Tuesday, June 26, 2012

செல்வா ஸ்பீக்கிங் - (சிநேகா, சூகர்பெர்க் திருமணம்)

சஸ்பென்ஸ் திருமண இன்விடேஷன்
‘என் மகனுடைய கல்யாணத்துக்கு கூப்பிட்டிருந்தேனே... ஏன் வரல?‘ என்றார் நண்பர்.  என் ஞாபகங்களைத் தோண்டியபடி எப்போ? என்றேன். தெரியாத மாதிரி கேட்கறதுல நீங்க ஒரு கிங் என்றார். நிஜமாவே தெரியல. எப்போ கூப்பிட்டீங்க என்றேன். ஒரு வாரத்துக்கு முன்னால் என்றார். எனக்கு ஒரு மணி நேரம் முன்னாடி சொன்னாலே, மறதி ஓவர் டேக் செய்துவிடும். ஒரு வாரம் என்றால், எப்படி ஞாபகமிருக்கும். அதனால் சமாளித்து, மன்னிக்கணும் வேலை பிஸியில் நீங்கள் இன்விடேஷன் கொடுத்ததையே மறந்துவிட்டேன் என்று ஹிஹிஹிளித்தேன். 

அதற்குப் பின் தான் சூப்பர் கிளைமாக்ஸ். அது என்ன என்பது சஸ்பென்ஸ். சஸ்பென்சை நான் எப்போ சொல்லுவேன், எப்படிச் சொல்வேன் என்பது எனக்கே தெரியாது.

சிநேகா - பிரசன்னா திருமணம்
மீண்டும் இன்னொரு திருணமத்தைப் பற்றி பேசப் போகிறோம். சிநேகா - பிரசன்னா நட்சத்திரத் திருமணம். இந்த திருமணத்திற்கும் நான் செல்லவில்லை. என்னைப் பார்த்து, ஏன் எங்கள் திருமணத்திற்கு வரவில்லை என்று சிநேகாவும் கேட்கவில்லை, பிரசன்னாவும் கேட்கவில்லை. காரணம் அவர்களுக்கு என்னைத் தெரியாது. ஆனாலும் அவர்களுடைய திருமணத்தை நான் வேடிக்கை பார்த்தேன். உபயம் விஜய் டிவி.  ஒரு பெரும் தொகையை பெற்றுக் கொண்டு, தங்கள் திருமணத்தை கவர் செய்து ஒளிபரப்பும் உரிமையை சிநேகா-பிரசன்னா தம்பதியர் விஜய் டிவிக்கு அளித்ததாகக் கேள்விப்பட்டேன். மேற்கத்திய நாடுகளில் இந்தக் கலாச்சாரம் உண்டு. தனிப்பட்ட வாழ்க்கை நிகழ்வுகளை, கமர்ஷியலாக்கும் இந்தக் கலாச்சாரம், நமது தமிழகத்திற்குள்ளும் நுழைந்துவிட்டது. பணம் சம்பந்தப்பட்டுவிட்டது என்பதாலோ என்னவோ, சில வெட்கங்களும்-புன்னகைகளும் காமிராவுக்கான ஒத்திகையாகவே எனக்குப்பட்டது. சிநேகா-பிரசன்னா தம்பதியினர் தொடர்ந்து நட்சத்திர அந்தஸ்துடன் வாழ்க்கை நடத்தினால், அவர்களுக்கு பிறக்கப் போகும் குழந்தையை, அதற்கு காது குத்துவதையும் விஜய் டிவியின் காமிரா துரத்தும். ஒரு வேளை அவர்கள் அதற்குள் மார்கெட் இழந்தால், விஜய் டிவி அதற்குப் பதிலாக நீயா நானா நடத்தப் போய்விடும். அந்த ஏற்றத் தாழ்வுகளை எதிர்பார்த்து சமாளிக்கும் மனத் தின்மையுடனும், சந்தோஷத்துடனும் வாழ சிநேகா-பிரசன்னா தம்பதியினரை மனமார வாழ்த்துகிறேன்.

உறைந்த சாக்லேட்
நான் ஒரு சாக்லேட் பிரியன். அதனால் என்னை சந்திக்கிற நண்பர்கள் பலரும் எனக்கு சாக்லேட் பரிசளிப்பார்கள். சமீபத்தில் சிங்கப்பூரிலிருந்து வந்த நண்பர் ஒருவர் எனக்கு ஒரு சாக்லேட் பரிசளித்தார். சாக்லேட்டை கொடுக்கும்போதே, உடனே பிரிட்ஜ்ல வைச்சுடுங்க. உங்க ஊர் வெயில்ல இளகிடுச்கு என்றார். அவர் கொடுக்கும்போது கிட்டத்தட்ட ஒரு ஜீஸ் பாக்கெட் போல ஆகிவிட்டது. அதனை பிரிட்ஜிக்குள் வைத்துவிட்டு கிட்டத்தட்ட இரு வாரங்களாக மறந்தே போனேன். இந்த வரியை எழுதும்போது, தாகத்திற்கு பிரிட்ஜைத் திறந்தால், அந்த சாக்லேட் பாக்கெட் கண்ணில் சிக்கியது. எடுத்துப் பார்த்தால் எல்லா சாக்லேட்டுகளும் ஒன்றாகி உறைந்து ஒரு இனிப்பான ஐஸ் கட்டி போல ஆகிவிட்டது. கத்தியை வைத்து முயற்சித்தும் அதனை பிளக்க முடியவில்லை என்பதால், அதனை பென்சில் சீவுவது போல சீவிச் சீவி சுருள் சுருளாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். உலகிலேயே இது போல சாக்லேட் சாப்பிட்ட ஒரே ஆள் நானாகத்தான் இருப்பேன். சரி எதற்காக இந்தத் தகவல் என்று கேட்கிறீர்களா? இனிப்பான சங்கதி ஏதாவது சொல்ல வேண்டும் எனத் தோன்றியதால் இதைச் சொல்கிறேன்.

ஏர்போர்ட் டியூட்டி ஃப்ரி கடைகளில் மலிவு விலை சாக்லேட் வாங்கும் பலரும் சீன சாக்லேட்டுகளை வாங்கிவருவார்கள். பார்ப்பதற்கு மொளுக் மொளுக் என்று போஷாக்காக இருக்கும். இப்படி குண்டாக காட்சியளிப்பதற்காகவே, இந்த சாக்லேட்டுகளில் melamine என்றொரு சமாச்சாரத்தை கலப்பார்களாம். குறிப்பாக குழந்தைகளின் உடல் நலத்திற்கு இது தீங்கானதாம். அதனால் இந்த மலிவு விலை சீன சாக்லேட்டுகளை தவிர்த்துவிட வேண்டும். இனிப்பான தகவல், உபயோகமான தகவலாகவும் இருக்க வேண்டுமில்லையா... அதற்குத்தான் இந்த சீன சாக்லேட் சப்ளிமெண்ட்.

ஃபுட்கோர்ட்டில் நுழையும் முன் . . .
முதன் முதலில் துபாய் போய் இறங்கியபோது, நான் சந்திக்கவிருந்த நபர், ஃபுட் கோர்டுக்கு வந்துடுங்க என்றார். எனக்குத் பரிச்சயமான ஒரே கோர்ட் சைதாப்பேட்டை கோர்ட்தான். அதனால் அவர் சாப்பாடு சம்பந்தமாக ஏதோ கோர்டுக்கு அழைக்கிறாராக்கும் என்று நினைத்துவிட்டேன். உள்ளே நுழைந்ததும் ஒன்றும் புரியவில்லை. வரிசையாக பர்மா பஜார் கடைகள் போல, சாப்பாட்டுக் கடைகள், அவற்றின் எதிரில் எக்கச்சக்க டைனிங் டேபிள்கள். உள்ளே நுழையலாமா? உட்காரலாமா? உட்கார்ந்தாலே துட்டு கேட்பார்களா என்று ஒரே குழப்பம். எனவே ஃபுட்கோர்ட் உள்ளே நுழையாமல் கலவையான இறைச்சி வாடையை சங்கடமாக நுகரந்தபடி சும்மா நடந்து கொண்டிருந்தேன். நண்பர் வந்தவுடன்தான், எந்தக் கடையிலும் சாப்பாடு ஆர்டர் செய்யலாம், எந்த டேபிளிலும் உட்கார்ந்து சாப்பிடலாம் என்று புரிந்தது.

தற்போது ஃபுட்கோர்ட் இல்லாத ஷாப்பிங் மால்களே சென்னையில் இல்லை. LKG பிள்ளைகள் கூட ஃபுட்கோர்டில் பர்கர் ஆர்டர் செய்து சாப்பிடுகின்றன. சென்னையிலேயே பிரபலமான ஒரு  ஃபுட்கோர்ட். இங்கே 100 ரூபாய் கட்டி ஒரு கிரெடிட் கார்டு வாங்க வேண்டும். 90 ரூபாய்க்கு சாப்பிட்டால் மீதி பத்து ரூபாயை உங்களுக்குத் தர மாட்டார்கள். அவர்களிடமே தங்கிவிடும். ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட பத்தாயிரம் பேர் அங்கு சாப்பிடுகிறார்களாம். ஆளுக்கு பத்து ரூபாய் அவர்களிடம் விட்டு வந்தால், கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு இலட்சம் ரூபாய் அவர்களுக்கு எந்த செலவும் இல்லாத உபரி லாபம்.

வெயிலில் வாடும் காய்கறிகாரனிடமும், கோவில் பூக்காரிகளிடமும், பத்து பைசாவுக்கு சண்டை போடுகிற நாம், கோடீஸ்வர ஷாப்பிங் மால்களில் இப்படி ஏமாந்து இழப்பதை மிகப் பெருமையாகவும் ஒரு அந்தஸ்தாகவும் நினைக்கிறோம். எனது நண்பர் சுரேகா இந்த வருடம் புத்தாண்டின் போது அதே ஃபுட் கோர்டில் மீதிப் பணத்தை தந்தாக வேண்டும் என்று சண்டையிட்டு பணத்தை வாங்கிக் கொண்டுதான் வெளிவந்தார்.
அடுத்தமுறை அந்த ஃபுட்கோர்டில் சாப்பிட உட்காரும்போது இதனை மனதில் கொள்ளுங்கள். 

கிளைமாக்ஸ்
நண்பரிடம், ‘நீங்க இன்விடேஷன் கொடுத்ததையே மறந்துட்டேன், நீங்க எப்போ வந்து இன்விடேஷன் தந்தீங்க‘ என்றேன். அவர் ஹா..ஹா..ஹா எனச் சிரித்துவிட்டு நான் உங்களுக்கு கைப்பட இன்விடேஷன் தரவே இல்லை. ஃபேஸ்புக்கில் என் பையன் கல்யாணம் பற்றி எல்லாத்துக்கும் பொதுவா மெசேஜ் போட்டிருந்தேன். உங்களுக்கு tag பண்ணியிருந்தேன். நீங்கதான் மிஸ் பண்ணிட்டீங்க என்றார்.

முன்பெல்லாம் வீடு வந்து அழைப்பிதழ் தருவார்கள். அப்புறம் தபாலில் அனுப்பி வைக்க ஆரம்பித்தார்கள். பின்னர் இமெயில் அழைப்பிதழ்கள், அப்புறம் மொபைலில் அழைக்க ஆரம்பித்தார்கள். தற்போது ஃபேஸ்புக்கில் மெசேஜ் போட்டாலே அது இன்விடேஷனுக்கு சமம் என்ற மனநிலை நமக்கு வந்துவிட்டது.

நான் வாசித்த ஹைகூ
காட்டிக் கொடுப்பதில்
முதல் பரிசு
கண்ணாடிக்கு

நான் எழுதிய புக்கூ
கணவனையும்
நண்பனாக அறிமுகப்படுத்துவது
ஃபேஸ்புக்

கடைசிச் செய்தி! 
ஃபேஸ்புக்கை வடிவமைத்து, நமக்குத் தந்த சூகர்பெர்கிற்கு திருமணம் ஆகிவிட்டது. ஆனால் அவருடைய திருணமத்திற்கு நாளின் பெரும்பகுதியை அவர் உருவாக்கிய ஃபேஸ்புக்கிலேயே கழிக்கும் என்னைப்போன்ற அப்பிராணி நண்பர்களுக்கு அவர் அழைப்பிதழ் தரவில்லை.

No comments: