இசை என்பதே ஒரு அதிசயம். ஸ முதல் நி வரை உள்ள ஏழே ஏழு ஸ்வரங்களை அடிப்படையாகக் கொண்டு எத்தனையோ கோடி பாடல்கள் வந்து கொண்டே இருக்கின்றன.
நான்கு ஸ்வரங்களை வைத்து மெட்டமைத்து முதலில் சாதித்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
இந்த அதிசயத்திலும் அதிசயம் மூன்று அல்லது நான்கு ஸ்வரங்களை மட்டும் வைத்துக் கொண்டு உருவான பாடல்கள். முதலில் இதை சாதித்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் ”அதிசய ராகம்” என்று தொடங்கும் பாடலின் முதல் பகுதி ச...க...ப...நி என்ற நான்கே ஸ்வரங்களில் அமைந்த பாடல். என்னுடைய ஞாபகமும், இசை அறிவும் சரியாக இருந்தால் அந்த ராகத்தின் பெயர் மஹதி. பாடல் மஹதி ராகத்தில் துவங்கி பின்னர் ஒரு ராகமாலிகாவாக மலரும். மெல்லிசை மன்னரின் இந்த தைரியமான சோதனை முயற்சி மாபெரும் வெற்றி பெற்றது. திரை இசையில் இன்றைய பல்வேறு சோதனை முயற்சிகளுக்கு விதை விதைத்தவர் மெல்லிசை மன்னர்தான்.
இரண்டாவதாக மூன்றே ஸ்வரங்களை வைத்து மெட்டமைத்து சாதித்தவர் எல்.வைத்தியநாதன்
கார்டுனிஸ்ட் ஆர்.கே.இலட்சுமணனின் மால்குடி டேய்ஸ் ஒரு டெலிவிஷன் தொடராக வெளிவந்தபோது அதற்கு புதுமையான டைட்டில் இசை தந்தார் எல்.வைத்தியநாதன். ”தா னா னா தனா தனா னா . . .” என்று ஆண் ஹம்மிங்கில் துவங்கும் அந்தப் பாடல் ச. . . ரி . . . க என்ற மூன்றே ஸ்வரங்களில் உருவான பாடல். அதற்கு முன்பும் சரி பின்பும் சரி எந்த நாட்டுப் புறப் பாடலும் மூன்றே ஸ்வரங்களில் அமைந்ததாக எனக்கு நினைவில்லை. ஆனால் இந்தப் பாடலில் அந்த ஹம்மிங்கைத் தவிர மற்ற பகுதிகளில் வேறு ஸ்வரங்களும் வருகின்றன.
அடுத்ததாக மூன்றே ஸ்வரங்களில் மெட்டமைத்து அசத்தியவர் இசைஞானி இளையராஜா
ஜெயா டிவி சார்பில் நடத்தப்பட்ட ஒரு மெகா இசை நிகழ்ச்சியில் இளையராஜா ச . . . ரி . . . க என்ற மூன்றே ஸ்வரங்களில் அமைந்த அட்டகாசமான மெட்டை இசையமைத்து பாடிக் காட்டினார். பாடலுக்கான ஆர்கெஸ்ட்ரேஷனில் நான்கு நோட்டுகள் வருவதாக யு டியுபில் சில சந்தேகங்களை படித்தேன். என்னுடைய சிற்றறிவுக்கு அது புலப்படவில்லை.
மெல்லிசை மன்னரிடம் இயக்குனர் பாலசந்தர் மிகவும் புதுமையாக ஒரு பாடல் பண்ணலாம் என்று கூறினாராம். என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த எம்.எஸ்.வி தற்செயலாக ஒரு நாள் திரு. பால முரளி கிருஷ்ணாவை சந்தித்தாராம். அப்போது அவர் எடுத்துக் கொடுத்த ராகம்தான் மஹதி. இந்த தகவலை நான் எப்போதோ ஒரு முறை விகடன் அல்லது குமுதத்தில் படித்தேன்.சர்வஸ்ரீ இராகம் என்பது மூன்று ஸ்வரங்களில் அமைந்தது. அதே போல நான்கு ஸ்வரங்களில் அமைந்த இராகங்களும் உண்டு. லாவங்கி, மஹதி, சுமுகம் என அந்த இராகங்களுக்குப் பெயர். இந்த இராகங்கள் அனைத்தையும் உருவாக்கியவர் திரு. பாலமுரளி கிருஷ்ணா அவர்கள்.
மால்குடி டேய்ஸ் டைட்டில் இசையும், இளையராஜா தந்த இசையும் எந்தெந்த இராகங்களில் அமைந்தன என்று எனக்கு யாரும் சொல்லவில்லை. அதனால் எனக்குத் தெரியவில்லை. இசையில் இருக்கும் ஆர்வத்தால் இந்த தகவல்களை திரட்டியிருக்கின்றேன். இதில் தவறு ஏதும் இருந்தால் தெரியப்படுத்துங்கள். அல்லது என்னுடைய நண்பர் மற்றும் இசையமைப்பாளர் திரு.விவேக் நாராயண் அவர்களை அணுகுங்கள். இசை நுணுக்கங்களைச் சொல்வதில் அவர் வல்லவர்.
ஒன்று மட்டும் நிச்சயம், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், எல்.வைத்தியநாதன், இசைஞானி இளையராஜா இவர்கள் அனைவரும் பிறவி இசை மேதைகள். இன்றைய தலைமுறை மட்டுமல்ல, எதிர்கால தலைமுறையும் இவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ளவேண்டிய நுணுக்கங்கள் ஏராளமாக இருக்கின்றன.
இந்த இசை மேதைகள் வாழும் காலத்திலேயே நானும் வாழ்வதை ஒரு வரமாக நான் நினைக்கின்றேன்.
வாழ்க நமது இசை மேதைகள்! வளர்க அவர்கள் புகழ்! மேலும் பெருகட்டும் அவர்களுடைய இசை!
4 comments:
செல்வா சார்,
பதிவுக்கு ரொம்ப நன்றி, நல்லா ரசித்து எழுதியுள்ளீர்கள்.
இன்று தான் உங்க தளம் அறிந்தேன்,இனி அடிக்கடி வருகிறேன்.
தமிழ்மணம் ஒட்டு விழவில்லை,சரிபார்க்கவும்.
வருகைக்கு நன்றி கார்த்திக்.
தமிழ்மணத்தில் பதிவு செய்வதில் ஒரு வருடமாகவே பிரச்சனையாகத்தான் இருக்கின்றது. தமிழ்மணத்திற்கே எழுதி கேட்டுவிட்டேன். இன்னும் சரி செய்ய முடியவில்லை.
HI Mr.Selva, this was my first visit to your blog and you made it feel awsome, Please post many of this kind. Thanks
http://cliffnabird.blogspot.com
செல்வா சார்,
ஆர்வம் தாங்காமல், "அதிஷய ராகத்தை" என் E403 இல வாசித்தும் பார்த்துவிட்டேன், பல்லவியில் தொடங்கி இரண்டாவது சரணம் வரை (பின்னிய கூந்தல் கருநிற..........தேவதை கிடைத்தால் அது என் யோகம்,... அது என் யோகம்), 'ச' 'க' 'ப' 'நி' ஸ்வரங்களில் வாசிக்க முடிந்தது..
மூன்றாவது சரணத்தில் இருந்து (ஒரு புறம் ('ரி') பார்த்தால் மிதிலையின் ('ச' 'ரி' 'நி' 'த') மைதிலி...), 'ரி' 'த' மற்றும் முடிவில் 'ம' ஸ்வரங்கள் தேவை பட்டன, ராகங்களில் எனக்கு பரிச்சயம் இல்லாததாலும், நான் இங்கு கிழக்கு ஆப்பிரிக்காவில் இருப்பதாலும், ஆசிரியர் யாரிடமும் கேட்டு தெரிந்து கொள்ளும் வாய்ப்பில்லை.
திரு.விவேக் நாராயண் அவர்களிடம், (அவருக்கு நேரம் இருப்பின்) இது பற்றி கேட்டறியலாம் என்றுள்ளேன், இது போன்ற பதிவுகளை தொடருங்கள்.
மிக்க நன்றி.
- செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி
Post a Comment