கோச்சடையான். இந்த தொழில்நுட்பத்தை அடுத்து வரும் இளைஞர்கள் இன்னும் சிறப்பாக பயன்படுத்தி, புதிய உயரத்தை தொடுவார்கள், தொட வேண்டும்.
கோச்சடையான் ரஜினிக்கு மட்டுமல்ல, அவருடைய இரசிகர்களுக்கு மட்டுமல்ல, இந்திய சினிமாவுக்கே தொழில் நுட்ப ரீதியாக புது அனுபவம்.
நான் அடிப்படையில் ரஜினி இரசிகன். அதனால் இந்த விமர்சனத்தில் மிகை இருக்கலாம். ஆனாலும் இது நல்ல படம். அதற்கு ஒரே கோச்சடையானை மீண்டும் ஒரு முறை பார்க்கப்போவதாக எங்கள் வீட்டுக் குழந்தைகள் சொல்லியிருக்கிறார்கள்.
கோச்சடையான்... எங்கள் கோச்சடையான். இந்த சம்மருக்கு ரஜினிமேனியா துவங்கியாச்சு.
2 comments:
Super! Supero Super!
ரஜினி மேல இருந்த கோபம் எல்லாம் போயே போச்சு. அவருடைய எல்லா படத்தையும் போல இந்த படமும் அவருடைய முந்தைய வசூலை முறியடிக்கும்.லிங்கா விற்கு target fixed
Post a Comment