Monday, January 22, 2024

க்வாஜா மேரே க்வாஜா

தூயவனை என்னைத்
துலக்க வழி தெரியாமல்
தூயவனே உன்னிடத்தில்
தொலைக்க வழி தேடுகிறேன்.
இறைவனிடம் ஒரு விவாதம் என்ற மு.மேத்தாவின் கவிதையில் இந்த வரிகள் உள்ளன. ஆழ்மனதை உசுப்பும் இந்த வரிகளுக்கு இணையான ஏ.ஆர்.இரகுமானின் பாடல் ஜோதா அக்பர் படத்தில் வரும்.
”க்வாஜா மேரே க்வாஜா” என்ற இந்தப் பாடலுக்கு எனக்கு இதுவரையில் அர்த்தம் தெரியாது. ஆனால் இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் விடைதெரியாத பல கேள்விகளுக்கு பதில் கிடைப்பதைப் போலிருக்கும். உடல்சோர்வும், மனச்சோர்வும் எட்டிப்பார்க்கும்போதெல்லாம் இந்தப் பாடலை என் மனது தானே பாடத் துவங்கிவிடும். அது நாள் முழுவதும் தொடரும், அடுத்த நாள் வரையிலும் கூட நீளும். இதயத்தையும், மனதையும் கழுவி புதிதாக்கிவிட்ட உணர்வு கிடைக்கும். ஒரு ஆன்ம பலம் கிடைக்கும்.
இன்று தொலைக்காட்சிகள் ஜெய் ஸ்ரீராம் கோஷங்களைக் காண்பித்துக் கொண்டிருந்தபோது நான் க்வாஜா மேரே க்வாஜா பாடலில் தான் நாள் முழுவதும் அமிழ்ந்திருந்தேன். இப்போதும் கூட ஏ.ஆர்.இரகுமானின் ஆர்மோனியம் எனக்குள் ஒலிக்கிறது.

இதில் அதிசயம் என்னவென்றால் இன்று நான் முதலில் கேட்ட பாடல் கர்ணன் படத்தில் வரும் ”உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது” பாடல்தான். விஸ்வநாதன் - ராமமூர்த்தியின் இசையில் கண்ணதாசன் எழுதியுள்ள அந்தப் பாடல் கடவுளின் அருகில் அமர்ந்து கடவுளுக்காகவே உருவாக்கப்பட்டது போலிருக்கும். கடவுளுக்கே அமைதி வேண்டுமென்றால் அந்தப்பாடலைத்தான் கேட்பார்.
அந்தப்பாடலில் கரைந்து கொண்டிருந்த நான் க்வாஜா மேரா க்வாஜாவுக்கு எப்போது மாறினேன் எனத் தெரியவில்லை. இரு பாடல்களுமே எனக்கு ஒரே உணர்வைத்தான் தருகின்றன. இன்றைய இரவு இவ்விரு பாடல்களுடன் நீளும். அக்பரும், கர்ணனும் துணைக்கு இருப்பார்கள், ஒருவேளை கடவுளும் இருக்கலாம்.

No comments: