பள்ளிக்கூடம் படிக்கும்போதே சேமிக்கத் துவங்கவேண்டும்.
தற்போது ஒரு சர்வதேச நிறுவனத்தில் தலைமை அதிகாரியாக இயங்கும் எனது நண்பன் பள்ளிப்படிப்பை முடிக்கும்போது ஒரு ப்ரீமியர் பத்மினி கார் வாங்கினான். கல்லூரி முடிக்கும்போது ஒரு வீடு வாங்கிவிட்டான். நம்பினால் நம்புங்கள்... அனைத்தும் உண்டியலில் சேர்த்த பணம் மட்டுமே.
பெரிய தொகையாக சேமிக்க வேண்டும்.
சேமிப்பில் கஞ்சத்தனம் கூடாது. இயன்றவரை பெரிய தொகையாக சேமிக்க வேண்டும்.பக்கத்துவீட்டு அங்கிள் ஒருவர் சம்பளக் கவர் வந்ததும் 50 சதவிகிதத்தை RD, FD, SB என வகை பிரித்து உடனே பாங்கில் போட்டுவிடுவார். அவரது மனைவி செலவுக்கு பணம் இல்லை என்று சண்டை பிடித்தாலும் அசரமாட்டார். சேமிப்புத் தொகையிலிருந்தே அவருடைய இரண்டு மகள்களுக்கும் நயா பைசா கூட கடன் இல்லாமல் திருமணம் செய்துவிட்டார்.
வங்கிகளின் தானியங்கி (Automatic Fund Transfer) சேவைகளை பயன்படுத்தவேண்டும்
அரசாங்கத்தில் வேலை பார்த்த என் நண்பர் ஒருவர் வங்கியிலிருந்து கிடைக்கும் வட்டியை விட்டு வைக்கவே மாட்டார். RDகணக்கிற்கு மாதத்தவணையாக கட்டிவிடுவார். RD முழுமை அடைந்ததும் அப்படியே அதை FDயா மாற்றிவிடுவார். இவற்றையெல்லாம் செய்வதற்கு வங்கியில் சொல்லி ஆட்டோமேட்டிக் வசதிகளை வாங்கி வைத்துக்கொண்டிருக்கிறார். எனவே மழை, சோம்பேறித்தனம், அவசர செலவு என எதற்கும் வீணாகாமல் இந்த பணப்பரிமாற்றங்கள் எல்லாம் ஆட்டோ டிரான்ஸ்பராக நடந்துவிடுகிறது.
ஓய்வு காலத்திற்கு வேண்டிய தொகையை திட்டமிட வேண்டும்
நான் உட்பட நண்பர்களில் பலர் ஐம்பது வயதாகியும் வேலை செய்துகொண்டே இருக்கிறோம். ஆனால் பழம் என்று நாங்கள் கேலி செய்த நண்பன் ஒருவன், அமைதியாக மகள், பேரன், பேத்தி மற்றும் மருமகனுடன் பொழுதைக்கழித்துக் கொண்டிருக்கிறான். பென்ஷன் போல அவனுடைய சேமிப்புத் தொகையிலிருந்தே வட்டி வருகிறது. அதனால் தன் தேவைகளுக்கு யாருடைய தயவையும் எதிர்பாராமல் தலைநிமிர்ந்து வாழ்கிறான்
கிரெடிட் கார்டு தவணைகளை குறித்த தேதிக்குள் கட்ட வேண்டும்.
எனது சகோதரன் இந்த விஷயத்தில் எக்ஸ்பர்ட். தேவை பெரிதாக இருந்தால் கிரெடிட் கார்டு வழியாகத்தான் வாங்குவான். ஆனால் குறித்த தேதிக்குள் திருப்பி செலுத்திவிடுவான். இதனால் அவனுக்கு வட்டியில்லா கடன் சாத்தியமாகிறது. அவனுடைய க்ளீன் நடவடிக்கையால் வங்கியில் அவனுக்கு நல்ல பெயர். கிரெடிட் கார்டு லிமிட் ஏறிக்கொண்டே இருக்கிறது. அவனால் எல்லா அவசரத் தேவைகளையும் சமாளிக்க முடிகிறது (குறித்த காலத்தில் திருப்பிச் செலுத்திவிடுவதால்).
ஏழையைப் போல செலவழிக்க வேண்டும்
ஆஸ்திரேலியாவில் கல்லூரிப் பேராசியரியராக கை நிறைய சம்பாதிக்கும் எனது நண்பர் ஒருவர், எளிமையாக ஒரு ஏழையைப் போலத்தான் செலவு செய்வார். மால்களை முற்றிலும் தவிர்ப்பார். குழந்தைகளுக்காக மால் தியேட்டர்களுக்கு வந்தாலும் அங்கே அனாவசியமாக உணவுகளுக்கு செலவழிப்பதை தவிர்ப்பார். கார் வைத்திருந்தாலும் குடும்பத்தோடு பல இடங்களுக்கு பஸ்ஸில் சென்று வருவார். அப்படிச் சேமிக்கிற தொகையை கல்விக்கும் மருத்துவத்திற்கும் பயன்படுத்துகிற கலையை அவருடைய குடும்பமே கற்றிருக்கிறது.
முதலீடு செய்வது (Invest) என்பது பணத்தை விரைவாகப் பெருக்க ஒரு வழி. ஆனால் இதில் ரிஸ்க் உண்டு. எந்த அபாயமும் இல்லாமல் நிதி சுதந்திரத்துடன் வாழ இந்த வழிகள் உதவும் என்பது என் அனுபவப்பாடம்.
No comments:
Post a Comment