Friday, January 26, 2024

பவதாரிணி - கற்பூர பொம்மை ஒன்று கரைந்துவிட்டது!

 

எம்.எஸ்.விக்கும், இளையராஜாவுக்கும் காலம் ஒரு கொடையைக் கொடுத்தது. தமிழர் வாழ்வின் எல்லா தருணங்களையும் அவர்கள் தங்கள் இசை வழியாகத் தழுவிக் கொண்டார்கள். தமிழர்களின் சுகம், துக்கம், உறவுகள், பிரிவுகள் அனைத்திற்கும் அவர்களின் ஏதோ ஒரு பாடல் மருந்தாக இருந்தது.

ஆனால் அவர்களுக்கு எது துணையாக இருந்தது என்பது அவர்களுடைய ஆன்மாவுக்கு மட்டுமே தெரியும். இன்று இளையராஜா தனது அன்பு மகளை இழந்திருக்கிறார். இந்தப் பிரபஞ்சத்தின் அதிர்வுகளில் உண்டான ஏதோ ஒரு ஒலி அவருக்கு ஆறுதல் தரக் கூடும். அந்த ஒலி நமது மௌனங்களில் கூட இருக்கலாம்.

ரமணர் பற்றிய இளையராஜாவின் பாடல் ஒன்றை பவதாரிணி பாடும் வீடியோ ஒன்றை பார்த்தேன். ஒரு கணத்தில் அந்த இசையுடன் ஒன்றிப்போய், அதன் அடர்த்தி தாங்காமல் விம்மி அழுதார். பாடுவதைத் தொடர முடியாமல் அவர் கண்ணீர் விட்டபோது பிண்ணனியில் இசை நிற்காமல் தொடர்ந்து கொண்டே இருந்தது. அவர் தேறி வரட்டும் என்று விடாமல் தாளத்துடன் ஒலித்துக் கொண்டே இருந்தது. மகளின் அருகில் அமர்ந்திருந்த இளையராஜா ஒரு புன்னகையுடன், தனது அன்பு மகளை தேற்றிப் பாடலைத் தொடர வைத்தார்.
இன்று பவதாரிணியின் இடத்தில் இளையராஜா இருக்கக் கூடும். ஆனால் பவதாரிணி எங்கிருந்து தனது தந்தை இளையராஜாவை தேற்றுவார் எனத் தெரியவில்லை!
கற்பூர பொம்மை ஒன்று கரைந்துவிட்டது!

No comments: