திடீர் நகரில் திடீர் தமிழ்தாய் வாழ்த்து டெஸ்ட்!
இன்று காலையில் சைதாப்பேட்டை திடீர் நகரில் ஒரு பள்ளிக்கூட விழா. நமது சென்னை மேயர் சைதையார்தான் சிறப்பு விருந்தினர். விழா நிறைவடையும்போது, ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் யாராவது ஐந்து பேர் மேடைக்கு வந்து தமிழ்தாய் வாழ்த்து பாடுங்கள் என்றார். மாணவ தயக்கங்கள், ஆசிரியர் வடிகட்டல்களுக்குப் பின் ஒரு சிறுமி மேடை ஏறினாள். எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெறும் என்று தயங்கி, இழுத்து, மூச்சு வாங்கி வாழ்த்துதுமே.. என்று முடித்தாள். தொடர்ந்து கைதட்டல்கள். உடனே மேயர் தனது பாக்கெட்டிலிருந்து 500 ரூபாய் எடுத்து தலைமை ஆசிரியரிடம் கொடுத்தார். கொடுக்கும்போதே அந்த மாணவி பாடும்போது எத்தனை பிழை செய்தாள் என்று தெரியுமா எனக் கேட்டார். நான்கைந்து என்றார் ஆசிரியை. ம்ம்ம்ம்... இதுதான் நடக்கக் கூடாது என்கிறேன். தமிழ்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் எந்தப் பிழையும் இன்றி மாணவர்களுக்கு பாடத் தெரிய வேண்டும். இதை கவனத்துல வைச்சுக்கோங்க. இந்த 500 ரூபாயை ஆளுக்கு 100 ரூபாயா அந்த மாணவர்களுக்கு கொடுத்துடுங்க என்று சொல்லிவிட்டு, தேசிய கீதத்துக்கு அட்டென்ஷனில் நிற்க ஆரம்பித்துவிட்டார்.
நான் காமிரா மேன் அவதாரம் எடுத்திருந்ததால், மேயரை விழுங்கிக் கொண்டு காமிரா ஓடிக் கொண்டிருக்கும்போதே நினைவுகளை ரீவர்ஸ் கியர் போட்டு 6 மாதத்திற்கு முந்திய குற்றாலம் இசக்கி ரிசாட்ஸ்சுக்கு ஓட விட்டேன். பசுமை விடியல் என்ற நான் சம்பந்தப்பட்ட மரம்நடு விழா. சிறப்பு விருந்தினராக அம்பா சமுத்திரம் எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா. அவரும் நானும் பள்ளி படித்த நாட்களில் இருந்து நண்பர் என்பதால் நட்பின் அடிப்படையில் விழாவுக்கு சம்மதித்திருந்தார். தேசிய கீதத்திற்குப் பின் விழா நிறைவடையும்போது, மேயரைப் போலவே உச்சரிப்பு பிழைகளை சுட்டிக்காட்டி, தேசிய கீதத்தை ஒழுங்கா பாடணும் என்று சொல்லிவிட்டு விடைபெற்றார்.
அம்மா பாசறையில் தமிழ்தாய் வாழ்த்து பாடச் சொல்லி எம்.எல்.ஏ, எம்.பி, மந்திரி, மேயர் உட்பட அனைவரையும் டெஸ்ட் பண்ணுவார்களோ. இருவரும் ஒரே மாதிரி நடந்து கொண்டதைப் பார்த்ததால் இப்படி எண்ணத் தோன்றுகிறது.
ஓகே... ஃபிளாஷ்பேக் முடிந்து இப்போது உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது என் காமிரா. எங்கே பிழையின்றி பாடுங்கள் பார்க்கலாம்!
நீராருங் கடல் உடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமென திகழ் பரத கண்டமிதில் . . .
சகுனியும் - பாபாவும்
சென்னை ஆழ்வார்திருநகரிலிருந்து ராமாவரம் செல்லும் வழியில் நடிகர் திரு. சிவகுமார் அவர்களுக்கு சொந்தமான ஒரு நிலம் உள்ளது. நிலத்தைச்சுற்றி உள்ள காம்பவுண்டு சுவரில் சூர்யா-கார்த்தியை வாழ்த்தி, பிறந்தநாள் மற்றும் வெற்றி பெற வாழ்த்துகள் சுவரொட்டிகள் அவ்வப்போது முளைத்துக் கொண்டே இருக்கும். தற்போது சகுனி வெற்றி பெற கார்த்தி போர்படை தளபதிகள் சுவற்றை ஆக்கிரமித்திருக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு, இந்த நிலத்தை தலைவர் கட்சியினர் அபகரிக்க முயன்றதாகவும், பின்னர் ஆட்சி மாறி தலைவி கட்சியினர் மீட்டுத் தந்ததாகவும் அவ்வளவாக பிரபலமாகாத வதந்தி ஒன்று நிலவியது. நிலம் பிரச்சனையில் சிக்கி இருந்த காலத்தில், திரு.சிவகுமார் மற்றும் அவருடைய உற்ற கோவை நகர நண்பர்கள் சிலர் சேர்ந்து ஒரு இயக்கம் ஆரம்பித்து இரண்டே நாட்களில் (மிரட்டல்கள் காரணமாக) கலைக்கப்பட்டதாகவும் வதந்தி போன்ற ஒரு செய்தி உலவியது. நான் மறந்து போயிருந்த அந்த வதந்திகளை நேற்றிரவு பார்த்த சகுனி படம் ஞாபகப்படுத்திவிட்டது. இந்த வரியிலேயே சொல்லிவிடுகிறேன் படம் குப்பை. கார்த்தியின் குடும்ப சொத்தாக இருக்கும் ஒரு வீட்டை, மாநில முதல்வர், பாலம் கட்டுவதாகச் சொல்லி அபகரித்துவிடுகிறார். அவரை சகுனி வேலை பார்த்து கார்த்தி எப்படி வெல்கிறார் என்பதே இந்த குப்பையின் கதை. சிவகுமார் குடும்பத்தினரின் சொந்தப் படம் இது. ஒரு வேளை சொந்த அனுபவம் அரசியல் படமாகிவிட்டதோ... டவுட்டு.
டவுட்டே இல்லாமல் சொல்வதென்றால் ரஜினியின் பாபா படத்திலும் இதே போல ஒரு காட்சி வரும். அவருடைய வீட்டை ஒரு தலைவர் அபகரிப்பார். அதுவரை மனிஷா கொய்ரலாவின் பின்னால் தெரியும் ரஜனி, உடனே சொடக்குப்போட்டு, கவுண்டவுன் சொல்லி வில்லனுடன் மோத ஆரம்பித்துவிடுவார். பாட்ஷா காலத்தில் ரஜினியின் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தை தலைவி கட்சியினர் அபகரிக்க முயன்றபோது ஏற்பட்ட கசப்பையே ரஜினி காட்சிகளாக்கினார் என்பது பழைய தகவல்.
சகுனி வேறு, பாபா வேறு என்றாலும், இரண்டுக்கும் அடிப்படை காரணம் தனிப்பட்ட அரசியல் கசப்போ?
சூட்டைக் கிளப்பும் அதிபர் தேர்தல்கள்
நமது அடுத்த ஜனாதிபதி பிரணாப்தான் என்பதில், அவரது போட்டியாளர் சங்மா உட்பட எவருக்கும் சந்தேகமில்லை. திரு.அப்துல்கலாம் அவர்களை பெரும்பாலான அரசியல் தலைவர்கள் ஆதரிக்காத நிலையில், பி.ஜே.பி தனது சார்பாக யாரை நிறுத்துவது என குழம்பிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் சுயேச்சையாக பி.ஜே.பியின் துணையுடன் நின்று தேர்தலை எதிர்கொள்ள முயற்சித்ததாக சில செய்திகள் கசிந்திருக்கின்றன. இதற்கு அத்வானி, ஜெயலலிதா மற்றும் பிஜிபட்நாயக்கும் கூட ஒப்புக் கொண்டதாகத் தகவல். அரசியல் தலைவர்கள் ஒப்புக் கொள்ளாவிட்டாலும், நாடெங்கிலும் இளைஞர்களின் ஆதரவு அவருக்கு இருந்ததால், அவர்களை திரட்டி, அவர்களின் துணையுடன், அண்ணா ஹசாரே பாணியில் எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பி.க்கள் வீட்டு வாசலில் கலாமுக்கு ஆதரவான கூட்டங்கள் நடத்தி, மீடியாக்கள் துணையுடன் ஒரு பரபரப்பை உண்டு பண்ணலாம். அது தேர்தலில் வெல்வதற்கான வாய்ப்பை தராவிட்டாலும், நாடு முழுவதும் ஜனாதிபதி தேர்தல் குறித்து விவாதத்தையும், எழுச்சியையும் ஏற்படுத்தும் என அவரது ஆலோசகர்கள் கூறினார்களாம். ஆனால் தனது ஆசிரியர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களை ஆலோசித்தபின், இந்த எண்ணத்தைக் கைவிட்டாராம்.
எகிப்தில் சஸ்பென்ஸ் முடிவுக்கு வந்திருக்கிறது. தாஹீர் சதுக்கத்தில் மக்கள் முழக்கமிட முகமது மோர்ஸி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். சர்வாதிகாரியாக எகிப்தை தனது விரல் நுனியில் வைத்திருந்த முபாரக்கின் வீழ்ச்சிக்குப் பின், முகமது மோர்ஸி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் எகிப்திய அதிபராக பதவி ஏற்கிறார். கிட்டத்தட்ட 80 நீண்ட வருடங்கள். முபாராக் வீழ்ந்த பின்னும், அவருக்கு கட்டுப்பட்டிருந்த எகிப்திய ராணுவம், நீதி மன்றம் மட்டும் அரசியல் சட்டங்கள் அவ்வளவு எளிதாக மோர்ஸியை பதிவி ஏற்கவிடவில்லை. ஏகப்பட்ட தில்லுமுல்லுகளை செய்து, அவர் கட்சியினர் வென்ற தொகுதிகளை செல்லாது என்று அறிவித்தது முபாரக்கின் நிழல் படிந்த அதிகாரம். ஆனால் சர்வதேச அளவில் கவனம் பெற்றுவிட்டதால், உலகம் முழுக்க உற்றுப்பார்க்கத் துவங்கியதும், சர்வாதிகாரம் நிறைய தயக்கங்கள் மற்றும் கோபத்துடன் தனது பிடியை தளர்த்திக் கொண்டிருக்கிறது. எகிப்திய அரசு சர்வாதிகாரத்திலிருந்து மக்களாட்சிக்கு மாறப்போகிறது. அது அவ்வளவு எளிதல்ல. அதற்கான சட்டங்களை இயற்றி அதை கடைபிடிப்பதுதான் மோர்ஸிக்கு முன்னிருக்கும் சவால். அந்த சவாலில் அவர் வெல்லுவதற்கு, இந்தியா என்கிற மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் குடிமகனாக இருந்து என் வாழ்த்துகள்!
கடைசி பாரா - கடைசி கேள்வி
இந்தியாவில் ஆள் துளையில் சிக்கி இறந்து போகும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்க காரணம் . . .
1. பெற்றோர்களின் கவனமின்மை
2. நிர்வாகத்தின் பொறுப்பின்மை
இந்த இரண்டில் உங்கள் கருத்து எது?
1 comment:
1. கொலைவெறி பாட்டா இருந்தா எல்லாம் சரியா பாடுவாங்க. என்ன சொல்ல ப்ரேயர் என்பது ஏதோ கடமைக்கு ஆகி விட்டது.
2. சந்தானம் இல்லை என்றால் சகுனி பார்க்கவே முடிந்து இருக்காது. கொடுமை.
3. அப்துல் கலாமையும் நிறைய பேருக்கு படிக்கவில்லை. எடுப்பார் கைப்பிள்ளை அவர்.
4. இரண்டுமே காரணம். தன் குழந்தை எங்கே விளையாட்டு என்று கவனிக்கவில்லை பெற்றோர். அவ்வளவு செலவு பண்ணி குழி பறிச்ச அதிகாரிகள் அத மூட செலவு பண்ணல. :-(
Post a Comment