Tuesday, June 26, 2012

சகுனி - திரை விமர்சனம்!

இடைவேளை!

‘டேய் எழுந்திருடா.. எழுந்திருடா... ஐயய்யோ என்னடா எழுந்துக்க மாட்டேங்கிறான். செத்துட்டானா... டேய் இவனை எழுப்புடா..‘
‘டாய்.. நான் சாகலடா.. ‘
‘என்னது நீ சாகலயா.. போச்சு போ.. நீ எஸ்கேப் ஆகிட்டேன்னு நினைச்சேன். இப்படி வந்து சிக்கிட்டியேடா?‘

படத்து டயலாக்கை விட, பக்கத்து சீட் டயலாக் நச். (பக்கத்து சீட்டர்கள் புண்ணியத்தில்) இடைவேளை விட்டப்புறம்தான் என்னால் சிரிக்க முடிந்தது. அதுவரை சந்தானமும், கார்த்தியும் எவ்வளவோ கிச்சு கிச்சு மூட்டிப் பார்த்தார்கள். ரீல் அந்து போனதுதான் மிச்சம்.

முதலில் தனக்கொரு என்ட்ரி வைத்துக் கொண்டு, நாலு சீன் கழித்து சந்தானத்துக்கும் ஒரு என்ட்ரி கொடுத்து, கெக்கே பிக்கே என ஜோக் அடித்து, சாராயக் கடையில் ஒரு பாட்டு வைத்து, அவ்வப்போது ஒரு பெண்ணை காதலித்துவிட்டால் முதல் பாதி தப்பிவிடும் என்று தப்புக் கணக்கு போட்டுவிட்டார் கார்த்தி.

சந்தானம் இன்னமும் சிவா மனசுல சக்தி படப்பிடிப்பு முடியவில்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். அதே பிரடிக்டபிள் காமெடி டிராக். நண்பேன்டாவாக ஜீவா, ஆர்யா, உதயநிதி ஸ்டாலின் வரிசையில் தற்போது கார்த்தி. ஒரே மாற்றம் பழைய படங்களில் கசங்கிய சட்டையுடன் வருவார். இப்போது ஹீரோக்களை விட பளபளப்பாக டிரஸ் பண்ணுகிறார்.

ஹீரோயின் பெயர் தெரியவில்லை. முகமும் என்ட் டைட்டிலுக்கு முன்பே மறந்து போச்சு. கௌரவத் தோற்றங்களில், சோப்ளாங்கி காட்சிகளில் அனுஷ்காவும் ஆன்ட்ரியாவும் பரிதாபமாக வந்து மறைகிறார்கள். பிரகாஷ் ராஜை ஏதோ ஒரு மொட்டை மாடிக்கு வர வைத்து, ‘யார்ரா அவன்? அவனை வரச் சொல்லுடா‘ என்ற டயலாக்கை வேறு வேறு மாடுலேஷனில் எடுத்து வைத்துக்கொண்டுவிட்டார்கள். படம் முடியும் வரை அதையே பேசிக் கொண்டிருக்கிறார். செல்லம் இனிமே உஷாரா இருக்கணும். இல்லன்னா இப்படியே பேச வைத்து காலி பண்ணிவிடுவார்கள். கந்துவட்டி அக்காவாக ராதிகாவும், கார்த்தியின் அத்தையாக ரோஜாவும் சில காட்சிகளில் வந்து போகிறார்கள். இவர்களைத் தவிர, அவ்வப்போது ரஜினியின் கட்அவுட்டுகளும், பேனர்களும் காட்சியில் வந்து போகின்றன.

கார்த்தியின் பூர்வீக வீட்டை பாலம் கட்டுவதற்காக அரசாங்கம் கையகப்படுத்துகிறது. பாலம் கட்டும் காண்ட்ராக்டை பினாமி பெயரில் வைத்திருக்கும் முதலமைச்சரை சந்தித்து வீட்டை திருப்பித் தர கேட்கிறார் கார்த்தி. அவர் மாட்டேன் என்றதும், கிங் மேக்கராக சகுனி வேலை செய்து கந்து வட்டிப் பெண்ணை மேயராக்குகிறார். ஜெயிலில் இருக்கும் எதிர்கட்சித் தலைவரை முதல்வராக்குகிறார். முதல்வர் பிரகாஷ்ராஜை ஜெயிலுக்கு அனுப்புகிறார்.

ஆட்டோவுக்கு கூட காசில்லாத ஒருவன் எப்படி ஒரு அரசாங்கத்தையே மாற்றுகிறான் என்கிற ரஜனி ரேஞ்ச் மசாலாவை, திரைக்கதையே எழுதாமல், அபத்தக் காமெடி உப்புமாவாக்கி நம்மை தியேட்டரை விட்டு விரட்டியடிக்கிறார்கள். வேகமாக விரட்டுவதற்கு ஹை டெசிபல் பிண்ணனி இசை உதவுகிறது.

டிக்கெட்டுக்கு 600 ரூபாய், பாப்கார்ன், பெப்ஸிக்கு 550 ரூபாய்.. தண்டம்.. தண்டம்.. பணமும் போச்சு, (நைட் ஷோவினால்)தூக்கமும் போச்சு என்றபடியே ஒரு குடும்பம் வெளியேறிக் கொண்டிருந்தது.

234 தொகுதிகளிலும் ஆளுக்கு 1000ம் ரூபாய் தந்தால் கூட இந்தப் படத்தை எவராலும் இரசிக்க முடியாது.
Post a Comment