Thursday, July 5, 2012

ஆந்தை ரிப்போர்ட்டர் : கடவுள் துகள், அமலா பால், ஆன்மீகம்


கடவுளின் துகளை கண்டுபிடித்தது எப்படி?
இந்தப் பிரபஞ்சத்தின் ஆதி அந்தங்களைத் தேடுவோரில் ஒரு பிரிவினருக்கு ஆன்மீகவாதிகள் என்று பெயர். இன்னொரு பிரிவினருக்கு விஞ்ஞானிகள் என்று பெயர். இந்த வாரம் இதுவரை எவருமே கண்டிராத, கடவுளைப் போல எவர் கண்ணுக்கும் புலப்படாத ஹிக்ஸ் போஸான் என்ற அணுத்துகளின் வாரம்! கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது போல ஹிக்ஸ் போஸான் இருக்கிறதா இல்லையா என்ற வாதம் நேற்றுடன் முடிவுக்கு வந்திருக்கிறது. அதாகப்பட்டது ஹிக்ஸ் போஸான் இருப்பதாக 99.999% சதவிகிதம் ஒப்புக்கொள்ளப்பட்டுவிட்டது. 


அணுவுக்குள் அணுவாகி என்று ஔவையார் பாடியிருக்கிறார். அவர் எதற்காக அப்படிப் பாடினாரோ, நான் அந்த வரிகளை எப்போதுமே அணுவைப் பிளக்கிற சமாச்சாரத்துடன் இணைத்துக் கொள்வேன். ஒரு அணுவைப் பிளந்தால் அதற்குள் Sub atomic எனப்படும் துணைத் துகள்கள் கிடைக்கும். அவற்றில் முக்கியமானவை, Photons, gluons மற்றும் Higgs Boson. இதில் ஹீரோ யார் என்றால் ஹிக்ஸ் போஸான். இந்த துகளைத்தான் எவருமே இதுவரை கண்டதில்லை. அதை காணவும் முடியாது. எனவே இதை கடவுளின் துகள்(God's Particle) என்கிறார்கள்.


இருந்தாலும் இரு விஞ்ஞானிகள் குழுக்கள், இதை எப்படியாவது கண்டுபிடித்தே தீர்வது என்று கங்கணம் கட்டிக் கொண்டு இறங்கினார்கள். கண்டுபிடிக்க அவர்கள் பயன்படுத்திய லாஜிக் வெகு சிம்பிள். ஒரு எடை மேடையில் நானும், அமலாபாலும் (ஒருவரையொருவர் நெருக்கி இடித்துக் கொண்டு) நிற்பதாக வைத்துக் கொள்வோம். தராசு 120 கிலோ காட்டுகிறது. நான் இறங்குகிறேன். இறங்கியபின் எடை மேடை 50 கிலோ காட்டுகிறது. அப்படி என்றால் அமலாபாலின் எடை என்ன? 50 கிலோதானே.. இதே எடை பார்க்கிற லாஜிக்கைத்தான் ஹிக்ஸ் போஸனை கண்டுபிடிக்கவும் பயன்படுத்தினார்கள்.


ஒரு வினாக்கு 600 மில்லியன் முறை புரோட்டான், நியூட்ரான் கதிர்களை எதிரெதிரே மோதவிட்டார்கள். அந்த மோதலின் விளைவாக பெர்மியான், குளுயான், போட்டான், குவார்க், வெப்பம், மின்காந்த வீச்சுகள் மற்றும் ஹிக்ஸ் போஸான் துகள் உள்ளிட்டவை வெளிப்பட்டன. இவை அனைத்தையும் அப்படியே கூட்டாக எடை பார்த்தார்கள். அதை குறித்துக் கொண்ட பின்னர், (கண்ணுக்கு புலப்படாத) ஹிக்ஸ் போஸானை மட்டும் விட்டுவிட்டு மற்ற அனைத்தையும் அணுத்தராசை விட்டு இறக்கினார்கள். அப்போது தெரிந்த எடைதான் 125.3+ GeV (Giga Electro Volts). அந்த எடைதான் ஹிக்ஸ் போஸானின் எடை. ஆக கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் எடையை கண்டுபிடித்து, ஹிக்ஸ் போஸான் இருப்பதை நிரூபித்துவிட்டார்கள்.


சரி, இந்த ஹிக்ஸ் போஸான் மட்டும் ஏன் ஸ்பெஷல்? இந்தப் பிரபஞ்சம் ஒரு புள்ளியில் இருந்து வெடித்துச் சிதறியபோது எக்கச்சக்க தூசு. அந்த தூசுகளுக்கு எடை கொடுத்து, எடையால் உருவம் வரவைத்து சூரியன், பூமி, அமலாபால், நான் மற்றும் நீங்கள் என மாற்றியது இந்த ஹிக்ஸ் போஸான் என்கிற கண்ணுக்குத் தெரியாத கடவுளின் துகள்தான். ஹிக்ஸ் போஸான் மட்டும் இல்லாவிட்டால் இந்தப் பிரபஞ்சம் இல்லை. அப்படியென்றால் ஹிக்ஸ் போஸான் தான் இந்த பூமியின் கடவுளா? 99.999% ஆம் என்கிறது அறிவியல் உலகம். மீதி .001% சதவிகிதம் ஏதோ டவுட் இருக்காம்.


அது ஏன் சொற்பமாக ஒரு டவுட், புரோட்டான், நியூட்ரான்களை எப்படி மோதவிட்டார்கள் என்பதை பிறிதொரு சந்தர்ப்பத்தில் (ஞாபகம் இருந்தால்) சொல்கிறேன். பின் குறிப்பாக ஒரு இந்தியத் தகவல் ஹிக்ஸ் என்பது இந்த கடவுளின் துகள் பற்றி முதன் முதலில் ஆராய்ந்து உறுதியாகச் சொன்ன பீட்டர் ஹிக்ஸ் என்பவரின் பெயர். போஸ் என்பது துணைத் துகள்களை வகை பிரித்து எளிதாகப் புரிய வழி செய்த சத்யேந்திர நாத் போஸ் என்ற இந்திய இயற்பியல் விஞ்ஞானியின் பெயர். இருவரின் பெயர் சுருக்கத்தையும் சேர்த்து கடவுளின் துகளுக்கு ஹிக்ஸ் போஸான் என்று பெயர் சூட்டிவிட்டார்கள். அப்புறம் இந்த கடவுளின் துகளை தேடும் பரிசோதனைக்காக நியமிக்கப்பட்ட மிக முக்கிய ஆலோசகர்களில் ஒருவர் நமது அப்துல் கலாம்.


நம்ம ஆன்மீகத்துல இல்லாததா, சயின்ஸ்ல இருக்கு
Everything came from Nothing என்கிறது நம்ம ஆன்மீகம். கடவுளின் துகள் இதைத்தான் செய்திருக்கிறது. ஒன்றுமே இல்லாத ஒரு Black Holeல் இருந்து வெடித்துச் சிதறிய ஒன்றுமே இல்லாத தூசுகளுக்கு எடையும், உருவமும் தந்திருக்கிறது. Black Hole அல்லது Dark Matterக்குள் எல்லாம் அடங்கிவிடும். இந்த பூமி, வானம், கடல் மற்றும் காலமும் கூட. அதற்குள் போய்விட்டால் இறந்தகாலமும் கிடையாது, எதிர்காலமும் கிடையாது. எல்லாம் ஒன்றே. எல்லாம் அடங்கிய இந்த ஒன்று வெடித்தால் அதிலிருந்து எல்லாம் பிறக்கும். இல்லையேல் வெடித்தவை எல்லாம் அதற்குள் போய் அடங்கும் என்பது நமது ஆன்மீகத் தத்துவம். Singularity with a field of All Possibilities.  புராணங்களில் அணுவுக்குள் அணுவாய் இருப்பவர், ஆயிரம் கரங்களும், சிரங்களும் கொண்டவர் என்று கடவுள் வர்ணிக்கப்படுகிறார். கடவுளின் துகளும் அவ்வாறே வர்ணிக்கப்படுகிறது. அணுவின் உள்ளிருந்து கொண்டே அணுவைப் பிளக்கிறது. அதிலிருந்து மேலும் பல அணுக்களை உருவாக்குகிறது. அவற்றிற்கு உருவமும், எடையும் தருகிறது. நம்ம ஆன்மீகத்துல இல்லாததா, சயின்ஸ்ல இருக்கு என்கிறார்கள் உண்மையான ஆன்மீகவாதிகள்.


என்னைக் கேட்டால் ஏதோ ஒரு புள்ளியில் ஆன்மீகவாதிகளும், அறிவியல்வாதிகளும் ஒன்றிணைந்து இருவரும் ஒருவராகவே மாறிவிடுகிறார்கள். அந்த வகையில் முதல் அறிவியல் ஆன்மீகவாதி ஒளியின் தத்துவம் சொன்ன ஐன்ஸ்டீன்.

ஆந்தை ரிப்போர்டரில் அக்கம் பக்கம் என்ற பெயரில் நான் எழுதிய கட்டுரையின் முதல் பகுதி!

Post a Comment