Thursday, May 7, 2009

இத்தாலி அன்னையும் - தமிழ் அம்மாவும் கைகுலுக்கும் நேரம் வந்துவிட்டதா?

Rahul said the Congress considered the TDP, the JD (U) and the AIADMK as secular-minded parties. ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் ராகுல் இவ்வாறு கூறியதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து தேர்தலுக்குப் பிந்திய அரசியல் அணி மாற்றங்களைப் பற்றிய ஜோசியங்கள் தொடங்கிவிட்டன.

தேர்தல் காலங்களில் தலைவர்களின் ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு விதமாகப் பார்க்கப்படும். அதற்கேற்ப கூட்டணிகளுக்குள் படபடவென பட்டாசு கொளுத்திப் போடும் வேலையை ராகுல் காந்தி கனக் கச்சிதமாகச் செய்து கொண்டிருக்கிறார். அவருடைய கடைசி கட்ட பிரச்சாரம் முழுக்க முழுக்க தேர்தலுக்குப் பின் உருவாகக் கூடிய அணி மாற்றங்களைப் பற்றித்தான் இருக்கிறது.

கூட்டணி இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்ற தீர்மானத்திற்கு வந்துவிட்ட ராகுல், தற்போதே எதிரணியில் இருக்கும் இடது சாரிகள், ஜனதா தள் மற்றும் அ.தி.மு.க கட்சிகளுக்கு வலை வீச ஆரம்பித்துவிட்டார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவருடைய வலையில் இந்த மீன்கள் சிக்கிக் கொள்ள ஆர்வம் காட்டுகின்றன.

அதற்கு முதல் காரணம் மூன்றாவது அணி என்பது வெறும் ஏட்டுச்சுரைக்காய் என்பதை, அந்த அணியில் உள்ளவர்களே உணர ஆரம்பித்துவிட்டதுதான்.

நித்திஷ் குமாரும் இடது சாரிகளும் ”இது பற்றி தற்போது எதுவும் பேசுவதற்கில்லை” என்று கூறிவிட்டார்கள். ஆனால் ராகுல் தொடர்ந்து அவர்கள் எங்கள் அணிக்கு வருவார்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அவர்களும் மறுப்பெதுவும் சொல்லவில்லை. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் எதிராளியை பாய்ந்து குதறும் ஜெயலலிதா ”ராகுல் அப்படியா சொன்னார்? நான் இன்னும் அவருடைய பேட்டியை படிக்கவில்லை” என்று பட்டும் படாமல் பதில் சொல்கிறார். இடதுசாரிகளும்,நித்திஷ்குமாரும் சொன்னது போல ஒரு குறைந்த பட்ச மறுப்பு கூட அவரிடமிருந்து வெளிவரவில்லை.

நாட்டின் வேறெந்த பகுதியையும் விட தமிழ்நாட்டில் ராகுலின் பேச்சும், ஜெயலலிதாவின் பட்டும் படாத பதிலும், மிகப் பெரிய கூட்டணி குழப்பங்களை உண்டாக்கும். சோனியாவின் வருகை ரத்தானதற்கும், ராகுலின் இந்தப் பேச்சுக்கும் மிக எளிதில் இங்கே முடிச்சு போடப்படும்.

உணர்ச்சிகரமான ஒரு இன அழிப்பு பிரச்சனையை இங்கே சாதாரண கருணாநிதி-ஜெயலலிதா பிரச்சனையாக மாற்றி ஆளாளுக்கு அரசியல் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஈழத்தமிழர்களி்ன் அவலத்தை முன்னிறுத்தி  அணி மாற்றங்களும் நடந்து, தேர்தல் பிரச்சாரமும் கடைசிக் கட்டத்திற்கு வந்துவிட்டது. இந்த வினாடி வரை சோனியாவும், ஜெயலலிதாவும் எதிரெதிர் அணியில். கம்யுனிஸ்டுகளை அருகில் வைத்துக்கொண்டே காங்கிரசுக்கு அழைப்புவிடுத்த ஜெ.வை இங்கே ஞாபகப்படுத்திக் கொள்வது நல்லது. ஒருவேளை வெளிப்படையாக ராகுலும், இரகசியமாக ஜெயலலிதாவும் ஆசைப்படுவது போல தேர்தலுக்குப்பின் ஓரணிக்கு திரண்டால் . . .?


ஐயோ பாவம் . . . இவர்களை நம்பிய கருணாநிதி பிரிவு ஈழ ஆதரவாளர்கள் மற்றும் ஜெ. பிரிவு ஈழ ஆதரவாளர்கள்.

3 comments:

Anonymous said...

This is for you!
விமர்சனங்கள்!

நம் சமூதாயத்தில் விமர்சனங்களும் அதிகம் விமர்சிப்பவர்களும் அதிகம். விமர்சிக்கப்படுபவர்களும் அதிகம். எத்தனை எத்தனை விமர்சனங்கள். காலையில் எழுந்ததில் இருந்து இரவு படுக்கும் வரையிலும் விமர்சனங்கள் தான். ஏதோ ஒருவகையில் விமர்சிக்கப்படுகிறோம்.

எப்போதுமே கெட்ட விஷயங்களுக்குத் தான் எதிர்ப்புகள் இருக்கும்
என்பது இல்லை. நல்ல விஷயங்களையும், நல்ல மனிதர்களையும் கூட விமர்சனங்கள் விட்டு வைப்பது இல்லை. யாரைப்பற்றியாவது எதைப்பற்றியாவது பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என்பது நமது இயல்பாகவே மாறிவிட்டது.

மற்றவர்களை விமர்சிக்கும் போது–

விமர்சிக்கத் தனக்கு தகுதி உள்ளதா என நாம் ஒரு போதும்
சிந்திப்பதில்லை. பெரும்பாலும் விமர்சனங்கள் நடுநிலையில்லாமல் சுயவிருப்பு, வெறுப்புகளைப் பொறுத்தே அமைகின்றது.

அதனால் மற்றவர்கள் நம்மை விமர்சிக்கும் போது எரிச்சல்படுவதை விட, சோர்வு அடைவதைவிட விமர்சனத்திலிருந்து நாம் மீண்டு விட வேண்டும். அவர்களின் உள்நோக்கத்திற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது. விமர்சனத்தை அதன் தகுதி அடிப்படையில் தர்க்க ரீதியாகச் சார்பில்லாமல் எடைப் போட்டு பார்ப்பது நமக்கு நல்லது.

நம் நண்பர்கள் சொல்லத் தயங்கும் நம் தவறுகளையோ திருத்தங்களையோ விமர்சனங்களில் இருக்கலாம். ஓர் அறிஞர் சொல்கிறார்:

"விமர்சனம் நல்ல அறிவுரையே, சர்க்கரை தடவப்படாதது. விமர்சனம் மிகவும் உதவக் கூடியது. நீங்கள் விரும்பி அதை வரவேற்க வேண்டும்" என்கிறார்.

எந்தவித அடிப்படையும் இல்லாமல் உண்மையும் இல்லாமல் பேசுபவர்களின் பேச்சுக்களில் குறைக் கூறுவது, புறங்கூறுவது, பழி சொல்வது, அவதூறு சொல்வது என்பதெல்லாம் வெட்டிப்பேச்சுக்களுக்கு சமமாகும்.
சில நேரங்களில் உண்மையான குற்றச்சாட்டுடன் கூறப்படும் நம் விமர்சனத்தை அலட்சியப்படுத்திவிட முடியாது.

ப்ரெஞ்ச் அறிஞர் ராகிஃபௌகால்ட் சொல்கிறார்:

"நம்முடைய அபிப்பிராயங்களை விட, நம்முடைய விரோதிகளின் அபிப்பிராயங்கள் நம்மைப் பற்றிய உண்மைகளை உள்ளடக்கியவை.
நம்மை விடவும் தீவிரமாக நம் விரோதிகள் நம் தவறுகளை கண்டுப்பிடிக்கத் தயார் நிலையில் இருக்கிறார்கள். விரோதியிடம் நீ ஒதுங்கி இரு. ஆனால் உன்னைப் பற்றிய அவர்களின் விமர்சனத்தை காது கொடுத்துக் கேள்".

மற்றவர்கள் நம்மை புகழும் போது – நம்முடைய பலங்களை நினைத்துக் கொள்வது நல்லது. மற்றவர்கள் நம்மை புகழும் போது – நம்முடைய பலவீனங்களை நினைத்துக் கொள்வது நல்லது.

நம் அபிப்பிராயங்களும், கணிப்புகளும் என்றைக்குமே சரியாக இருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. அவைகளை சந்தர்ப்பங்கள் தான் உருவாக்குகின்றன. சந்தர்ப்பங்கள் மாறும் போது நம் கணிப்புகளும் மாறுகின்றன. அதனால் சில விஷயங்களை முக்கியமாக சிலரைக் குறிப்பிட்டுக் கூறும் விமர்சனங்களைத் தவீர்த்துக் கொள்வது நல்லது.

நாம் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்யும் போது நம்முடைய தராதரமும் அத்துடன் மற்றவர்களால் மதிப்பிடப்படுகிறது. இவருக்கு எப்போதுமே மற்றவர்களைப் பற்றி குறைசொல்வதே வேலையாகி
விட்டது என்று பெயர் வந்து விட்டால் நம்மைப்பற்றிய மதிப்பீடு மற்றவர்களிடம் தரம்குறைசாகவே இருக்கும்.

அறிவாளிகள் தம்மைப்பற்றி கூறும் விமர்சனங்களை விருப்பு வெறுப்பின்றி ஆராய்கிறார்கள். தவறுகளைத் திருத்தி தங்களின் முன்னேற்றத்திற்கு உபயோகித்துக் கொள்ளுகிறார்கள்.

அறிவாளிகளிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது அவதூறு விமர்சகர்களைப் புறக்கணிப்பது. திறமையில்லாதவர்களும் வெட்டிப்பேச்சு பேசுகிறவர்களும் தான் விமர்சகராகிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும்.

ஓர் பொன் வாசகம் உண்டு:

பேசும் முன்னால்-
கவனமாகக் கேள்.
எழுதும் முன்னால்-
நீ யோசிக்கத் தவறாதே.
செலவழிக்கும் முன்னால்-
நீ சம்பாதிக்கப் பார்.
பிறரை விமர்சிக்கும் முன்னால்-
உன்னை எண்ணிப்பார்.

இனி பிறரை விமர்சிக்கும் முன் நம்மை எண்ணிப்பார்ப்போமா?

Realy your comments nothing mean!

Anonymous said...

ஈழத்தமிழன் கடந்த கால நினைவுகளை மீட்டி அசைபோடுவற்குரிய காலம் இதுவல்ல.
அந்தநிலையில் எந்தவொரு உண்மையான தமிழனுக்கும் சிந்திக்க நேரமுமில்லை.
குற்றுயிரும் குறையுயிருமாக இருக்கும் எம்மவருக்கு பழைய சரித்திரங்கள் தேவையில்லை.
தற்போதைய நிலையில் யார் குத்தினாலும் அரிசியானால் போதுமென்ற மனப்பான்மையே ஒவ்வொரு ஈழத்தமிழனின் நிலைப்பாடு ஆகும்.
நாங்கள் ஜெயலலிதாவின் ஈழத்தமிழருக்கான எதிர்நடவடிக்கைகள் எல்லாம் தெரிந்தவர்கள் தான்.
இருப்பினும் இன்றைய காலகட்டத்திற்கு எமக்கு ஆதரவுக்குரல்தான் அதிக பட்சமாக தேவைப்படுகின்றது . முக்கியமானதும் கூட.
48 மணித்தியாலத்தில் நல்ல செய்தி வரும் என்பவர்களும்,பொம்மை மன்மோகனுக்கு தந்தி அடிப்போம் என்று சொல்பவர்களும் எமக்கு தேவையில்லை.

எமக்கு இந்திய உள் அரசியல் தேவையில்லாத விடயம். அது நாகரீகமுமில்லை. ஆனால் அவர்கள் ஈழத்தமிழர்களை வைத்து தேர்தல் விஞ்நாபனம் செய்யும் போது இந்தியராணுவத்தால் பாதிக்கப்பட்ட எம்மவர்கள் என்ன புளகாங்கிதம் கொள்ளமுடியுமா?

ஜெ சொல்லிவிட்டு செய்பவர்.கருணா சொல்லாமல் செய்பவர். கொள்கை ஒன்று. செய்முறை வேறு. எம்மைப்பொறுத்தவரை அவ்வளவுதான்.
இம்முறை ஜே சொல்லியிருக்கின்றார். பொறுத்திருந்து பார்ப்போம்.

வேதனையில் விளிம்பில் இருக்கும் எம்மவரை ஏமாற்றும் காலம் போய்விட்டது என்பதை நினைவில் வைத்திருந்தால்

ISR Selvakumar said...

தடித்த வார்த்தைகளில் எழுதப்பட்ட பல பின்னூட்டங்களை நான் வெளியிடவில்லை. வெளியிடப்போவதுமில்லை.

ஆனால் அவற்றில் சில நல்ல கருத்துக்களும், சுவாரசியமான சிந்தனைகளும் இருந்தன. அவற்றில் சில . . .

”ஜெயலலிதா யாருடன் இருக்கிறார் என்பது பற்றி பிரச்சனை இல்லை. இனப் படுகொலை நிற்குமா என்பதுதான் பிரச்சனை”

”கருணாநிதி ஏமாற்றிவிட்டார் என்று நம்புகிறோம். ஜெயலலிதா ஏமாற்ற மாட்டார் என்று நம்புகிறோம்”

”காங்கிரஸோ, ஜெயலலிதாவோ எவர் மூலம் விடிவு வந்தால் என்ன? எமக்கு வேண்டியது அமைதி”

”இந்திய அரசியலின் அணி மாற்றங்கள் பற்றி கவலையில்லை. ஈழமக்களின் அவல நிலை மாறுமா?”