Tuesday, March 6, 2012

மக்களையே மக்களுக்கு எதிராகத் தூண்டும் ஜெ, மன்மோகன் சிங் அரசுகள்!

இந்த நூற்றாண்டின் அசுர வளர்ச்சி தகவல் தொழில் நுட்பம். அதன் பிரமாண்டமான பயன், அதன் வழியாக ஒன்றுமையாக ஒன்று கூடி அரசுகளை கேள்வி கேட்க ஆரம்பித்திருக்கும் மக்களின் எழுச்சி!

ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத் தளங்கள் வழியாக மக்கள் தாங்களாகவே விவாதிக்கிறார்கள். அரசை கேள்வி கேட்பது என்று முடிவெடுக்கிறார்கள். முன் எப்போதையும் விட தைரியமாக விமர்சிக்கிறார்கள். பெரும் திரளாக ஒன்று கூடி அரசுகளுக்கு கலக்கத்தை உண்டு பண்ணுகிறார்கள். அடுத்த தேர்தல் வரை ஜாலியாக காலம் தள்ளிவிடலாம் என்று மெத்தனமாக இருக்கும் ஜனநாயக அரசுகள் ஸ்தம்பித்து நிற்கின்றன. நான்தான் ராஜா என்னை என்ன செய்ய முடியும் என்று எதேச்சதிகாரத்துடன் திரிந்த மன்னர் ஆட்சிகளும் ஆட்டம் கண்டு கொண்டிருக்கின்றன.

உலகம் முழுவதும் மக்கள் தாமாகவே முன் வந்து, அலையலையாக ஒன்று கூடி, ஒரு சுனாமியைப் போல அரசுகளை தூக்கி எறியும் சக்தியுடன் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். இதனால் மிரண்டு போயிருக்கும் அரசியல்வாதிகள், தற்போது அரசியல் எதிரிகளை சமாளிப்பதை விட, கேள்வி கேட்கும் மக்களை திசை திருப்புவது எப்படி? அவர்களுடைய கூர்மையை மழுங்கச் செய்வது எப்படி? அவர்களுடைய ஒற்றுமையை குலைப்பது எப்படி என்று தங்கள் கருப்பு மூளைகளை கசக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

உலக அரசியல் ஒரு புறம் இருக்கட்டும். நமது இந்திய அரசியலுக்கு வருவோம். முல்லை பெரியாறு அணைப் பிரச்சனையில் அரசியல் ரீதியாக முடிவெடுக்க திராணி இல்லாத ஜெயலலிதா அரசு, தமிழக மக்களை கேரள அரசுக்கும், கேரள மக்களுக்கும் எதிராக தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்தது. தமிழகத்தில் மலையாளம் பேசும் மக்களும், அவர்களது வியாபாரத் தலங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. அதை கண்டும் காணாதது போல தமிழக அரசும், தமிழக போலீசும் இருந்துவிட்டன. இப்போது என்ன ஆயிற்று? கேரள மக்களின் மேல் தேவையற்ற திணிக்கப்பட்ட கோபத்தை வளர்த்ததோடு பிரச்சனை கிடப்பில் போடப்பட்டுவிட்டது.

உம்மண் சாண்டியின் தலைமையில் கேரள அரசும், இதே போல மறைமுகமாக ரௌடிகளைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்தது. கேரளாவில் வசிக்கும் தமிழர்கள் தாக்கப்பட்டார்கள். அவர்களுடைய வீடுகள் சூறையாடப்பட்டன. தமிழக போலீசைப் போலவே, கேரள போலீசும் இந்த தாக்குதல்களை கண்டு கொள்ளாமல் இருந்துவிட்டன.

அரசியல் ரீதியாக பிரச்சனைகளை சமாளிக்க முடியாத தமிழக-கேரள அரசுகள், தமது மக்களை அண்டை மாநில மக்களுக்கு எதிராக தூண்டி தங்களது இயலாமையை மறக்கடிக்கிறார்கள். சகோதரர்களாக வாழ்ந்து தமிழக, கேரள மக்களை எதிரிகளாக மாற்றி தங்களது அரசியல் வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்கிறார்கள்.

தற்போது இதே பிரித்தாளும் வழிமுறையை, சட்டம் ஒழுங்குப் பிரச்சனையிலும் ஜெயலலிதா அரசு கடைபிடிக்கிறது.  நான் ஆட்சிக்கு வந்ததுமே திருடர்களும், கொள்ளையர்களும் ஆந்திராவுக்கு தப்பிவிட்டார்கள் என்று கொக்கரித்தார் ஜெயலலிதா. ஆனால் தொடர்ந்து தமிழகத்தில் கொலைகள், கொள்ளைகள். தமிழக போலீசும், ஜெயலலிதாவும் மக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்கள். ஏற்கனவே விலைவாசிப் பிரச்சனையால் கோபத்தில் இருக்கும் மக்களை சமாதானப்படுத்துவது எப்படி என்று ஜெயலலிதா அரசு தடுமாறிக் கொண்டிருந்தது.  அவர்களை கவனம் கலைக்க அரசும், போலீசும், திட்டமிட்டு, இரகசியமாக கையிலெடுத்திருக்கும் விஷயம்தான் வட இந்தியர்களின் மீது மக்களின் கோபத்தை திசை திருப்பும் செயல்.

ஆங்காங்கே அதிகமாகிக் கொண்டிருந்த செயின் திருட்டு,  வழிப்பறி, கொலைகள் உட்பட, தொடர் வங்கிக் கொள்ளைகளால் மக்கள் தமிழக அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகளின் மீது நம்பிக்கை இழந்து கொண்டிருந்தார்கள். இதைச் சமாளிக்க அரசு நடத்திய ஆக்ஷன் பிளான்தான் என்கவுண்டர். என்கவுண்டரைப் பற்றி ஆயிரம் சந்தேகங்கள் உள்ளன. அது வேறு சப்ஜெக்ட். ஆனால் இதில் நிச்சயம் கவனிக்க வேண்டிய ஒரு கேவலமான அம்சம் உள்ளது. அது... தமிழகத்தில் நிகழும் அனைத்து கொலை, கொள்ளைகளுக்கும் காரணம் இங்கு பிழைப்புக்காக வந்திருக்கும் வட இந்தியர்கள்தான் என்கிற மறைமுகப் பிரச்சாரம்தான். என்கவுண்டர் நடந்த தினத்திலிருந்தே இந்தப் பிரச்சாரம் அசுர வேகத்தில் பரப்பப்படுகிறது. தமிழக போலீஸ் மீது மற்றும் அரசின் மீது இருந்த மக்களின் அதிருப்தியை வட இந்தியர்களின் மீது வேகமாகத் திணக்கும் பணியை அரசு செய்து கொண்டு வருகிறது. அது பற்றிய செய்திகளும், அவதூறுகளும் தினமும் செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன.

தமிழகத்தில் வசிக்கும் வட இந்தியர்களை கணக்கெடுக்கிறார்களாம். அவர்களுடைய விரல் ரேகைகள் போலீசில் பதியப்படுகின்றன. பாதுகாப்புக்காகச் செய்வதாகச் சொன்னாலும், அது பற்றி வெளியாகும் செய்திகள் வட இந்தியர்களின் மேல் தமிழக மக்களுக்கு கோபத்தையும், சந்தேகத்தையும் உருவாக்குவதாகவே இருக்கிறது.

தங்களால் ஒழுங்காக செயல்பட முடியவில்லை என்பதை மறைக்க மக்களை மக்களோடு மோதவிடும் கொடுமையான விஷயத்தை கையில் எடுக்கிறது அரசு. ஏற்கனவே கர்நாடகாவுடன் சண்டை. புதிதாக கேரளாவுடன் மோதல். தற்போது வட இந்தியர்களை எதிரிகளாக்கும் சம்பவங்கள். இதில் பாதிக்கப்படுவது எந்த அரசியல்வாதியும் இல்லை. மிகச் சாமர்த்தியமாக மக்களை ஒருவருக்கொருவர் எதிரியாக்கி அதில் குளிர்காயும் குள்ளநரித் தனத்தை ஒவ்வொரு அரசியல்வாதியும் கையில் எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

இதே தந்திரத்தைதான் தமிழர்களை ஒடுக்க, இலங்கையில் ராஜபக்ஷே வரை ஒவ்வொரு அரசியல் சூத்திரதாரியும் கையாண்டார்கள். சிங்களர்-தமிழர்கள் இடையில் நிரந்தரப் பகையை உருவாக்கி இன்னமும் அதை வைத்து வசதியாக அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். பல மாநிலங்களாகப் பிரிந்து கிடந்தாலும், நமது அரசியல் அமைப்பால் ஒன்றாகச் சேர்ந்து சகோதரர்களாக வாழந்து கொண்டிருக்கும் இந்திய மக்களை பிரித்தாளும் சூழ்ச்சிக்கு நமது கேடுகெட்ட அரசியல்வாதிகளும் தயாராகிவிட்டார்கள் என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதே குள்ளநரித் தந்திரத்தைதான் தற்போது மன்மோகன்சிங் அரசும் கையில் எடுத்திருக்கிறது. கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராடும் மக்களை தீவிரவாதிகள் என்று சித்தரிக்க ஆரம்பித்திருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சி பொறுக்காத வெளிநாடுகளின் உதவியோடு அணு உலைத்திட்டத்தை குலைப்பதாக திட்டமிட்டு செய்தி பரப்புகிறது. இந்தக் குற்றச்சாட்டை பிரதமர் தன் வாயால் சொல்வதுதான் அதிர்ச்சியாக இருக்கிறது. இன்னும் அந்தக் குற்றச்சாட்டை நிருபிக்க அவர் எந்த ஆவணத்தையும் காட்டவில்லை.

மின் உற்பத்தியில் இதுவரை கவனம் செலுத்தாத மத்திய, மாநில அரசுகள் தட்டுப்பாடு வந்ததும் தங்களின் இயலாமையை மறைக்க வழி தெரியாமல் விழித்தார்கள். இன்று சமாளித்துவிடுவோம், நாளை சமாளித்துவிடுவோம் என்று பொய் சொல்லி மக்களை ஏமாற்றிய தமிழக, மத்திய அரசுகள், மக்களின் வளர்ந்து வரும் கோபத்தை அடக்குவதற்கு கையாளும் தந்திரம்தான் மக்களையே மக்களுக்கு எதிராக திசை திருப்பும் கேவலமான அரசியல்.

மன்மோகன் சிங் நேரடியாக குற்றம் சுமத்துகிறார். ஜெயலலிதா இதை மறைமுகமாக அனுமதிக்கிறார். பிரச்சனை தீர வழி இல்லை என்றதும், பிரச்சனைகளை திசை திருப்புவதில் மத்திய-மாநில அரசுகள் இரகசியக் கூட்டு வைத்துக் கொண்டுவிட்டன.

அரசியல்வாதிகளே! வெளிநாட்டுச் சதி என்பது உண்மையாகவே கூட இருந்துவிட்டுப் போகட்டும். தமிழகத்தின் மின் வெட்டுப் பிரச்சனை தீர உங்களின் யோசனை என்ன? திட்டங்கள் என்ன? பிரச்சனை எப்போது தீரும்? உங்களிடம் இந்தக் கேள்விகளுக்குப் பதில் இல்லை என்பதுதான் உண்மை.

பிரச்சனைகளைத் தீர்க்க உங்களிடம் இருக்கும் ஒரே திட்டம் . . . மக்களையே மக்களுக்கு எதிராக மோத வைப்பது. இதில் உங்களுக்கு சிறு வெற்றி கிடைத்திருக்கலாம். ஆனால் . . . மக்கள் மாக்கள் அல்ல. எப்போதும் உங்கள் குள்ளநரித் திட்டங்கள் பலிக்காது! எங்களை பிரிக்க முடியாது.

நாங்கள் களைத்திருப்போம்! ஆனால் ...
எப்போதும் விழித்திருப்போம்!

Post a Comment