Tuesday, May 31, 2011

நள்ளிரவும், நல் இதயமும்!


நள்ளிரவு! சென்னைக் கோடையின் முதல் மழை, இடி-மின்னலுடன் ஆர்ப்பாட்டமாக துவங்கியது. பஸ்ஸிக்கும் ஆட்டோவுக்கும் காத்திருந்தவர்கள், ஒதுங்க இடம் தேடி நொடியில் மறைந்து போனார்கள். நான் மொபைல் போனை மட்டும் பத்திரப்படுத்திவிட்டு, மழையில் நனைய ஆரம்பித்தேன். 

”சார்.. ஏன் சார் நனையற.. கை குடு சார்”
பக்கத்தில் ஒரு லாரி நின்று கொண்டிருப்பதை அப்போதுதான் கவனித்தேன். தெரு விளக்குகள் அணைந்திருந்ததால், கை நீட்டிய அந்தக் குரலின் முகம் தெரியவில்லை. இருந்தாலும் அந்தக் குரலில் இருந்த அக்கறை என்னை ஈர்த்தது. மழையில் நனையும் சுகத்தை விட்டுக் கொடுத்துவிட்டு, அந்தக் குரலின் கை பிடித்து லாரியின் பின்புறம் ஏறி அமர்ந்தேன். மெத்து மெத்தென்றிருந்தது. இலைகளைக் கசக்கியது போல, அழுத்தமான பச்சை வாசம்.

”இன்னா சார் பார்க்கற.. வைக்கோல் காஸ்ட்லி ஆயிடுச்சு சார். ஒரு கட்டு 15 ரூபா. அதான் இப்போ கரும்புத் தழைய போடறோம்.”
இப்போது கண் இருளுக்குப் பழகியிருந்தது. லாரி முழுவதும் பூந் தொட்டிகள் அடுக்கப்பட்டிருந்தன. லாரி ஓடும்போது குலுங்கலில் அவை உடையாமலிருக்க (ஷாக் அஃப்ஸார்பர்) கரும்புத் தழை.
”ஒரு தொட்டி எவ்வளவு?”
”30 ரூபா சார். பண்ருட்டியில இருந்து கொண்டு வர்றோம். மாசம் ஒரு தடவை வருவோம்”
”உங்க கிட்ட வாங்கறவங்க எவ்வளவுக்கு விப்பாங்க?”
”அது தெரியாது சார்”
”ஆட்டோ...” பேச்சு சுவாரசியத்தில் ஒரு காலி ஆட்டோவை தவற விட்டேன்.
”ஆட்டோ வேணுமா சார்...இரு நான் புடிச்சி தர்றேன். அது வரைக்கும் இதுல உட்காரு. என ஒரு பூந்தொட்டியை கவிழ்த்து போட்டார்”
மழை வலுத்துக் கொண்டே இருந்தது. தொடர்ந்து 4 ஆட்டோக்கள் நிற்காமல் மழையில் வழுக்கிக் கொண்டே சென்றன.
”நீ எங்க சார் போணும்?”
”வளசரவாக்கம்”
”போரூர் போற வழியில இருக்கே.. அதுவா?”
”ஆமாம்..”, இப்போதும் அந்தக் குரலின் முகம் தெரியவில்லை.

”சார்.. கொஞ்சம் ஒதுங்கிக்கோங்க சார்”, புதிதாக இரு இளைஞர்கள் ஒரு அரை டிரவுசர் மட்டும் அணிந்து கொண்டு, வெற்று உடம்புடன் எங்கிருந்தோ முளைத்தார்கள்.
நான் ஒதுங்கிக் கொள்ள, மள மளவென்று பூந்தொட்டிகள் லாரியிலிருந்து சாலையோர நடைபாதைக்கு மாறின. சுமார் 15 நிமிடங்களில், மழையை பொருட்படுத்தாமல், ஆயிரம் பூந்தொட்டிகளை இறக்கி வைத்தார்கள்.

கோடை மழைக்கு இணையான, அவர்களின் வேகத்தை வியந்து கொண்டே இருந்தபோது, சார் நீ அப்படியே உட்காரு, என்றபடி அந்தக் குரல் லாரியிலிருந்து குதித்து, முன்புறம் சென்று டிரைவர் சீட்டில் அமர்ந்தது.

நான் சுதாரிப்பதற்குள், லாரி புறப்பட்டுவிட்டது. நள்ளிரவில் மழைச் சாரலில் நனைந்தபடி, முற்றிலும் எதிர்பாராத ஒரு லாரிப் பயணத்தை, மின்னல் படமெடுத்துக் கொண்டே வந்தது. வள்ளுவர் கோட்டத்திலிருந்து ஐந்தே நிமிடம். வடபழனி நூறு அடி ரோடு வந்துவிட்டது.

”சார்.. இங்க இறங்கிக்க சார்”
லாரியிலிருந்து குதித்து, பின்புறத்திலிருந்து சுற்றிக் கொண்டு வந்து,
”ரொம்ப தாங்ஸ்ப்பா...” என்றேன்.
”அட.. இதுக்கு இன்னாத்துக்கு சார் தாங்ஸ். ஏதோ என்னால ஆன உதவி. பார்த்தா படிச்சவர் மாதிரி இருக்கற. நடு ராத்திரியில நீ மழையில நனையறது பொறுக்கல. அதான் உன்னை இங்க கொண்டு வந்து விட்டுட்டேன். ஆட்டோ... ஸாரை ஏத்திக்கோ. சார் அந்த ஆட்டோவில ஏறிக்கோ சார். வரட்டா”
லாரி என் பதிலுக்கு காத்திருக்கவில்லை. யு டர்ன் எடுத்து போய்க் கொண்டே இருந்தது.

”ஸார்.. வர்றீங்களா இல்லையா..”
ஆட்டோக்காரரின் குரல் கேட்டு சுய நினைவுக்கு வந்தேன். மழை இன்னும் விடவில்லை. நனைந்து கொண்டே ஆட்டோவில் ஏறி அமர்ந்தேன்.
”எங்க சார் இறங்கணும்?”
”இங்கேயே நிறுத்துப்பா..”

பணத்தை கொடுத்துவிட்டு, எந்த இடம் எனத் தெரியாமலேயே, ஆட்டோவில் இருந்து இறங்கி, மழையில் நனைய நனைய நடக்கலானேன்.
தலை முதல் பாதம் வரை சில்லென நனைந்துவிட்டேன். என் உடலை நனைத்தது மழையாக இருக்கலாம். ஆனால் என் இதயத்தை நனைத்தது, முகம் தெரியாத அந்த லாரிக்காரின் நேசம்.

1 comment:

கூடல் பாலா said...

இது போன்ற நல் இதயங்கள் இருக்கத்தான் செய்கின்றன .......சுவாரஸ்யமான பதிவு .