Wednesday, June 27, 2012

அண்ணா மேம்பால விபத்துக்கு காரணம் கவனக் குறைவான ஓட்டுனரா? சரியாக பராமரிக்காத நிர்வாகமா?

தடம் எண்.17M!  பாரிமுனையிலிருந்து வடபழனி நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தில் வழக்கம்போல மதியக் கூட்டம். படிக்கட்டில் சில பயணிகள் தொங்கிக் கொண்டிருக்க, அண்ணா மேம்பாலத்தைக் கடந்து இறங்கிக் கொண்டிருக்கும்போது, ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்துவிட்டார். 
சில வினாடிகள்தான். பக்கச் சுவரை உடைத்துக்கொண்டு பேருந்து தலை கீழாக விழுந்துவிட்டது. படுகாயம் அடைந்த 30 பயணிகள் மருத்துவமனைகளில் சிகிக்சை பெற்று வருகிறார்கள்.

இது தற்போது கிடைத்திருக்கும் முதல் தகவல். தகவல்களை விட யூகங்களும், வதந்திகளும் எக்கச்சக்கமாக உலவிக் கொண்டிருக்கின்றன. அதில் ஒன்று மிக முக்கியமானது. ஓட்டுனர் மொபைல் ஃபோனில் பேசிக் கொண்டிருந்தார் என்பதே அது. இந்த விபத்தில் இது உண்மையோ பொய்யோ, பல பேருந்து ஓட்டுனர்கள் இப்படிச் செய்கிறார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

காதில் மொபைல் ஃபோனை வைத்துக் கொண்டு மோட்டர் பைக், ஆட்டோ, கார், பஸ் ஓட்டுவது சென்னையில் சர்வசாதாரணம். தனக்கு ஒன்றும் ஆகாத வரையில், இதை ஒரு கவனக் குறைவாகவே எவரும் கருதுவது இல்லை. பெண்களே அக்கறையின்றி இப்படிச் செல்வதை நான் பலமுறை கவனித்திருக்கிறேன்.

நேற்று அமைச்சர் செல்லூர் ராஜி அவர்களின் மகன் இதே போல் ஒரு விபத்தில் இறந்துவிட்டார். வேகத் தடையில் மோதி தூக்கி எறியப்பட்டு இறந்ததாக கூறப்பட்டாலும், அவர் செல்ஃபோன் பேசிக் கொண்டே மோட்டர் பைக் ஓட்டியதாகவும் சிலர் கூறுகிறார்கள்.

இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். போக்குவரத்து துறையில் பல வருடங்களாக மெக்கானிக் பிரிவில் பணிபுரிந்து வரும் (பெயர் வெளியிட விரும்பாத) நண்பர் ஒருவர் குறிப்பிட்டதை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

சம்பளம் தரமுடியாது என்ற காரணம் காட்டி  மெக்கானிக் பிரிவில் பணியிடங்களை நிரப்புவதே இல்லையாம். இதனால் மெக்கானிக்குகளுக்கு பஞ்சம். அதே போல, உதிரி பாகங்களுக்கு என்று சரியான பட்ஜெட்டையும் ஒதுக்குவது கிடையாதாம். இருப்பதை வைத்துக் கொண்டு அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்ளுங்கள் என்பது அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவாம். அவருடைய கூற்றுப்படி, சரியாக பராமரிக்கப்படாமல் கிட்டத்தட்ட 50 சதவிகிதம் பேருந்துகள் இயங்கிக் கொண்டிருப்பதாகக் கூறினார். எனவே ஓட்டுனர் எவ்வளவு கவனமாக இருந்தாலும் இது போல விபத்துகள் எந்த நேரமும் நடக்கலாம் என்ற பகீர் தகவலைக் கூறினார்.

இனியும் சென்னை போக்குவரத்து துறையும், போக்குவரத்து காவல்துறையும் தூங்கி வழியக் கூடாது. மக்களின் உயிரைப் பற்றி அலட்சியமாக இருக்கக் கூடாது. போக்குவரத்துத் துறை உடனடியாக அனைத்து பேருந்துகளின் இயங்கும் நிலையை பரிசோதிக்க வேண்டும்.

அதே போல போக்குவரத்து காவல் துறை மென்மையாக நடந்து கொள்ளக் கூடாது. ஹெல்மெட் அணியாமல் செல்வதையும், மொபைல் ஃபோன் பேசிக் கொண்டே வண்டி ஓட்டுவதையும் கடுமையாக தண்டிக்க வேண்டும். இதில் விஐபி அது இது என தயவு தாட்சண்யமே பார்க்கக் கூடாது.

5 comments:

kishore said...

Nice Sir

நாயோன் said...

அனைத்துத் துறைகளிலுமே ஆள் பற்றாக்குறை இருக்கிறது... ஒரு விபத்து/ பிரச்சனை ஏற்படும் போது மட்டும் நிர்வாகக் குளருபடிகள்/பொருட்கள்/ஆள் பற்றாக்குறை மேல் பழிசுமத்தப்படுகிறது.. சம்பள உயர்வோ/படியோ கிடைக்காத ஊழியர்கள் சாலையில் நின்று போராடத் தயங்குவதில்லை. ஆனால் இது போன்ற நிர்வாகம் செய்யும் தவறைத் தட்டி கேட்காமல் இருந்து விட்டு/துணை போய்விட்டு இப்போது பழி சொல்வது அபத்தம். தன் மேல் விழுந்த எச்சிலைத் துடைத்து அடுத்தவரின் முகத்தில் எறிவதற்குச் சமம்.! தப்பித்துக்கொள்வதற்கான வழி இது!

ஊழியர்கள் அனைவரும் போராடி இருக்கலாமே.! மக்கள் நலனுக்காக போராடி விட்டு, இது போன்ற விபத்துகள் நிகழும் போது குறை சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம். எதுவுமே செய்யாமல் நட்டு சரியில்லை போல்ட்டு சரியில்லைனு இப்பொழுது சொல்வது நியாயமா?

மற்ற மாநிலப் பேருந்துகளுடன் ஒப்பிடும் போது, தமிழ்நாடுடையது எவ்வளவோ பரவாயில்லை... இரு கட்சி ஆட்சிகளும் நிர்வாகத்தை சீரழித்திருந்தாலும், ஊழியர்களின் சம்பள விஷயத்தில் குறை வைக்கவில்லை. அதனால் வாயடைத்து நின்று விட்டனர். வண்டி சரியில்லையென்றாலும் பரவாயில்லை அன்றைய படிக்கு எந்த பங்கமும் வந்துவிடக்கூடாது என்றுதானே வேலையை ஆரம்பிக்கிறார்கள்.?

இது முழுக்க முழுக்க ஓட்டுனரின் கவனக்குறைவு/தவறின்றி வேறில்லை.!

Bharath said...

சென்னை மாநகரச் சாலைகளில் பிற சாலை பயனீட்டாளர்கள் மனத்தில் அதிகம் அச்சத்தை உண்டாக்குபவர்கள் மாநகர போக்குவரத்து கழக ஓட்டுனர்களே.
சாலை விதிகளைத் தவறாது மீறியும் போக்குவரத்து காவல் துறையின் பாரபட்சத்தால் சிறிதும் அச்சமின்றி தொடர்கிறது இவர்களின் லீலை. எண்ணற்ற சிறு சிறு இடிப்புகள், ஓரம் கட்டல்கள், intimidatory driving போன்ற இவர்களின் அன்றாடச் செயல்கள் பதிவு செய்யப்படுவது இல்லை. குறையாத வேகத்தில் வேகத் தடைகளை கடப்பது, கிளட்ச் பிடிக்காமலே கியர் மாற்றியும் டீசல் சிக்கனம் என்ற பெயரில் கியருக்கு தகாத ஆமை வேகத்தில் ஒட்டியும் வாகனத்தை பாழடிப்பது என்று இவர்களது செயல்கள் மிகப் பிரசித்தம். இவர்களா வாகன பராமரிப்பை குறை சொல்வது!

Unknown said...

உதிரி பாகங்களுக்கு என்று சரியான பட்ஜெட்டையும் ஒதுக்குவது கிடையாதாம். இருப்பதை வைத்துக் கொண்டு அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்ளுங்கள் என்பது அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவாம். அவருடைய கூற்றுப்படி, சரியாக பராமரிக்கப்படாமல் கிட்டத்தட்ட 50 சதவிகிதம் பேருந்துகள் இயங்கிக் கொண்டிருப்பதாகக் கூறினார்// இது இன்று நேற்றல்ல.10 ஆண்டுகளுக்கு மேல் நடந்துகொண்டிருக்கிறது!

J.P Josephine Baba said...

அருமையான கட்டுரை. நேற்று நெல்லையிலும் தொலைபேசியில் யார் அழைக்கின்றார் என்று பார்த்து கொண்டு இருசக்கர வாகனம் ஓட்டிய இளைஞன் விபத்தில் இறந்து விட்டார்.