Saturday, August 13, 2011

ஆன்லைன் சதி வலைகளில் சிக்கும் பெண்கள் - எச்சரிக்கை - 02

 விபரீதம் - 1 - திருப்பம்
'சூரியா? ஜெயம் ரவி? யாரைப் போல இருப்பான்? '
அவள் ஆர்வத்துக்கு தொடர்பே இல்லாமல் ஒரு 50 வயது மதிக்கத்தக்க ஆள் கதவைத் திறந்தான்.
'விலாசம் மாறி வந்துவிட்டோமோ.. அவள் புன்னகை சட்டென சுருங்கியது. 'இங்கே.. இங்கே..'

'நான்தான் அவன்.. உள்ள வா..'நரைத்த தலை முடியுடன் வயதான ஒரு ஆணைப் பார்த்ததும் அவளுக்கு அதிர்ச்சி.. 'இந்த ஆளா..'
'இல்ல நான் அப்புறம்...''அப்புறமாவா? என்ன திடீர்னு பயமா இருக்கா? பயப்படாத.. உள்ள வா..'வளுக்கு இதற்கு முன் இப்படி வியர்த்ததே இல்லை.'அம்மா தேடுவாங்க.. நான் போறேன்.''போகலாம்.. இந்த ஜீஸ் குடிச்சுட்டுப் போ..''இல்ல வேண்டாம்.'
கதவு படக்கென்று மூடிக் கொண்டது.

விபரீதம் - 2 - திருப்பம்
'நீ அனுப்பிய காதல் கவிதை சூப்பர்' என்றது மறுமுனை.
'நானா? நான் அனுப்பவே இல்லையே..' என்று இவள் அதிர்ச்சியானாள்.
'இவ்வளவு அடக்கமா? உன்னுடைய ஃபோட்டோவும் சூப்பர். செம அழகு.'
'என்னது என்னுடைய ஃபோட்டோவா? நான் உனக்கு அனுப்பவே இல்லையே..'
'ஹா..ஹா..நல்லா ஜோக் அடிக்கிற.. நேத்து நைட் 2 மணி வரைக்கும் பேசிக்கிட்டிருந்தியே.. தூக்க கலக்கமா? அதான் எனக்கு அனுப்பினதே உனக்கு மறந்துடுச்சு.'
'பிராமிஸா நேத்து நான் உன் கூட சாட் பண்ணல. ஃபோட்டோவும் அனுப்பல..'
'இங்க பார் இது நீ அனுப்பாமல் எனக்கு எப்படி வரும்?'

புகைப்படங்களைப் பார்த்தவுடன் அதிர்ந்தாள். விதம் விதமான காணக்கூடாத கோணங்களில், மொபைல் போனில் எடுக்கப்பட்ட புகைப் படங்கள். எனக்குத் தெரியாமல் என்னை யார் புகைப்படம் எடுத்திருப்பார்கள். குழப்பத்துடன் யோசிக்கும்போதே, மங்கலாக ஃபோட்டோக்களின் பிண்ணனியில் அவளை உசுப்பேற்றிய நண்பர்கள். அவள் மிரண்டு போனாள். அதற்குப் பின் மறுமுனையிலிருந்து அவன் அனுப்பிய வரம்பு மீறிய வார்த்தைகளைக் கொண்ட கவிதையைப் பார்த்ததும் உறைந்தே போனாள்.

'
இல்ல.. இது நான் எழுதல.. அவள் அலறல் கேட்டு அறைக் கதவு திறந்து கொண்டது.'

கவர்ச்சியான, ஆனால் அபாயகரமான, தவிர்க்க முடியாத, ஆனால் ஜாக்கிரதையாக உலவ வேண்டிய ஆன்லைன் உலகம் பற்றிய ஒரு சிறு புள்ளி விபரம்.

இன்டர்நெட்டில் உலவுதல்
93% டீன்ஏஜ் மாணவர்கள் நெட்டில் உலவுகிறார்கள்.
80% டீன் ஏஜ் மாணவர்கள் வாரம் இரு முறையாவது ஆன் லைன் உலகில் வலம் வருகிறார்கள்

செல்போன் பயன்பாடு
75% டீன்ஏஜ் மாணவர்கள் மொபைல் போன் வைத்திருக்கிறார்கள்
1500 SMS அனுப்புகிறார்கள் மாதந்தோறும்.
4% இளைஞர்கள் விரும்பி ஆபாச SMS அனுப்புகிறார்கள்
15% இளைஞர்கள் விரும்பி ஆபாச SMS படிக்கிறார்கள்.

ஆன்லைன் தொல்லையில் சிக்கும் டீன்ஏஜ்கள்
மூன்றில் ஒரு டீன் ஏஜ் பெண் தொல்லைக்கு உள்ளாகிறாள்.
38% பெண்களும், 26% ஆண்களும் தொல்லைக்கு உள்ளாகிறார்கள்.

ஆன்லைன் விளையாட்டு
97% டீன்ஏஜ்கள் ஆன்லைன் விளையாட்டு விளையாடுகிறார்கள்.
27% டீன்ஏஜ் மாணவர்கள், முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுடன் விளையாடுகிறார்கள்.

ஆன்லைன் வேட்டைக்காரர்கள்
25 பேரில் ஒரு இளைஞர் இளைஞியை இன்டர்நெட்டுக்கு வெளியே சந்திக்கிறார்கள்.
27% பேரிடம் அவர்களை வைத்தே ஆபாச புகைப்படங்கள் எடுக்கிறார்கள்.

சோஷியல் நெட்வொர்க்கிங்
73% தங்களது உண்மை விபரங்களை ஃபேஸ்புக் போன்ற தளங்களில் வெளியிடுகிறார்கள்.
47% தங்கள் புகைப்படங்களை நண்பர்கள் அல்லாதவருக்கும் அனுப்புகிறார்கள்.
27% தங்கள் வீடியோக்களை நண்பர்கள் அல்லாதவருக்கும் அனுப்புகிறார்கள்.

விபரீதம் -1- இறுதிக்கட்டம்
கதவு தானாக மூடிக் கொண்டதா, யாராவது சாத்தினார்களா எனத் தெரியவில்லை. ஆனால் அப் பெண்ணின் வயிற்றுக்குள் பட்டாம்பூச்சிகள் பறக்க ஆரம்பித்துவிட்டன. பேச்சு எழவில்லை. தலையை குனிந்து கொண்டாள். அல்லது எதிரில் நிற்கும் அந்த ஆளை பார்க்க மறுத்தாள். கால்கள் துவண்டு கொண்டிருந்தன. இன்னும் சில வினாடிகளே நிற்க முடியும் எனத் தோன்றியது. கையிலிருந்த பூங்கொத்தும், புதுச் சட்டையும் பொத்தென கீழே விழுந்தன. ஓடிவிடலாமா என்று ஒரு கேள்வி எழ, அதற்க்கான திராணி இல்லாமல் உடலே பாரமாகிவிட்டது போல அவள் தவித்த வேளையில், கழுத்தருகில் அந்த ஆளின் சூடான மூச்சுக்காற்றை உணர்ந்தாள். ஒரு கெட்ட நறுமண செண்ட் அவளை சூழ, அம்மா எனக் கதறியபடி அவள் ஓட, அவளை துரத்திக் கொண்டு அந்த ஆளும் வந்தான். சடாரென ஒரு சத்தம். கதவைத் திறந்தபடி, அவளின் பெற்றோர்களும், போலீசும்.

விபரீதம் -2- இறுதிக்கட்டம்
கதவைத் திறந்து கொண்டு, அந்தக் கள்ள நண்பர்கள் கூட்டம் உள்ளே வந்தது. 
நான் இந்த ஆபாசக் கவிதையை எழுதல, ஏடாகூடமான ஆங்கிள்ல இருக்கிற என்னுடைய .போட்டோவை அனுப்பல. இதை யார் செய்தது?
நாங்கதான். உன்னுடைய பாஸ்வேர்டு எங்க எல்லாருக்கும் தெரியும். அதனால உனக்குத் தெரியாம, உன் பாஸ்வேர்டை பயன்படுத்தி நீ பேசற மாதிரி அவன் கூட பேசி அவனை மயங்க வைச்சோம். அப்பப்போ எங்க விலாசத்துக்கு கிஃப்ட் அனுப்ப வைச்சோம். எவ்வளவோ பணம் வாங்கியிருக்கோம்.
அடப்பாவிங்களா.. நான் இதை எங்கப்பா கிட்ட சொல்லிடுவேன்.
சொல்லு.. நாங்க உன்னை அப்பப்போ ஃபோன்ல ஏடாகூடமா எடுத்த ஃபோட்டோஸை அவருக்கும் காட்டுவோம். அவரு அதைப் பார்த்ததும் தற்கொலையே பண்ணிக்குவாரு.
அப்படியெல்லாம் நடக்காது.
அப்படி எதுவும் நடக்கலன்னா, இப்பவே இமெயிலை திறந்து பாரு. உன் சார்பில நாங்களே சாட் பண்ணி அதை வீடியோ பண்ணியிருக்கோம். இமேஜாவும் இருக்கு. நீதான் இப்படி பேசினேன்னு உலகம் முழுக்க பரப்புவோம்.
விளையாட்டுன்னு நினைச்சு உங்களை நம்பினேனே.. ஏண்டா இப்படி செய்தீங்க...
இன்னும் நிறைய பேரை பலியாக்கப்போறோம். பணம் பறிக்கப்போறோம். அவங்க எல்லாத்துக்கும் நீதான் தூண்டில். நீ இதுக்கு ஒத்துக்கலன்னா, முதல் பலி நீதான். உன் ஃபோட்டோ, ஆபாசப் பேச்சு எல்லாம் இன்டர்நெட்டில் பறக்கும்.
ஐயோ எனக் கதறியபடி அவள் மயக்கமடைந்த போது போலீசும், பெற்றோர்களும் உள்ளே நுழைந்தார்கள்.

இரண்டு கேஸிலுமே, பெற்றோர்கள் ஏதோ ஒரு முன் ஜாக்கிரதையாக அப் பெண்களிடம் பாஸ்வேர்டை வாங்கி வைத்திருந்திருக்கிறார்கள். அதனால் அதை திறந்து பார்த்து தூண்டில் வீசிய அத்தனை கபடதாரிகளையும், அவர்களுடைய இமெயிலையும் மற்ற தகவல்களையும் படித்து, பார்த்து அவர்களை எளிதாக வளைத்துவிட்டார்கள்.

ஆனால் முதல் சம்பவத்தில் சிக்கிக் கொண்ட பெண்ணின் நிலை பரிதாபம். அவளுடைய வீட்டில் அவளை ஏற்றுக் கொண்டாலும், உறவினர்கள் பக்கத்துவீட்டுக்காரர்களின் கேலியைத் தாங்காமல், வேறு ஊருக்கு செல்ல முயன்று கொண்டிருக்கிறார்கள். கல்வி நின்றுவிட்டது.

இரண்டாவது பெண்ணின் நிலையும் அத்தனை திருப்திகரமாக இல்லை. அப் பெண் எங்கு சென்றாலும் சந்தேகம், யாருடனாவது போனில் பேசினாலே சந்தேகம் என அவளுடைய வீடே அவளை சந்தேகப்பட்டுக் கொண்டிருக்கிறது.

முன் ஜாக்கிரதை நடவடிக்கைகள்
 • குழந்தைகள், டீன் ஏஜ் மாணவர்களின் பாஸ்வேர்டுகளை பெற்றோர்கள் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
 • அவ்வப்போது அந்த பாஸ்வேர்டு மாறாமல் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
 • ஃபேஸ்புக் போன்ற தளங்களில், தங்கள் மகன்கள், அல்லது மகள்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள், யாருடன் பழகுகிறார்கள் என்பதை அறிந்து நீங்களும் அவர்களுடன் பழக வேண்டும்.
 • யாராவது சந்தேகத்துக்கு இடமாக பழகுவதாகத் தெரிந்தால், அனைவரும் பார்க்கும்படியாக, மற்றவர்களுக்கும் உதவும்படியாக, ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுவிட்டு, அவர்களை நண்பர்கள் பட்டியலில் இருந்து நீக்குங்கள்.
 • சந்தேகப்படும் ஆன் லைன் நண்பர்களை ஆன் லைனிலேயே வைத்திருங்கள், வீடு வரை அழைக்காதீர்கள்.
 • தித்திப்பான வார்த்தைகளுக்கு மயங்காதீர்கள். கபடதாரிகளின் முதல் தூண்டில் அதுதான்.
 • குறிப்பாக உனக்குப் பிடித்த உடை, உணவு, நிறம், தோற்றம் பற்றி விசாரிப்பவர்களை உடனே ஒதுக்குங்கள்.
 • உங்கள் அந்தரங்கங்களை யார் கேட்டாலும் சொல்லாதீர்கள்.
 • உங்கள் குடும்ப விபரங்கள், விலாசங்கள், பாங்க் விபரங்களை சொல்லாதீர்கள்.
 • யாரையாவது சந்தித்தே ஆக வேண்டுமென்றால், முதலில் பெற்றோர்கள் அல்லது உறவினர்களுடன் சந்தியுங்கள்.
 • ஆபாசமாக பேசும் உரையாடல்களில் விளையாட்டாகக் கூட பங்கு பெறாதீர்கள்.
தங்களுக்கென்று சுய அடையாளம் தேடும் பெண்கள் அனைவருக்கும் அதைத் தருகிற சோஷியல் நெட்வொர்க்கிங் எனப்படும் ஆன்லைன் தளங்கள், அவற்றின் இருண்ட பக்கங்களையும் சேர்த்தே தருகிறது. அங்கு பெண்கள் மிகக் கொடுரமாக தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். அவர்களின் அழகும், அறிவும், கேலிக்குள்ளாக்கப்படுகிறது. அவர்களின் வெகுளியான பழகும் தன்மை கொச்சைப்படுத்தப்படுகிறது. சடுதியில் போட்டோக்களையும், வீடியோக்களையும் உலகமெங்கும் பரப்பிவிடும் மொபைல் மற்றும் ஆன்லைன் வசதிகளால், பெண்களைப் பற்றிய மதிப்பீடுகளும், மனரீதியான தாக்குதல்களும் பரப்பப்படுகின்றன.

இப்படி தாக்குதலுக்கு உள்ளாகிற பெண்கள், வீட்டிலும், பள்ளியிலும், பொது இடங்களிலும் ஆதரவின்றி அலைக்களிக்கப்படுகிறார்கள். அரவணைக்க வேண்டிய நண்பர்களும், தோழிகளும், உறவினர்களும் அவர்களை மேலும் காயப்படுத்துகிறார்கள். அதனால் அவர்கள் மேலும் தனிமைப்படுத்தப்பட்டு கோபம், பச்சாதாபம், எதைக் கண்டும் பதுங்குதல், வீட்டுக்குள்ளேயே ஒடுங்குதல் அல்லது எதற்கும் மதிப்பு தராமல் எதையும் எதிர்த்தல் என மிகப் பெரிய மாற்றங்களுக்கு உள்ளாகிவிடுகிறார்கள்.

பொது வாழ்க்கையில் எந்தக் காரணத்துக்காக பெண்களை நோக்கி வலை வீசப்படுகிறதோ, அதே நோக்கத்துக்காகத்தான் ஆன்லைனிலும் வலை வீசப்படுகிறது. ஆனால் ஆன்லைனில் பாதிப்பு அதிகம். உலகமெங்கும் ஒரு பெண்ணைப் பற்றி ஒரே வினாடியில் கொச்சைப்படுத்தி அவள் தொடர்புடைய புகைப்படத்தையோ, வீடியோவையை பரப்பிவிட முடியும். இதை எதிர்கொள்ள அந்தப் பெண்ணுக்கும், அவள் சார்ந்தவர்களுக்கும் சக்தியும், மனதைரியமும் இல்லையென்றால் மிகக் கடினம்தான்.

12 வயதிலிருந்து 30 வயதுப் பெண்கள்தான் மிகச் சுலபமாக இரையாகிறார்கள் என்று ஒரு சர்வே சொல்கிறது. 30-45 வயதுக்குள்ளான பெண்கள், தர்க்க ரீதியாக, அறிவு ரீதியாக, உணர்வு ரீதியாக ஈர்க்கப்பட்டு பலியாகிறார்கள். ஃபேஸ்புக் பயன்படுத்தும் டீன் ஏஜ் பெண்களுக்கு அதிகமான ஃபிரண்ட் ரிக்வெஸ்ட் அனுப்புவது யார் தெரியுமா? 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள்தான். அதாவது டீன் ஏஜ் பையன்களும், இளவட்டங்களும் இந்தக் குற்றப்பிரிவில் குறைவாகத்தான் இருக்கிறார்கள்.

தெரியாமல் சிக்கிக் கொள்கிற பெண்கள் ஒருபுறம். ஓரளவுக்கு தெரிந்தே ரிஸ்க் எடுக்கிற பெண்கள் இன்னொரு புறம். இவ்வகைப் பெண்கள் தினசரி வாழ்க்கையிலேயே மனரீதியான, உடல் ரீதியான தாக்குதலுக்கு உள்ளானவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அதை வெளியே சொல்ல பயந்து, இன்டர்நெட்டுக்குள் நுழையும்போது, வெளியில் திரியும் கள்வர்களே உள்ளேயும் திரிவதை கண்டுகொள்கிறார்கள். அவர்கள் கள்வர்கள் என்று தெரிந்தே பழகுகிறாரகள். அது அவர்களுக்கு ஒரு சவாலான சாகஸமாக இருக்கிறது. இதில் தப்பி வெளியே வருபவர்களும் இருக்கிறார்கள். மீண்டும் சறுக்கி மேலும் பாதாளத்தில் வீழ்பவர்களும் இருக்கிறார்கள்.

எனவே ஆன்லைனுக்குள் போய் அப்படி ஆகிவிடாதே, இப்படி ஆகிவிடாதே என்று எச்சரிப்பதை விட, தினசரி வாழ்விலேயே ஒரு ஆரோக்கியமான, பாதுகாப்பான சூழல்களை உருவாக்கிவிட்டால், அதே போன்ற நல்ல துணையுள்ள ஒரு சூழல் பெண்களுக்கு ஆன்லைனிலும் வாய்க்கிறது என்பதும் உண்மை.
(இக் கட்டுரை கம்ப்யூட்டர் உலகம், ஆகஸ்டு மாத இதழில் வெளிவந்துள்ளது)
Post a Comment