Monday, July 2, 2012

இன் & அவுட் சென்னை - மதுரை பொற்றாமரை குளத்தில் பீஹாரி



தியேட்டர்களுக்கு அதிக வருமானம் தருவது பார்கிங்கா? பாப்கார்னா?

சென்னைவாசிகளில் பணம் படைத்தவர்களை விட, பணம் இருப்பதாகக் காட்டிக் கொள்ளும் நடுத்தர வர்க்கம்தான் அதிகம். ஷாப்பிங் மால் மற்றும் மால் தியேட்டர் கூட்டங்கள் இதைத்தான் காட்டுகிறது. வாசலில் பூக்காரியிடம் 3 ரூபாய் பேரம் பேசி எக்கச்சக்க விலை எனப் புலம்பிவிட்டு, பளபள மால்களில் கூந்தலை அடக்கும் பைசா பெறாத ரப்பர் பேண்டுக்கு முப்பது ரூபாயை பேரம் பேசாமல் கொடுக்கிறார்கள். மக்களின் இந்த மனநிலையை இந்திய கார்ப்பரேட் ஸ்டைல் வியாபார ஸ்தலங்கள் குறிவைத்து அபகரிக்கின்றன.

விருகம்பாக்கம் ஃபேம் நேஷனல் தியேட்டரில் என்னென்ன படங்கள் ஓடுகிறது என்பதை இலவசமாகத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் நீங்கள் நடந்துதான் செல்ல வேண்டும். காரில் போனால் ஐம்பது ரூபாயும், பைக்கில் சென்றால் முப்பது ரூபாயும் குறைந்தபட்சம் கறந்துவிட்டுதான் உங்களை உள்ளே அனுமதிக்கிறார்கள். படம் பார்க்கச் செல்லுபவர்களிடம் பணம் கேட்பது ஓரளவுக்கு நியாயம். விசாரிக்கச் செல்பவர்களிடம் பணம் பறிப்பது நியாயமா?

தயாரிப்பாளர்களுக்கு ஒரு ஐடியா. படம் எடுப்பதை விட, பார்க்கிங்கில் நல்ல காசு. பார்க்கிங் காண்டிராக்ட் கிடைக்காவிட்டால் பாப்கார்ன் விற்கலாம். தியேட்டருக்கு வெளியே 10 ரூபாய்க்கு கிடைக்கும் பாப்கார்னை உள்ளே 50 ரூபாய்க்கு விற்கிறார்கள். இந்த கொள்ளைகளை நமது நடுத்தர வர்க்கம் விரும்பி ஏற்பதுதான் விசித்திரம்.

கிரெடிட் கார்டு விற்பவர்களை
உனக்கு சிபாரிசு செய்யலாம்
என்று முடிவு செய்துவிட்டேன்.
நீதான் உண்டியலில் பணம் சேர்ப்பதை 
வெறுக்கிறாயே. 

ஃபேஸ்புக்கின் கட்டாய மின்னஞ்சல்
இந்தக் கட்டுரையை வாசித்துக் கொண்டிருக்கிற உங்களுக்கு ஃபேஸ்புக் அக்கவுண்ட் இருக்கிறதா? இருந்தால் உங்களைப் பற்றிய விபரங்களை ஒரு முறை சரிபாருங்கள். குறிப்பாக மின்னஞ்சல் முகவரியை. அப்படியே ஷாக் ஆகிட்டேன் என்பீர்கள். ஏனென்றால் உங்களுடைய மின்னஞ்சல் முகவரி உங்களைக் கேட்காமலேயே மாற்றப்பட்டிருக்கும். என்னுடைய மின்னஞ்சல் r.selvakkumar@gmail.com ஆனால் அது r.selvakkumar@facebook.com என்று மாற்றப்பட்டிருந்தது. யார் மாற்றியது? வேறு யார் ஃபேஸ்புக்கேதான். நம்மைக் கேட்காமல் நமது முகவரியை மாற்றுவது தனிமனித சுதந்திரத்தின் அத்து மீறல் இல்லையா? அத்து மீறல்தான். ஆனால் யார் கேட்பது. நாம் எல்லோருக்குமே ஃபேஸ்புக் என்கிற போதை இருக்கிறது. என்ன விலை ஏற்றினாலும் டாஸ்மாக்வாசிகள் சின்ன முணுமுணுப்பு கூட இல்லாமல் அட்ஜஸ்ட் செய்து கொண்டு க்யூவில் நின்று கொண்டு குடிப்பது போல, நாம் ஃபேஸ்புக் போதையை விட்டு விலக முடியாமல் அதிலேயே புழங்குகிறோம்.

2010ல் ஃபேஸ்புக் தனது மின்னஞ்சல் சேவையை அறிமுகப்படுத்தியது. ஆனால் எவரும் கண்டு கொள்ளவில்லை. சமூக வலைத்தளங்களில் சிக்ஸர் அடித்தாலும் மின்னஞ்சல் விஷயத்தில் டக் அவுட் ஆகிவிட்டது. அதைச் சீண்டுவார் இல்லை. எனவே குறுக்கு வழியில் அனைவரையும் ஃபேஸ்புக் மின்னஞ்சலை பயன்படுத்த வைக்க நடந்திருக்கும் முயற்சிதான் இந்த அத்து மீறல். நான் கல்லூரி படித்த காலத்தில் என்னுடைய மேடை உதார்களையெல்லாம் பார்த்துவிட்டு, ஏம்பா உன்னை நம்ம கட்சியில சேர்த்தாச்சுப்பா என்றார் லோக்கல் பிரமுகர் ஒருவர். என்னை கேட்கவே இல்லை. அது போல உங்களை எங்க மின்னஞ்சல் சேவைக்கு மாத்தியாச்சு என்கிறது ஃபேஸ்புக் என்கிற மூஞ்சு புக். ஸாரி டியர் மூஞ்சு புக். எனக்கு உங்க மின்னஞ்சல் சேவை வேண்டாம். அதுவும் இது போல என்னைக் கேட்காமலேயே (ஏ)மாற்றுகிற சமாச்சாரம் வேண்டவே வேண்டாம்.

கடந்தவாரம் சிலர் தங்களுடைய ஃபேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுவிட்டதாக புலம்பிக் கொண்டிருந்தார்கள். இந்த இ-மெயில் மாற்றங்களினால் ஏற்பட்ட கோளாறுதான் இது என்பது போனஸ் தகவல்.

சென்னை சாலைகளை ஆக்கிரமித்திருக்கும் பரங்கிமலைகள்
நீங்கள் பரங்கி மலையை தரிசிக்க வேண்டும் என்றால், சென்னையின் ஒவ்வொரு தெருவிலும் தரிசிக்கலாம். தேவைப்பட்டால் அதில் இடறி விழுந்து புழுதியில் புரண்டு சந்து முனை விநாயகரை பூஜிக்கலாம். சென்னை நகரின் மாபெரும் அபத்தங்களில் ஒன்று ஸ்பீட் ப்ரேக்கர்கள் எனப்படும் இந்த முதுகுபிரேக்கர்கள்தான். சென்னையில் நயன்தாரா திருமண பிரேக்கர்களுக்காக நெஞ்சுவலி வந்து அவதிப்படுபவர்களைக் காட்டிலும், ஸ்பீட் பிரேக்கர்களால் அவதிப்படும் முதுகுவலி, இடுப்புவலிவாசிகள்தான் அதிகம். இவர்கள் டாக்டருக்கு பணம் கொடுப்பதை விட வக்கீல்களுக்கு ஃபீஸ் கட்டலாம்.  இவற்றை சந்துக்கு சந்து கட்டிவிட்டிருக்கும் பொறியாளர்களின் மேல் கேஸ் போட்டு இந்த வேகத்தடைகளை நீக்கினால், முதுகும், இடுப்பும் வலியிலிருந்து தப்பிக்கும்.

வேகத் தடைகளின் மேல் மேல் வரிகுதிரைகள் போல வெள்ளைக் கோடுகள் இருக்க வேண்டும். இரவுகளில் கண்களில் பட எளிதாக ஒளிரும் தன்மையுடன் வண்ணம் பூச வேண்டும். 40 மீட்டர்களுக்கு முன்பாகவே வாகன ஓட்டிகளை அறிவிப்பு பலகை வைத்து உஷார்படுத்த வேண்டும் என்பது IRCயின் விதி. IRC என்பது Indian Road Congress என்பதின் சுருக்கம். நமது மாநகராட்சி இஞ்சினியர்கள் பரங்கிமலையை ஸாரி, ஸ்பீட்பிரேக்கர்களை கட்டி முடித்ததும், விதிகளுக்கு உட்பட்டு சரியாக இருக்கிறதா என்பதை இவர்கள்தான் தெரிவிக்க வேண்டும். ஆனால் எங்கெங்கே வேகத்தடைகள் உள்ளன என்ற பட்டியலே இவர்களிடம் இல்லையாம். அப்புறம் எப்படி இவர்கள் சரிபார்ப்பார்கள்.

சென்னையில் எந்த முன்னறிவிப்பும் இன்றி எதிர்ப்படும் இவற்றில் மோதி ஒரு முறையாவது தூக்கி வீசப்படாத மோட்டர் பைக்கர்களே கிடையாது. ஏதோ அப்பா, அம்மா செய்த புண்ணியம். தினசரி பத்திரமாக வீடு வந்து சேருகிறோம். அதனால் நாமும் கண்டுகொள்வதில்லை. அரசாங்கமும் கண்டுகொள்ளவில்லை. இந்த வாரம் நடந்த ஒரு விபத்தில், அமைச்சர் செல்லூர் ராஜீ அவர்களின் மகன் வேகத்தடையில் மோதி வீசி எறிப்பட்டு இறந்துவிட்டார் என்றவுடன், பரபரவென இதை சரிசெய்ய வேண்டும் என்று பேச்சு எழுந்திருக்கிறது.

இன்னும் ஒரு வாரம். அதற்குள் அஜீத்தின் பில்லா - 2 ரிலீசுக்கு தயாராகிவிடும். நாமும் அதில் மும்முரமாகிவிடுவோம். வேகத்தடை பயங்கரத்தை மறந்துவிடுவோம். ஆமா.. கமலின் விஸ்வரூபம் எப்போ வருது?

மதுரை பொற்றாமரைக் குளத்தில் ஹிந்தி
நான் மதுரைக்கு செல்லுவதற்காகவே அடிக்கடி எனக்காகவே ஒரு சந்தர்ப்பம் தயாராகிவிடுகிறது. ஒரு மாதத்திற்கு முன் திருநெல்வேலிக்கு நேரடி டிக்கெட் கிடைக்காததால் மதுரையில் நின்று சென்றேன். 3 வாரங்களுக்கு முன் நண்பர் வீட்டுத் திருமணம். இருநாட்களுக்கு முன் வில்லாபுரத்தில் ஒரு ஆன்லைன் பயிற்சி திட்டம் பற்றிய டெமோ. இம்முறை உடன் வந்த நண்பர் மெகா பக்தர் என்பதால் காலையும், மாலையும் மீனாட்சி அம்மனுக்கு ஹலோ சொல்லும் பாக்கியம் கிட்டியது.

சங்கத் தமிழ் வளர்த்த பொற்றாமரைக் குளத்தில் ஹிந்தி பேசிய கட்டிட வேலை பார்க்கும் பீகாரி பெண்மணிகள் கருங்கற்களை வீசி நிரப்பிக் கொண்டிருந்தார்கள். ஏதோ ஹெலிகாப்டர் கிராஷ் போல மகா இரைச்சல். ஸ்டீல் அஸ்பெஸ்டால் ஷீட்டுகளை சரிவாக அடுக்கி அதில் கற்களை டமார் டமார் என உருட்டி விட்டதில் ஏக தூசி. அருகில் இருந்த பீஹார் மேஸ்திரிகள், நான் ஃபோட்டோ எடுப்பதைப் பார்த்ததும், சுப்-கப் என்று அந்தப் பெண்மணிகளை அதட்டிக் கொண்டிருந்தார்கள்.

நக்கீரா! சென்னையோ? மதுரையோ? மாநகராட்சி இன்ஞினியர்களுக்கு இயற்கையிலேயே அறிவு மட்டா?

தனியார் பேருந்து நிறுவனத்தின் அலட்சியம்
இப்போது சென்னை ரிடர்ன் கதைக்கு வருகிறேன். வழக்கமாக கே.பி.என் பஸ் நன்றாக இருக்கும் என்பார்கள். இந்த முறை ஸ்லீப்பர் என்று ஆன்லைன் ரிசர்வேஷனில் பணம் வாங்கிக் கொண்டு, மதுரைக்கு புஷ்பேக்தான் என்று டபாய்த்தார்கள். ஓய்வெடுக்க மாற்று டிரைவர், துணைக்கு க்ளீனர் கூட இல்லாமல் இரவு முழுவதும் ஒரே டிரைவர். மனிதர் தூங்கிவிடுவாரோ என்ற பயத்திலேயே எனக்கு தூக்கம் வரவில்லை. பக்கத்து சீட் அன்பரின் குறட்டை ஒரு உபரி தொந்திரவு. நள்ளிரவில் இயற்கை உபாதைக்காக நிறுத்தச் சொல்லி பயணி ஒருவர் கேட்டதற்கு டிரைவர் அனாவசியமாக கோபித்துக் கொண்டார்.

இந்த சிடுசிடுப்பு இம்சை, அதிகாலை சென்னை வரும் வரை தொடர்ந்தது. எல்லா பயணிகளையும் எடுத்தெறிந்து மரியாதைக் குறைவாகப் பேசினார். இருந்தாலும் நானோ, உடன் வந்த நண்பர்களோ அவரை கோபிக்காமல் விட்டுவிட்டோம். அதற்கு ஒரே காரணம் தான். இருப்பது ஒரு டிரைவர். துணைக்கு இன்னொரு டிரைவர் தர வேண்டிய கே.பி.என் நிர்வாகம் பணத்தை வாங்கி பாக்கெட்டை நிரப்புவதோடு தன் பொறுப்பை தட்டிக் கழித்துவிட்டது. இருக்கிற இந்த டிரைவரையும் கோபித்தால், வாதம் விவாதமாகி அவர் பத்திரமாக வண்டியை செலுத்த முடியாமல் போய்விடலாம் என்பதால் அமைதி காத்தோம்.

நமது பிரச்சனையே இதுதான். நமக்குத் தேவையான அடிப்படை வசதிகள், அதற்கான உரிமைகள் பற்றிய குறைந்தபட்ச அக்கறை கூட நமக்கு இல்லை. அரசாங்க அதிகாரிகளும் நம்மில் ஒருவர்தானே. அதனால்தான் அரசாங்கமும் நம்மைப் போலவே அலட்சியமாக இருக்கிறது.

புக் ஆஃப் ரிவ்யூ நம்ம ஊரில் உண்டா?
நண்பர் ஒருவர் ஹாலோ பிளாக் சைஸில், பரிசுப் பேப்பர் சுற்றி, ஒரு புத்தகம் தந்தார். என்ன இது என்றேன். உங்கள் மகளுக்கு குழந்தைக் கதைகள் என்றார். இத்தனை தடிமனாக ஒரே புத்தகமா? பொதுவாக குழந்தைகளுக்கு இத்தனை எடையுள்ள புத்தகங்கள் பிரசுரிக்க மாட்டார்களே என்றேன். சார்.. எதையாவது சொல்லி என்னைக் குழப்பாம, உங்க மகளுக்கு கொடுங்கள் சார் என்றபடி காரில் ஏறி புறப்பட்டுவிட்டார். அவர் சென்றபின் பிரித்துப் பார்த்தேன். அது கதைப் புத்தகம் இல்லை. குழந்தை கதைகளைப் பற்றிய விமர்சனப் புத்தகம். புக் ஆஃப் ரிவ்யூ. நம்ம ஊரில் இந்த மாதிரி புத்தகங்களை பப்ளிஷர்கள் வெளியிடலாம். புத்தகம் வாங்குவதற்கு முன், புத்தகங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

அண்ணா மேம்பாலத்தில் பஸ் விபத்து
இந்தக் கட்டுரையை எழுதி முடித்த சில வினாடிகளில் இந்த தகவல் கிடைத்தது. சென்னையின் இதயமான அண்ணா மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று கட்டுப்பாடு இழந்து சுவரை இடித்துக் கொண்டு தலை கீழாக விழுந்துவிட்டது. படுகாயம் அடைந்த 30 பயணிகள் மருத்துவமனைகளில் சிகிக்சை பெற்று வருகிறார்கள்.

இது தற்போது கிடைத்திருக்கும் முதல் தகவல். தகவல்களை விட யூகங்களும், வதந்திகளும் எக்கச்சக்கமாக உலவிக் கொண்டிருக்கின்றன. அதில் ஒன்று மிக முக்கியமானது. ஓட்டுனர் மொபைல் ஃபோனில் பேசிக் கொண்டிருந்தார் என்பதே அது. இந்த விபத்தில் இது உண்மையோ பொய்யோ, பல பேருந்து ஓட்டுனர்கள் இப்படிச் செய்கிறார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

காதில் மொபைல் ஃபோனை வைத்துக் கொண்டு மோட்டர் பைக், ஆட்டோ, கார், பஸ் ஓட்டுவது சென்னையில் சர்வசாதாரணம். தனக்கு ஒன்றும் ஆகாத வரையில், இதை ஒரு கவனக் குறைவாகவே எவரும் கருதுவது இல்லை. பெண்களே அக்கறையின்றி இப்படிச் செல்வதை நான் பலமுறை கவனித்திருக்கிறேன்.

அமைச்சர் செல்லூர் ராஜி அவர்களின் மகன் இறந்த விபத்தில் வேகத் தடையில் மோதி தூக்கி எறியப்பட்டு இறந்ததாக கூறப்பட்டாலும், அவர் செல்ஃபோன் பேசிக் கொண்டே மோட்டர் பைக் ஓட்டியதாகவும் சிலர் கூறுகிறார்கள்.

இனியும் சென்னை போக்குவரத்து காவல்துறை மென்மையாக நடந்து கொள்ளக் கூடாது. ஹெல்மெட் அணியாமல் செல்வதையும், மொபைல் ஃபோன் பேசிக் கொண்டே வண்டி ஓட்டுவதையும் கடுமையாக தண்டிக்க வேண்டும். இதில் விஐபி அது இது என யாருக்கும் தயவு தாட்சண்யமே பார்க்கக் கூடாது.

கொஞ்சம் ஸினிக்கலான கவிதை (என்றும் சொல்லலாம்)
------------------------------------------------
டாக்ஸ் பிரச்சனை
போனஸ் பிரச்சனை
பெட்ரோல் பிரச்சனை
இஞ்சினியரிங் சீட் பிரச்சனை
ரேஷன்கார்டு பிரச்சனை
பவர்கட் பிரச்சனை
காதல் பிரச்சனை
நாத்தனார் பிரச்சனை
சுகர் பிரச்சனை
என எந்தப் பிரச்சனையும் இல்லாமல்
டிராபிக் நெரிசலில்
கையேந்திப் பிழைக்க
உன்னால் எப்படி முடிகிறது?

(டாக்ஸ் பிரச்சனையில் துவங்கி சுகர் பிரச்சனை வரை உள்ள வரிகளை எந்த வரிசையில் வேண்டுமானாலும் மாற்றி எழுதிக் கொள்ளலாம். ஏனென்றால் பிரச்சனைகள் வரிசையாக வருமே தவிர, வரிசையில் வருவதில்லை. சியர்ஸ்!!!)


2 comments:

காவேரிகணேஷ் said...

தொகுப்பாய், தொடராய், சரமாய் , அழகாய் இருக்கிறது..

கே.பி.என்னில் பயணித்து 10 வருடம் ஆகிறது. பயணிகளுக்கு இயற்கை உபாதைக்கு கூட நிறுத்த மாட்டார்கள்..அவர்கள் கெஞ்சியும்..

Cable சங்கர் said...

இங்கே புலம்புவதற்கு பதிலாய் அங்கேயே உங்கள் உரிமையை கேளுங்க.. கேட்டால் கிடைக்கும் இல்லை கிடைக்கும் வரை போராடுஙக தலைவரே..

ஃபேம் தியேட்டருக்கு நான் போவதேயில்லை.