Wednesday, June 27, 2012

Cut !


Cut . . .

முதல் வார்த்தையே கட்டா என்று யோசிப்பவர்களுக்கு, பவர்கட்டின் இம்சைகளைப் பற்றி 30 வார்த்தைகளில் கட்டுரை எழுதி அனுப்பலாம் என்றிருக்கிறேன். அதற்கு மேல் ஒரு வார்த்தை இருந்தாலும் கட் செய்துவிடலாம். ஏனென்றால் ஒரு இரவுக்கு ஒரு வார்த்தைதான் எழுத முடியும் போலிருக்கிறது. அதற்கு மேல் பவர்கட் அனுமதிப்பதில்லை. இந்தக் கட்டுரையை எழுத 5 இரவுகள் தொடர் முயற்சி எடுத்து, ஒவ்வொரு முறையும் பவர்கட்டால், தூக்கத்தையும் இந்தக் கட்டுரையையும் இழந்தேன். தற்போது ஒரு பகல் பொழுதில் (எடிட்டரின் 30 வார்த்தைகளுக்கு மிகாத செல்ஃபோன், ஃபேஸ்புக் நினைவூட்டல்களுக்குப் பின்) எப்படியோ எழுத ஆரம்பித்திருக்கிறேன்.

ஆரம்பித்திருக்கிறேன் என்று சொல்வது கூட தவறு. எதையோ டைப் செய்து கொண்டிருக்கிறேன். அடுத்த வரி அல்லது அடுத்த வார்த்தை என்னவாக என்ற யூகம் கூட இல்லாத நிலையில் விரல்கள் எதையோ டைப் செய்து கொண்டிருக்கின்றன. இன்னும் ஒரு மணி நேரத்துக்குள் மேட்டரை அனுப்பி விட வேண்டும் என்ற நினைப்பு மட்டுமே உள்ளது. நேரத்துக்கு மேட்டரை அனுப்ப முடியாமல் அநியாய தாமதமாகிவிட்டதால் என்மனதுக்குள் ஒரு பிம்பமாக உருவெடுத்திருப்பது எது தெரியுமா? தவறவிட்ட ரயில்.

தவறவிட்ட ரயில் போல
தூக்கம் பின் செல்கிறது.

செல்கிறது என்று முடித்த இந்த சந்தர்ப்பத்தில் ஏரிக்கா ஜாங் எழுதிய இந்தக் கவிதை வரிகள் எப்படி என் ஞாபகத்தில் வந்தன என்று  தெரியவில்லை. ஆனால் சுஜாதா ஞாபகத்தின் மேல் பரப்பில் நீச்சல் அடிக்கிறார். ஏனென்றால் என்னைப் போன்றவர்களுக்கு ஆனந்த விகடன் துணுக்குகளை மீறி ஏரிக்கா ஜாங்கையெல்லாம் அறிமுப்படுத்தியவர் அவரே.

அவரே சொல்லிட்டார் என்றால் விட்டுவிட முடியுமா என்றார் அந்த தேனாம்பேட்டை போலீஸ்காரர். கிளையண்ட் மீட்டிங் முடிந்து அவசரமாக பைக்கை கிளப்பும்போது, மெட்ரோ ரயிலுக்காக தேனாம்பேட்டையில் சில பாதைகள் ஒரு வழிப்பாதையாக மாறியிருப்பதை நண்பர் கவனிக்கவில்லை. பின் சீட்டில் அமர்ந்திருந்த என் அவசரப்படுத்தலால் லபக் என்று அவரே போலீஸ்காரரின் எதிரில் போய் நின்றுவிட்டார். ஏன் சார் இது ஒன்வேன்னு தெரியாதா என போலீஸ்காரர் லைட்டாக கடுமை காட்ட, நண்பர் அவருக்குத் தெரிந்த ஹி..ஹி.. மற்றும் ஹா..ஹாக்களை வைத்து சமாளித்துக் கொண்டிருந்தார். சரியாக அதே நேரத்தில் மற்றொரு போலீஸ்காரரால் விசாரிக்கப்பட்டுக் கொண்டிருந்த ஒரு போனி டெயில் இளைஞன் ஏதோ ஒரு அரசியல் பிரபலத்தின் பெயரைச் சொல்லி, சார் அவரே சொல்லிட்டார். அப்பவும் விடமாட்டேன்னா என்ன அர்த்தம் என்று வம்பிழுத்துக் கொண்டிருக்க.. எங்களை மடக்கிய போலீஸ்காரரும், நீங்க போங்க சார் என்று எங்களை அனுப்பிவிட்டு, யார் அவன் ரொம்ப துள்ளுறான் அந்த போனி டெயில் இளைஞனை நோக்கிப் போய்விட்டார்.

போய்விட்டார் என்றுதான் நினைத்தேன். டேய் நான் இன்னும் போகல, நீதான் காமிரா மேன். நீ இல்லாம நான் கொடைக்கானல் போக முடியாது மரியாதையா புறப்பட்டு கோயம்பேடு வா, ஏதாவது பஸ் பிடிச்சுக்கலாம் என்றார் நண்பர். முதன் முதலில் இக்கட்டுரையை எழுதால் ஒத்திப் போட்டது அப்போதுதான். ஒரு மணி நேரம் கொடுத்தால் எழுதிவிட்டு வந்துவிடுவேன், என்றேன். சரி வெயிட் பண்றேன் என்றார். ஆனால் மின்சார வாரியம் வெயிட் பண்ணவில்லை. படக் கென்று பவரை பிடுங்கிவிட்டது.

அனாவசிய ஒரு மணி நேர காத்திருப்பு மற்றும் நண்பரின் அவசரப்படுத்தலுக்குப் பின், கொடைக்கானல் போய் எழுதிக் கொள்ளலாம் என்று முடிவு செய்துவிட்டு இருட்டிலேயே உடை மாற்றி, எதையோ சாப்பிட்டு ஆட்டோ பிடித்தபோதுதான் உணர்ந்தேன். பர்ஸ் எடுத்துக் கொள்ளவில்லை. வீட்டுக்கு திரும்பவும் நேரமில்லை. ஆட்டோ கோயம்பேடை நெருங்கியிருந்தது. நண்பரை போனில் அழைத்து ஆட்டோவுக்கு செட்டில் செய்யச் சொல்லிவிட்டு, பணமில்லையே என்ன பண்ணலாம் என்றேன். நீ கவலைப்படாதே என்னிடம் பணம் இருக்கிறது என்றார். ஏதோ ஒரு வால்வோ ஏசியைப் பிடித்து உள்ளே அமர்ந்து, மதுரை போய், திண்டுக்கல் போய் கொடைக்கானலை அடைந்து ஹோட்டலில் ரூம் போடச் சென்றபோது நண்பர் பர்ஸை துளாவ ஆரம்பித்தார். என்னடா என்றேன். ஒண்ணுமில்ல என்றார். ஒண்ணுமில்லன்னா ஏன் டென்ஷன் ஆகிற என்றேன். ஒண்ணுமில்லன்னா என் பர்ஸ்லயும் ஒண்ணுமில்ல. உன்னைப் போலவே நானும் ஏடிஎம் கார்டை வீட்டுலயே மறந்துட்டேன்.

மறந்துட்டேன் என்று இந்த வார்த்தையைச் சொன்னதும், சுவாரசியம் கருதி சீரியல்களில் விளம்பர இடைவேளை அல்லது அடுத்த வாரம் கார்டு வரும். அதே பாணியில் நாங்களும் காசு இல்லாமல் கொடைக்கானலில் எப்படிச் சமாளித்தோம் என்பதை அடுத்த முறை சொல்கிறேன். இப்போதைக்கு கட்.

(கட் குறிப்பு - இந்தக் கட்டுரையில் முந்தைய பாராக்களின் கடைசி வார்த்தை எதுவோ அதுவே அடுத்தடுத்த பாராக்களின் முதல் வார்த்தை! ஹி..ஹி..ஹி... இதை செக் பண்ணுவதற்காகவாவது இந்தக் கட்டுரையை நீங்கள் மீண்டும் புரட்டத்தான் வேண்டும் என்ற புளங்காகிதத்துடன் Cut. . . !)

No comments: