Tuesday, June 10, 2014

கேம்பகோலா! விதிமுறைகளை மீறியதால் 25 வருடங்கள் கழித்து வீடுகளை இழந்த கதை!

 கேம்பா கோலா அடுக்குமாடி வளாகத்தில் குடியிருக்கும் அனைவரும் இன்றே வீட்டை காலி செய்துவிட வேண்டும்! அந்தக் கட்டிடங்கள் முழுக்க இடித்துத்தள்ளப்பட வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிரடித்தீர்ப்பால் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட வீட்டுக்கு சொந்தக்காரர்கள் அதிர்ந்து போயிருக்கிறார்கள். கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கும் மேல் அங்கேயே வாழ்ந்த குடும்பங்கள் திடீரென வீடு இல்லாமல் தவிக்கின்றன. இந்த தவிப்புக்கும் தீர்ப்புக்கும் சொல்லப்படும் காரணம்... அந்த கேம்பாகோலா வளாகம் முழுவதுமே விதிமுறைகளை மீறி கட்டப்பட்டது என்பதுதான்.

பாம்பே டிரேட் என்று ஒரு விளையாட்டு. சிறுவயதில் நிச்சயம் விளையாடியிருப்போம். ஊர்களை வாங்குவதும் விற்பதும், அங்கு வீடு கட்டி வாடகைக்கு விடுவதும் சம்பாதிப்பதும்தான் விளையாட்டு. அந்த விளையாட்டில் மிகப்பிரலமான ஊர் ஒன்று உண்டு. அதன் பெயர் ஒர்லி. கூகுள் மேப்பில் தேடினால் தெற்கு மும்பையில் அந்த ஊரைப்பார்க்கலாம். அந்த ஊரில் தற்போது சர்சைக்குள்ளாகியிருக்கும் நிலம் Pure Drinks Ltd என்ற நிறுவனத்திற்கு 1955ல் லீசுக்கு வழங்கப்பட்டது. 1980ல் அந்த நிலத்தில் அடுக்குமாடி வீடு கட்டிக்கொள்ள பாம்பே முனிசிபாலிட்டி கார்ப்பரேஷன் (BMC) அனுமதி வழங்கியது. அனுமதி என்னமோ 5 மாடிகள் கட்டிக்கொள்ளத்தான். ஆனால்  20 மாடிகள் வரை கட்டப்பட்டன.

கட்டிங்கள் உயரமாகிக் கொண்டிருக்கும்போதே வேலையை நிறுத்தச்சொல்லி பாம்பே முனிசிபாலிட்டி எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் வழக்கம்போல யார்யாருக்கோ பணம் கொடுத்து சரிகட்டி கட்டிடங்கள் கட்டிமுடிக்கப்பட்டன.
மிகவும் மதிப்பு வாய்ந்த நிலம் என்பதால் பிரச்சனை உள்ளது எனத்தெரிந்தும் பரபரவென அத்தனை வீடுகளும் விற்றுத்தீர்ந்தன. இதில் அதிசயம் என்னவென்றால் விதிமுறைகளை மீறிக்கட்டப்பட்டது எனத் தெரிந்தும் மின் இணைப்பும், குடிநீர் இணைப்பும், சாலைகளும் அமைத்துத்தந்தது அரசு இயந்திரம்.

2005ல் விஷயம் விஸ்வரூபமெடுத்து கோர்ட்டுக்குச் சென்றது. அரசுக்கும், அங்கே வசிப்பவர்களுக்கும் யுத்தம் துவங்கியது. இலஞ்சம் தந்து அரசையும், மக்களையும் ஏமாற்றி பணம் சம்பாதித்த நிறுவனங்களும், லஞ்சம் பெற்றுக்கொண்டு அனுமதி அளித்த அரசு அதிகாரிகளும், ஊழியர்களும் தப்பித்துக்கொண்டார்கள். அவர்கள்மேல் எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. அவர்களுக்கு தண்டனை ஏதும் இல்லை. ஆனால் ஏதுமறியாமல் பணம் கொடுத்து ஏமாந்தவர்களும், தெரிந்தே அங்கு வீடு வாங்கியவர்களும் இன்று தங்குவதற்கு வீடு இல்லாமல் இருக்கிறார்கள்.

மக்களும், மீடியாக்களும், சில சமூக ஆர்வலர்களும் அவர்களுக்காக பரிதாபப்பட்டு ஆதரவளித்தார்கள். அரசுக்கும், நீதிமன்றத்துக்கும் எதிராக போராட உதவினார்கள்.  தற்காலிகமாக தேர்தல் களேபரங்களும் பிரச்சனையை ஒத்திப்போட உதவியது. ஆனால் இனியும் தள்ளிப்போட வழியில்லை. எல்லா சட்டத்தடை உத்தரவுகளும் அவர்களுடைய நம்பிக்கைகளுடன் நொறுங்கிப்போய்விட்டன. உச்சநீதி மன்றம் கட்டிடங்களை இடிக்கச் சொல்லிவிட்டது.

அதே வளாகத்தில் ஒரு ஃபிளாட்டை வாங்கியுள்ள லதா மங்கேஷ்கர் கடைசியாக மக்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளார். ஆனாலும் அந்த மக்களுக்கு வேறு வழியில்லை. கேம்பாகோலா வளாகம் நொறுங்கப்போகிறது. அவர்கள் வீடின்றி சாலைகளில் நிற்கத்தான் போகிறார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இன்று அடம்பிடிக்கும் மும்பை முனிசிபாலிட்டி கோர்ட்டில் ஒரு அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது. அதாவது கேம்பாகோலா வளாகம் போலவே விதிமுறை மீறிக்கட்டப்பட்ட 56332 கட்டிடங்கள் உள்ளன. கேம்பாகோலா வளாகம் போலவே அவையும் இடிக்கப்படுமா?

இதற்கான பதில் நீதிமன்றங்களில் கிடைக்கலாம். ஆனால் லஞ்சம் தந்து விதியை வளைத்துக்கொள்ளலாம் என்று விரும்பும் மனங்களுக்கு இது புரியுமா எனத்தெரியவில்லை. இந்த வினாடி கூட விதிமுறைகளை மீறிய கட்டிடங்கள் எங்காவது ஒரு மூலையில் எழுந்து கொண்டுதான் இருக்கும்.


Monday, June 9, 2014

உலகக்கோப்பையின் முதல் கோலை அடிக்கப்போவது ஒரு செயற்கைக்கால்

உலகக்கோப்பை என்றாலே ஸ்பெஷல்தான். இந்த வருடக் கோப்பை இன்னும் ஸ்பெஷல். வழக்கமாக யாராவது பிரபலம் கால்பந்தை உதைத்து போட்டியை துவக்கி வைப்பார். ஆனால் இந்த வருடம் செயற்கைக் கால்கள் அணிந்த ஒரு மாற்றுத்திறனாளி பந்தை உதைக்கப்போகிறார்.

குறிப்பிடும்படியாக இது அவ்வளவு ஸ்பெஷலாக இல்லையே எனத் தோன்றலாம். ஆனால் அந்தக் கால்களில் பொருத்தப்பட்டுள்ள BMI என்ற தொழில்நுட்பம் பற்றி அறிந்தால் அசந்துபோவோம். BMI என்பது Brain Mind Interface என்பதின் சுருக்கம்.

வழக்கமாக செயற்கை உடல்பாகங்கள் ஒரு மரக்கட்டை போல இருக்கும். அந்த பாகங்களால் தொடுதல், படுதல், உரசுதல் போல எதையும் உணர முடியாது. ஆனால் BMI தொழில் நுட்பம் பொருத்தப்பட்ட கால்களால் பந்தை உதைத்ததும் பந்தை உதைத்த உணர்வை அந்தக் கால்களை அணிந்திருக்கும் நபர் உணர்வார்.

நியூரோ சயின்ஸில் இது ஒரு மகத்தான சாதனை. இது இன்னும் விரிவுபடுத்தப்படுமானால் எதிர்காலத்தில் செயற்கை பாகங்களுக்கும், இயற்கை பாகங்களுக்கும் உள்ள வித்தியாசம் குறையும். பந்தை உதைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியவுடன் மூளையில் ஒரு அதிர்வு ஏற்படும். அந்த அதிர்வை மூளையில் பதிக்கப்பட்டுள்ள சிலிக்கான் சில்லுகள் ஒரு கட்டளையாக மாற்றும். அந்தக் கட்டளைகள் மின் அலையாக மாற்றப்பட்டு ஒயர்லெஸ் ரிசீவர் பொருத்தப்பட்டுள்ள கால்களுக்கு அனுப்பும். உடனே பாட்டரியில் இயங்கும் கால்கள் அந்தக் கட்டளையை ஏற்றி பந்தை உதைக்கும். பந்தை உதைக்கும்போது கால்களில் பொருத்தப்பட்டுள்ள Infra Red - சிவப்புக் கதிர்கள் சில மோட்டர்களை இயக்கி அந்த அதிர்வுகளை மூளைக்கு திரும்ப அனுப்புகின்றன. அது ஒருவிதமான தொடு உணர்வை மூளைக்குத் தருகின்றன. எனவே பந்தை உதைத்த உணர்வை அந்த மாற்றுத்திறனாளி பெறுவார்.


பிரேசிலில் நடைபெறும் உலகக்கோப்பையில் ஒரு செயற்கைக்கால் பந்தை உதைக்கும். அது BMI தொழில்நுட்பத்துக்கு மேலும் ஒரு பாய்ச்சலைத் தந்து, செயற்கைக்கும் இயற்கைக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைக்கும். மூளைக்கு கட்டுப்படும் ரோபோக்கள் உலகை உருவாக்கும்.

GOAL என்று உலகமே அதிரும்போது அது இந்த சாதனைக்கும் சேர்த்த கொண்டாட்டமாக இருக்கும்.

Friday, May 23, 2014

கோச்சடையான்! சூப்பர் ரஜினி ட்ரீட்!


ஒரு அனிமேஷன் படத்திற்கு இத்தனை விசில்களும், கைதட்டல்களும், உற்சாகக் குரல்களும் இதுவரை கேட்டதில்லை.

ரஜினி! ரஜினி! ரஜினி!

ஒரு நண்பரை இழந்த சோகத்துடன்தான் படம்பார்க்கச் சென்றிருந்தேன். நண்பரை இழந்த வருத்தமும், அனிமேஷன் என்ற எண்ணமும் சூழ்ந்திருந்ததில் முதல் சில நிமிடங்களுக்கு படத்தில் ஒன்றமுடியவில்லை. அதற்குப்பின் ரஜினி குதிரையில் பறந்துவரும் அறிமுகக்காட்சியில் குழந்தைகளின் உற்சாகக் குரல்களால் சில அங்குலங்கள் படத்திற்குள் ஈர்க்கப்பட்டேன். ஆனாலும்  நம்மை கூர்ந்து நோக்காத கண்களும், உடலசைவுக்கும், அளவுக்கும் ஒவ்வாத கை, கால்களும் எனது ஈர்ப்பைக் குறைத்தது.

ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக கே.எஸ்.ரவிக்குமாரின் அபாரமான கதை நகர்த்தலுடன் ரஜினியின் மேஜிக் குரலும், ஏர்.ஆர்.இரகுமானின் இசையும் கைகோர்த்துக்கொள்ள கோச்சடையான் நமக்குள் வளர ஆரம்பித்துவிடுகிறது.

நறுக்கென்று சொல்வதென்றால் தீபிகாபடுகோனின் சண்டைக்காட்சிதான் எதிர்பாராத முதல் சுவாரசிய திருப்பம். அந்த இடத்தில் துவங்குகிற பரபரப்பு இறுதிவரை ஜிவ்வென்று பரவுகிறது.

படத்தின் ஹைலைட் கோச்சடையானாக வரும் ரஜனிதான். ருத்ரதாண்டவமும், சண்டைக்காட்சிகளும் பக்கா கமர்ஷியல் ஃபிளாஷ்பேக். ரஜினிக்காகவே கச்சிதமாக யோசித்திருக்கிறார் கே.எஸ்.இரவிக்குமார்.

இத்தனை எதிர்மறை விமர்சனங்களையும், கேலிகளையும் இதுவரை எந்த ரஜனி படமும் சந்தித்ததில்லை. படத்தின் தொடர் தாமதம் ரஜினி இரசிகர்களையே கொஞ்சம் சலிப்படைய வைத்தது. ஆனால் அத்தனையையும் தவிடுபொடியாக்கி கோச்சடையான் ஜெயித்துவிட்டான். அனிமேஷனாக தோன்றினாலும் திரையில் என்றும் நான்தான் மாஸ், நான்தான் பாஸ் என்று ரஜினி நிரூபித்துவிட்டார்.

சௌந்தர்யாக ரஜினிகாந்த். ரஜியின் மகள் என்பதற்காக கிடைத்த பிரபல்யத்தைவிட, அதற்காக அவர் சந்தித்த கேலிப்பேச்சுகள் மிக அதிகம். ஆனால் அனைத்தையும் புன்னகையுடன் கடந்துவிட்டார். வென்றும்விட்டார். இந்தியாவின் முதல் மோஷன் கேப்சரிங் படத்தை இயக்கியுள்ளார் என்பதற்காக அவரை நிச்சயம் பாராட்டித்தான் ஆகவேண்டும். இன்றைக்கு வீட்டுக்கு வீடு ஒரு அனிமேட்டர் இருக்கிறார். மூன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தை கூட ஃபிளாஷ் அனிமேஷன் செய்கிறது. விஸ்காம் மாணவர்கள் டிஜிட்டலில் என்னென்னவோ மேஜிக் செய்கிறார்கள். தினம் தினம் யுடியூபில் அத்தனை டெக்னிக்கையும் பார்த்து படம் எடுக்கிறார்கள்.

சினிமா இனிமேலும் அதிசயமில்லை.. யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற பொது மனநிலை இன்று இருக்கிறது. இந்தச் சூழலில் சௌந்தர்யா எதிர்கொண்ட எதிர்மறை விமர்சனங்கள் எதிர்பாராதது அல்ல என்றாலும், அளவுக்கு அதிகமானது என்பதையும் மறுக்க முடியாது. ஆனால் படத்தை தொடரும் டைட்டிலில் அவர் நிறைவாக கையசைத்து விடைபெறுவது போல, தற்போது நிச்சயம் நிறைவாக உணர்வார். படம் ஹிட்.

கோச்சடையான் ரஜினி இல்லாமல் சாத்தியப்பட்டிருக்காது. ஆனாலும்  ஏ.ஆர்.இரகுமானின் வரவு எப்படி டிஜிட்டல் இசை அமைக்கும் முறையை இந்தியாவில் பரவலாக்கியதோ அதுபோல மோஷன் கேப்சரிங் என்கிற டிஜிட்டல் துறைக்கு புதிய வாசல்களை திறந்துவிட்டிருக்கிறது கோச்சடையான்.  இந்த தொழில்நுட்பத்தை அடுத்து வரும் இளைஞர்கள் இன்னும் சிறப்பாக பயன்படுத்தி, புதிய உயரத்தை தொடுவார்கள், தொட வேண்டும்.

கோச்சடையான் ரஜினிக்கு மட்டுமல்ல, அவருடைய இரசிகர்களுக்கு மட்டுமல்ல, இந்திய சினிமாவுக்கே தொழில் நுட்ப ரீதியாக புது அனுபவம்.

நான் அடிப்படையில் ரஜினி இரசிகன். அதனால் இந்த விமர்சனத்தில் மிகை இருக்கலாம். ஆனாலும் இது நல்ல படம்.  அதற்கு ஒரே கோச்சடையானை மீண்டும் ஒரு முறை பார்க்கப்போவதாக எங்கள் வீட்டுக் குழந்தைகள் சொல்லியிருக்கிறார்கள்.

கோச்சடையான்... எங்கள் கோச்சடையான். இந்த சம்மருக்கு ரஜினிமேனியா துவங்கியாச்சு.