Monday, July 2, 2012

கற்றதும் கற்பதும் : டிவி, மொபைல், கேம் ஸ்டேஷன்களை இணைக்கும் Smart Glass


என்னுடைய நண்பருக்கு நண்பர், மைலாப்பூரில் மைசூர் சில்க்ஸ் பட்டுப்புடவைகள் விற்றுக் கொண்டிருக்கிறார். எனக்குத் தெரிந்து 20 வருடங்களாக அந்தக் கடை ஒரே மாதிரிதான் உள்ளது. கடைப் பையன்கள் பையர்கள் ஆகிவிட்டாலும், மைசூர் சில்க் தவிர வேறெதுவும் உள்ளே நுழைந்தது இல்லை. காஸ்ட்லியான மைசூர் பட்டுகளுக்கு இடையில் என் நண்பர் போன்ற அப்பாவி ஆண் ஜந்துக்களுக்காக ஜிப்பாக்கள் மற்றும் வேட்டிகளுக்கு என்று தனி கொசுறு செக்ஷன் உண்டு. 

மத்த புடவைக்கடையெல்லாம் அமலா பால், அனுஷ்காவை மாடலாகப் போட்டு விதம் விதமாக விளம்பரம் தந்து என்னென்னவோ பட்டுப் புடவை விக்கறாங்களே, நீயும் அந்த மாதிரி ஏன் பண்ணக் கூடாது என்று என் நண்பர் எப்போதுமே அக்கடைக்காரரிடம் கேட்பார். அதே கல்லாப் பெட்டியில் உட்கார்ந்து கொண்டு கிட்டத்தட்ட அதே தொனியில், எனக்கு இருக்கற இதே கஸ்டமர்ஸ் போதும். மைசூர் சில்க் அப்படின்னா அவங்க இங்கதான் வருவாங்க. அவங்களுக்கு பொண்ணு, பேத்தி எல்லாம் இங்கதான் வருவாங்க. அதனால நமக்கு இதுவே போதும் பாஸ் என்பார்.

கிட்டத்தட்ட அந்த மைசூர் சில்க்காரர் போலத்தான் மைக்ரோசாஃப்டும், மென்பொருளை விட்டுவிட்டு வன்பொருள் பக்கம் வராமல் இருந்தது. அவர்கள் கல்லா கட்டியதெல்லாம் விண்டோஸ் போன்ற மென்பொருள்களில்தான். தற்போது முதன் முறையாக ஞானோதயம் வந்து சர்ஃபேஸ் - Surface என்ற வன்பொருளை இறக்கியிருக்கிறது. ஆப்பிள், சாம்சங் போன்ற நிறுவனங்களின் ஐ-பேட், குளிகைக் கணிணிகள், ஆன்ட்ராயிட் ஃபோன்களால், மேசைக் கணிணிகளின் பயன்பாடு குறைந்து வருகிறது என்பது உண்மை. அபாயகரமாக குறையாவிட்டாலும் குறைந்து வருகிறது என்பதை உணர்ந்து கொண்ட மைக்ரோசாஃப்ட் தானும் ஐ-பேட் போன்ற வடிவத்தில் ஒரு பேடை இறக்கியிருக்கிறது. அதுதான் மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ்.

இன்னும் சந்தைக்கு வராத இந்த சர்ஃபேஸ் பற்றி நான் ஏற்கனவே சிலவருடங்களுக்கு முன் உங்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். எப்போதும் மைக்ரோசாஃப்ட் தனது ஆக்ரோஷமான வியாபார உத்திகளால் மற்ற நிறுவனங்களை மிரட்டியெடுக்கும். அவர்களுடைய தயாரிப்பை விட, வியாபார உத்திகள்தான் பிரபலம். ஆனால் இம்முறை தயாரிப்பும் சிறப்பாக இருப்பதாக சில டெக் செய்திகள் கசிகின்றன. ஆப்பிளின் ஐ-பேடுக்கு கடும் போட்டியாக இருக்கக் கூடும் என்கிறார்கள்.

முதல் காரணம் இந்தப் பேடில் இணைக்கத் தேவையான மௌஸ் போன்ற அனைத்து தேவைகளையும் தானே தயாரித்திருக்கிறது. மற்ற நிறுவனங்களை துளியும் சாரவில்லை. எனவே இதுக்கு அது ஒத்துவரவில்லை என்பது போன்ற பிரச்சனை வராது. 

இரண்டாவது முக்கிய காரணம், மேசைக் கணிணிகளில் நாம் பயன்படுத்தும் அதே ஆபரேட்டிங் சிஸ்டம் சர்ஃபேஸிலும் பயன்படுத்தப்படுகிறது. எனவே உங்கள் விண்டோஸ் பிசியில் நீங்கள் இயக்கும் அத்தனை மென்பொருட்களையும் நீங்கள் சர்ஃபேஸிலும் இயக்க முடியும். ஆப்பிளின் ஐ-பேட் அப்படி அல்ல என்பது மிக முக்கிய வித்தியாசம்.

சர்ஃபேஸ் - Surface வாயிலாக வன்பொருள் துறையில் முதன் முதலில் இறங்கியிருந்தாலும் மைக்ரோசாஃப்ட் படு தெம்பாக இருப்பதாகச் சொல்கிறார்கள்.

டிவி, மொபைல், கேம் ஸ்டேஷன்களை இணைக்கும் ஸ்மார்ட் கிளாஸ் - Smart Glass
இதுவும் மைக்ரோசாஃப்ட் சமாச்சாரம்தான். ஆப்பிள் ஏர் - Apple Air என்றொரு மென்பொருள் உண்டு. அதனை வைத்துக் கொண்டு உங்கள் மொபைல் ஃபோன், டிவி, கேம் ஸ்டேஷன்களை ஒன்றிணைத்து பயன்படுத்திக் கொள்ள முடியும். கிட்டத்தட்ட அதே தொழில் நுணுக்கத்துடன் சந்தைக்கு வந்திருப்பதுதான் Smart Glass.

சில வருடங்களுக்கு முன் துபாய் சென்றிருந்தேன். கராமாவில்  ஒரு தூத்துக்குடிக்காரரை சந்தித்தேன். அவர் எனக்கு டிவிட்டரில் அறிமுகமானவர். எனவே அவருடைய வீட்டுக்குச் சென்றதும், ஃபில்டர் காபி, மெதுவடை மற்றும் சுஜாதா, சாண்டில்யன், ஜெயகாந்தன்களை விழுங்கிவிட்டு டிவிட்டரை ஆன் செய்துவிட்டார். அவருடைய பிசி திரை போதாது என்பதால் தியேட்டர் எஃபக்டடில் கேபிள் போட்டு LCD TV திரைக்கு இணைப்பு தந்துவிட்டார். தொடர்ந்து ஒரு மணிநேரம் அவரும் நானும் டிவிட்டரில் உலவி அரட்டையடித்து மீண்டும் சந்திப்பதாக விடைபெற்றேன். இன்னமும் சந்திக்கவில்லை. அந்த ஃபில்டர் காபிக்காக மீண்டும் செல்லலாம்தான்.

சரி விஷயத்துக்கு வருகிறேன். நண்பர் டெக் பிரியர் என்பதால் கேபிள்கள், அடாப்டர்கள் எல்லாம் வாங்கி கணிணித்திரையை டிவி திரைக்கு கொண்டு வந்துவிட்டார். எல்லோரும் அப்படிச் செய்து கொண்டிருக்க முடியாது. எனவே இவை எல்லாவற்றையும் ஒரு பட்டன் வழியாக இணைக்க விடுவிக்க ஒரு அலை மென்பொருள் தேவைப்படுகிறது. அதுதான் Smart Glass. உங்களுக்கு XBox தெரிந்திருக்கும். அது ஒரு விளையாட்டு டப்பா. வெர்சுவலாக பாக்ஸிங் பண்ணலாம், ஃபுட்பால் கிரிக்கெட் விளையாடலாம், ராக்கெட் லாஞ்ச் பண்ணலாம், அடுத்த நாட்டின் மேல் பாம் போடலாம், ஏலியனாக மாறி யாருடனோ போர் புரியலாம். இந்த எக்ஸ் பாக்ஸை பயன்படுத்தி உங்கள் மொபைலையும், டிவியையும் நீங்கள் இணைத்துக் கொள்ள முடியும்.

படுக்கையில் படுத்துக் கொண்டே உங்கள் மொபைலில் உலவிக் கொண்டிருந்த தளத்தை உங்கள் டிவிக்கு மாற்றிக் கொள்ள முடியும். அதே போல டிவியிலிருந்து மொபைலக்கு இடம் மாற்றலாம்.

கூகுள் இந்த விஷயத்தில் பிஸ்தா. Smart Glassலும் இது இருப்பதாகச் சொல்கிறார்கள். உண்மையா, புருடாவா என்பது வந்தபின்தான் தெரியும்.

No comments: