Monday, August 15, 2022

யுத்தகாண்டம் - சிங்கிள் ஷாட் படம் - விமர்சனம்

 யுத்தகாண்டம் - சிங்கிள் ஷாட் மூவி!

எனக்குப் பரிசோதனைகள் பிடிக்கும் என்பதால் இந்த சிங்கிள் ஷாட் பரிசோதனையை ஆர்வத்துடன் பார்த்தேன். படம் எனது ஆர்வத்துக்கு தீனி போட்டது என்பதுதான் உண்மை. பிரிவியூவிற்கு அழைப்பு தந்தது கேபிள் சங்கர்.
நள்ளிரவில் யாரையோ தேடிக் கொண்டிருக்கும் ஒரு இளைஞனில் ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் பயணித்து ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைகிறது காமிரா. அந்த நீண்ட நள்ளிரவு சாலைப் பயணம் இது சிங்கிள் ஷாட் படம் என்பதற்கு நம்மை தயார் செய்கிறது.
தன் காதலியைத் தேடும் இளைஞன் எதிர்கொளும் இரவு நேரச் சம்பவங்கள்தான் கதை. ஒன்றிலிருந்து மற்றொன்று என காட்சிகள் தொடர் சங்கிலியாக ஒரு சஸ்பென்சுடன் நகர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த நகர்தலை உணர்த்த சிங்கிள் ஷாட் பயன்பட்டிருக்கிறது. அதாவது சிங்கிள் ஷாட் என்பது தேவையற்ற திணிப்பாக இல்லை.
எண்கவுண்டர், அரசியல் பேரம், சேஸிங், அடிதடி, தேடல், டூயட் என இப்படத்தில் எல்லாம் உள்ளது. நாயகியாக க்ரிஷா நடித்திருக்கிறார். இவரை என் இயக்கத்தில் யாதெனக்கேட்டேன் படத்தில் நடிக்க ஓரிரு முறை பேசியிருக்கிறேன், அதனால் அவரை ஞாபகம் உள்ளது. கோலிசோடா 2வில் நடித்திருக்கிறார். இயக்குநர் ராசி அழகப்பன் எனக்கு அறிமுகம் செய்தார் என்று நினைவு. க்ரிஷா பவர்ஃபுல் கதாபாத்திரங்களில் ஸ்கோர் செய்யக் கூடியவர் என்பது என் அனுமானம். இந்தப்படத்தில் அவருக்கான வாய்ப்புகள் இன்னும் அதிகமாக இருந்திருக்கலாம். கதையே இவரை மையப்படுத்தி இருந்திருக்கலாம் என்று கூட தோன்றுகிறது.
போலிஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்தவுடன் அதில் உள்ள பல்வேறு அறைகள் மற்றும் மாடிப்படிகளில் தடுமாறாமல் ஏறி இறங்குகிறது காமிரா. பிறகு மீண்டும் ஸ்டேஷனை விட்டு வெளியேறிவிட்டு, சிறிது நேரம் கழித்து மறுபடியும் உள்ளே வருகிறது. இப்படியே ஸ்டேஷனின் உள்ளேயும், வெளியேயும் காமிரா நகர்ந்து கொண்டே இருக்கிறது. இவை அலுப்பு தராமல் இருக்க லைட்டிங்கில் கவனம் செலுத்தியிருக்கிறார்கள். சுரேஷ்மேனனுடன் நடைபெறும் சண்டைக்காட்சியும், இருட்டறைக்குள் நடக்கும் காட்சியும் அக்னிநட்சத்திரம் கிளைமாக்ஸ் சண்டை போல முயற்சி செய்திருந்தார்கள். சுரேஷ்மேனனின் கதாபாத்திரம் பெரிதாக ஏதோ சம்பவம் செய்யப்போகிறது என நினைத்தேன். ஆனால் அந்த பாத்திரத்திரம் பொசுக்கென காணாமல் போய்விட்டது.

ரவுண்ட் டிராலி எஃபக்ட் கூட ஒரு காட்சியில் முயற்சி செய்திருந்தார்கள். ஒரு எண்கவுண்டர் பற்றி பேசிக்கொள்ளும் இந்தக் காட்சியில் இருந்த தீவிரம், எண்கவுண்டர் நடக்கப்போகும்போது இல்லை.
போஸ்வெங்கட் கதை வசனம் எழுதியிருக்கிறார். அதனால் சில கதாபாத்திரங்கள் அவரே நேரடியாக அரசியல் பேசுவது போல இருந்தது. மேக்கிங் பார்க்கும்போது அவர் கிட்டத்தட்ட இயக்குநர் வேலையும் பார்த்திருக்கிறார் எனத் தோன்றியது. படம் நாயகனைச் சுற்றிதான் நடக்கிறது. நாயகன் ஸ்ரீராம் இதை உணர்ந்து இன்னும் முனைப்புடன் நடித்திருக்கலாம்.
டிஜிட்டல் யுகத்தில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட யுத்தகாண்டம் போன்ற நிறைய பரிசோதனைகள் நடந்து கொண்டேதான் இருக்கும். ஆனால் டெக்னிக் எதுவாக இருந்தாலும் படத்தின் மையமான கதை என்ன என்பதும், அது எப்படி இரசிகர்களை கவரும் என்பதுதான் முக்கியம். அந்த வகையில் யுத்தகாண்டம் படத்தை ஒரு முறை பார்க்கலாம் என்கிற வரிசையில் வைக்கலாம்.
மூவிவுட் என்கிற ஓடிடி தளத்தில் ரிலீசாகியிருக்கிறது. நேரமிருக்கும்போது பாருங்கள். யுத்தகாண்டம் படம் வெற்றியடைய படக் குழுவினருக்கு என்
வாழ்த்துகள்
!
இணையதள முகவரி - https://moviewood.io/
#Moviewood ஆண்ட்ராயிட், ஐஓஎஸ் என இரண்டிலும் இயங்கும்.

No comments: