Monday, September 22, 2008

நிறம் மாறும் ஜெயலலிதாவும், அவரின் இமேஜ் பூஸ்டர்களும்

தேர்தல் நெருங்கும்போது, யாரை வேண்டுமானாலும், எனது அன்புச் சகோதரர், தம்பி என்று சொல்லி உருகுவார் ஜெயலலிதா.
அதே போல தேர்தல் முடிந்தபின் போயஸ் தோட்டத்தின் இரும்புக் கதவுகளுக்குப் பின்னால் சசி அக்காவுடன் ஒளிந்துகொண்டு யார் கண்ணுக்கும் படாமல் ஐஸ்பாய் விளையாடுவார், பிடிக்காதவர்களை எட்டி உதைப்பார்.

அவர் நிறம் மாறும் அதே சமயம், அவருடைய ஆதரவு ஊடகங்களும் நிறம் மாறும். குறிப்பாக தேர்தல் நெருக்கத்தில் வர வர ஜெயலலிதா மாறிவிட்டார் என்று பிரச்சாரம் செய்ய ஆரம்பிப்பார்கள்.

உதாரணத்திற்கு இன்றைய தினமலர்.காம்(Sep 22,08)

ஜெ., போக்கில் மாற்றம்; பொதுக்குழு காட்டும் உண்மை
இதுதான் தலைப்பு - இனிமேல் தினமலரின் போக்கு எப்படி இருக்கும் என்பதற்கு இது ஒரு சாம்பிள்

அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவின் போக்கில் நிறைய மாற்றம் ஏற்பட்டுள்ளதை, சமீபத்தில் நடந்த அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் வெட்ட வெளிச்சமாக்கியது.
அதாகப்பட்டது, ஜெயலலிதா மாறிவிட்டார் என்பதை யாரோ இருட்டடிப்பு செய்து வைத்திருந்தார்களாம்.

பொதுக்குழுவில் அவரது பேச்சும், நடந்து கொண்ட விதமும், அவர் மீது இதுவரை இருந்துவந்த பல இமேஜ்களை உடைத்தெறியும் வகையில் அமைந்திருந்தது.
அதாகப்பட்டது, இது வரை ஜெயலலிதா பற்றி நமக்கிருந்த எண்ணமெல்லாம், யாரோ திட்டமிட்டு உருவாக்கிய தவறான இமேஜ்தானாம். அந்த இமேயையெல்லாம் ஜெயலலிதா இந்த பொதுக்குழுவில் அடித்து நொறுக்கிவிட்டாராம்
.
தமிழ்ப் பத்திரிகைகளையோ, தமிழ் சேனல்களையோ பார்ப்பதில்லை என அவரே குறிப்பிட்டிருக்கிறார். . . . . . . . . . . . . தினமலர் உட்பட சில பத்திரிகைகளின் பெயரைக் குறிப்பிட்டு, அன்று அவர் சாடினார். இந்தப் பத்திரிகைகள் தன்னையும், கட்சியையும் புறக்கணிப்பதாகக் கூறினார்.செய்திகளையும், அறிக்கைகளையும் முழுமையாக வெளியிடுவதில்லை என்றும் பேசினார். இதன் மூலம், தினமலர் உள்ளிட்ட பத்திரிகைகளை அவர் எவ்வளவு ஆழமாகப் படிக்கிறார் என்பதும், தினமலர் நாளிதழில் தன்னைப் பற்றிய செய்தி வருவதை அவர் எந்தளவிற்கு விரும்புகிறார் என்பதும் தெளிவாகியுள்ளது.
அதாகப்பட்டது, சசி அக்காவுடன் சேர்ந்து கொடநாட்டை குறட்டை நாடாக மாற்றிக் கொண்டிருந்த நேரத்தில் (எப்போதும் தன்னை உயர்த்திப்பிடிக்கும்) தினமலர் போன்ற பத்திரிகைகள் கூட தன்னைக் கண்டுகொள்ளவில்லையே என்று அவர் நொந்து கொள்ளவில்லையாம். ஏன் (இமேஜ் பூஸ்டர்)செய்தி வெளியிடவில்லை என்று உரிமையோடு சாடினாராம்.

அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்து சென்ற முன்னாள் அமைச்சர்கள் சேடப்பட்டி முத்தையா, செல்வகணபதியை மட்டுமல்லாது சென்னையை ஒரு முறைக்கு மேல் பார்த்திராத ஊராட்சி வார்டு மெம்பர் வரை, தன் கட்சியில் இருந்து சென்றவர்கள் தி.மு.க.,வில் எப்படி அவதிப்படுகின்றனர் என்பதைச் சொல்லி, அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
அதாவது, சேடப்பட்டி முதல் ஏதோ ஒரு பட்டியின் வார்டு மெம்பர் வரை யாரையும் காலில் விழ வைக்காமல், காத்திருக்க வைக்காமல், அவர் தனக்கு சமமாக உட்கார வைத்திருந்தாராம். இன்று அவர்கள் எல்லோரும் உரிய மரியாதை கிடைக்காமல் தி.மு.கவில் அவதிப்படுகிறார்களாம். தன்னுடைய (அவ)மரியாதையை ஒதுக்கி, இந்த (அவ)மரியாதையை எப்படி அவர்கள் தாங்கிக் கொள்கிறார்கள் என்று ஜெயலலிதா ஆச்சரியப்பட்டாராம்.


பொதுக்குழு கூட்டம் முடிந்ததும், கட்சியினருடன் அமர்ந்து கலகலப்பாக பேசினார். அவர்களுடன் சேர்ந்து உணவு சாப்பிட்டார். இதன் மூலம், தானும் மற்ற தலைவர்களைப் போல், அனைவரிடம் எளிதில் பழகுவேன் என்பதை வெளிப்படுத்தினார்.மொத்தத்தில், பொதுக்குழு மூலம் ஜெயலலிதா, தன் மீது இதுவரை இருந்துவந்த பல்வேறு இமேஜ்களை உடைத்தெறிந்துள்ளார் என்பதை வெளிப்படையாக உணர முடிந்தது.
அதாகப்பட்டது, தேர்தல் வரும்போதெல்லாம் ஜெயலலிதா இப்படித்தான் நடந்து கொள்வார் என்பது தவறாம். மற்ற நேரங்களில் குறிப்பாக தோற்று விட்டால் ஒளிந்து கொள்வதும், ஜெயித்துவிட்டால் காக்கவைத்து, கண்டபடி திட்டி அவமதிப்பார் என்பதும் தவறாம். மக்கள் மனதில் இருந்த இது போன்ற தவறான இமேஜை எல்லாம் ஜெயலலிதா அடித்து நொறுக்கிவிட்டாராம்.

ஜெயலலிதா அடக்கத்தின் மறுஉருவம்
அமைதியின் சின்னம்
மரியாதை வள்ளல்
கருணைக் கடல்
என்று நம்பிட்டோம்யா . . . நம்பிட்டோம்!!!
Post a Comment