ஒலிம்பிக்ஸ் ஆரம்ப விழா நடக்கும்போது மழை வரக்கூடாதென்று மேகங்களை விரட்டியடித்தது சீனா - இது அறிவியல்
இதனை மன்னிக்கலாம்.
வாண வேடிக்கைகளை காமிராக்கள் சரியாக படம் பிடிக்க முடியாதென்று ஏற்கனவே டேப்பில் இருந்த கிளிப்பிங்குகளை காட்டியது சீனா - இது போலி இயல்
இதையும் மன்னிக்கலாம்.
ஆனால் விழாவில் பாடவிருந்த குழந்தை அழகாக இல்லையென்று அக்குழந்தையை யார் கண்ணுக்கும் படவிடாமல் விரட்டியடித்திருக்கிறது - இது என்ன இயல்?
இதை மன்னிக்கலாமா?
இதை விட குருரமாக ஒரு குழந்தையை தண்டிக்க முடியாது. அந்தக் குழந்தையின் குரலை உலகமே கேட்கிறது, வியக்கிறது, பாராட்டுகிறது. ஆனால் பாராட்டுகள் அத்தனையும் வெறுமனே வாயசைத்த ஒரு குழந்தைக்குப் போய்ச் சேருகிறது. பாடிய குழந்தை இருளில். வாயசைத்த குழந்தை பாராட்டு வெளிச்சத்தில். பாடிய குழந்தையின் மனது என்ன பாடுபட்டிருக்கும்? ஏக்கத்திலும், ஏமாற்றத்திலும், அவமதிப்பிலும், அவமானத்திலும் கூனி குறுகியிருக்கும். அழகாக இல்லாதது ஒரு குற்றமா?
இந்த குருரச் செயல் வெளியே வராத வரையில் மனதளவில் பாதிப்பு பாடிய குழந்தைக்கு மட்டுமே. ஆனால் தற்போது வாயசைத்த குழந்தையும் போலி என அதே காமிராக்களின் முன் மனதளவில் பாதிக்கப்படுவாளே?
இந்த இரு குழந்தைகளின் மனச்சிதைவுகளை யார் சரி செய்ய முடியும். அழகை ஒரு அளவுகோலாக வைத்து இரு குழந்தைகளின் ஆழ்மனதில் தீராத வடுக்களை ஏற்படுத்திவிட்ட இந்த சமுக அவலத்தை நமது நாட்டிலும் பரவ விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
நமது இந்தியாவிலும் அழகு . . . அழகு என ஆண்களும், பெண்களும் பியூட்டி பார்லர்களில் பணத்தையும் நேரத்தையும் இழக்கும் காலம் இது. இது முகத்தை மட்டும் பாதிக்கிற விஷயம் - நமது அகத்தை பாதிக்காமல் பார்த்துக் கொள்வதுதான் இந்த சுதந்திர தினத்தில் சீன ஒலிம்பிக்ஸ் நமக்கு கற்றுக் கொடுத்திருக்கிற பாடம்.
ஆனால் நமக்கு கிடைத்திருக்கும் இந்த இலவச பாடத்தின் விலை, இரு இளம் பிஞ்சுகளின் நசுங்கிய உள்ளங்கள்.
No comments:
Post a Comment