Friday, February 17, 2012

தோனி - விமர்சனம்

நான் பெஞ்ச் மேல் நின்ற 9ம் வகுப்பு நினைவில் இருந்து ஆரம்பிக்கிறேன். செட் தியரி, தியரங்கள் போன்ற புது சமாச்சாரங்கள் பள்ளிக்கூடத்துக்குள் நுழைந்திருந்தன. சார் இதெல்லாம் நம்ம நிஜ வாழ்க்கையில எப்படி பயன்படுதுசார்னு ஒரே ஒரு கேள்விகேட்டேன். பத்து பிரம்படிக்குப் பின் 5 மணி நேரம் பெஞ்சில் நிறுத்தப்பட்டேன். நான் கல்லூரி படிப்பை முடிக்கும் வரை எந்த வாத்தியாரும் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவில்லை. பெஞ்சில் நிறுத்துவதிலும், வகுப்புக்கு வெளியிலே முட்டி போட வைப்பதிலுமே குறியாக இருந்தார்கள்.

தெரியாது என்று சொல்கிற மாணவன் மக்கு, கேள்வி கேட்கும் மாணவன் ரௌடி என்று முத்திரை குத்துவதில் நமது வகுப்பறை வாத்தியார்கள், அவர்கள் சொல்வதை வேதமாக நம்பும் பெற்றோர்கள் என எல்லோருக்குமே பங்கு இருந்தது, இன்னமும் இருந்து வருகிறது.

இந்தக் கல்வி முறையை தோனி படம் மூலமாக பெஞ்சில் ஏற்றியிருக்கிறார் பிரகாஷ் ராஜ்.

தமிழ் சினிமா திடீரென்று நமது கல்வி முறையின் குறைகளைப் பற்றி பேச ஆரம்பித்திருக்கிறது. முதலில் நண்பன் அப்புறம் தோனி. (மெரினா இன்னும் பார்க்கவில்லை) இரு படங்களுமே ரீ மேக் என்றாலும் இரு கரம் கூப்பி வரவேற்கிறேன்.

சமச்சீர் கல்வி, செயல்வழிக் கல்வி என்று நமது கல்வி முறையில் மாற்றங்கள் வந்து கொண்டிருக்கும்போது, தமிழ் சினிமாவில் அந்த மாற்றங்களை ஒட்டிய சிந்தனைகள் தலைகாட்ட ஆரம்பித்திருப்பது வரவேற்கத்தக்கது.

ஒரு மாணவன் பள்ளிக்கு எதற்குப் போகிறான். தனக்குத் தெரியாது என்பதை தெரிந்து கொள்ளவே பள்ளிக்குச் செல்கிறான். ஆனால் பள்ளியில் தெரியாது என்று சொன்னால் பனிஷ்மெண்ட். அதனால் வாயே திறக்காமல் கடைசி வரை ஊமையாகவே இருந்து, பயந்து பயந்து தெரிந்து கொள்ள வேண்டியவற்றை தெரிந்து கொள்ளாமலேயே பாஸ் செய்கிறான்.

ஒரு ஹோட்டலுக்குச் சென்றால் எது பிடிக்கும் என்று மகனையோ மகளையோ கேட்கிறோம். ஆனால் அவர்களுடைய எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடிய கல்வியோ, அவர்களுக்கு பிடிக்காத அனைத்தையும் அவன் மேல் திணிக்கிறது. எனக்குப் பிடிக்கவில்லை என்று சொன்னால், அவன் விருப்பம் என்னவென்று கேட்காமலேயே புத்தகத்தில் இருப்பதையெல்லாம் படிக்கச் சொல்லி அவனை ஒரு மார்க் வாங்கும் இயந்திரமாக மட்டுமே மாற்றுகிறது. இதனால் மாணவர்கள் தனக்கு விருப்பமானதையும் தொடர முடியாமல், விருப்பமில்லாததையும் தொடரமுடியாமல் மக்கு பிளாஸ்திரிகளாக சித்தரிக்கப்பட்டு பள்ளியிலிருந்து வெளியே துப்பப்படுகிறார்கள்.

பிரகாஷ்ராஜின் மகனுக்கு தோனி போல பெரிய கிரிக்கெட் வீரனாக வர விருப்பம். ஆனால் தந்தை பிரகாஷ் ராஜிம், பள்ளியும் அவனுக்குப் பிடிக்காத கணக்குப்பாடத்தை படிக்கச் சொல்லி இம்சிக்கிறார்கள். அது பிடிக்காமல் அவன் மேலும் மக்கு மக்கு என்று பெயரெடுக்கிறான். இப்படியே விட்டால் அவன் ஃபெயில் ஆகிவிடுவான், பள்ளிக்கு 100 சதவிகித தேர்ச்சி போய்விடும் என்று ரெக்கார்ட் பற்றி கோபப்படுகிறது நிர்வாகம். எனவே டிசி கொடுத்துவிடுவேன் என பயமுறுத்த பயந்து போகும் பிரகாஷ்ராஜ் மகனை டியூஷன், ஸ்பெஷல் கிளாஸ் என இன்னமும் மூச்சுத் திணறத் திணற புத்தகத்துக்குள் அழுத்துகிறார்.

மகனைப் புரிந்து கொள்ளாத அப்பாவாக இதை வாசித்துக் கொண்டிருக்கும் நீங்களே இருக்கக் கூடும். மாணவனின் படிப்பை பற்றிக் கவலைப் படாமல் தனது 100 சதவிகித தேர்ச்சி விகிதத்துக்காக மட்டும் பள்ளி, உங்கள் மகனோ மகளோ படிக்கும் பள்ளி இருக்கக் கூடும்.

விரும்பியதைப் படிக்கும் சுதந்திரத்தை ஒரு மாணவனுக்கு நமது கல்வி முறை தர வேண்டும் என்று வாதாடுகிறது தோனி திரைப்படம். அதற்காக சில மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள் இருந்தாலும், மார்க் மார்க் என்று மிகைப்படுத்தப்பட்ட மனப்பாட முறை கல்விக்கு எதிரானது என்பதால் தோனி திரைப்படத்துக்கு என் ஆரவாரமான வரவேற்புகள்.

கடைசியாக ஒரு கேள்வி - செட் தியரியை நாம் நிஜ வாழ்க்கையில் எங்கு பயன்படுத்துகிறோம்? பதிலை நீங்கள் சொல்ல வேண்டாம். என்னை பெஞ்சில் ஏற்றிய அந்த 9ஆம் வகுப்பு வாத்தியார்தான் சொல்ல வேண்டும்.

7 comments:

karthikeyan.kg. said...

படத்தை பற்றி கூறாமல் அதை சார்ந்து நீங்கள் எழுதி இருப்பது அருமை

venky said...

செல்வகுமார் சார்... good.... continue பண்ணுங்க... நல்லா இருக்கு..

Rathnavel Natarajan said...

தெரியாது என்று சொல்கிற மாணவன் மக்கு, கேள்வி கேட்கும் மாணவன் ரௌடி என்று முத்திரை குத்துவதில் நமது வகுப்பறை வாத்தியார்கள்,

அருமையான பதிவு. நன்றி.

ஹாலிவுட்ரசிகன் said...

இன்னும் பார்க்கவில்லை. விமர்சனத்திற்கு நன்றி.

Chitra said...

விரும்பியதைப் படிக்கும் சுதந்திரத்தை ஒரு மாணவனுக்கு நமது கல்வி முறை தர வேண்டும் என்று வாதாடுகிறது தோனி திரைப்படம். அதற்காக சில மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள் இருந்தாலும், மார்க் மார்க் என்று மிகைப்படுத்தப்பட்ட மனப்பாட முறை கல்விக்கு எதிரானது என்பதால் தோனி திரைப்படத்துக்கு என் ஆரவாரமான வரவேற்புகள்.



...... வரவேற்கப்பட வேண்டிய மாறுதல்கள் என்றுதான் வருமோ?

Chitra said...

பெஞ்சில் நிறுத்துவதிலும், வகுப்புக்கு வெளியிலே முட்டி போட வைப்பதிலுமே குறியாக இருந்தார்கள்


...... same boat ல போய் இருக்கேன்..... அவ்வவ்.....

SARAVANAN PALANISAMY said...

thanks for your