கடவுள் நம்முடன்தான் இருப்பார் என்று எல்லோரும் நம்புகிறார்கள். கடினமான நேரங்களில் உதவி செய்வார் என்று எண்ணுகிறார்கள்.
ஏமாற்றப்பட்டு பாலைவனத்தில் அடிமையாக மாட்டிக்கொள்ளும் நஜீபும் அப்படித்தான் நம்புகிறான். அவனை அடிமைப்படுத்தி சவுக்கால் அடித்து கொடுமைப்படுத்தும் கஃபீலும் கடவுளைத்தான் அழைக்கிறான். தாகத்துக்கு ஒரு சொட்டு நீர் கூட கிடைக்காமல் நா வறண்டு மாண்டுபோகும், நஜீபின் நண்பன் ஹக்கீமும் கடவுளைத்தான் தொழுகிறான். நஜீப் தப்பிச் செல்ல உதவும் இப்ராஹீமும் கடவுளைத்தான் வேண்டுகிறான்.
இந்தக் கோணத்தில் சிந்தித்தால் கடவுள் யாருக்குத்தான் ஆதரவாக இருந்தார் என ஒரு கேள்வி எழுகிறது. இதற்கு உங்களுடைய பதில் என்னவாக இருக்கும் எனத் தெரியவில்லை. ஆனால் எனக்கென ஒரு பதில் இருக்கிறது. நல்லவரோ, கெட்டவரோ, எவராக இருந்தாலும் கடவுள் யாருக்கும் ஆதரவாக இருப்பதில்லை. அவர் வாழ்வதற்கான தருணங்களை அமைத்துத் தருகிறார். அல்லது அந்தத் தருணமாகவே அவர் இருக்கிறார்.
அந்தத் தருணங்களில் ஏமாற்றுகிறோமா? ஏமாறுகிறோமா? நல்லது செய்கிறோமா? தீங்கு செய்கிறோமா என்பது அவரவர் குணங்களைப் பொறுத்து அமைகிறது. கடவுளை எதற்காக நம்புகிறோம் என்பதைப் பொறுத்து அந்தக் குணம் நம்முடனேயே இருக்கிறது. நாம் யார் என்பதை தீர்மானிக்கிறது.
ஆடுஜீவிதம் படத்தில் கடவுளை துணைக்கு அழைக்காத ஜீவன்கள் ஆடுகளும், ஒட்டகங்களும்தான். ஆரம்பத்தில் ஆடுகள் கூட நஜீபை முட்டிச் சாய்க்கும். ஆனால் போகப் போக அந்த ஆடுகளுடன் அவன் ஒன்றிப்போய்விடுவான். அந்த ஆட்டு மந்தையில் ஒருவனாக அவனும் மாறிப்போய்விடுவான். உயிர்தப்பிப் பிழைக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது அந்த ஆடுகளைப் பிரிய மனமின்றி அழுது புலம்பியபடியே அந்த ஆடுகளிடமிருந்து விடைபெறுவான். அந்த ஆடுகள் எந்தச் சலனமும் இன்றி அவனைப் பார்த்துக் கொண்டிருக்கும்.
அந்த ஆடுகளுக்கு நஜீபும் ஒன்றுதான், அவனை அடிமைப்படுத்திய கஃபீலும் ஒன்றுதான். ஒருவேளை எந்தச் சலனமும் இல்லாத அந்த ஆடுகள்தான் கடவுள்களோ!
தப்பி வந்த நிஜ நஜீப் இன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். அவரிடம் கேட்கவேண்டும், யார் கடவுள் என்று.
No comments:
Post a Comment