நாங்கள் வசிக்கும் திருநகரில் சுதந்திரதினம். 150 குடும்பங்கள் வசிக்கும் எங்கள் நகரில் கடந்த 20 வருடங்களாக அதிகபட்சம் 15 பேர்தான் கலந்து கொள்வார்கள். அதில் ஏழு முதல் எட்டு பேர் எங்கள் பகுதியை சாராத வழிப்போக்கர்கள் மற்றும் நடைப் பயிற்சிக்கு வந்தவர்களாத்தான் இருப்பார்கள். இன்று வாக்கிங் வந்த அடுத்த காலனி தம்பதிகள் எங்களுடன் இணைந்து கொண்டார்கள். இந்தியா பாகிஸ்தான் போரில் பங்கு பெற்ற ஏர் கமாண்டர்களில் ஒருவர் திரு.சண்முகம். எங்கள் நகரில் வசிக்கிறார். நடைப் பயிற்சிக்கு வந்த அவர்தான் இம்முறை துவக்க உரை. எங்களுடன் தன் போர் அனுபவங்களில் ஒன்றை பகிர்ந்து கொண்டார். எனக்கு ஒரு கொடி தருவீங்களா எனக் கேட்டு வந்த ராமச்சந்திரன் என்பவர்தான் இம்முறை கொடியேற்றினார். அவர் 30 வருடங்களாக எங்கள் நகரில் வசிக்கிறார்.
சுகாதாரப் பணியாளர்கள் அன்று மட்டும் எங்களுடன் சற்று அருகில் தயக்கமாக நின்று கொள்வார்கள். அதற்கே சிறு வற்புறுத்தல் தேவைப்படும். இந்த வருடம் கொடி ஏற்றிவிட்டு நாங்கள் புறப்படும்போது வந்த பெண்மணிக்கு இன்று பிறந்தநாளாம். வாழ்த்து சொல்லிவிட்டு சாக்லெட் கொடுத்தோம். மிகுந்த மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார்.
கடைசியாக நன்றி உரையில் அடுத்த வருடம் எப்படியும் 50 பேரை வரவைத்துவிட வேண்டும் என்று யாராவது ஒருவர் பேசுவோம். அசோஷியேசன் சார்பில் ஸ்போர்ட்ஸ் டே நடத்துவோம். நல்ல கூட்டம் வரும் என்று ஒருவரும், முப்பது வருஷத்துக்கு முன்னாடியெல்லாம் எப்படி இருக்கும் தெரியுமா என்று இன்னொருவரும் கூறுவார்கள். இம்முறை எவரும் இந்த சப்ஜெக்டுகளை பேசவில்லை என்பது ஒரு மாற்றம்.
ஃபோட்டோக்களை எங்கள் காலனி வாட்சப் க்ரூப்பில் பகிர்ந்த போது 2 பேர் வாழ்த்தினார்கள். குறிப்பாக எவருக்காகவும் காத்திருக்காமல் கொடிக் கம்பத்துக்கு பெயிண்ட் அடித்து, சாக்லெட் வாங்கி அனைவருக்கும் அழைப்பு தரும் எபினேசரை இருவரும் வாழ்த்தியிருந்தார்கள். அவர் முயற்சி எடுக்காவிட்டால் இது நடக்காது, எல்லோரும் வீட்டுக்குள் டிவியுடன் அமர்ந்துவிடுவோம் என்று எங்கள் எல்லோருக்குமே தெரியும்.
இம்முறை கொடியை இறக்கி பத்திரப்படுத்தும் பொறுப்பு எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
அடுத்து ஜனவரி 26க்கும் இதே போல கூடுவோம், என்ற தகவலுடன் அனைவருக்கும் சுதந்திர தின
வாழ்த்துகள்
!
No comments:
Post a Comment