Thursday, July 5, 2012

ஆந்தை ரிப்போர்ட்டர் : இலவச நிலம்! கருணைக் கொலைக்கு இதுதான் தீர்வா?


சக்கர நாற்காலியில், மனநலம் குன்றிய தனது மகளை வைத்துக் கொண்டு, கண்ணீருடன் நின்றிருந்த ஒரு பெண்ணின் புகைப்படம், கடந்த வாரம் அனைத்து செய்தித் தாள்களிலும் வந்தன. சில மணி நேரங்களில் ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் அந்தப் பெண்.


ஐயா, மனநலம் குன்றிய நிலையில் உள்ள 14 வயதாகும் என் பெண் குழந்தையை என்னால் கவனித்துக் கொள்ள முடியவில்லை. பசியையும், இயற்கை உபாதையையும் கூட சொல்லத் தெரியாத என்னுடைய பெண் குழந்தையை  காப்பகங்கள் ஏற்க மறுக்கின்றன. என்னிடமும் பணம் இல்லை. இனியும் என்னால் கவனித்துக் கொள்ள இயலாது. எனவே கருணைக் கொலை செய்ய அனுமதி தாருங்கள் என்று  கலெக்டருக்கு ஒரு மனு எழுதித் தந்த அந்தப் பெண்ணின் பெயர் ஜெயா.


பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகவும் சிரமம்தான். வாடகை வீடு, தினசரி சாப்பாட்டுக்கே கடினம் எனும்போது அன்பையும் மீறி விரக்தி மனதை ஆக்கிரமிக்கத்தான் செய்யும். ஆனாலும் தனது மகளை கருணைக் கொலை செய்ய தூண்டுகிற அளவுக்கு ஒரு பெண் தயார் ஆகிறாள் என்றால் அதற்கு காரணம் அவள் மட்டுமா? ஏழ்மை எங்கும் இருக்கிறது. எனவே அது காரணமல்ல.  மனநலம் குன்றிய பெண்ணை ஏற்க மறுத்த காப்பகங்களும், மனோ ரீதியாக அப் பெண்ணை மேலும் பலவீனப்படுத்திய சுற்றுச் சூழல்களும் மனிதர்களும் காரணமாக இருந்திருக்கக்கூடும்.


மீடியாக்களின் வெளிச்சம் வந்தபின் தற்போது அப்பெண்ணுக்கு, அரசு தரப்பில் நிலமும், உதவித் தொகையும் தரப்படும் என உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. சில காப்பகங்கள் கருணைக் கொலை எண்ணத்தை கைவிடும்படி அப்பெண்ணை வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன. அப்பெண்ணுக்கும் நிலம் கிடைப்பதில் சந்தோஷம்தான். ஆனால் . . . அப் பெண்ணின் நிலைக்கு இதுதான் தீர்வா?


37 வருடங்களாக கோமா நிலையில் உள்ள பெண்ணை பாதுகாக்கும் மருத்துவமனை
கடந்த வருடம் உச்ச நீதி மன்றத்துக்கு ஒரு மனு வந்தது. 37 வருடங்களாக கிட்டத்தட்ட உயிரற்று கோமா நிலையில் உள்ள அருணா ராமச்சந்திரா ஷண்பகம் என்ற பெண்ணை கருணைக் கொலை செய்துவிடலாம் என்று அந்த மனு வலியுறுத்தியது. மனுவை விசாரித்த நீதிபதிகள் கருணைக் கொலைக்கு தடை விதித்தது மட்டுமல்லாமல், 37 வருடங்களாக அப்பெண்ணை பாதுகாத்து வரும் மருத்துவமனைக்கு பாராட்டும் தெரிவித்தது. கூடவே மருத்துவ  முறையிலான கருணைக் கொலை (Euthanasia) பற்றி தெளிவான விதிமுறைகளை பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியது.


அருணா மீண்டும் உயிர் பெற்று வரும் வாய்ப்பு கிட்டத்தட்ட இல்லவே இல்லை. இருந்தாலும் KEM மருத்துவமனை நிர்வாகமும், அங்கிருக்கிற மருத்துவர்களும் அருணாவை கைவிடுவதாக இல்லை. அருணாவின் பிறந்த நாளன்று கேக் வெட்டி கொண்டாடுகின்றனர். அப்பெண்ணுடன் அவ்வப்போது பேசுகின்றனர். காதலனே கைவிட்டாலும் மருத்துவர்கள் கைவிடாததன் காரணம், அருணா 37 வருடங்களுக்கு முன் அவர்களுடன் பணிபுரிந்த ஒரு நர்ஸ். அதே மருத்துவமனையில் அவளை மானபங்கப்படுத்த முயன்றான் ஒருவன். விளைவு.. அவன் சிறைக்குள்ளும், அருணா மீள முடியாத கோமாவிற்குள்ளும் தள்ளப்பட்டார்கள். அந்தக் கயவன் சிறையிலிருந்து விடுதலை ஆகிவிட்டான். ஆனால் அருணா இன்னும் மீளவே இல்லை. ஒரே ஆறுதலான விஷயம் என்னவென்றால், உடன் பணிபுரிந்த அனைவரும் அருணா மீதுள்ள நட்பும் பாசமும் காரணமாக அவளை இன்னும் பராமரித்துவருகிறார்கள். அருணாவைப் பாதுகாக்க பொருளாதாரச் சுமை ஒரு தடையாக இருக்கவில்லை என்றாலும், எந்த நிலையிலும் அவளை நேசிக்க அவர்களுக்கு எந்த மனத்தடை இல்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.


தனது 14 வயது மகளை கருணைக் கொலை செய்யத் துணிந்த ஜெயாவுக்கும், இனி எந்த நிலையிலும் தனது மகளை கை விடாமல் நேசிக்கும் மனோ பலமும், பொருளாதார துணையும் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்.


பின் தகவல் : 
Euthanasia என்றால் இனி பிழைக்கவே மாட்டார்கள் என்ற நிலையில் உள்ளவர்களுக்கு அரசு அனுமதியுடன் இறந்து போக உதவுவது.
Passive Euthanasia - மருத்துவ சிகிச்சைகளை நிறுத்தி இறக்க உதவுவது.
Active Euthanasia - ஏதோ ஒரு முறையை பயன்படுத்தி நோயுற்றவரை இறந்து போக வைப்பது.


=============================================
சிறை நிரப்பும் போராட்டத்தால் திமுகவிற்கு தெம்பு கிடைத்திருக்கிறதா?
ஆம்
இல்லை
நறுக்கென்று உங்கள் பதிலை அனுப்புங்கள் பார்க்கலாம்.
=============================================

ஆந்தை ரிப்போர்ட்டரில் அக்கம் பக்கம் - 2  என்ற பெயரில் எழுதியுள்ள கட்டுரையின் நிறைவுப் பகுதி!


No comments: