Saturday, April 13, 2024

காற்றின் இரைச்சல்களுக்கு நடுவில் ஒரு தம்பூராவைப்போல . . .

 

Istigfar !!!

முதன்முதலாக இந்தப் பாடலைக் கேட்டபோது, முற்றிலும் பரிட்சயமில்லாத வடிவம் என்னை திகைக்க வைத்தது. ஆனாலும் அறிமுகமில்லாத மொழியில் பாடலை நகர்த்திய தாள வாத்தியக் கருவியின் ஒலியைப் பிடித்துக் கொண்டு மெதுவாக பாடலுக்குள் நுழைந்தேன். பிரமாண்டமான சமுத்திரத்தின் கரையிலிருந்து ஆழத்தை அறியும் உணர்வுடன் பாடலை உள்வாங்கத் துவங்கினேன்.
காற்றின் இரைச்சல்களுக்கு நடுவில் ஒரு தம்பூராவைப்போல மனதை ஒருமுகப்படுத்தியது பாடல். அதே நேரம் அடுக்கடுக்கான குரல்களின் கீழ் அடுக்கில் பூமி புரள்வதுபோன்ற ஒரு அடியிசை மனதைப்பிசைந்தது. கரையிலிருந்த நான் திடீரென கடலின் ஆழத்துக்குள் உள்ளிழுக்கப்பட்டது போல உணர்ந்தேன்.
இனம் புரியாத பதற்றம், பதறாதே என ஒரு குரல், நீரில் முங்கும்போது கேட்கும் நசுங்கிய ஒலிகள், கூடவே நானிருக்கிறேன் என நம்மைக்காக்கும் ஒருவரின் கரம், கனத்த நிமிடங்களைக் கடந்த பின் நிகழும் ஆசுவாசம், இதழில் மறைந்து நிறையும் புன்னகை என்பது போன்ற கலவையான அனுபவம்.
ஒலி ஏற்படுத்தாத மணல் துகள் ஒன்று உருளுவது போல பாடல் அமைதியாக முடிவடைகிறது. அந்தக் கணத்தில் இசையும், இசைப்பவரும், அதை இரசிப்பவரும் என அனைவரும் ஒன்றுதான் என்கிற உணர்வு.
அன்பைக் கோருபவனுக்கு திரும்பவும் அன்பு கிடைக்குமா எனத் தெரியாது. ஆனால் அன்பைச் செலுத்துபவனின் மேல் அனைவரும் அன்பைப் பொழிவார்கள். உங்களுக்கு யார்மேலாவது கோபமிருந்தால் மன்னித்துவிடுங்கள். உங்களை இந்தப்பிரபஞ்சம் மன்னிக்கும்.
இன்று அதிகாலை மூன்று மணிக்கே எழுந்துவிட்டேன். அப்போது ஒலிக்கத் துவங்கிய பாடல் இன்னும் எனக்குள் கேட்டுக் கொண்டே இருக்கிறது. எங்கிருந்து ஒலிக்கிறது என்றுதான் தெரியவில்லை. அதுதான் இந்தப் பாடலின் மகத்துவம்.
Istigfar என்றால் . . . உங்கள் அனுபவத்தைக் கொண்டு நீங்களே நிரப்பிக் கொள்ளுங்கள்.

No comments: