Wednesday, December 16, 2009

திருவெம்பாவை - திருப்பள்ளி எழுச்சி - 3

இன்னைக்கு மார்கழி முதல் நாள்!
காபி போட்டுத் தர்றேன், கோலம் போடும் போது துணைக்கு நில்லுங்க!, இந்த “ங்க” விலிருந்து சொன்னது யாருன்னு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். முதலில் நான் மட்டும் வாசலுக்கு வந்தேன். இன்னும் விடியாத முன் காலையில் சில தினசரி வாக்கர்கள் கான்வாஸ் சரசரக்க கடந்தார்கள். ”ஷ்செல்வம் குட்ஷ்மார்னிங்”, மூச்சிறைக்க விஷ் பண்ணிச் சென்ற அந்த மாமியின் பெயர் எனக்குத் தெரியாது. ”பார்த்த ஞாபகம் இல்லையோ, பருவ நாடகம் தொல்லையோ” கையில் FMஆ iPODஆ எனத் தெரியவில்லை. அலறவிட்டபடி நடந்த அந்த டி-சட்டையரை கடந்த ஒரு மாதமாகப் பார்க்கிறேன்.
”காபி ரெடி!”, குரல் கேட்டுத் திரும்பும்போது கையில் யோகா கிட்டுடன் அந்த நமீதா நங்கை தெரிந்தாள். நின்று பார்த்துவிட்டு போகலாமா?

”என்னண்ணே, இன்னைக்கு காலையிலேயே . . .”, பக்கத்து வீட்டு காய்கறி எக்ஸ்போர்டர். அவருடைய அண்ணேக்கு திரும்பியதில் நமீதா நங்கை கடந்துவிட்டாள். நானும் காபிக்கு உள் புகுந்தேன். பின்னாடியே பொத்தென்று டைம்ஸ் ஆஃப் இந்தியா வந்து விழுந்தது. காபியையும், இந்தியாவையும் கையில் ஏந்தியபோது . . . கடைசி பக்கத்தில் ஜெனிலியாவும், முதல் பக்கத்தில் இலியானாவும் சிரித்தார்கள். சுவைத்தேன் . . . காபியை.

கேட்டில் ”வள்” என ஒரு குரலும், ”டாய்” என பதில் குரலும் கேட்டது. தினமும் அந்தநாய் அந்த டிராக்சூட்டுக்கார பையரை(னை?) இழுத்துக் கொண்டு வாக்கிங் போகும். என்றாவது மிஸ்டர்.வள் எங்கள் வீட்டுச்சுவரின்பக்கம் காலை உயர்த்தும்போது மட்டும் டி.சூ பையரின் கண்கள் அசடு வழிய என்னை பார்க்கும். இன்று எங்கள் கண்கள் சந்திக்கவில்லை.

சீக்கிரம் உள்ள வாங்க . . . உள்ளதான இருக்கேன் என்று சொல்வதற்குள், குரல்வந்த பாத்ரூம் வாசலை அடைந்திருந்தேன். குழாய் உடைத்துக்கொண்டு தண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது. உடனே சரி பண்ணுங்க . . . நான் சரி என்று சொல்லவில்லை. ஆனால் சரி செய்துவிட்டு நமிரும்போது, வாசலில் கோலம் முடிந்திருந்தது. மார்கழியின் முதல்நாள் இப்படித்தான் விடிந்தது.

இனி திருவெம்பாவை!இங்கே சொடுக்கி டவுன்லோடு செய்துகொள்ளலாம்!

"பூதங்கள் தோறும் நின்றாய் எனின், அல்லால்
      போக்கிலன் வரவிலன்" என நினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
      கேட்டறியோம் உனைக் கண்டறிவாரைச்
சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா !
      சிந்தனைக்கும் அரியாய் ! எங்கண் முன்வந்து
ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
      எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே !

    "பூதங்கள் எல்லாவற்றிலும் கலந்து இருப்பது அல்லாமல்,
இறைவனுக்குத் தோற்றமோ நீக்கமோ இல்லை" என உம்மைப் பண்டிதர்கள்
புகழ்ந்து பாடுவதும் ஆடுவதும் அன்றி, உம்மைக் கண்டு அறிந்தவர்களை
நாங்கள் கேட்டுக்கூடத் தெரிந்துகொண்டதில்லை ! குளிர்ந்த வயல்களுடைய
திருப்பெருந்துறைக்கு அரசே ! நினைத்துப் பார்க்கக் கூட அரியவனே !
(எனினும் எளியவனாகி) எம்முடைய கண் முன்னே எழுந்தருளிக் குற்றங்கள்
நீக்கி எம்மை ஆண்டு அருள் புரிகின்ற எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !

சீதம் - குளிர்ச்சி; ஏதம் - குற்றம்/துன்பம்.

பப்பற வீட்டிருந்து உணரும் நின் அடியார்
      பந்தனை வந்தறுத்தார்; அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பின்
      வணங்குகின்றார்; அணங்கின் மணவாளா !
செப்புறு கமலங் கண் மலரும் தண்வயல் சூழ்
      திருப்பெருந் துறையுறை சிவபெருமானே !
இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டருள் புரியும்
      எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே !

    விரிந்து செல்லுதல் இல்லாது (ஒருமைப்பட்ட மனத்துடன்),
வீடுபேற்று நிலையில் உணர்கின்ற உம்முடைய அடியவர்கள் பந்தமாகிய
கட்டுக்களை அறுத்தனர். அவர்கள் பலரும் மையணிந்த கண்களை உடைய
பெண்களைப் போலத் தம்மைக் கருதி உம்மைத் தொழுகின்றனர் (காதலனாக),
(உமையாகிய) பெண்ணின் மணவாளனே ! சிவந்த தாமரை கண் விழிக்கின்ற
(இதழ்களை விரிக்கின்ற) குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறைச்
சிவபெருமானே ! இந்தப் பிறவியை நீக்கி எம்மை ஆண்டு அருள் புரிகின்ற
எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !

பப்பு - பரப்பு; அணங்கு - பெண்; செப்புறு - செம்மை உடைய.
Post a Comment