Friday, August 12, 2011

ஆன்லைன் சதி வலைகளில் சிக்கும் பெண்கள் - எச்சரிக்கை - 01


விபரீதம் - 1
நான் ஃபிரண்டு வீட்டுக்கு போயிட்டு வந்துடறேம்மா, என்று அவள் புறப்பட்ட போது ஞாயிறு காலை 11 மணி. யாருக்கும் எந்த சந்தேகமும் வரவில்லை. ஆனால் மதிய உணவுக்கு வரவில்லை என்றதும் சிறிய பரபரப்பு தொற்றிக் கொண்டது. அவள் சொன்ன தோழி வீட்டுக்கு ஃபோன் செய்ததும் வீடே அதிர்ச்சியில் ஆழ்ந்தது... அவள் தோழியின் வீட்டுக்கு போகவே இல்லை. அப்படியானால் 15 வயது இளம் பெண் திடீரென எங்கே போனாள்?

விபரீதம் - 2
ச்ச்ச்ச்சும்மா விளையாட்டுக்குதான். அவனை காதலிப்பது போல நடி என்றார்கள் ஆன்லைன் தோழர்கள். முதலில் தயங்கினாலும் விளையாட்டுதானே என்று சமரசமானாள் அந்தப் பெண். சாட்டிங்கில் தூண்டில் வார்த்தைகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. சில நேரம் வார்த்தைகள் அத்து மீறின. விளையாட்டுதானே என்று அவளும் அப்பாவியாகத் தொடந்தாள். ஆனால்..... இவள் பெயரைப் போட்டு, புகைப்படங்களை இணைத்து, இவள் விளையாட்டாக உதிர்த்த வார்த்தைகளுக்கு விபரீத அர்த்தங்கள் தந்து, திடீரென ஒரு நாள் இ-மெயில் உலகமெங்கும் பரவியபோது, அவள் மட்டுமல்ல... அவள் குடும்பமே அதிர்ந்தது.

இந்தச் சம்பவங்கள் இரண்டும் கற்பனை அல்ல. தினந்தோறும் நடப்பவையும் அல்ல. ஆனால் எப்போது வேண்டுமானாலும் நடக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் உள்ள சம்பவங்கள்.

விபரீதம் - 1 - முன்கதை
அக்காவுக்கு குழந்தை பிறந்திருக்கிறது என்பதால், குடும்பத்தினரின் மொத்த கவனமும் இவள் மேல் இல்லை. தனிமை முதலில் சோர்வையும் பிறகு இன்டர்நெட்டில் உலவ நிறைய நேரத்தையும் தந்தது. சாட்டிங்கில் வந்த அந்த முகம் தெரியாத ஆண், அந்த சின்னஞ் சிறு பெண்ணின் சோர்வை போக்கினான். ஸ்வீட் டாக்கிங். அந்தப் பெண்ணுக்கு கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஆணின் மேல் ஈர்ப்பு ஏற்படத் துவங்கியது. முதலில் சாதாரணமாக ஆரம்பித்த சாட்டிங், கொஞ்சம் கொஞ்சமாக இரகசியமாகி, எப்போதும், எங்கும் எனத் தொடரத் துவங்கியது.

'நீ என்னை பார்க்கணுமா? '
'ஆமாம்.. உடனே..'
'அப்படின்னா, ஞாயிற்றுக் கிழமை காலையில வீட்டுல பொய் சொல்லிட்டு, 12 மணிக்கு நான் சொல்ற இடத்துக்கு வந்துடு. கவனம்.. யாருக்கும் தெரியக் கூடாது.'
'சரி..'

விபரீதம் தெரியாமல் அந்தப் பெண், வீட்டில் பொய் சொன்னாள். மனதில் இரகசியப் படபடப்பு. இயல்பாக இருக்க பெரும் பிரயத்தனப்பட வேண்டியிருந்தது.



'அம்மா நான் ஃபிரண்டு வீட்டுக்கு போயிட்டு வந்துடறேம்மா.'



விபரீதம் - 2 - முன்கதை

வெவ்வேறு நாட்டிலிருந்து புதுப்புது சிநேகங்கள். அவளின் அழகு அவளை விஐபியாக்கியது. அதனால் தினசரி அவளுடைய ஆன்லைன் பக்கங்களை விதம் விதமான ஹலோக்களும், குட்மார்னிங்குகளும் நிறைத்தன. அவளின் சந்தோஷங்களை பெருக்கிய சிலரில் விபரீதமானவர்களும் இருந்தார்கள். குறிப்பிட்ட ஒரு இளைஞனுடன் முடிச்சுப் போட்டு, 'அவன் உன்னைக் காதலிக்கிறானா' என்றார்கள். அந்த வார்த்தை அவளுக்குள் பலவிதமான கிளர்ச்சிகளை உண்டு பண்ணியது. 'இல்லையே' என்றாள் வெட்கத்துடன். 'இல்லாவிட்டால் என்ன... அவனை காதலிக்க வைத்துவிடுவோம்' என்றார்கள்..
'ஐயோ எதற்கு' என்றாள்.
'ச்ச்ச்ச்சும்மா விளையாட்டுக்குதான். அவனை காதலிப்பது போல நடி' என்றார்கள் ஆன்லைன் தோழர்கள். முதலில் தயங்கினாலும் விளையாட்டுதானே என்று சமரசமானாள் அந்தப் பெண்.



ஆன்லைன் என்பது விபரம் தெரியாத, அப்பாவியான ஆண்கள் பெண்கள் என இருபாலருக்குமே விபரீதமான களம்தான். ஆனால்,பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக இளம் பெண்கள். அவர்கள் குறிவைக்கப்படுகிறார்கள். இது தெரியாமல், தங்கள் மேல் கவனம் குவிவதால், அதை பெருமையாகவும், சந்தோஷமாகவும் எண்ணி, சதிகாரர்களின் மாய வலைகளில் எளிதாகச் சிக்கிவிடுகிறார்கள்.


பல புள்ளிவிபரங்கள் டீன் ஏஜ் பெண்களைப் பற்றித்தான் அதிகம் கவலை தெரிவிக்கின்றன. டீன் ஏஜ் பருவத்தில் புதிது புதிதாக கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும், அதற்க்காக எதற்கும் அஞ்சாத சாகஸ உணர்வும், அழகை வெளிக்காட்டிக் கொள்ள வேண்டும் என்ற ஆடம்பர உணர்வும் பெண்களுக்கு அதிகம் இருக்கின்றன. வெளிஉலகத்தில் அவ்வளவாக வாய்ப்பு இல்லாத காரணத்தால், எந்தக் கட்டுப்பாடும் இல்லாத இணைய உலகம் அவர்களை எளிதாக வசீகரிக்கிறது. ஒரு கிளிக், ஒரு ஃபோட்டோ, ஒரு அப்லோட். அவ்வளவுதான் உலகம் முழுக்க இருக்கும் இணைய சதிகாரர்களின் பார்வையில் தானே போய் விழுகிறார்கள்.

விபரீதம் - 1 - நடுக்கதை

வீட்டில் பெற்றோர்கள் சுதாரிக்கும் முன், அந்த ஆண் சொன்ன முகவரியை, அவள் அடைந்துவிட்டாள். கையில் ஒரு பூங்கொத்து, அந்த ஆணுக்குப் பிடித்த நிறத்தில் பரிசாக புது சட்டை. எல்லாமே அவ்வப்போது புதுக்கம்மலும், சாக்லேட்டும் வாங்க சேர்த்து வைத்த காசிலும், அப்பாவுக்குத் தெரியாமல் இதற்க்காகவே திருடிய பணத்திலும் வாங்கியது. அவள் திருடுவதும், கடைக்கு வந்து எதையாவது வாங்குவதும், இத்தனை தூரம் தனியாக வந்ததும், அவளுக்கு இதுதான் முதல் முறை. அவளுக்கே ஆச்சரியம். எப்படி இவ்வளவு தைரியம் வந்தது. தைரியம் என்பதை விட, இனம் புரியாத படபடப்பான ஈர்ப்பு. இத்தனை பயமாக இருந்தாலும் இது பிடித்திருக்கிறதே ஏன்? இந்த இரகசிய தவிப்பைத் தந்த அவனை உடனே பார்க்க வேண்டுமே. தினமும் இனிக்க இனிக்கப் பேசும் அவனை இப்பவே பார்க்கணுமே..

யார் அவன்? யார் அவன்? அவன் எப்படி இருப்பான்? சூர்யா மாதிரியா? ஜெயம் ரவி மாதிரியா? பூங்கொத்துடனும், இந்தக் கேள்விகளுடனும், அந்த விலாசத்தை அவள் அடைந்த போது, மெல்லிய நடுக்கம் பரவுவதை அவள் உணர்ந்தாள். இருந்தாலும் ஆர்வம் உந்தித் தள்ள, மெல்லிய இருளாக இருந்த அந்த வீட்டுக்கதவை தட்டினாள்.

விபரீதம் - 2 - நடுக்கதை
நான் உன்னைக் காதலிக்கிறேன் என்று டைப் செய்யவே கைகள் நடுங்கின. 
'விளையாட்டுதானே...பயப்படாதே..டைப் பண்ணுஎன்றார்கள் சுற்றியிருந்த தோழர்கள்.
'என்னமோ ஸ்பெஷலா சொல்லணும்னு சொன்னியே.. என்ன அது' என்றன மறுமுனை சாட்டிங் விரல்கள்.



'நான்..'
'அப்புறம்'
'உன்னை'
'அப்புறம்'
அவளுக்கு வியர்க்க ஆரம்பித்தது.
'எனக்கு பயமா இருக்கு' என்றாள்.
'என்ன பயம்.. நானே டைப் பண்ணிடவா?' என்றான் ஒருவன்.
'ஹையோ வேண்டாம்...'
'அப்படின்னா சீக்கிரம் டைப் பண்ணு' என்றான் இன்னொருவன்.
'அப்புறம்..அப்புறம்...' என்று படபடத்தது எதிர்முனை
'நான்..உன்னை..காதலிக்கிறேன்...' என்று அவள் நடுங்கியபடியே டைப் செய்து முடித்தாள்.
'ஹைய்ய்யா...' என்று எதிர் முனை பரவசமானது.. 

அவளே தன் வசம் ஆனது போல தொடர்ந்து வந்த வார்த்தைகள் விளிம்புகளைத் தாண்டிக் கொண்டிருந்தன. அவளைச் சுற்றி நின்ற நண்பர்கள், மொபைல் போனில் அவள் டைப் செய்த அத்தனையும் படம் படித்துவிட்டு, சூப்பர்...சூப்பர் என்று துள்ளிக் குதித்தார்கள்.

'ஹேய் எதுக்கு வீடியோ எடுத்தீங்க.. '
'வீடியோ இல்லை ஃபோட்டோ..'
'எதுக்கு?'
'ச்ச்ச்ச்சும்மா ஃபன்..'
'ஐயம் ரியலி ஹேப்பி' என்றது எதிர் முனை
'சே..பாவம் அவன்' என்றாள் அவள்.
மீண்டும் சொல்கிறேன், ஆன்லைன் உலகம் என்பது இவ்வளவு அபாயகரமானதா என்று அஞ்சிவிட வேண்டாம். ஆனால் அது ஒரு மாய உலகம். அதே சமயம் ஒதுக்க முடியாத உலகம். அதில் நல்லவை போலவே கெட்டவையும் இருக்கும். அதனால் ஜாக்கிரதையாக இருங்கள் என்று எச்சரிக்கை செய்யவே இந்தக் கட்டுரை.

இந்த மாய வலையில் பெண்களுக்கு கிடைக்கின்ற சுதந்திரமும், புதுப்புது சிநேகிதங்களும், கனவிலும் நினைக்க முடியாத வாய்ப்புகளும் அவர்களுக்கு ஒரு பலத்தை தந்திருக்கிறது என்பதை மறுக்கவே முடியாது.


பெண்களுக்கு ஆன்லைன் உலகம் தந்திருக்கும் பலங்கள்.
  • வேலை வாய்ப்பு, வியாபாரத் தொடர்புகள்
  • கலந்துரையாடல், விவாதங்களில் பங்கேற்பது
  • உலகம் முழுவதும் புதிய சிநேகிதங்கள்.
  • கல்வி
  • பொது அறிவு
பெண்களுக்கு ஆன்லைன் உலகம் தந்திருக்கும் பலவீனங்கள்
  • முகம் தெரியாதவருடன் இரகசியம்
  • நேர விரயம்
  • உணவு, உடை, ஆரோக்கியங்களில் தர இறக்கம்
ஆன் லைன் விவாதங்களில் பல பெண்கள் அரசியல் பேசுவதைப் பார்க்கலாம். பொது விவாதங்களில் கலந்து கொள்வதை கவனிக்கலாம். தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்களால் இது போன்ற விவாத அரங்குகளுக்கு செல்ல முடியாது. ஆனால் ஆன்லைன் அமர்ந்த இடத்திலேயே இதைச் செய்ய வாய்ப்பளிக்கிறது. சில பெண்கள் தேர்தல் காலங்களில் பிரச்சாரத்தில் ஈடுபவதைக் கூட பார்க்கலாம். இந்த வாய்ப்பும், பழகும் சுதந்திரமும் அவர்களுக்கு புது சிநேகிதங்களையும், எதிரிகளையும், அவர்களின் பலவீனத்தை சுரண்டக் காத்திருப்பவர்களையும் ’சேர்த்தே அவர்களுக்கு தருகிறது. குறிப்பாக இளம் பெண்களும், வெளியில் செல்ல அதிக வாய்ப்பு இல்லாத, வேலைக்குச் செல்லாத பெண்களும் இதில் எளிதாக வந்து சிக்கிவிடுகிறார்கள். பலமா? பலவீனமா? என கணிக்க முடியாத ஒரு உலகில் சுழன்று கொண்டிருக்கிறார்கள்.

- அடுத்த பதிவு : இரண்டாம் பாகம்

14 comments:

Prabu Krishna said...

கதை தொகுத்த விதம் அருமை. ஆனால் அது நிஜம் என்பது நிறைய பெண்கள் உணர வேண்டியது.

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.

Kousalya Raj said...

உள்மனது எச்சரித்தும் பெரிசா என்ன நேர்ந்துவிடும் என்கிற அசட்டு துணிச்சல் இருக்கிறது இன்றைய பெண்களிடம் ! பிரச்சனைகள் பெரிதாகி காலம் கடந்த பின்பே பதறி துடிக்கிறார்கள்...வெளியே தலைகாட்ட இயலாமல் மன அழுத்தத்தில் விழுகிறார்கள்.

பெண் எங்கும் எதிலும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என வலியுறுத்தும் பகிர்வுக்கு பாராட்டுகள் செல்வா அண்ணா

சத்ரியன் said...

பெண்களை ஏமாற்ற அலையும் ஆண்களும்(ஒரு தந்தையாய், தனயனாய்) உணர வேண்டிய விழிப்புணர்வு பதிவு, செல்வா.

கவிநவன் said...

இந்த வலைப்பூ பதிவினை பெற்றோர்கள் முதலில் அவசியம் படிக்க வேண்டும். மகளை நாகரிக உலகில் நடமாட விடுவது தவறல்ல. ஆனால், அவளை, கலாச்சார தூளியிலிருந்து தவறவிடுவது துரதிருஷ்டம்.

தங்க.கதிரவன் said...

எச்சரிக்கை இப்போது அவசியம் தேவைப் படுகிறது..! நல்ல அருமையான பதிவு. சுவாரஸ்யத்தோடு ஒரு பெரிய பிரச்சினையைப் பதிவு செய்திருக்கிறீர்கள்..!

Chitra said...

இந்த மாய வலையில் பெண்களுக்கு கிடைக்கின்ற சுதந்திரமும், புதுப்புது சிநேகிதங்களும், கனவிலும் நினைக்க முடியாத வாய்ப்புகளும் அவர்களுக்கு ஒரு பலத்தை தந்திருக்கிறது என்பதை மறுக்கவே முடியாது.


....... பல டீன் ஏஜ் பெண்களுக்கு, raging hormones காரணமாக கொஞ்சம் rebellious or adventurous மன நிலை வரலாம். அந்த நேரம், இந்த பலமும் சேர்ந்து கொள்ளும் போது, பிரச்சனைகளில் அதிகம் மாட்டும் வாய்ப்பு வந்து விடுகிறது . நல்ல விழிப்புணர்வு பதிவு.

J.P Josephine Baba said...

நல்ல அறிந்து கொள்ள வேண்டிய த்கவல்கள் அடைங்கிய கட்டுரை பெண்களுக்கு மட்டும் தான் எச்சரிக்கையா?

இராஜராஜேஸ்வரி said...

எச்சரிக்கை பகிர்வு.

M.R said...

நல்ல விழிப்புணர்வு பதிவாக தந்துள்ளீர்கள் ,
பகிர்வுக்கு நன்றி நண்பரே .

பெண்கள் அதுவும் தனிமையில் உழலும் பெண்கள் உணர வேண்டிய கருத்துகள் .

சேட்டிங் மட்டுமில்லை ,நேரிலும் ஏமாந்து போகிறார்கள் பசப்பு வார்த்தைகளால் .

Tamil Stories Blogspot said...

பெண்கள் விழிப்புணர்வு கட்டுரை.... பகிர்வுக்கு நன்றி
இரண்டு விதமான சம்பவங்களையும் தொகுத்த விதம் அருமை...
வாழ்துக்கள்
இதையும் படிக்கவும்
http://tamilpadaipugal.blogspot.com/search/label/Womens%20Freedom%20Articles

Kumaresan Rajendran said...

நீங்கள் சொல்லும் அனைத்தும் உண்மை நண்பரே!!!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

அண்ணா.. ரொம்ப அவசியமான பதிவு!

நம் நிலை உணர்ந்து, அதற்கு தக்க பொறுப்போடு நடந்து கொண்டால், பல பிரச்சினைகளில் சிக்காமல் தவிர்க்கலாம்.
இணைய வளர்ச்சியில், உள்ள நல்ல விசயங்களை மட்டும் எடுத்துக் கொண்டால், நல்லது.

என் அண்ணா, அடிக்கடி சொல்வார்... முதலில் குடும்பம்.. அப்புறம் தான் எல்லாம் என்று..! அதை மனதில் இருத்திக் கொண்டால் ஷேமம்!! :)))