ஏழு மணிக்கு எபிநேசர் ஃபோன் செய்தான். மனைவி தயாரித்த ஃபில்டர் காபியை குடித்துவிட்டு கொடிக்கம்பமிருக்கும் கிருஷ்ணர் கோவில் தெரு முனையை ஏழு முப்பதுக்குச் அடைந்தேன். எபி அங்கு இல்லை. மரத்தடி அயன்கடையும் மூடியிருந்தது. ஓடிவந்த வெள்ளை நாய்க்குட்டி என்னை சிநேகிதமாகப் பார்த்தது. நானும் அதுவும் சற்று நேரம் தனியாக நின்றிருந்தோம்.
இன்னைக்கு நீதான் கொடியைக் கட்டணும் என்றான். குட்டி யானையிலிருந்து அலுமினிய ஏணியை இறக்கி கொடிக்கம்பத்தின் மேல் வளையம் வழியாக கயிற்றை இறக்கினோம். அடுத்து கொடியை மடித்து சுருக்குப் போடுவதில் சந்தேகம் வந்துவிட்டது. நல்ல வேளையாக எதிர்வீட்டு நண்பரின் மகள், அங்கிள் நான் யுடியூப் பார்த்துச் சொல்கிறேன் என்று உதவிக்கு வந்தாள்.
தயங்கித் தயங்கி ஒரு சுகாதரப் பணியாளர் வந்தார். அவருக்கு கொடி கொடுத்ததும் சற்று இலகுவானார். அதற்குப் பின் இன்னும் சிலர் வந்தார்கள். சட்டையில் குத்திக் கொள்ளும் குண்டூசி துரு ஏறியிருந்தது. போன வருடத்தின் மீதியா என்று யாரோ கேட்டார்கள். இந்திராகாந்தி போலிருந்த ஒரு பெண் புன்னகையுடன் எங்களை புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார்.
வெற்றிகரமாக கொடியைக் கட்டியதும், என்னை பேசச் சொன்னார்கள். நான் அவ்வழியாக தினசரி வாக்கிங் வரும் நபரை கை காட்டினேன். அவர் பக்கத்து ஏரியாக்காரராம். எங்கள் ஏரியாவில் யாரும் இப்படிச் செய்வதில்லை. வருடா வருடம் நீங்கள் கொடி ஏற்றுவதில் சந்தோஷம் என்று பேச்சை துவக்கினார்.
சற்று நேரத்தில் பத்து பேருக்கு மேல் கூடிவிட்டார்கள். அடுத்து இந்திரா காந்தி சாயல் பெண்ணை பேசச் சொன்னேன். சுருக்கமாக 60 வினாடிகளில் தான் யோகா கோச் என்ற தகவலுடன் அனைவரையும் வாழ்த்தினார்.
கிட்டத்தட்ட எல்லோருக்குமே தேசிய கீதம் தெரிந்திருந்தது. வாய்விட்டுப் பாடி முடித்தோம். சாக்லெட் வினியோகத்துடன் விடைபெறும்போது எங்கள் பக்கத்துவீட்டுச் சிறுமி வர்ஷா வந்தாள். முடிச்சுட்டீங்களா என்றார் அவளுடைய தாத்தா. அவர் அடுத்து தொடர்வதற்குள் நான் ரெண்டு ஸ்பீச் கொடுக்கணும் என்றாள் வர்ஷா.
கலைந்து போனவர்கள் திரும்ப வந்து வர்ஷாவை சூழந்து கொண்டார்கள். குடியரசு தினத்தின் முக்கியத்துவம் மற்றும் புத்தக வாசிப்பின் அவசியம் பற்றி தெளிவாகப் பேசினாள். எல்லோரும் சந்தோஷமாக கை தட்டினோம். புதிதாக அறிமுகமானவர்கள் எண் கொடுத்துச் சென்றார்கள்.
அடுத்து சுதந்திர தினத்தன்று இது போல எபி போன் பண்ணுவான், வருவேன், வேறு சிலரும் வருவார்கள். கொடி ஏற்றுவோம்.
அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்!
No comments:
Post a Comment