Friday, October 3, 2008

துரை - இன்னொரு சிக்ஸ் பேக்

  • பின்னி லொகேஷன்!
  • சிக்ஸ் பேக்கில் ஹீரோ உடம்பைக் முறுக்குதல்!
  • விவேக் ஐயர் பாஷை பேசுதல் - டிராபிக் கான்ஸ்டபிளைக் கலாய்த்தல்!
  • ரீ மிக்ஸ் என்ற பெயரில் பழைய மெட்டுக்களை கெடுத்தல்!
  • போலீசுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு, திடீரென ஒரு டிவி ஸ்டேஷனுக்குள் நுழைந்து ஹீரோ மக்களிடம் லைவாக பேசுதல்!
  • சுவிட்சர்லாந்து போன்ற அழகான நாடுகளில், அரைக் கிறுக்கு நடனம் ஆடுதல்!
  • ஹீரோ அம்னீஷியாவில் பழைய வாழ்க்கை மறந்திருத்தல்!
  • ஹீரோயின் டபுள் மீனிங் டயலாக் பேசுதல்!

தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்பது போல மேற்காணும் ஐயிட்டங்களும் படத்தில் இல்லையென்றால் வரிவிலக்கு என்று தமிழக அரசு அறிவித்தால் தமிழ் சினிமா தப்பிப் பிழைக்கும்.

ஆனால் இந்த அபத்தங்கள் இல்லையென்றால் துரை என்ற படமே இல்லை.

சிக்ஸ் பேக்கில் முகத்தில் லைட்டான சுருக்கங்களுடன் வரும் அர்ஜீன் தான் துரை. அப்பாடி டைட்டில் justified. இடைவேளை வரை, அம்னீஷியாவால், தான் யாரென்று தெரியாமல், ராஜா என்ற பெயரில் விவேக்கின் ஹோட்டலில் வேலை செய்கிறார் அர்ஜீன். துரத்தி துரத்தி காதலிக்கும் கிரத்திடம் (என்ன பேரோ) முத்தம் வாங்குகிறார். திடீரென படுக்கையில் இருந்து எழுந்து, வியர்த்து, தலையைக் கசக்கி உண்மையிலேயே தான் யார் என்று யோசிக்கிறார். லோக்கல் போலீஸ் ஸ்டேஷன் போய் விசாரிக்கிறார். திடீரென ஒரு வில்லன் கும்பல் துரத்த, தப்பித்து தண்ணீருக்குள் ஓடும்போது ஆரம்பிக்கிறது பிளாஷ்பேக்.

தொடர்ந்து ஒரு எதிர்பாராத தருணத்தில் இடைவேளை வரும்போது மட்டும், அட பரவாயில்லையே என்று ஆச்சரியமாக இருக்கிறது.

ஆனால் பிளாஷ்பேக், பிளாஷ்பேக்குக்குள் இன்னொரு பிளாஷ்பேக் என்று கதை உள்ளே போய்விட்டு வெளியே வரும்போது, திரைக்கதை நொண்டி அடிக்க ஆரம்பித்துவிடுகிறது. படத்தின் மொத்த சஸ்பென்சும் அப்போதே முடிந்துவிடுவதால், படம் இன்னும் எவ்வளவு நேரத்தில் முடியும் என்று வாட்சைப் பார்க்க வைத்துவிடுகிறார்கள். ஆனால் நம்முடைய கஷ்டம் புரியாமல், அர்ஜீன் தான் கஷ்டப்பட்டு பில்ட்அப் செய்த சிக்ஸ் பேக்கை காட்டுவதற்க்காக நம்மை ரொம்ப நேரம் அடிதடிகளை பார்க்க வைக்கிறார். அதுவும் கிளைமாக்ஸில் வில்லன் உட்பட அத்தனை அடியாட்களும், சட்டையைக் கழட்டிவிட்டுதான் சண்டை போடுகிறார்கள். சண்டை முடிவதற்குள் தியேட்டரில் ஏ.சியை ஆஃப் செய்துவிடுவதால், வியர்வையில் நாமும் சட்டையைக் கழட்டும் நிலைக்கு வந்துவிடுகிறோம்.

மகனுக்கு வாய்ப்பு தராமல், தொண்டர் திலகம் அர்ஜீனை கட்சியின் அடுத்த தலைவராக்க முடிவுசெய்கிறார், கட்சித் தலைவர். கோபமாகும் மகன், அப்பாவைக் கொன்று பழியை தொண்டர் அர்ஜீனின் மேல் போடுகிறார். போலீஸ் அவரை என்கவுண்டர் செய்ய முயற்சிக்க, என்கவுண்டரில் தப்பிக்கிற அர்ஜீன், மண்டையில் அடிவாங்கி அம்னீஷியா கேஸாகி, பிறகு அம்னீஷியாவிற்கும் தப்பித்து, வில்லனை பழிவாங்குகிறார்.

ஒரே ஒரு பாடலில் மட்டும் வந்தாலும் கஜாலா தான் நல்ல நடிகையாக வரக்கூடியவர் என்று மீண்டும் நிருபிக்கிறார். ஹீரோயின் கிரத்தை அம்னீஷியா இல்லாமலே எளிதில் மறந்துவிடலாம். வரிசையாக ஜோக் அடிப்பது மட்டுமே காமெடி கிடையாது என்று அனுபவஸ்தர் விவேக்கிற்கு நன்றாகத் தெரியும். ஆனாலும் இப்போதெல்லாம், அந்த லெவலை தாண்டி வரமாட்டேன்கிறார்.

'ராஜா, ராஜாதி ராஜனிந்த ராஜா' இது இளையராஜாவின் மாஸ்டர் பீஸ். வெறும் ரிதம் பேடை வைத்துக்கொண்டே, அற்புதமாக இசை அமைத்திருப்பார். அதை சொல்லிவிட்டுக் கெடுத்திருக்கிறார் இமான். அது போலவே 'Boney-M'ன் ரஸ்புதின் பாடலை சொல்லாமல் கெடுத்திருக்கிறார்.

இயக்குனரைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. கதை, திரைக் கதை இரண்டுக்கும் அர்ஜீனே பொறுப்பேற்றிருக்கிறார். உண்மையைச் சொன்னால் நம்மை வெறுப்பேற்றியிருக்கிறார்.
Post a Comment