Tuesday, May 5, 2009

நேற்று ஜெ! இன்று புலிகள்! ஸ்ரீஸ்ரீரவிசங்கர் அவர்களின் சி.டியில் அப்படி என்னதான் இருக்கிறது?

இலங்கைக்குச் சென்று வந்தஸ்ரீஸ்ரீரவிசங்கர் ஜி அவர்களின் சிடியில் அப்படி என்னதான் இருக்கிறது. அதைப் பார்த்த அடுத்த நாளே ஜெயலலிதா தீவிர ஈழ ஆதரவாளராக மாறிவிட்டார். அதைப் பார்த்து ஈழ ஆதரவாளர்கள் பலரும் ஜெயலலிதா ஆதரவாளராக மாறிவிட்டார்கள்.

தற்போது விடுதலைப் புலிகளே ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரை அணுகியுள்ளார்கள் என்று செய்தி வெளியாகியுள்ளது. இலங்கை அரசுக்கு அவருக்கிருக்கும் நல்லெண்ண உறவுகளைப் பயன்படுத்தி, ஈழப்போரை நிறுத்த உதவுமாறு விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு.நடேசன் தொலைபேசியில் கேட்டுக்கொண்டதாக ஸ்ரீஸ்ரீரவிசங்கர் அவர்களின் ஆசிரமத்திலிருந்து ஒரு செய்தி வெளியாகியுள்ளதாக இந்திய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இந்தச்செய்தி உண்மையா பொய்யா என இதுவரை புலிகள் தரப்பிலிருந்து எதுவும் சொல்லப்படவில்லை.

நாங்கள் போர் நிறுத்தத்துக்கு தயாராகவே உள்ளோம். போர் நிறுத்தத்தை நடை முறைப்படுத் தேவையான அனுசரணைப் பணியை மேற்கொள்ளுமாறு தங்களைக் கேட்டுக் கொள்கின்றோம் என்றும் நடேசன் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜியிடம் தெரிவித்துள்ளாராம்.

ஆனால் போர் நிறுத்தம் என்றால் என்ன?
புலிகள் ஆதரவாளர்களைப் பொறுத்தவரையில், தற்போது பிரபாகரன் தப்பி, பின்னர் பலம் திரட்டி மீண்டும் போரிடுவது.
இலங்கையைப் பொறுத்தவரையில், தமிழர்களை கொன்று குவித்து, உடனே பிரபாகரனை பிடித்து, மீண்டும் புலிகள் பலம் பெறுவதை தடுப்பது.

பிரபாகரன் தப்பிவிட்டால் புலிகள் மட்டுமல்லாமல் ஈழ ஆதரவாளர்கள் அனைவருமே மீண்டும் புத்துணர்வு பெறுவார்கள் என்பதில் துளியும் சந்தேகமில்லை. ஆனால் பிரபாகரன் தப்பிவிட்டார் எனத் தெரிந்தால், அடுத்த கணமே இங்கிருக்கும் ஜெயலலிதா உட்பட அனைவரும் தங்கள் அரசியல் நிலையை மாற்றிக் கொள்வார்கள்.  ஜெ.பிரிவு ஈழ ஆதரவாளர்கள்தான் தர்மசங்கடப்படுவார்கள்.

இந்திராகாந்தி பாணியில் போரிட்டு, இலங்கையை பணிய வைத்து, தனி ஈழம் அமைப்பேன் என்று ஜெ மேடையில் முழங்கினாலும், இது வரையில் புலிகள் பற்றியும், புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றியும் தனது கருத்து என்ன என்பதைப் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. நான் புரிந்து கொண்ட வரையில் புலிகள் மேல் அவருக்கு இன்னமும் அபிமானம் வரவில்லை. இனியும் வரப்போவதில்லை. அதனால் அவர் தனி ஈழம் என்று கூறினாலும் தனி ஈழத்தின் தலைவராக பிரபாகரனை ஜெயலலிதா ஏற்றுக்கொள்ள மாட்டார். ஆனால் தீவிர ஈழ ஆதரவாளர்களோ தனி ஈழம் என்றால் அது பிரபாகரன் தலையில்தான் அமையும் என்று போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் என்ன விசித்திரம் பாருங்கள். கருணாநிதியின் இன்றைய அரசியல் நிலையால் பிரபாகரனை ஏற்காத ஜெயலலிதாவும், பிரபாகரனைத் தவிர வேறு எவரையும் ஏற்கத் தயாராக இல்லாதவர்களும் ஓரணியில் இருப்பதைப் போலத் தோன்றுகிறது.

அதாவது ஈழ ஆதரவு என்பது பின்னுக்குப் போய், கருணாநிதி எதிர்ப்பு என்கிற ஒரு கோட்டில் அவர்கள் ஒன்றாகப் பயணிக்கிறார்கள். அதற்கு மிக முக்கிய காரணம் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் அவர்களின் சி.டி. அந்த சி.டியில் அப்படி என்னதான் இருக்கிறது?

3 comments:

Dr.Rudhran said...

அப்படி ஒன்று இருக்கிறதா...அல்லது வழக்கமான விளம்பரம் தானா

ISR Selvakumar said...

// அப்படி ஒன்று இருக்கிறதா...//
நன்றி திரு.ருத்ரன் அவர்களே. இந்தக் கோணத்தில் இந்த விஷயத்தை அணுகத் தூண்டியதற்கு நன்றி!

இதைப்பற்றி தனிப் பதிவே எழுதலாம்!

Vishnu - விஷ்ணு said...

//நான் புரிந்து கொண்ட வரையில் புலிகள் மேல் அவருக்கு இன்னமும் அபிமானம் வரவில்லை. இனியும் வரப்போவதில்லை. அதனால் அவர் தனி ஈழம் என்று கூறினாலும் தனி ஈழத்தின் தலைவராக பிரபாகரனை ஜெயலலிதா ஏற்றுக்கொள்ள மாட்டார். ஆனால் தீவிர ஈழ ஆதரவாளர்களோ தனி ஈழம் என்றால் அது பிரபாகரன் தலையில்தான் அமையும் என்று போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.//

கருணாநிதியின் ஈழ விசயத்தில் ஏற்பட்ட சறுக்கல்கள் ஜெ. அவர்கள் சரியாக பயன்படுத்திக்கொண்டுள்ளார்கள் என்பது என்னுடைய கருத்து. யார் தலைமையில் ஈழம் அமைந்தாலும் நல்ல விசயம் தான் அதற்காக ஜெ. பாடுபட்டார்கள் என்றால் வரவேற்க்கபட வேண்டிய விசயம் தான்.