Sunday, July 15, 2012

குமுதம் ராதாவை சொர்ணாக்கா என்கிறது. நானோ . . .

மீடியாக்களின் மேல் உள்ள நம்பகத்தன்மை குறைந்துவிட்டதா?
  1. ஆம்
  2. இல்லை
இரண்டில் ஒரு பதிலை சொல்லிவிட்டு அடுத்த பாராவுக்குச் செல்லுங்கள்

-----------------------------------------------------------------------------------------------------

லண்டன் டெலிகிராஃப் பத்திரிகை நொடித்துப் போயிருந்த சமயம். பெரிய வருமானம் இருக்காது எனத் தெரிந்தும், பிரிட்டிஷ் மீடியா மன்னர் பீவர்புரூக் அதை விலைக்கு வாங்கினார். அனைவருக்கும் ஆச்சரியம். ஏன் வாங்கினீர்கள் என்று கேட்டபோது ஒற்றை வார்த்தையில் அவர் சொன்ன பதில் ‘அதிகாரம்‘

ஆம்! இன்று பத்திரிகை என்பது செய்திகளைப் பகிர்வதோடு மட்டும் அல்லாமல், அரசாங்க அளவில் அதிகாரங்களைப் பகிரவும் முற்படுகின்றன. ஒரு பத்திரிகையால் அதிகார மையத்தை ஊடுருவ முடியுமா என்பவர்களுக்கு, நீராகேட் என்று வர்ணிக்கப்பட்ட டெலிஃபோன் உரையாடல்களை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.  டாடா நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி என்று சொல்லிக் கொண்ட நீரா ராடியாவுடன் இணைந்து மீடியா பிரபலங்களான வீர்சிங்வி (ஹிந்துஸ்தான் டைம்ஸ்) மற்றும் பர்காதத் (என்டிடிவி) ஆகிய இருவரும் நடத்திய அரசியல் பேரங்கள் இன்னமும் நெட்டில் கிடக்கின்றன. மன்மோகன்சிங் மந்திரி சபை தொடர்பாக, கனிமொழி, ராஜாத்தியம்மாள் உள்ளிட்டோரிடம் அவர்கள் பேரம் பேசுவதை இப்போதும் கேட்கலாம்.

ஒரு ஜனநாயக நாட்டின் நான்காவது தூணாக பத்திரிகை துறை வர்ணிக்கப்படுகிறது. ஆனால் தற்போது இந்தியா போன்ற ஒரு நாட்டில், அது தூணாக இல்லாமல் ஒரு அரசியல் கடப்பாறையாக பல நேரம் செயல்படுகிறது. ஒரு புதிய அரசு உருவாவதற்கும், இருக்கின்ற அரசை அசைக்கவும் பத்திரிகைகள் தற்போது முனைப்பு காட்டுகின்றன. தங்களுக்குப் பிடித்த தலைவர்களை உயர்த்தி, பிடிக்காதவர்களை எந்த முகாந்திரமும் இன்றி விமர்சிக்கின்றன. எனவே அரசியல்வாதிகள் பத்திரிகைகளை தங்கள் வசப்படுத்த முயல்கிறார்கள். விளைவு... இன்று ஒரு கட்சிக்கோ, தலைவருக்கோ சார்பு நிலை எடுக்காத மீடியாவே இல்லை. நடுநிலை என்பதெல்லாம் பம்மாத்து.

பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ், எங்கள் கட்சி தொடர்பான செய்திகளை, போராட்டங்களை எந்த பத்திரிகையும் வெளியிடுவதிலலை. தொலைகாட்சிகளும் கண்டு கொள்வதில்லை என்று அடிக்கடி குற்றம் சாட்டுவார். இத்தனைக்கும் அவரிடமே மக்கள் தொலைகாட்சி என்றொரு தொலைகாட்சி நிறுவனம் உண்டு.

சமீபத்தில் ஆனந்தவிகடனுக்கு பேட்டியளித்த திருமாவளவன் கூறியிருப்பதை வாசியுங்கள். ராமதாஸ் போலவே அவருக்கும் ஆதங்கம். மீடியாக்கள் எங்களைப் பற்றிய செய்திகளை புறக்கணிக்கிறார்கள். எனவே நாங்களே சொந்தமாக டெலிவிஷன் சேனல் துவங்குவோம் என்று கூறியுள்ளார். காரணம் என்ன? பீவர் புரூக் குறிப்பிட்டுள்ளது போல, அதிகாரம். கட்சிகள் அதிகாரத்திற்கு வருவதற்கும், நிலைப்பதற்கும் விலக்கப்படுவதற்கும் மீடியாக்களின் துணை தேவைப்படுகிறது.

அதிகார மையங்களில் தாங்கள் அழுத்தமாகப் பதிந்து கொள்ள, பத்திரிகைகள் இரு வகையாக அரசியல் செய்கின்றன. வலிந்து வலிந்து சிலரைப் பற்றி தொடர்ந்து (Paid news) எழுதி, அவரைப் பற்றிய மெகா பிம்பங்களை மக்கள் மனதில் விதைக்கின்றன. அல்லது சிலரைப் பற்றி கண்டு கொள்ளாமல், அவர்களைப் பற்றிய செய்திகளை இருட்டடிப்பு செய்வது இன்னொரு வகை. எந்த வகையாக இருந்தாலும், வலிமையான மீடியாவை கையில் வைத்திருப்பவர்கள் அனைவருமே தனிக்காட்டு ராஜாக்கள்தான்.

மன்மோகன் சிங்கை Under Achiever என வர்ணித்து டைம் பத்திரிகை இந்த வாரம் ஒரு கட்டுரை வடித்துள்ளது. உடனே இங்கே பிரதான கட்சிகள் ஆளுக்கொரு திசையில் நின்று கொண்டு ஒருவரையொருவர் தாக்க ஆரம்பித்துவிட்டன. இதே போல வாஜ்பாய் ஆட்சியில் இருந்தபோது நடக்க முடியாமல் சக்கர நாற்காலியை பயன்படுத்தினார். அப்போதும் இதே டைம் பத்திரிகை வாஜ்பாய் ஆட்சியைப் பற்றி ‘Asleep at the Wheel‘ என்று கேலி செய்தது. அவர்களுடைய கணிப்பு சரியா? தவறா? அது தொடர்பான சர்ச்சைகள் தேவையா? இல்லையா? என்பது ஒரு புறம் இருக்கட்டும். இக்கட்டுரைகள் வெளியாகும் தருணங்கள்தான் கவனிக்கப்படவேண்டியவை. இந்தியாவின் அடுத்த பிரதமர் யாராக இருக்கக்கூடும் என்று மக்கள் யோசிக்கத் துவங்கும்போது, இவர் வேண்டாம், அவர் வேண்டும் என்று மக்கள் மனதில் சில எண்ணங்களை விதைக்கிற வேலையை இக்கட்டுரைகள் கச்சிதமாகச் செய்கின்றன. எதற்கு? வேறெதற்கு? அதிகாரம்தான்.

அவர்களுக்கு பிடித்தவர்களுக்கு அதிகாரம் கிடைத்தால், அவர்களுக்கே அதிகாரம் கிடைத்தது போலத்தானே.

--------------------------------------------------------------------------------------------------------

சர்வதேச அளவில் டைம் பத்திரிகை ஒரு அதிர்வை ஏற்படுத்தியது என்றால், கடந்தவாரம் கோடம்பாக்க அளவில் ஒரு அதிர்ச்சியை குமுதம் உண்டாக்கியது. நடிகை ராதாவை, சொர்ணாக்கா என்று விமர்சித்திருந்தது. தனது மகள் கார்த்திகாவுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக, பெரிய பெரிய இயக்குனர்கள், தயாரிப்பாளர்களை எல்லாம் தன் செல்வாக்கால் மடக்குகிறாராம். ஏற்கனவே யாராவது தேர்வாகி இருந்தால், அவர்களை படத்தைவிட்டே தன் செல்வாக்கால் தூக்கிவிட்டு தன் மகளை நடிக்க வைக்கிறாராம்.

இது போன்ற ‘.....றாராம்‘ என எழுதப்படும் யூகச் செய்திகளை நான் பெரும்பாலும் படிப்பதில்லை. ஆனால் அம்பிகா-ராதா சகோதரிகள் எங்கள் குடும்பத்திற்கு ஓரளவுக்கு பழக்கமானவர்கள் என்பதால் அந்த கட்டுரையை வாசித்தேன். இந்த நேரத்தில் நான் அம்பிகா-ராதா சகோதரிகள் பற்றி ஒரு செய்தியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

1991ம் வருடம். பிப்ரவரி 6. பாரத் பந்த். ஊரே அமைதியாக இருந்தது. விஹெச்எஸ் டேப்பில் நண்பர்களுடன் ஏதோ ஒரு அல்பசினோ படம் பார்த்துக் கொண்டிருந்தேன். சற்று நேரத்துக்கெல்லாம் இனம் புரியாத மனக் குழப்பம். சிறிது நேரத்திலேயே கும்பகோணத்திலிருந்து ஒரு ஃபோன். மோகமுள் திரைப்படக் குழுவிலிருந்து யாரோ பேசினார்கள்.

‘நீங்க ஐ.எஸ்.ஆரின் பையன் தானே?‘
‘ஆமாம்‘
‘உங்கள் தந்தைக்கு உடல் நிலை சரியில்லை. உடனே கும்பகோணம் வாருங்கள்.‘ இதுதான் தகவல்.

தகவல் கிடைத்ததும், என் அம்மாவிற்கு அழுகை வந்துவிட்டது.
‘உடனே கும்பகோணம் புறப்படு, நானும் உடன் வருகிறேன்‘ என்று கண்ணீர்.
தங்கைகள் அழ ஆரம்பித்துவிட்டார்கள். குடும்பத்தில் சகஜநிலை சடுதியில் காணாமல் போனது. வேறுவழியில்லை, உடனே புறப்பட்டாக வேண்டிய கட்டாயம். அன்று பாரத் பந்த் என்பதால் பஸ், இரயில் எதுவும் இல்லை. மோட்டர் பைக்கிலேயே போகலாமா என்கிறான் என் தம்பி ரவி. சில நண்பர்கள் தடுத்துவிட்டார்கள்.

அப்போது ராதாவிடமிருந்து ஃபோன்.
‘ஏன் கவலைப் படறீங்க. எங்க காரை எடுத்துட்டுப் போங்க‘
முற்றிலும் எதிர்பாராத உதவி. கேட்காமலேயே கிடைத்த உதவி. விறுவிறுவென்று புறப்படுகிறோம். தங்கைகளுக்கு துணையாக என் தம்பியை வீட்டிலேயே விட்டுவிட்டு என் அம்மா மற்றும் ஒரு நண்பனுடன் நான் புறப்பட்டேன். கார் புறப்படும்போது,
‘சார், பெட்ரோல் பத்தாது‘ என்றார் டிரைவர்.
பெட்ரோலா? பெட்ரோலுக்கு எங்கே போவது. பந்த் காரணமாக பெட்ரோல் பங்க்குகளும் மூடப்பட்டிருந்தன. மீண்டும் அம்பிகா-ராதா இல்லத்திலிருந்து உதவி. யாரிடமோ சொல்லி, எங்கிருந்தோ பெட்ரோல் வந்து சேர்ந்தது. ஒருவழியாகப் புறப்படும்போது கிட்டத்தட்ட மாலையாகிவிட்டது. டிரைவர் தயங்கினார்.

‘சார் எனக்கு கும்பகோணத்துக்கு வழி தெரியாது. அது மட்டுமில்லாம ஹைவேஸில் இரவில் வண்டி ஓட்டி பழக்கமில்லை‘ என்றார்.
மீண்டும் தயக்கமே இல்லாமல் அம்பிகா-ராதா இல்லத்தில் இருந்து உதவி. டிரைவர் மாற்றப்பட்டு புது டிரைவருடன் புறப்பட்டோம். கார் சிறிது தூரம் சென்றவுடனேயே தடால் என்று சத்தம். திடீரென்று துள்ளி நடுரோட்டுக்கு வந்துவிட்ட காளைமாட்டின் மேல் கார் மோதி நின்றுவிட்டது. முற்றிலும் எதிர்பாராமல் காரின் ரேடியேட்டரே பங்ச்சர் ஆகிவிட்டது.

ராதாவுடன் என் தம்பி ரவிகுமார்
‘கார் நகரவே நகராது சார் என்றார் டிரைவர்.
என்னுடைய அம்மா மீண்டும் அழ ஆரம்பித்துவிட்டார். வீடு திரும்பவும் வழி இல்லை, கும்பகோணம் செல்லவும் வழி இல்லை. என்ன செய்வது? உடைந்த காரில் என் அம்மாவுக்கு நண்பனை துணைக்கு வைத்துவிட்டு, யாருக்கு எப்படி தகவல் தெரிவிப்பது எனப் புரியாமல் ஆளுக்கு ஒரு திசையில் நானும் டிரைவரும் நடந்தோம். ஃபோன் வசதி தேடி எவ்வளவு தூரம் நடந்தேன் எனத் தெரியாது. ஒரு விறகுக் கடையை கண்டுபிடித்தேன். அவர் அருகிலிருந்த ஒரு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, யாரையோ எழுப்பி, சம்மதம் வாங்கி, ஃபோன் செய்ய அனுமதி பெற்றுத் தந்தார்.

புதுகார் விபத்துக்குள்ளாகிவிட்டதே, என்று தயங்கித் தயங்கி விஷயத்தை சொன்னேன். மனம் முழுக்க அப்பாவின் உடல் நிலைபற்றிய அபத்திரம், கார் விபத்து பற்றிய அதிர்ச்சி. நான் என்ன பேசினேன் என்பது ஞாபகமில்லை. என்ன ஆச்சரியம், காரைப் பற்றி அவர்கள் கவலைப்படவே இல்லை.

‘நீங்கள் பத்திரமாக இருக்கிறீர்களா‘ என்ற விசாரிப்புதான் அதிகமாக இருந்தது.

‘நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்‘ எனக் கேட்டார்கள். எனக்குத் தெரியவில்லை. விறகுக் கடைக்காரர்தான் ஏதோ அடையாளம் சொன்னார்.
‘அங்கேயே இருங்கள். இன்னொரு காரை அனுப்பி வைக்கிறோம்‘ எனச் சொன்னார்கள்.

என்னால் இன்று வரை நம்ப முடியவில்லை. அவசரத்துக்கு உதவியாகக் கொடுத்த கார் விபத்துக்குள்ளான பின்னும், அது பற்றிக் கவலை இன்றி, இன்னொரு காரை அனுப்பி உதவிய அந்த நல்ல மனதை இன்னமும் நான் வியக்கிறேன்.

எங்கள் தந்தை ஐ.எஸ்.ஆர்
அதிர்ச்சி, சோகம், வியப்பு என பல உணர்வுகள் குவியலாக என்னை புரட்டி எடுத்துக் கொண்டிருக்க மறுநாள் என் தந்தையை மருத்துவமனை படுக்கையில் சந்தித்தோம். அதுவே அவருடன் கழித்த இறுதி நாள். ஒரு இரவு முழுக்க மருந்து, மாத்திரை, ஊசி, வலி, மூச்சிறைப்பு என ஒரு உயிரின் இறுதி அவஸ்தைகளை அருகிலிருந்து கவனித்தேன். அதிகாலை எட்டுமணிக்கு எங்கள் தந்தை எங்களை விட்டுப் பிரிந்துவிட்டார்.

‘முடிச்சுட்டியாடா . . . ‘
அவர் இறுதியாக என்னிடம் கேட்ட கேள்வி இதுதான். குட்டி பத்மினி நிறுவனத்துக்காக என்னை ஒரு ஸ்க்ரிப்ட் எழுதச் சொல்லியிருந்தார். அவர் அதைக் குறித்துதான் என்னைக் கேட்டார். நான் அந்த ஸ்க்ரிப்டை மட்டுமல்ல, இன்னும் எவ்வளவோ விஷயங்களை முடிக்கவே இல்லை.

அதில் ஒன்று, அம்பிகா-ராதா குடும்பத்தினருக்கு தகுந்த நேரத்தில் நன்றி கூற வேண்டும் என்பது.

எங்கள் தந்தையை அவர் மூச்சு நிற்பதற்குள் ஒரே ஒரு முறையாவது சந்திக்க உதவி செய்த அவர்களின் நல்ல உள்ளங்களை, கிட்டத்தட்ட இருபது வருடங்கள் கடந்த பின், இந்தக் கட்டுரையின் மூலம் உலகுக்குச் சொல்ல ஒரு வாய்ப்பு.

நன்றி! உள்ளத்தில் நல்ல உள்ளங்களுக்கு!

No comments: