Sunday, March 11, 2012

அரவான் - விமர்சனம்


வசந்தபாலன் ஒரு ஒரிஜினல் படைப்பாளி. அரவான் பார்க்கிறவரை அப்படித்தான் நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் அவரும் ஆங்கிலப் படங்களின் டிவிடிக்களைப் பார்த்து, அவற்றில் உள்ள நல்ல காட்சிகளை தமிழாக்கம் செய்வார் என்று நிச்சயம் எதிர்பார்க்கவில்லை.

அவர் வெயில் படத்தின் திரைக்கதையை உணர்வுப்பூர்வமாக கண்களில் நீர் வழிய விவரித்ததை நேரில் கேட்டிருக்கிறேன். கதாபாத்திரங்களை உயிருள்ளவர்கள் போல நம்பி அவர்களுடன் ஒன்றக் கூடியவர். ஆனால் அரவானில் அவர் கதாபாத்திரங்களுடன் ஒன்றியதைவிட பிரமாண்டம், கிராபிக்ஸ், பீரியட் ஃபிலிம், டிஜிட்டல் சினிமா என்று டெக்னிகல் மற்றும் கமர்ஷியல் அம்சங்களுடன் அதிகம் ஒன்றிவிட்டார் எனத் தோன்றுகிறது.


அண்ணா சாலை வழியாக சத்யம் எஸ்கேப்புக்குள் நுழைய முற்படுபவர்கள், நைட் ஷோவுக்கு சாயங்காலமே புறப்பட்டுவிடுவது நல்லது. திக்குத் தெரியாமல் திரியும் திரைக்கதை போல, தியேட்டரின் நுழை வாயிலைத் தேடி (மெட்ரோ ரயிலுக்கு வழிவிட்டு) கிட்டத்தட்ட 300 யு டர்ன்கள் அடிக்க வேண்டியதிருக்கிறது. ஆனால் நீங்கள் எவ்வளவு தாமதமாகப் போனாலும் ஃபிங்கர் சிப்ஸ் மொறு மொறுவென்று சூடாகக் கிடைக்கிறது என்பதும், படம் ஆரம்பித்துவிட்டாலும், சென்னை டிராபிக் ஜாம் போல, நமக்காக அதே இடத்தில் நகராமல் நின்று கொண்டிருக்கிறது என்பதும் முதல் பாதியின் மைனஸ்.


கதைக் களமும், கதையும் அருமை. ஆனால் படத்தில் ஓடி ஒளியும் கதாநாயகனைப் போல,  திரைக்கதையும் ஓடி ஒளிந்துவிட்டது.


எதைச் சொன்னாலும், நல்லதையும் சொல்ல வேண்டும் என்பதால், பண்டைத் தமிழர்களை பீட்ஸா தமிழர்களுக்கு அறிமுகப்படுத்த முயன்றுள்ள பாலை படத்துக்கு ஒரு சபாஷ்! அடடா பாலை என்று சொல்லிவிட்டேனா...! பரவாயில்லை.... கிட்டத்தட்ட அதே சாயலில் வெளியாகியுள்ள அரவான் படத்துக்கும் அதே சபாஷை பாதியாக்கி பகிர்ந்து கொடுக்கிறேன்.

இரு படங்களும் முழுக்க முழுக்க டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் தயாரான படங்கள் என்பதில் ஒற்றுமை துவங்குகிறது. பண்டைய தமிழர்களைப் பற்றி சொல்வதற்கு எவ்வளவோ இருக்க, அவர்கள் களவாடியதையும், சண்டையிட்டுக் கொண்டதையும் மட்டுமே சொன்னதில் ஒற்றுமை தொடர்கிறது. அப்புறம் (ஏதோ ஃபேஷன் ஷோவில் பிடித்துக் கொண்டு வந்தது போலத் தோன்றும்) கதை நாயகிகளை தேர்வு செய்த விஷயத்தால் இரண்டு படங்களையும் ஒப்பிடுவதை தவிர்க்கவே முடியவில்லை. மிக முக்கியமாக சுருக்கமாக ஒன்றரை மணி நேரத்தில் எடுக்க வேண்டியதை, இரண்டு மணி நேரங்களுக்கும் மேலாக நீட்டி முழக்கி அலுப்பு ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

பசுபதி நன்றாக நடித்திருக்கிறார். அவருடைய தியேட்டர் அனுபவத்தை கச்சிதமாகப் பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் அவருக்கு இதெல்லாம் போதாது. ஆதிக்கு இது புது அனுபவமாக இருந்திருக்கும். மிகவும் சிரமப்பட்டிருக்கிறார் என்பது புரிகிறது. எக்கச்சக்க ஸ்கோப் இருந்தும் அதிகமாக சோபிக்கவில்லை. காரணம் அவருக்கு பெரும்பாலும் அழுத்தமற்ற காட்சியமைப்புகள். படம் முழுக்க வரும் நாயகியை விட, நண்பனின் மனைவியாக வரும் பெண்ணும்,  கவர்ச்சிப் பெண்மணிகளும் அதிகம் நிற்கிறார்கள். கோடம்பாக்கத்தில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள அலைபாய்ந்து கொண்டிருக்கும் பரத்துக்கு அரவான் சரியான பயிற்சிப் பட்டறை! அஞ்சலி தேவையற்ற தேர்வு, வீணடிக்கப்பட்டிருக்கிறார்.


எங்களுடன் படம் பார்த்த சொற்ப இரசிகர்களில் பாதிப்பேர், படத்தில் நடித்த யாருக்கோ நண்பர்கள் போலிருக்கிறது. சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் கை தட்டிக் கொண்டிருந்தார்கள். பின்னர் அலுத்துப் போய் அவர்களே கேலி செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் அவர்களால் பாப்கார்ன் செம சேல்ஸ். பக்கெட் பக்கெட்டாக காலி செய்தார்கள். படம் சுவாரசியமின்றி தொய்யும்போதெல்லாம், இவர்களைத்தான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.


எனது நண்பர் விவேக் நாராயண் ஒரு பாடலில், சீர்காழி சிவசிதம்பரத்துடன் இணைந்து பாடியிருக்கிறார். பாடல் சுமார் என்றாலும், (அரவான் அரவான் கோரஸ்) ஏதோ முஸ்லீம் பாடல் போல ஒலிக்கிறது. கதாநாயகி தேர்வைப் போலவே, கார்த்திக்கை இசையமைப்பாளராக்கியதும் ராங் சாய்ஸ். நிலா பாடலில் வரும் கிராபிக்ஸை எட்டாங்கிளாஸ் படிக்கும் மாணவர்களே ஃபிளாஷில் செய்துவிடுவார்கள். படு குழந்தைத் தனமாக இருந்தது!

சிலுக்கு சீஸன், பழி வாங்கும் சீஸன் போல இது தமிழ் உணர்வு சீஸன் போலிருக்கிறது. பாலை, ஏழாம் அறிவு, அரவான் என்று தொடர் தமிழ் உணர்வுத் தாக்குதல்கள் கொஞ்சம் கிலியைத் தருகிறது. சந்தோஷமாக இருந்தாலும், அரை குறை திரைக் கதைகள் இம்சிக்கின்றன.

மகா பாரத யுத்தத்தில் பாண்டவர்கள் வெல்ல வேண்டும் என்பதற்காக, தன்னைத் தானே பலி கொடுத்துக் கொண்டவனின் பெயர் அரவான். வசந்தபாலனின் நாயகன், இரு ஊர்களின் பகை தீர வேண்டும் என்பதற்காக தன்னைத் தானே பலி கொடுத்துக் கொள்கிறான்.

மரண தண்டனை அப்போதும் இருந்தது, இப்போதும் இருக்கிறது. இனிமேல் இருக்கக் கூடாது என்ற டைட்டில் கார்டுடன் படம் முடிவடைகிறது.

ஆனால் படம் இந்த டைட்டில் கார்டில் ஆரம்பித்து, ஆதி கழுத்தை வெட்டிக் கொள்ளும் முன் ஃபிளாஷ் பேக்கில் கதை நகர்ந்திருக்க வேண்டும்.

காவல்கோட்டம் புத்தகத்தின் இடையில் வந்து போகும் சிறுகதைதான் அரவான் திரைக்கதை என்று வசந்தபாலன் சொல்லியிருந்தார். அரவான் படம் முழுவதுமே ஒரு இடைச் செருகலை வலிந்து இழுத்தது போலத்தான் இருக்கிறது.

டியர் வசந்தபாலன்,
இனி நாவல்களை முழுவதுமாக வாசியுங்கள். எங்களைப் போல பாதியிலேயே நிறுத்திவிட்டு, ஆங்கிலப்பட டிவிடிக்களை பார்த்துவிட்டு திரைக்கதை எழுத ஆரம்பிக்காதீர்கள். நீங்கள் சுயமாகவே சிந்தித்து நல்ல படம் எடுக்கக்கூடியவர் என்கிற அபார நம்பிக்கையால் இதை உரிமையுடன் சொல்கிறேன்.

(அவர் எந்தெந்த படங்களின் டிவிடிக்களை பார்த்து அரவானில் காட்சியமைத்திருக்கிறார் என்பதை, வசந்தபாலனை விமர்சிக்க நேர்ந்த  வருத்தத்துடன், இதை வாசிக்கிற உங்கள் யூகத்துக்கே விட்டுவிடுகிறேன்)

இதே திறமையான டீம், இன்னும் நல்ல திரைக்கதையுடன் மீண்டும் களத்துக்கு வந்து வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறேன்.

7 comments:

ராம்ஜி_யாஹூ said...

முழுமையான விமர்சனம்.
மலையாள சினிமா போல நகைச்சுவையுடன் ஆரம்பித்து சீரியஸில் கொண்டு போய் முடித்து இருக்கிறீர்கள்.

Unknown said...

ஏன் இந்த கொலை வெறி.. சபாஷ் சரியான விமர்சனம். வசந்தபாலன் படம் என்று எதிர்பார்த்து போன ரசிகர்களுக்கு, இந்த படம் அவர் ரசிகர்களுக்கு கொடுத்த விருந்து 10% திருப்திதான் .... நிலா, காளைமாடுகள்.. போன்ற CG தேவையோ, தேவையில்லையோ... தயிர் சாததிற்கு தொட்டுக்க தோசை மிளகாய் போடி. போலத்தான் இருந்தது.. இருந்தாலும்... பதினெட்டாம் நூற்றாண்டு மக்கள் இப்படிதான் இருப்பார்களோ என்று வினவிக்கொண்டே வந்தோம். நாங்கள் துபாயில், முதல் நாளே பார்த்து விட்டோம். செல்வா சார் விமர்சனத்திற்காக காத்துக்கொண்டிருந்தோம். எப்படி.. கடித்துக்கொதருகிரீர்கள் என்பதை பார்பதற்காக...narasimhanbalaji@yahoo.com; narasimhanbalaji@facebook.com

Subasree Mohan said...

மிகவும் ஒரு நடுனிலையான் விமர்சனம்.

Cable சங்கர் said...

வசந்தபாலனின் வெய்யில் சினிமா பாரடைசோவின் ஒரு பாதியையும், மீதி கொஞ்சம் சொந்தக் கதையும்தான்.

மூன்றாவது படம். அங்காடித்தெரு நல்ல முயற்சி

இது அபோகலிப்டோவுக்காக, பலி கொடுக்கப்ப்ட்ட காவல் கோட்டம்.

தயவு செய்து பாலையையும், இந்தப் படத்தையும் கம்பேர் செய்யாதீர்கள். அது சினிமாவே இல்லை.

கோவை நேரம் said...

ரொம்ப நாள் கழித்து விமர்சனம்...
படம் பார்க்கலாம் தானே...

Anonymous said...

Nice review

Kathiravan Rathinavel said...

சரியான விமர்சனம், நேத்துதான் நானும் படம் பார்த்தேன், ரொம்ப எதிர்பார்த்தது தப்பா போச்சு, வேனும்னே நெகடிவ் க்ளைமேக்ஸ் வைக்கறதே வேலையா போச்சு