Saturday, June 4, 2011

நம்மை பின் தொடரும் GPS (லைட்டாக ஒரு அறிமுகம்)

நாம் போகுமிடமெல்லாம் GPS அறியும் - 


எத்திராஜ் கல்லூரிப் பெண்கள் எங்கே செல்வார்கள் என்று விவேகானந்தா பையன்கள் எப்படியோ மோப்பம் பிடித்து பின் தொடர்வார்கள். ஒரு வாரத்திற்கு ஒரு லெட்டர் போட்டு, காதலித்து கசிந்துருகிய காலத்திலேயே இந்த டிராக்கிங் சிஸ்டம் பக்காவாக இருந்தது. இது டிஜிட்டல் யுகம். இப்போது சாடிலைட் துணையுடன் டிராக்கிங் சிஸ்டம், நாடு விட்டு நாடு தாண்டுகிறது. அம்மாவுடன் காரில் சென்று கொண்டே, எஸ்.எம்.எஸ் வழியாக பைக் பையன்களை பின் தொடர வைக்கும் மொபைல் யுகம். நீங்கள் வளசரவாக்கம் வீட்டில் பல் துலக்கி, வடபழனி வசந்த பவனில் டிபன் சாப்பிட்டு, கோடம்பாக்கம் சிக்னலில் காத்திருந்து, ஜெமினி பார்சன் எதிரில் டீ குடித்தீர்கள் என்பதை யாருக்கும் சொல்ல வேண்டாம். உங்கள் மொபைல் போனில் இருக்கும் டிராக்கிங் சிஸ்டம், உங்கள் டை கட்டிய பாஸிக்கும், டைட் ஜீன்ஸ் போட்ட கேர்ள் பிரண்டுக்கும் அதுவே லைவ் பிராட்கேஸ்ட் செய்துவிடும். 

செல்லமாக GPS, விஸ்தாரமாக Global Positioning System என்று இந்த தொழில் நுட்பத்துக்கு நாமகரணம் உண்டு. பைனாகுலர் காட்டாத தொலை தூரங்களில் தோழமை சிப்பாய்களையும், எதிரி துப்பாக்கிகளையும் பின் தொடர, இந்த நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது. மிலிட்டரி வசதிக்காக வந்த இந்த நுட்பம், தற்போது மிலிட்டரி ஹோட்டல்கள் எங்கே இருக்கிறது என்று தேடித் தரும் அளவிற்கு இலகுவாகவும், கிட்டத்தட்ட இலவசமாகவும் கிடைக்கிறது.  நெடுஞ்சாலை காரோட்டிகளுக்கு வழிகாட்டத்தான் GPS இராணுவ முகாமை விட்டு வெளியே வந்தது. ஆனால் அதிவிரைவாக இன்டர்நெட் இணைப்புகளும், அதனுடன் இணைந்த (Smart Phone) மொபைல் பேசிகளும் விசுவரூபம் எடுத்தவுடன், பட்டி தொட்டியெல்லாம் சினிமா போஸ்டர்களை விட வேகமாக GPS பரவிவிட்டது.

சென்ற மாதம் அம்பாசமுத்திரம் சென்றிருந்தேன். நல்ல ஹோட்டல் எங்கிருக்கிறது என்று விசாரித்து தெரிந்து, பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் இருக்கும் கௌரி சங்கருக்குள் நுழைவதற்குள், லஞ்ச் டைம் முடிந்து டிபன் டைம் பக்கோடா வந்துவிட்டது. கௌரி சங்கர் எங்கிருக்கிறது? பஸ் ஸ்டாண்டில் இருந்து மேற்கா? கிழக்கா? எத்தனை கி.மீ அல்லது எத்தனை மீ? உட்பட அனைத்தும் எனது மொபைலில் தெரிந்திருந்தால் எனக்கு அன்றைய மதிய உணவு மிஸ் ஆகியிருக்காது. கௌரிசங்கரும் ஒரு கஸ்டமரை இழந்திருக்காது. இதனை மனதில் கொண்டுதான் தற்போது பல நிறுவனங்கள் GPS வழியாக தங்களை புரமோட் செய்து கொள்கிறார்கள். இதனால் என்ன வசதி என்றால், திருநெல்வேலி சென்றாலே போதும், இருட்டுக் கடைக்கு உங்கள் மொபைலே வழிகாட்டிவிடும். அதே போல அம்பாசமுத்திரம் வந்தாலே கௌரிசங்கர் வழிகாட்டி மேப்புடன் பாப்-அப் ஆகிவிடும்.

நாம் கேட்டதை எல்லாம் தரும் கூகுள் ஒரு கணக்கு சொல்கிறது. அதன்படி கூகுள் மேப் பயன்படுத்துபவர்கள் தற்போதைய நிலவரப்படி 150 மில்லியன் நபர்களாம். அதாவது கூகுள்  தரும் அனைத்து சேவைகளையும் பயன்படுத்துபவர்களில் 40 சதவிகிதம் பேர் கூகுள் மேப் துணையுடன்தான் ஊருக்கோ, காபி ஷாப்புக்கோ, கோவிலுக்கோ, ஃபுட்பால் மாட்சுக்கோ வழிகேட்டு செல்கிறார்கள். நல்ல ஞாபகசக்தி உள்ள கம்ப்யூட்டர் உலகம் வாசகர்கள், சில வருடங்களுக்கு முன்பே GPS பற்றி நாம் எழுதியிருந்ததை நினைவில் வைத்திருப்பீர்கள்.

டெஸ்க் டாப்பிலிருந்து, லேப் டாப்புக்கு தாவிய நவயுக ஹைடெக்கர்கள் தற்போது, ஐ பேட், ஸ்மார்ட் போனுக்கு தாவிவிட்டார்கள். அதற்கு காரணம், விரல் நுனியை விட சிறிய நக நுனியில் கேட்டதெல்லாம் தரும் இந்தக் கருவிகள் தான். இந்த நவயுக கணிணிகள் எப்போதும் இணையத்துடன் இணைந்தே இருப்பதால், Facebook, Foursquare மற்றும் twitter போன்ற சமூக வலைத் தளங்கள் எல்லாம், தற்போது GPS நுட்பங்களை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டன.

இந்த தளங்களில் நீங்கள் நணப நண்பிகளுடன் பீநட்ஸ் வறுத்துக் கொண்டிருக்கும்போதே, மௌண்ட் ரோடில் டிராபிக் நெருக்கடி, எனவே கிண்டி ரூட்டை பிடியுங்கள் என்று சேதி வந்துவிடும். எங்கு சந்திக்கலாம் என்று நீங்கள் தயங்கித் தயங்கி கேட்கும்போதே, ஊரிலிருக்கும் அத்தனை காபி ஷாப்புகளுக்கும், அரையிருட்டு ரெஸ்டாரண்டுகளுக்கும் கூகுள் மேப் விரிந்துவிடும். எனவே தற்போது வியாபார நிறுவனங்கள் தங்களது மார்க்கெட்டிங் உத்தியில் பெரும்பங்கை GPS வழி பிரச்சாரத்துக்கு செலவிடுகிறார்கள்.

நீங்கள் ஃபேஸ்புக்கில் எனக்கு நோக்கியா பிடிக்கும் என்று யாரிடமாவது சொல்லிக் கொண்டிருந்தால், சந்தடியில்லாமல் நோக்கியாவின் விளம்பரங்கள், புது மொபைல் மாடல்கள் உட்பட சகலமும், உங்களைச் சுற்றி இணையத்தில் எங்காவது வந்து கொண்டே இருக்கும்,  இந்த கோடைக்கு கேரளா சென்று ஓய்வெடுக்க முடிவு செய்திருக்கிறேன் என்று நீங்கள் டிவீட் செய்தால் போதும், கேரள ஓய்வு விடுதிகள், தங்கும் செலவுகள், போக்குவரத்து வசதிகள் என அனைத்தும் உங்கள் பக்கத்தில் மின்னும்.

Post a Comment