Friday, December 26, 2014

கே.பி. அறிமுகங்கள் - இசை வடிவில்

கே.பி சார்!
என் தந்தையின் குரு. எனக்கும் (மானசீக) குரு. 
அதனாலேயே என் தந்தைக்கு நிகராக அவர் மேல் எனக்கு மரியாதை. அவரை ஒரு முறை கூட சந்திக்க முயற்சி செய்ததில்லை. ஏனென்றால் என் தந்தையின் மேலிருந்த அதே மரியாதை கலந்த பயம் எனக்கு கேபி சாரிடமும் இருந்தது.
ஆனால் இந்தக் கணத்தில் என் மனதில் இருப்பது பயம் அல்ல. அவரை சந்திக்கவே இல்லையே என்ற ஏக்கம். அதன் வடிகாலாக அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட (அ) புகழின் உச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்ட நட்சத்திரங்களை ஒரு பட்டியலிட்டிருக்கிறேன். அதில் என் தந்தை ISR-ன் பெயரும் இருக்கிறது. பட்டியலின் இறுதியில் என் பெயரையும் விரும்பி இணைத்துக் கொண்டிருக்கிறேன்.
ஏனென்றால் நான் முதலிலேயே சொன்னது போல கே.பி சார், என் தந்தைக்கு மட்டுமல்ல எனக்கும் குரு.
எனது எண்ணத்துக்கு உடனே வடிவம் கொடுத்த நண்பர் முரளிக்கும், இசை கோர்த்த நண்பன் நாராயணணுக்கும் அவரே குரு. Vivek Narayan Ram Nathan SVe Shekher Delhi Ganesh

சூப்பர் ஸ்டார் முதல் நம் வீட்டு ஸ்டார்கள் வரை குரு-சிஷ்யன் உறவுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த கே.பி சாருக்கு இந்த வீடியோ சமர்ப்பணம்.

Friday, November 21, 2014

”மனம் திரும்புதே” நிகழ்ச்சியில் லட்சுமி ராமகிருஷ்ணன்!

வீட்டில் யாருக்கும் உடல்நிலை சரியில்லை. அதனால் நிறைய தயக்கம். ஆனால் உங்கள் அழைப்பை மறுக்கமுடியாமல் வந்திருக்கிறேன் என்றார் லட்சுமி ராமகிருஷ்ணன். ஆனால் படப்பிடிப்பு முடிந்ததும் நெகிழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி நீங்கள் எனக்குக் கொடுத்திருக்கும் கிஃப்ட். திரும்பத் திரும்ப போட்டுப் பார்ப்பேன் என்றார்.

இனிய அதிர்ச்சியாக தமது பால்யகால நண்பர்கள், உறவினர்கள் மற்றும் ஆசிரியர்களை சந்திக்கும்போது அனைத்து பிரபலங்களும் இதே போல நெகிழ்ந்துபோகிறார்கள். அந்த வகையில் ”மனம் திரும்புதே” நிகழ்ச்சி எனது பிரியத்திற்கு உரியது.

இது போன்ற மனதைத் தொடும் கான்செப்டுகளை உருவாக்குவதில் நண்பர் கார்மல் எக்ஸ்பர்ட். அவருக்கு ஒரு சபாஷ்!

ஆனால் சம்பந்தப்பட்ட நபர்களை பிரபலங்களுக்குத் தெரியாமலே தேடி சந்தித்து, இரகசியமாக செட்டுக்கு அழைத்துவருகிற பணி மிகவும் கடினமானது. அதை விரும்பிச் செய்கிற குழு இது (அஞ்சனா, பிரபாகர், தட்சிணாமூர்த்தி மற்றும் முரளி). பிரபாகரும் முரளியும் பிரபலங்களைப் பற்றிய குறிப்புகளை தேடித் தொகுப்பார்கள். அவருடைய நண்பர்களை தேடிச் சலித்து தொடர்பு கொள்வார்கள். அஞ்சனா அவர்கள் பற்றிய ஒலி, ஒளி தொகுப்புகளை உருவாக்கி நிகழ்ச்சியை இனிமையாக இயக்குபவர்.

குறிப்பாக தட்சிணாமூர்த்தி. லட்சுமி ராமகிருஷ்ணனின் உறவினர்கள் மற்றும் நண்பர்களைத் தேடி சென்னை முதல் பாலக்காடு வரை ஒரே நாளில் அபாரமான டிராவல். ஆனால் களைப்பே இல்லாமல் அடுத்த எபிசோடுக்கு தயார் ஆகிவிட்டார். இவர்களுடன் வேலை செய்வதால் நானும் எப்போதும் உற்சாகமாக இருக்கிறேன்.

சியர்ஸ் ”மனம் திரும்புதே” டீம்.


”மனம் திரும்புதே” நிகழ்ச்சியில் லட்சுமி ராமகிருஷ்ணன்!
சனிக்கிழமை (22.11.14) இரவு 9 மணிக்கு.

Sunday, October 26, 2014

I AM WAITING - கத்தி விமர்சனம்!

ஒரு விஜய் துதி பாடலுடன், விவசாயிகளுக்கு சமர்ப்பணம் என்ற டைட்டில் போட்டு படம் முடிவடைகிறது. புதுசா ஒரு நாட். அதை விஜய்யை வைத்து செய்தால் எடுபடும். இது ஒரு சிம்பிள் கமர்ஷியல் கணக்கு. அந்தக் கணக்கை கச்சிதமாக தன்னுடைய ஸ்டைலில் நிறைவேற்றியிருக்கிறார் முருகதாஸ். இது மசாலா படமா என்றால்... ஆமாம். முழுக்க முழுக்க மசாலாவா என்றால்... இல்லை. அடுத்த பாராவுக்கு செல்வதற்கு முன்பே சொல்லிவிடுகிறேன். இந்தப்படம் எனக்குப் பிடித்திருக்கிறது.

எங்கேயோ மனசின் ஆழத்தில் ஈரமிருக்கும் ஒரு கிரிமினல், எங்கேயோ நிலத்தின் ஆழத்தில் நீரிருக்கும் தன்னூத்து என்ற கிராமத்தை  ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திடமிருந்து காப்பதுதான் கதையின் ஒரு வரி. கதையின் அடுத்தடுத்த வரிகளாக இன்னொரு விஜய், நண்பன், சமந்தா, முதியோர் விடுதி, சர்வதேச கார்ப்பரேட் குண்டர்கள், ஆள்மாறாட்டம், மோதல், தியாகம் என நிறைய வரிகள் வருகின்றன. 

விஜய் அறிமுகக் காட்சி திடீரென்று என்று ரீவைண்ட் ஆகிறது. அந்த டிவிஸ்டிலேயே தான் ஒரு Nonlinear திரைக்கதை எக்ஸ்பர்ட் என்பதை முருகதாஸ் நிரூபிக்கிறார். சின்னச் சின்ன சம்பவச் சங்கிலிகள் அல்லது சின்னச் சின்ன ஷாட்டுகளில் டபுள் ஆக்சன் விஜய், சமந்தா, சமந்தாவின் அப்பா, முதியோர் இல்லம் என பரபரவென படத்தின் அனைத்து முக்கிய காரெக்டர்களையும் அறிமுகம் செய்துவிடுகிறார். வில்லன் அறிமுகக் காட்சி மட்டும் சுவாரசியமில்லாமல் சப் என்று இருக்கிறது. வழக்கமாக முருகதாஸின் பெண் பாத்திரங்கள் பவர்ஃபுல்லாக இருக்கும்.(அஸின், நயன்தாரா, ஸ்ருதிஹாசன்). ஆனால் இதில் சமந்தா பாடல் காட்சிகளில் மட்டும் வந்துபோகிறார். அப்பா வழியாக ரிங்கை கொடுத்தனுப்பி ஃபோனில் காதலை தெரிவிப்பது மட்டும் க்யூட்.

எல்லா மசாலா பட ஃபிளாஷ்பேக்குகளும் ஹீரோக்கள், ஹீரோயினியிடம் சொல்வதாகத்தான் அமையும். இதில் கொஞ்சம் வித்தியாசமாக ரோட்டரி கிளப் மேடையில் ஒரு டாகுமென்டரி கதை சொல்கிறது. அந்த படத்தைப் பார்த்துதான் இன்னொரு விஜய் யார், தன்னூத்து கிராமத்தின் பிரச்சனை என்ன என்பதை படம் பார்க்கும் நாமும், ஹீரோ விஜய்யும் தெரிந்து கொள்கிறோம். 7ஆம் அறிவு படத்தின் முதல்காட்சியே இப்படி ஒரு விளக்கப்படம்தான். ஆனால் படத்துக்குள் அதற்கான ஸ்பேஸ் இல்லாமல் துண்டாக எடுபடாமல் இருந்தது. ஆனால் முருகதாஸ் இதில் சரியான இடத்தில் கதைக்குள் செருகிவிட்டார். 

கோலா நிறுவனங்கள் தங்கள் பிழைப்புக்காக விவசாய நிலங்களையும், நீர் நிலைகளையும் அபகரிக்கிறார்கள். விவசாயத்தையும் விவசாயக் குடும்பங்களையும் அழிக்கிறார்கள் என்பதை இந்தப் படம் அழுத்தமாகச் சொல்கிறது. அதற்காக ஒரு சபாஷ். ஆனால் அரசாங்கத்தின் துணையின்றி இந்த நிறுவனங்கள் எதையும் செய்ய முடியாது. இதைப் பற்றி இந்தப் படம் பேசவே இல்லை.

கதை போகிற போக்கில் பரபரப்புக்காக மட்டுமே செயல்படும் மீடியாக்களை ஒரு பிடிபிடித்திருக்கிறார்கள். செய்தித் தாள்கள் மற்றும் சானல்களின் கேவலமான முகத்தை படம் நெடுக காண்பித்திருக்கிறார்கள். அதற்கும் ஒரு பலே!

கிளைமாக்ஸில் மீடியாக்களின் கவனத்தை  ஈர்க்க சிட்டி முழுவதற்கும் தண்ணீர் சப்ளையை நிறுத்துகிறார் விஜய். சிட்டியே ஸ்தம்பிக்கிறது. எல்லா மீடியாக்களும் குவிகிறார்கள். ஆனால் பத்துப் பதினைந்து போலீஸ்காரர்களைத் தவிர ஒரு எதிர்கட்சி வார்டு மெம்பர் கூட திரைக்கதையில் வரவில்லை.

”கம்யூனிசம்னா என்ன தெரியுமா? என் பசி தீர்ந்த பிறகு, நான் சாப்பிடும் ஒவ்வொரு இட்லியும் இன்னொருவருடையது” இந்த வசனத்துக்காக தியேட்டரில் எக்கச்சச்க விசில். 

இதற்கு என்னுடைய பதில் என்னவென்றால் . . .”ஜனநாயகம்னா என்ன தெரியுமா? கார்ப்பரேட்டுகளை மட்டும் திட்டிவிட்டு நான் ஆதரிக்கும் (அ) நான் பயப்படும் அரசாங்கத்தை கண்டுகொள்ளாமல் விடுவது”

முதியோர்களை ஆதரிக்கும்போதும், விவசாயிகளின் பிரச்சனைகளை பேசும்போதும், கார்ப்பரேட் கோலாக்களின் தண்ணீர் கொள்ளை பற்றி அனல் கக்கும்போதும் தியேட்டரில் அப்ளாஸ். கை தட்டிய பக்கத்து சீட்டுக்காரர் இடைவேளையில் கோக் வாங்குவதற்கு க்யூவில் நின்று கொண்டிருந்தார். அவருடைய மனைவியும், குழந்தையும் லார்ஜ் கோக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். எதை நிராகரிக்க வேண்டும் என்கிறோமோ அதையே ஆதரிக்கும் அபத்தமும், நிர்பந்தமும் படத்திலேயே இருக்கிறது.

உணர்ச்சிகரமான ஒரு காட்சிக்குப் பின் விஜய் சமந்தாவை வா உன்னை ஒரு இடத்திற்கு கூட்டிச் செல்கிறேன் என்று சொல்லிவிட்டு செல்ஃபி புள்ளே பாட்டு பாடுகிறார். அந்தக் காட்சி முழுவதும் கார்ப்பரேட் காஸினோக்களும், ஃபேஷன் பிராண்டுகளும், காஸ்ட்லி காபி கடைகளும்தான் மின்னுகின்றன. லோக்கல் பிராண்டுகளோ விவசாய அடையாளங்கள் எங்குமே இல்லை. இதுதான் நாம் செய்வதற்கும், செய்ய நினைப்பதற்கும் உள்ள முரண். நரம்பு புடைக்க ஒரு காட்சியில் வசனம் பேசும் இயக்குனர் முருகதாஸின் அடி மனதிலேயே இன்னமும் கார்ப்பரேட்டுகள்தான் இருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சாட்சி.

படத்தின் ஆரம்பத்தில் காட்சி ரீவைண்ட் ஆவது போல நிஜத்துக்கும் ரீவைண்ட் ஆகுமானால் விஜய்யும் கோகோ கோலாவை புரமோட் செய்தவர்தான். அதற்காக அவர் மேல் இப்போதே கேலியும், கிண்டல்களும் இருக்கின்றன. இதற்கு மதிப்பு கொடுத்து விஜய் கார்ப்பரேட் கோலாக்களை மறந்தாலும் அவருடைய மகன் கோகோ கோலாவையும், பெப்ஸியையும் வாங்கித் தரச்சொல்லி நெருக்கடி தரக்கூடும்.

படத்தின் இறுதியில் 2G ஊழல் பற்றிக் கூட தைரியமாக விமர்சிக்கிறார்கள். இதற்காக முருகதாசுக்கும், விஜய்க்கும் சபாஷ். ஆனால் நிழல் வேறு, நிஜம் வேறு. நிஜத்திலும் அவர்கள் இருவரும் அப்படி இருக்க முடியுமா என்பது சந்தேகம்தான்.

சினிமாவில் போராளி அவதாரம் எடுத்திருக்கும் முருகதாசுக்கும், விஜய்க்கும் சில கோரிக்கைகள். 
நாங்கள் வணிகக் கலைஞர்கள். பணம் பெற்றுக் கொண்டு கோக் விளம்பரமும் எடுப்போம், கோக்கை எதிர்த்து படமும் எடுப்போம். எங்களுக்கு இரண்டும் ஒன்றுதான் என்று நீங்கள் ஒப்புக்கொண்டால் இந்த திரை விமர்சனம் இத்துடன் நிறைவு பெறுகிறது. நாங்கள் அப்படி அல்ல என நீங்கள் நினைத்தால் அடுத்த வரியையும் தொடரலாம்.

முருகதாசுக்கும், விஜய்க்கும் படைப்பாளி என்பதையும் தாண்டி ஒரு போராளி என்கிற இமேஜை தற்காலிகமாவது இந்தப் படம் தந்திருக்கிறது. படத்தின் கலெக்சன் ரிப்போர்ட்டை விட இந்த பாராட்டுகள் உசத்தியானவை. இந்த அதிகப்படியான பாராட்டுகள் நியாயமானவை. உண்மையிலேயே உங்களுக்கு உரியது என்று உங்கள் மனசாட்சி கூறினால் . . 
  • கார்ப்பரேட் என்று பொத்தாம் பொதுவாக பெயரைச் சொல்லாமல் தப்பிக்கக்கூடாது. கத்தி பற்றிய ஏதாவது ஒரு பேட்டி அல்லது அடுத்த படத்திலாவது நீங்கள் விமர்சிக்கும் கார்ப்பரேட்டுகளின் பெயர்களை  சொல்ல வேண்டும்.
  • அரசாங்கத்திற்கும், கார்ப்பரேட்டுகளுக்கும் உள்ள தொடர்பு பற்றி பேச வேண்டும்.
  • 2G ஊழல் பற்றி விமர்சித்தது போல, சொத்துக் குவிப்பு வழக்கு பற்றியும் விமர்சிக்க வேண்டும்.
இதெல்லாம் முடியாது என்றால் . . .
  • இந்தப் படம் வெளிவரத் தடையாக இருந்த உண்மையான காரணம் எது? ஆளும் கட்சி தலைவர் இதில் தலையிட்டு யாரிடம் என்ன பேசினார் என்று சொல்ல முடியுமா?
  • ஆளும் கட்சி எதுவாக இருந்தாலும் அந்தக் கட்சிக்கு நீங்கள் இருவரும் உள்ளிட்ட சினிமாக்காரர்கள் ஏன் பயப்படுகிறீர்கள் என்று (சினிமாவிலாவது) சொல்ல வேண்டும்.
அதுவும் முடியாது என்றால்
  • இன்று முதல் நான் கோக் மற்றும் பெப்ஸி பிராண்டுகளை அருந்த மாட்டேன் என்று உறுதி எடுக்க வேண்டும்
கடைசி ஒன்றைத் தவிர வேறு எதையும் நீங்கள் சுயமாக தைரியமாக செயல்படுத்த முடியாது என்பதுதான் நிதர்சனம். உங்கள் கத்தி படம் பார்த்துவிட்டு நான் கோக் மற்றும் பெப்ஸி சாப்பிடுவதில்லை என்று முடிவெடுத்துவிட்டேன். நீங்கள் என்ன முடிவெடுக்கப்போகிறீர்கள்? 

உங்கள் பதிலுக்காக . . . I AM WAITING.

Saturday, October 18, 2014

டிபிக்கல் ஜெயலலிதா ஸ்டைலில் Grand entry!

ஜெயலலிதா கைதானவுடன் பிரியாணி பொட்டலத்துக்காக பலபேர் நடித்தார்கள்  என்பது உண்மை. ஜெயலலிதா ஜாமீனில் வெளிவந்தவுடன் தானாகவே பலபேர் தெருக்களில் கூடினார்கள் என்பதும் உண்மை.

ஜெயலலிதா அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்திருக்கிறார் என்பதை நிருபிக்க இனிமேலும் நீதிமன்றங்களில் வழக்கு நடக்கும். ஆனால் மக்கள் செல்வாக்கையும் சேர்த்து வைத்திருக்கிறார் என்பதை எல்லா மன்றங்களும் ஒப்புக்கொள்ளும்.

தெருவெங்கும் கட்சிக்காரர்களும், பொது மக்களும் மழையில் நனைந்தபடி ஆரவாரமாக வரவேற்ற இந்த Grand entry எதிர்பார்த்ததுதான். டிபிக்கல் ஜெயலலிதா ஸ்டைல்.

இருபத்தி ஒரு நாள் சிறை வாசம் தந்த களைப்பை போயஸ் கார்டன் திரும்பிக்கொண்டிருக்கும்போது வழியிலேயே ஜெயலலிதா மறந்து உற்சாகமாகியிருப்பார். நடுவழியில் ஒரு பிள்ளையாரை வழிபட்டது அவர் ரிலாக்ஸ் ஆக ஆரம்பித்திருக்கிறார் என்பதன் அறிகுறி.

ஜனநாயக நாட்டில் வெற்றி பெற வேண்டும் என்றால் மக்கள் செல்வாக்கு அவசியம். ஆனால் மக்கள் செல்வாக்கு மட்டுமே போதாது, சுய ஒழுக்கமும் தேவை என்பதை அதே ஜனநாயகம் ஜெயலலிதாவுக்கு கடுமையாக உணர்த்தியிருக்கிறது.

ஜெயலலிதா இன்றைக்கு தோற்றிருக்கலாம். இடைக்கால ஆறுதல் பெற்றிருக்கலாம். நாளை வெல்லவும் கூடும். ஆனால் தனக்கு எது நடந்தாலும் அதை தமிழக மக்களின் பிரச்சனை என்பது போன்ற அரசியல் மாயங்களை உருவாக்குவதில் ஜெயலலிதாவும், கருணாநிதியும் ஒருவருக்கொருவர் சளைக்காத தந்திரசாலிகள். அதைத்தான் இன்றைய தமிழக அரசியல் நமக்கு உணர்த்துகிறது. இதுதான் மற்ற எல்லாவற்றையும் விட மாபெரும் உண்மை.

நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, இந்த உண்மையை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். வெல்கம் பேக் ஜெயலலிதா! 

Tuesday, October 7, 2014

போலாம் ரைட்டு! கடவுள் நேரில் வர வேண்டாம்.

என் தம்பியைக் காணோம். அப்போது நான் ஆறாம் வகுப்பு சிறுவன். சென்னை பாரிமுனையில் உள்ள ஆர்மீனியன் தெரு. அங்கிருந்த சர்ச்சில் நானும், என் தம்பியும் நீண்டிருந்த வரிசையில் நின்றுகொண்டிருந்தோம். எதற்காக சர்சுக்கு சென்றோம் என்று நினைவில் இல்லை. யார் எங்களை அழைத்து சென்றது என்பதும் பிசிறாகக் கூட ஞாபகம் இல்லை. ஆனால் கையில் பனை ஓலைச் சிலுவை மறு கையில் தம்பி என நின்று கொண்டிருந்தபோது அவன் காணாமல் போய்விட்டான்.

அச்சச்சோ தம்பியை தொலைத்துவிட்டோமே என்று பயந்துவிட்டேன். எங்கே தேடுவது? எப்படித் தேடுவது எனத் தெரியவில்லை. பயமும் பதற்றமும் பெருகி திக்குத் தெரியாமல் திரிய ஆரம்பித்துவிட்டேன். பொம்மைக் கடை, ஐஸ் வண்டி, பயாஸ்கோப் கூட்டம் என எங்கெங்கோ நுழைந்து வந்தேன். கை, காலெல்லாம் நடுங்க பொல பொலவென பெருகிய கண்ணீர் என் கன்னங்களைச் சுட்டது.

யார் யாரோ என்னை விசாரிக்கிறார்கள். என் தம்பி எப்படி இருப்பான் என்கிறார்கள். யாரோ ஒரு வயதான பாட்டி என்னை திட்டினார். இப்படியா அஜாக்கிரதையா இருப்பாய் என்றார். வேறொருவர் என் வீட்டு பெரியவர்களை எல்லாம் வைதார். இப்படியா பொறுப்பில்லாம சின்னப்பசங்களை அனுப்பி வைப்பாங்க என்றார்.

எல்லாம் கொஞ்ச நேரம்தான். அதற்கப்புறம் யார் என்ன சொன்னார்கள் என்பதே என் காதில் விழவில்லை. யார் என் கண் முன் நின்றார்கள் என்பதும் தெரியவில்லை.

கிட்டத்தட்ட அதே மன நிலையை என் நண்பர் கடந்தவாரம் விவரித்தார். ”யார் என் முன்னாடி நிக்கறாங்கன்னே தெரியல. அவங்க ஏதேதோ சொன்னாங்க. ஆனா எதுவும் என் காதுல விழல”, என்றார். வீட்டில் ஒரு திருமணம் நிச்சயமாகி இருந்த நேரம். பத்திரிகை கொடுக்க புறப்பட்டுக் கொண்டிருந்தபோது திடீரென அம்மா மயங்கிவிட்டார். ஃபோனை வைத்துவிட்டு ஆட்டோ பிடிக்கச் சென்ற மனைவி அருகில் இல்லை. பக்கத்து வீட்டுக்காரர்கள் ஆபீசுக்கு போய்விட்டார்கள். வழக்கமான வருகிற காய்கறிக்காரம்மாவையும் காணோம். ஃபோன் அடித்தால் நண்பன் வெளியூரில் இருப்பதாகச் சொல்கிறான். அம்மாவின் கண்கள் செருகிக் கொண்டன. அவரை தூக்கிக் கொண்டு மாடிப் படியிறங்குகிற அளவுக்கு உடலிலும் மனதிலும் தெம்பு இல்லை. கை காலெல்லாம் நடுங்க ஆரம்பித்துவிட்டது. அம்மாவின் அருகில் அமர்ந்து கொண்டு அவரை உலுக்கிக்கொண்டே ஏதேதோ சொல்லி கத்த ஆரம்பித்துவிட்டேன். யாரோ ஒருவர் உள்ளே வந்தார். அவர் யார் என்று தெரியவில்லை. சட்டென அவர் கை கொடுக்க மேலும் பலர் வந்துவிட்டார்கள். எனக்கு ஒருவரையும் அடையாளம் தெரியவில்லை.

சிறுவனாக தம்பியை தொலைத்துவிட்டு நான் அதே மனநிலையில்தான் இருந்தேன். கண்களை மூடிக்கொண்டு ”சாமி என் தம்பியை கண்டுபிடிச்சுத்தா” என்று பிரார்த்தித்தேன்.

நண்பரும் அதையே சொன்னார். யார் வந்தாங்க, என்னை சுத்தி என்ன நடந்ததுன்னு தெரியல. ”பெருமாளே எங்கம்மாவை எப்படியாவது காப்பாத்திடு” அப்படின்னு பிரே பண்ண ஆரம்பிச்சுட்டேன் என்றார்.

எங்கிருந்தோ என் தம்பியை ஒருவர் அழைத்து வந்தார். இருவரும் கதறியபடி ஒருவரையொருவர் கட்டிக்கொண்டோம். எப்படி வீடு வந்தோம், யார் அழைத்து வந்தார்கள் என்பது இன்னமும் ஞாபகம் இல்லை.

யார் ஆம்புலன்ஸ் கொண்டு வந்தாங்க தெரியல. எப்படியோ கரெக்ட்டான சமயத்துல எங்கம்மாவை ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணிட்டோம். எங்கம்மா மீண்டு வந்துட்டாங்க என்றார்.

சுருக்கமாகச் சொன்னால் கடவுளை நம்புவதற்கு கடவுள் கடவுள் நேரில் வரவேண்டிய அவசியம் இல்லை. கடவுளைத் தவிர வேறு துணையில்லை என்கிற சூழ்நிலை வந்தால் போதும்.

இதான் இன்னைக்கு பாயிண்டு! போலாம் ரைட்டு!

Sunday, October 5, 2014

பள்ளிக் குழந்தைகளின் மனதில் திணிக்கப்படும் ஊழல் அரசியல்

ஜாமீன் போராட்டத்தை முன்னிட்டு வரும் 7ம் தேதி தனியார் பள்ளிகளுக்கு விடுமுறையாம். யார்? யாரைக் கேட்டு எடுத்த முடிவு இது?
என்ன நடந்தாலும் சரி, சாராயக் கடைகளை மூடமாட்டோம். ஆனால் பள்ளிக்கூடத்தை மூடுவோம் என்கிற இந்த அத்துமீறலைச் செய்வது யார்?
ஊழலை ஆதரிப்பது, எதிர்ப்பது போன்று நடிப்பது போன்ற அபத்தங்களுக்கும், அசிங்கங்களுக்கும் நாம் அனைவரும் பழகிவிட்டோம். ஆனால் அதை அடுத்த தலைமுறை குழந்தைகளின் மனதில் திணிக்க முயற்சிக்கும் இந்த அராஜகத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
நம் வீட்டுக் குழந்தைகளின் படிப்பில் தலையிட்டு, அவர்களை தங்கள் அநாகரீக அரசியல் விளையாட்டுக்கு உட்படுத்தும் இந்தச் செயல் சர்வாதிகாரமானது. இந்த அசிங்கத்தை எந்தக் கூச்சமும் இல்லாமல் செய்வது யார்? யாரோவா? அதிமுக என்ற கட்சியா? தமிழக அரசா?
ஜெயலலிதாவுடைய கைதும், அதைத் தொடர்ந்து நடக்கின்ற கலவரங்களும், ஊழல்களை நியாயப்படுத்திப் பேசுகிற ஒரு பரவலான மனநிலையை ஏற்படுத்தியிருக்கிறது. இதுவே அசிங்கம். இப்போது இது அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து கள்ளம் கபடமில்லாத பள்ளிக் குழந்தைகளின் படிப்பையும், மனதையும் கெடுக்கிற அபாயத்தை நோக்கி ஏவப்பட்டிருக்கிறது. இதனை அனுமதிக்கவே கூடாது.
பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகளை மீண்டும் கொண்டுவர வேண்டிய கட்டாயத்திற்கு வந்துவிட்டோம்.
ஜெயலலிதாவுக்கு தெரியாமல்தான் இந்த அத்துமீறல் நடைபெறுகிறது என்று நம்புகிறேன். அவருக்குத் தெரிந்தால் நிச்சயம் இதனை அனுமதிக்க மாட்டார் என்பது என் திடமான நம்பிக்கை. நிச்சயம் அவர் இந்த அளவுக்கு மோசமான முடிவுகளை ஆதரிக்கிற பெண் அல்ல.
ஒருவேளை இது ஜெயலலிதாவுக்குத் தெரிந்துதான் நடக்கிறது என்றால், இது கடுமையான குற்றம். அதுவும் சாதாரணக் குற்றமல்ல. அவர் மேல் சுமத்தப்பட்டிருக்கும் குற்றங்களை விட மாபெரும் குற்றம். சொத்துக்குவிப்பை விட இந்த அராஜக அதிகாரக் குவிப்பு மிக மிக தவறானது, உடனே தண்டிக்கபடக் கூடியது.
நாம் எந்தக் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் பள்ளிகளை மூடச் சொல்லும் இந்த அராஜக முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.
நம் குழந்தைகளை அசிங்கம் பிடித்த அரசியல்வாதிகளின் பிடியில் இருந்து பாதுகாக்க நாம் உடனே ஒன்றுபட வேண்டும். வரும் 7ம் தேதி எந்த அச்சுறுத்தலுக்கும் பணியாமல் பள்ளிகள் இயங்க வேண்டும்.
பள்ளிகளில் அரசியல் பாடமாக இருக்கலாம். ஆனால் அரசியல் மேடைகளில் பள்ளிகளை நடத்த அனுமதிக்கவே கூடாது.
டியர் மிஸ்டர் பன்னீர்செல்வம்! குனிந்தது போதும். கொஞ்சம் நிமிருங்கள். நீங்கள் இந்த மாநிலத்தின் முதல்வர் என்பதை உணர்ந்து இந்த அநியாயத்தை தடுத்து நிறுத்துங்கள்.
உங்களுக்கு உங்கள் தலைவியின் விடுதலை எந்த அளவுக்கு முக்கியமோ, அதை விட எங்களுக்கு எங்கள் குழந்தைகளின் கல்வி முக்கியம்.

Sunday, September 28, 2014

ஜெலலிதாவை ஆட்டிப் படைக்கும் மீடியாக்கள்!

உண்மையில் இன்று சிறைக்குச் சென்றிருப்பது ஜெயலலிதா அல்ல. மீடியாக்கள் உருவாக்கி வைத்திருந்த ஜெயலலிதா என்கிற பிம்பம். ”இதுதான் நான் என்று” ஜெயலலிதாவே நம்பிவிட்ட அளவுக்கு சித்தரிக்கப்பட்ட பிம்பம் அது.

ஆரம்பத்தில் ஜெயலலிதா என்ற பெண்ணுக்குள்ளும், அரசியல்வாதிக்குள்ளும் பல நியாயங்களும், நம்பிக்கைகளும் துளிர்த்திருந்தன. ஆனால் அவற்றை நசுக்கிவிட்டு பழிவாங்குதலையும், சர்வாதிகாரத்தையும் அரக்கத்தனமாக வளர்த்தது மீடியா. கருணாநிதி & கோவை முன்னிறுத்தி தன்னைத் தானே சுட்டுக்கொண்டு சுற்றியிருப்பவர்களையும் எரிக்கும் நெருப்பாக அவரை எப்போதும் தணலிலேயே வைத்திருந்தது, இன்னமும் வைத்திருக்கிறது.

ஜெயலலிதாவை கருணாநிதிக்கு எதிராக, அவரை விட வலிமையாக சித்தரித்த வரை ஓகே. ஆனால் அவர் எதைச் சொன்னாலும் நியாயம், தப்பே செய்தாலும் சரி, அவரை எவரும் தட்டிக் கேட்க முடியாது, கேட்கக்கூடாது என்கிற பிம்பத்தை வளர்க்க ஆரம்பித்தார்கள். அவர் இந்த நாட்டை விட, சட்டத்தை விட, அதன் வலிமையைவிட சர்வ வல்லமை பெற்றவர் என்று சித்தரித்து அவரையும், அவரது ஆதரவாளர்களையும் ஏன் எதிரிகளையும் நம்ப வைத்து ஏமாற்றியது மீடியா.

ஜெயலலிதா என்ற பெயரில் மீடியாக்கள் நடத்தி வரும் ரியாலிட்டி ஷோவின் சீஸன் 2 இது. சீஸன் 1 ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சி. ரியாலிட்டி ஷோக்களில் திடீரென எவருமே எதிர்பாராத சம்பவங்கள் இடம் பெறும். அதே போல சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை என்பது ஜெயா ஆதரவு மீடியாக்களே எதிர்பாராத டிவிஸ்ட்.

அதனால்தான் இந்த வழக்கு தீர்ப்புக்கு வந்ததும் அத்தனை மீடியாக்களும் மௌனம் காத்தன. இது பற்றி செய்தி வெளியிடாமல் தவிர்த்தன. அதாவது தாங்களே தோற்பதாக நினைக்க ஆரம்பித்தார்கள். தாங்கள் உருவாக்கிய பிம்பம் சரிவதில் அதிர்ச்சியடைந்தார்கள். ஆனால் . . .

வெற்றிகரமாக நடந்து வரும் ஒரு ஷோவை அவ்வளவு எளிதில் கை விட்டுவிட மாட்டார்கள். எனவே நாம் கற்பனை செய்து கூட பார்த்திராத அளவுக்கு இன்னும் பல டிராமாக்கள் நடத்தப்படும் என்று நான் திடமாக நம்புகிறேன். மீடியாக்களின் ஆட்டம் இன்னும் முடியவில்லை.

ஜெயலலிதா மீண்டு வர வேண்டும் என்றால் மீடியாக்களின் இந்த கள்ள ஆட்டத்தை புரிந்து கொள்ள வேண்டும். வெற்றி என்பது எதிரிகளை வெல்வது மட்டுமல்ல, தன்னைத் தானே வெல்வதிலும் இருக்கிறது. ஜெயலலிதா கருணாநிதியை வென்று காட்டிவிட்டார். ஆனால் தன்னைத் தானே வெல்வதில் தோற்றுக்கொண்டே இருக்கிறார். எதிர்பாராத இந்த சிறை அனுபவம் அவருக்கு அந்த பக்குவத்தை தரும். புத்தம் புதிதாக தன்னை மீட்டுக்கொண்டு மீண்டும் வருவார் என்று நம்புகிறேன்

Tuesday, September 23, 2014

சிவாஜி என்கிற அனுபவம்

நடிகர் திலகம் பற்றி இதுவரை ஒரே ஒரு எக்ஸ்க்ளுசிவ் தொலைகாட்சி நிகழ்ச்சிதான் வந்திருக்கிறது.

ஒரு காலத்தில் தூர்தர்ஷன் மட்டும் இருந்தபோது ”மலரும் நினைவுகள்” என்ற நிகழ்ச்சி பிரபலம். நட்சத்திரங்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள். அந்தக்காலத்தில் சினிமா கிளிப்பிங்கை பார்ப்பதே அபூர்வம் என்பதால் அந்த நிகழ்ச்சிக்கு ஏக வரவேற்பு. அதில் ஒரு முறை சிவாஜியின் மலரும் நினைவுகள் இடம்பெற்றது. ஆனால் மிகப் பெரிய எதிர்பார்ப்பை கொடுத்து விட்டு மிகச் சாதாரணமான ஒரு நிகழ்ச்சியாக அது அமைந்துவிட்டது. என்னைப் போன்ற சிவாஜி இரசிகர்களை அந்நிகழ்ச்சி ஒரு சதவிகிதம் கூட திருப்தி செய்யவில்லை.

இன்று நூற்றுக்கணக்கான சேனல்கள் வந்துவிட்டன. அத்தனை சேனல்களும் ஒரே நேரத்தில் முயன்றாலும் சிவாஜியைப் பற்றி ஒவ்வொரு சேனலும் ஒவ்வொரு விதவிதமாக நிகழ்ச்சிகள் செய்யலாம். சிவாஜியைப் பற்றிப் பேச அத்தனை விஷயங்கள் உள்ளன.

தூர்தர்ஷனாவது ஏதோ முயற்சி செய்தது. ஆனால் அதில் ஒரு பங்கைக் கூட எந்த தனியார் சேனலும் செய்யவில்லை. செய்ய இயலாது என்று கூட தோன்றுகிறது.

டிவி, ரேடியோ என எதை எடுத்துக்கொண்டாலும் 24 மணி நேரமும் ஏதாவது நிகழ்ச்சிகளை தர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அதனால் சீக்கிரமே கற்பனை வரண்டு போய், தொகுப்பாளர் தன்னைப் பற்றியே அலட்டிக் கொள்கிற சுய அபத்தங்கள் கூட நிறைய வருகிறது. டிவி ரேடியோ நிலையங்கள் அவற்றையும் வேறு வழியின்றி அனுமதிக்கின்றன. அவர்களில் ஒருவருக்காவது Quality Content பற்றிய எண்ணம் இருந்தால் சிவாஜி பற்றி எத்தனையோ விஷயங்களைப் பேச முடியும். சிவாஜி பற்றி மட்டுமல்ல அவர் போன்ற மாபெரும் மேதைகள் பற்றி நிறைய சொல்ல முடியும். ஆனால் இந்த இன்ஸ்டன்ட் யுகத்தில் அந்த வினாடி கண்ணிலும், செவியிலும் படுவதை மட்டுமே மனித மூளை கிரகிக்கிறது.

இன்றைய மீடியாக்கள் வெற்று விஷயங்களை மட்டுமே கடத்துகின்றன. அனுபவக் கடத்தல் நிகழ்வதே இல்லை.

நல்ல அனுபவங்களைத தேடி நமது டிவிக்களும், ரேடியோக்களும் பயணப்படும்போது சிவாஜி ஒருவேளை அவர்கள் கண்களில் படக்கூடும். அது வரை சிவாஜி தந்த அனுபவங்கள் அவரது இரசிகர்களின் மனதில் மட்டும் இருக்கும். இந்த பதிவு கூட பகிர்வு அல்ல. ஒரு தந்தையாக, சகோதரனாக, ஆசிரியனாக, இறை பக்தியாக, தமிழாக, உச்சரிப்பாக, தமிழ் குடும்ப அமைப்பாக, தமிழ் குடும்பங்களின் சந்தோஷமாக, துக்கமாக, எதிர்பார்ப்பாக, கனவாக சிவாஜி தந்து விட்டுச் சென்றிருக்கிற அனுபவங்களை அன்றைய என்னிலிருந்து இன்றைய எனக்கு நானே கடத்திக்கொள்கிற சிறு முயற்சி.

Monday, September 22, 2014

போலாம் ரைட்டு! நாட்டுத்தக்காளியும் பெண் தேடும் படலமும்

காய்கறிகடைக்கும், மளிகைக்கடைக்கும் செல்வது ஒரு இளைஞனின் இமேஜை பாதிக்கும். அப்படித்தான் நான் இருபது ப்ளஸ் வயதில் நினைத்துக் கொண்டிருந்தேன்.  ஆனால் முப்பது ப்ளஸ் வயதில் திருமணம் ஆன சில நாட்களிலேயே அந்த இமேஜ் தலைகுப்புற பல்டியடித்து டேமேஜ் ஆனது. நல்ல நாட்டுத்தக்காளியா பார்த்து அரை கிலோ வாங்கிட்டுவாங்க என்ற மனைவியின் குரல் என்னை அண்ணாச்சி கடையில் நிறுத்தியிருந்தது. தக்காளி தெரியும், அதென்ன நாட்டுத்தக்காளி.. தக்காளியில் அப்படி ஒரு வெரைட்டி இருப்பதே அன்றுதான் எனக்குத் தெரியும். இருந்தாலும் அண்ணாச்சியிடம் எல்லாம் தெரிந்ததுபோல ஸ்டைலாக கிலோ எவ்வளவு என்றேன். அவர் விலையைச் சொல்லிவிட்டு "இந்தாங்க இந்த கூடையில பெரக்கித்தாங்க.. எடை போட்டுருவோம்" எனச் சொல்லிவிட்டு யாரோ கேட்ட கத்தரிக்காயில் பிஸியாகிவிட்டார். எனக்கு ஒரே குழப்பம். எது நாட்டுத்தக்காளி அதில் எது நல்ல தக்காளி என ஒன்றும் புரியவில்லை. குழப்பத்துடன் விழித்துக்கொண்டிருந்தேன். 

கடந்தவாரம் ஒரு பிரபலத்தை சந்தித்தேன். தன் மகனுக்கு பெண் தேடியபோது அவர் எப்படியெல்லாம் விழித்தார் என்பதை மிகவும் சுவாரசியமாகச் சொன்னார். கிட்டத்தட்ட 4 வருடத்தேடல். தமிழகத்தில் எத்தனையோ குடும்பங்கள் உள்ளன. ஒவ்வொரு குடும்பத்திலும் எத்தனையோ பெண்கள் இருக்கிறார்கள். அவர்களில் யார் தன் மகனுக்கு ஏற்ற பெண்? ”பெரிய குழப்பம் சார். எந்த பெண்ணை பார்த்தாலும் செட் ஆகல. என்னடா பண்றதுன்னு எக்கச்சக்க குழப்பம். அப்பதான் ஒரு இளைஞன் எனக்கு அறிமுகமானான். அவனுக்கு பெண் நிச்சயம் ஆகிடுச்சு. ஆனா தன் தங்கைகளுக்கு திருமணம் ஆன பின்தான் தனக்கு கல்யாணம்னு அவன் உறுதியா இருந்தான். இந்தக் காலத்துல இப்படி ஒரு பையனா? தன் தங்கைகளுக்காக தன்னுடைய திருமணத்தை தள்ளி வைச்சிருக்கானே அப்படின்னு அவன் மேல ஒரு மரியாதை வந்திருச்சு. அப்பதான் சட்டுன்னு ஒரு முடிவெடுத்தேன். இப்படி ஒரு இளைஞன் இருக்கிற குடும்பம் நிச்சயமா ஒரு சிறந்த குடும்பமாகத்தான் இருக்கும் அப்படின்னு என் மனசுல பட்டுது. என்னுடைய கணிப்பு வீண் போகல. இன்னைக்கு அந்த அழகான குடும்பத்துல என் மகனுக்கு சம்பந்தம் பேசிட்டேன்” என்றார். அவர் குரலில் அப்படியொரு நிறைவு.

இன்று என் நண்பருக்கு ஒரு இளைஞன் வந்தது போல அன்று அண்ணாச்சி கடைக்கு ஒரு மாமி வந்தார். அவர் வந்ததும் அண்ணாச்சி அலர்ட் ஆகிவிட்டார். கடைப் பையனை அவசரமாகக் கூப்பிட்டு "டேய் மாமி வர்றாங்க. காய்கறி கொஞ்சம் சுமாரா இருந்தா கூட கறாரா வேணாம்னு சொல்லிடுவாங்க. இன்னைக்கு வந்த நாட்டுத்தக்காளியை எடுத்துப்போடு" என்றார். அவ்வளவுதான். பளிச்சென்று எனக்குள் ஒரு பல்ப். அந்தக் கறார் மாமி செலக்ட் செய்தால் அது நிச்சயம் நல்ல தக்காளியாகத்தான் இருக்கும் என்று முடிவெடுத்தேன். அதனால் அவர் தேர்ந்தெடுத்து கூடையிலிருந்த தக்காளியை வாங்கி வீட்டில் மனைவியிடம் சமர்த்து என்ற கொஞ்சலான பாராட்டுடன் ஒரு மென் அணைப்பும் பெற்றுக்கொண்டேன்.

முடிவெடுக்கத் திணறும் சமயங்களில் அந்த இளைஞன் அல்லது அந்த மாமியைப்போல யாரோ ஒருவர் நமக்கான தீர்வுகளை அடையாளம் காட்டுகிறார்கள். அதை தவறவிடாமல் கவனித்து பளிச்சென்று கவர்ந்து கொள்ள வேண்டும். 

இதான் இன்னைக்கு பாயிண்டு! போலாம் ரைட்டு!

Monday, August 18, 2014

போயிட்டு வாங்க ஓய்! நீங்கள் கனவு கண்ட புதுயுகம் பிறக்கும்!


கனவுகள் எல்லோருக்கும் உண்டு.
அதற்கு வடிவங்கள் கொடுப்பவர் சிலர்.
அந்த வடிவத்தை மற்றவர்கள் மனதிலும் விதைப்பவர் மிகச் சிலர்.
அந்த மிகச் சிலர்களில் ஒருவர் பி.கே.

சாமான்ய மக்களின் பங்கேற்புக்காகவும், பங்களிப்புக்காகவும் மட்டும் ஒரு தொலைக்காட்சியை உருவாக்குவது அவரது கனவாக இருந்தது. நட்சத்திரங்கள் விரும்பினால் அவர்களும் ஒரு சாமான்யனாகவே அதில் இடம்பெற வேண்டும் என அவர் திட்டமிட்டார். அவர் திட்டம் நிறைவேற அவரைப்போலவே கனவுகளுடன் இருந்தவர்களை தேடித்தேடி சலித்தெடுத்தார். அவர்களில் நானும் ஒருவன்.

அவருடைய கனவு மட்டும் ஈடேறியிருந்தால் அகில உலகமும் வியந்து வரவேற்றிருக்கக்கூடிய புதிய தொலைக்காட்சி வடிவம் பிறந்திருக்கும்.

தனது கனவை அவர் எனக்கு முதன்முதலில் விவரித்தபோது பிரமித்துப்போனேன். கரகரப்பான குரலில் புன்னகையா, கடுமையா எனத்தெரியாத ஒரு பாவனையில் எனது யாதுமானவள் குறும்படத்தைப் பற்றி தன் கருத்துக்களை கூறியபடியே தனது விவரிப்பைத் துவக்கினார். மக்களை பார்க்கவைப்பது பற்றி அலட்டிக்கொள்ளாதீர்கள். மக்கள் பார்க்கக் கூடிய நிகழ்ச்சிகளையும், படங்களையும் தயாரிப்பதில் கவனம் செலுத்துங்கள் என்றார். ஏதோ ஒரு தொலைக்காட்சியில் பணிபுரிகிறோம் என்றில்லாமல் ஒரு அருமையான கனவுக்கு உயிர்கொடுக்கிறோம் என்கிற எண்ணத்தை அனைவரின் மனதிலும் ஓயாமல் பதியவைத்துக்கொண்டே இருந்தார்.

அதற்காக அவர் உருவாக்கிய அலுவலகச் சூழல் அலாதியானது. அங்கே உயர்வு, தாழ்வு கிடையாது. நீ பெரியவன் நான் பெரியவன் கிடையாது. ஆண், பெண் ஏற்ற இறக்கங்கள் கிடையாது.

ஏராளமான இளைஞர்கள் அனுபவசாலிகளுடன் இணைந்து கற்றுக்கொண்டே பணிபுரியும் அபாரமான முறையை உருவாக்கினார்.

நிகழ்ச்சித் தயாரிப்பு என்பதைத்தாண்டி மக்களுக்கு பொறுப்பான பங்களிப்பு என்ற எண்ணத்துடன் செயல்படத்தூண்டினார். அதனால் அலுவலக ஒழுக்கங்களைப் போலவே, தனி மனித ஒழுக்கங்களையும் வலியுறுத்தினார். ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் அந்த ஒழுக்கம் பிரதிபலிக்க வேண்டும் என்று விரும்பினார்.

அவருடைய திடீர் மறைவு அதிர்ச்சிப்பேரலைகளை உண்டாக்கியிருக்கிறது. ஆனாலும் அவருடைய கனவுகள் முற்றுப்பெறவில்லை. ஏனென்றால் அவருடைய கனவுகள் என்னைப்போல பலரின் மனங்களில் விதைக்கப்பட்டிருக்கிறது.

”டியர் பிகே, நான் உங்கள் கனவுக்கு உயிர்கொடுப்பேன்.”

அவருடைய உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தியபோது நான் இப்படித்தான் உறுதி ஏற்றுக்கொண்டேன். காலம் எனக்கு கைகொடுக்கும் என்ற நம்பிக்கையுடன் நான் குருவாக ஏற்றுக்கொண்ட எங்கள் அன்பு பிகேவுக்கு விடைதருகிறேன்.


போயிட்டு வாங்க ஓய்! நீங்கள் கனவு கண்ட புதுயுகம் பிறக்கும்!

Saturday, August 16, 2014

சர்ச்சையைக் கிளப்பியிருக்கும் 9 மொழிப்பாடல் - என்னுடைய மொழி எங்கே?

ஏ.ஆர்.ரகுமானின் வந்தேமாதரம் பாடல் வெற்றிக்குப்பின், தேசிய ஒருமைப்பாட்டை மையமாக வைத்து பல பாடல் முயற்சிகள். #MicromaxUniteAnthem அந்த வரிசையில் லேட்டஸ்ட். மைக்ரோமேக்ஸ் - சோனி நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் இந்தப்பாடல் தயாராகியிருக்கிறது. தயாராகியிருக்கிறது என்பதை விட சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது என்பதுதான் உண்மை.

முதல் காரணம் பழைய டியூன். இதற்காக புதிதாக எதையும் கம்போஸ் செய்யவில்லை. ரங்தேபசந்தி படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள Roobaroo என்ற பாடலை சற்றே வடிவம் மாற்றியிருக்கிறார்கள். இது கூட பரவாயில்லை. இந்த சிங்கிள் ஆல்பத்தில் 10 பாடகர்கள் 9 இந்திய மொழிகளில் பாடியிருக்கிறார்கள். இதுதான் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. தேசிய ஒருமைப்பாடுதான் தீம் என்றால் ஏன் 9 மொழிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் தரவேண்டும். எங்கள் மொழியை ஏன் நிராகரித்தீர்கள் என்று பாடலில் இடம் பெறாத மொழி பேசுபவர்கள் ஆன்லைனில் கோபமாக தங்கள் கருத்துகளை தெரிவித்துவருகிறார்கள்.

எனக்கும் அதுதான் தோன்றுகிறது. மைக்ரோமேக்ஸ் - சோனி போன்ற பெரிய நிறுவனங்கள் கைகோர்க்கும்போது நிச்சயமாக ஒரு புதுப்பாடலை உருவாக்கியிருக்க முடியும். அதைச் செய்யாததே ஏனோதானோ என்ற எண்ணத்தையே குறிக்கிறது. அடுத்ததாக ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை இடம்பெற வைக்க வேண்டும் என்று முடிவு செய்தது சிந்தனையில் ஆழமில்லை என்பதைக் காட்டுகிறது. ஏனென்றால் இந்தியாவில் பரவலாக பேசப்படும் அத்தனை மொழிகளையும் இதில் இடம்பெற வைப்பது சாத்தியமே இல்லாதது. எனவே இந்தப் பாடலில் இடம்பெறாத மொழியைப் பேசுபவர்கள் நிச்சயம் ஏமாற்றமடைவார்கள். தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் பாடல் நாட்டின் எந்தப்பகுதியைச் சேர்ந்தவரையும் உயர்த்துவதோ, தாழ்த்துவதோ, கண்டுகொள்ளாமல் விடுவதோ, முக்கியத்துவம் தருவதோ தவறு. ஆனால் இந்தப்பாடல் இந்தக் குளறுபடியான எண்ணங்கள் அனைத்தையும் தருகிறது. பாடலுக்கான வீடியோவிலும் எந்தக் க்ரியேட்டிவிட்டியும் இல்லை. பாடல் வரிகளில் இடம்பெறாத மொழிகளை எழுத்து மற்றும் காட்சி வடிவிலாவது வீடியோவில் கொண்டு வர முயற்சித்திருக்கலாம்.

சுருக்கமாகச் சொன்னால் தங்கள் விளம்பரத்துக்காக இரண்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் தயாரித்து வெளியிட்டிருக்கும் ஒரு சாதாரண வீடியோதான் இது. இதற்கும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் தொடர்பே இல்லை.

பட்டி மன்றம் - முதன் முறையாக வெர்சுவல் ஸ்டுடியோவில் படம்பிடிக்கப்பட்டது.

பட்டிமன்றங்கள் என்றாலே உடனே ஏதாவது ஆடிட்டோரியத்திற்குள் புகுந்துவிடுவோம். வெகு அபூர்வமாக ஏதாவது பள்ளி (அ) கல்லூரி மைதானங்களில் படமாக்குவோம். மைதானங்களில் உள்ள சிக்கல் என்னவென்றால் மாலை நேரத்துக்கு மேல்தான் தோதுப்படும். ஏனென்றால் அப்போதுதான் பார்வையாளர்கள் தாங்கிக்கொள்கிற அளவுக்கு வெக்கை குறைவாக இருக்கும். ஆனால் இவற்றில் விளக்கைச் சுற்றும் பூச்சிகள், கொசுத்தொல்லை மற்றும் மழை போன்ற தடங்கல்களுக்கான வாய்ப்புகள் அதிகம். அதனால் ஆடிட்டோரியம்தான் சிறந்த சாய்ஸ்.


ஆனால் இந்த சுதந்திர தினத்துக்கு நாங்கள் வித்தியாசமான, துணிச்சலான ஒரு முடிவெடுத்தோம். எங்களுடைய புதுயுகம் வெர்சுவல் ஸ்டுடியோவிலேயே பட்டிமன்றத்தை படமாக்கலாம் என்பதே அது. ஏற்கனவே நடிகை அபிராமி தொகுத்து வழங்கிய ரிஷிமூலம் பேச்சு மன்றம் நிகழ்ச்சியை வெர்சுவல் ஸ்டுடியோவில் வெற்றிகரமாக நடத்தியிருக்கிறோம்.  அதைவிட இதில் சிக்கல் குறைவுதான். அதனால் பெரிதாக கவலைப்படவில்லை. ஆனால் பட்டிமன்றத்தை இதுவரை யாரும் முயற்சிக்கவில்லை என்ற சின்ன த்ரில் ஜாலியாக இருந்தது.

சரியாக 48 மணி நேரங்களே எங்களுக்கு இருந்தது. ஆனாலும் 3Dயில் மளமளவென ஒரு செட்டை வடிவமைத்தோம். பார்வையாளர்கள் 50 பேரை திரட்டினோம். பேச்சாளர்களை ஒரு கற்பனை மேடையில் அமர வைத்து அனைவரையும் ஒரு சேர எங்கள் ஸ்டுடியோவிலேயே படம்பிடித்தோம். வெர்சுவல் ஸ்டுடியோவில் உள்ள மிகப்பெரிய சிக்கல் நிழல்கள் விழாத லைட்டிங் மிக முக்கியம். ஆனால் 50 பேருக்கு மேல் உள்ளே இருந்தால் நிழல்களை தவிர்க்க மிகவும் மெனக்கெட வேண்டும். ஆனால் எங்கள் டெக்னிகல் டீம் அபாரமானது. அசராமல் செய்து முடித்தார்கள்.

இதில் இன்னொரு துணிச்சல் என்னவென்றால் பட்டிமன்ற பேச்சாளர்களில் நடுவர் பிரகதீஸ்வரனைத் தவிர வேறு எவருக்கும் பச்சைத் துணிகளால் சூழப்பட்ட கற்பனை மேடைகளில் (Virtual stage) பேசி பழக்கமில்லை. ஆனாலும் பெரிய சிக்கல்கள் எதுவும் எழாமல் படப்பிடிப்பை முடித்து ஒளிபரப்பும் செய்துவிட்டோம்.

அடுத்த முறை பார்வையாளர்களின் எண்ணிக்கையை 100 பேருக்கு மேல் உயர்த்தலாமா என்ற தைரியமான எண்ணம் வந்திருக்கிறது. கடினம் இல்லை என்றாலும் ஒரு பட்டிமன்றத்தை முதன் முறையாக வெர்சுவல் ஸ்டுடியோவில் படம்பிடித்த ஒரு திருப்தி. அந்த திருப்தியைத் தந்த புதுயுகம் டெக்னிகல் குழுவிற்கு சபாஷ்.

Saturday, August 9, 2014

தான் வீசிய ஷார்ட்பிச் பந்துகளில் தானே வீழ்ந்த இந்தியா

லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா இங்கிலாந்தை வென்றதற்கு காரணம் இஷாந்த் வீசிய ஷார்ட்பிச் பந்துகள்தான். அப்படி பந்து வீசச் சொன்னது கேப்டன் தோனி. எல்லோரும் அதற்காக தோனியை புகழ்ந்து கொண்டிருக்க, ராகுல் டிராவிட் மட்டும் ஒரு வித்தியாசமான கருத்தைச் சொன்னார்.

டெஸ்ட் மாட்ச்களுக்கு ஷார்ட்பிட்ச் பந்துகள் ஒத்துவராது. வெற்றி பெற்றுவிட்டோம் என்பதால் இதை சரி என்று நினைக்கக்கூடாது. இந்திய பவுலர்கள் இங்கிலாந்து பாட்ஸ்மான்களின் பேட் விளிம்பை(Genuine Edge) தொடுவதுபோல் பந்துவீச வேண்டும். அதுதான் தொடர்ச்சியான பலன் தரும் என்றார்.

டிராவிட் சொன்னது சரி. டெஸ்ட் மாட்சுகளில் ஐந்து நாட்கள் என்பதால் ஷார்ட்பிட்ச் பந்துகளை தவிர்த்துக்கொண்டே இருக்கலாம். பொறுமையாகக் காத்திருந்து இலகுவாக வருபவற்றை மட்டும் பவுண்டரிக்கு விரட்டலாம். இங்கிலாந்து இந்த எளிய பாடத்தை மறந்துவிட்டு டிவண்டி டிவண்டி போல விளாச ஆரம்பித்ததும் வரிசையாக தவறுகள் செய்து தோற்றுப்போனார்கள். ஆனால் இதை உடனடியாக உணர்ந்து கொண்டு அடுத்தடுத்த டெஸ்ட்களில் ஷார்ட்பிட்ச் பந்துகளை கண்டுகொள்ளவே இல்லை. ஆனால் இதை உணராமல் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் தம் கட்டி ஷார்ட்பிட்ச் வீசியே களைத்துப்போனார்கள். இங்கிலாந்து எளிதாக வெற்றி பெற்றது.

டிராவிட் சொன்னதை கவனித்துக் கேட்டிருந்தால் இந்தியா ஒரு வெற்றிகரமான அணியாக இங்கிலாந்திலிருந்து திரும்பியிருக்கலாம். ஆனால்... பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம். உலகின் பிரபலமான கேப்டனாக இருந்தாலும் டிராவிட் போன்ற அனுபவசாலிகள் சொல்வதை கேட்க வேண்டும் என்பதுதான் இந்த சீரிஸ் கற்றுத்தந்திருக்கும் பாடம்.

Tuesday, July 29, 2014

சேரனின் C2H வெற்றி பெற சில யோசனைகள்

 திரு.சேரன் அவர்களுக்கு,
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் படம் எடுப்பது எளிது. ஆனால் அதனை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மிகமிகக் கடினம். C2H வழியாக அந்தக் கடினமான முயற்சியில் இறங்கியுள்ளீர்கள். அது வெற்றி பெற வேண்டும் என்று மனதார விரும்புகிறேன். எனவே எனது ஆதரவுடன் சில யோசனைகளையும் தெரிவித்திருக்கிறேன். எனது யோசனைகளில் ஒன்றாவது ஏற்கப்படலாம். அல்லது முற்றிலும் நிராகரிக்கப்படலாம். அல்லது ஏற்கனவே இப்படி ஒரு சிந்தனை உங்களுக்கு வந்திருக்கலாம். எது எப்படி இருந்தாலும் மேன்மேலும் சிந்தனைகளைத் தூண்டும் என்ற நம்பிக்கையுடன் எனது யோசனைகளை தந்திருக்கிறேன்.



தியேட்டர்களுக்கு எதிரானது என்ற எண்ணத்தை இப்போதே முறியடிக்கவேண்டும்.
தியேட்டர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு பாப்கார்ன் + கோக் காம்போ விற்பது போல பாப்கார்ன் + கோக் + DVD விற்பனைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். தனித்தனியாகவும் விற்கலாம்.

C2H திட்டத்திற்குள் வராத தயாரிப்பளார்களுடனும் சிநேகிதமாக இருக்க வேண்டும்.
C2H திட்டத்திற்கு வராமல் வழக்கமான முறையில் ரிலீசாகும் படங்களின் டிரெய்லர் மற்றும் Behind the Scenes போன்றவற்றுக்கு தங்கள் DVDயில் இலவசமாக அல்லது சிறு தொகை பெற்று இடம் தரவேண்டும்.

பழைய படங்களும் C2H DVDகளில் கிடைக்க வேண்டும்.
மோஸர்பேர் நிறுவனத்தைப்போல அல்லது அது போன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு பழைய படங்களையும் விற்பனை செய்ய வேண்டும். பழைய படங்கள் C2H திட்டத்திற்குள் வராத படங்களாகவும் இருக்க வேண்டும்.

தியேட்டர்களிலும் ரிலீஸ் செய்ய வேண்டும்
C2H வழியாக விற்பனை செய்யப்பட்டிருந்தாலும் அந்த படங்கள் தியேட்டர்களிலும் ஓரிரு நாட்களாவது ரிலீஸ் செய்யப்படவேண்டும். C2H ஸ்பெஷலாக நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு இரசிகர்களுடன் கலந்துரையாடலுடன் கூடிய திரையிடலாக இருக்க வேண்டும்.  இந்த பிரத்தியேக காட்சிக்கு C2H வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை தரவேண்டும்.

தொலைக்காட்சி ரிலீசும் கேபிள் டிவி ரிலீசும் அடுத்தடுத்து உடனடியாக நடக்க வேண்டும்
ரிலீசாகும் படத்தின் அத்தனை முன்னணி பின்னணி கலைஞர்களையும் இதன் வழியாக புரமோட் செய்து திரையுலகிலும், மக்கள் மனதிலும் இடம்பிடிக்க உதவ வேண்டும். உடனடியாக 30-60 நாட்களுக்குள் தொலைக்காட்சியிலும், கேபிள் டிவியிலும் ஒளிபரப்புவதை கட்டாயமாக்க வேண்டும். அப்போதுதான் C2H டிவிடி விற்பனையில் ஈடுபடுபவர்களும் துரிதமாக செயல்படுவார்கள்.

படத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் தனித்தனி தொகுப்பாக்க வேண்டும்
பாடல்காட்சிகள், நகைச்சுவை காட்சிகள், சண்டைக் காட்சிகள் என தனித்தனியாக தொகுப்பாக்கி தொலைக்காட்சி, IPTV மற்றும் வெப் டிவிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும்.

இணைய தளங்களிலும் ரிலீஸ் செய்ய வேண்டும்.
C2H ஆன்லைன் சேனல் துவக்கப்பட்டு, சந்தா கட்டுபவர்களுக்கு மட்டும் படங்களை ஸ்ட்ரீம் செய்யலாம். மேலும் பரவலாக்க IPTV மற்றும் மற்ற வெப் டிவிகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்.

ஷாப்பிங் மால்கள் மற்றும் தியேட்டர்களில் C2H Kiosk (Coffee/Coke + C2H)
C2H Card (அ) Coin (அ) கிரெடிட்/டெபிட் கார்டுகளை பயன்படுத்தி பாடல்காட்சிகள், நகைச்சுவை காட்சிகள், சண்டைக் காட்சிகள் என தனித்தனி மெனுக்களை உண்டாக்கி அவற்றை மொபைல்களில் டவுன்லோடு செய்து கொள்ள வழிசெய்யலாம். அல்லது அங்கேயே உள்ள திரைகளில் ஒளிபரப்பாக வழி செய்யலாம்.

மொபைல் இன்டர்நெட் நிறுவனங்களுடன் ஒப்பந்தம்
ஆன் டிமான்ட் முறையில் முழுபடம்/தனித்தனி காட்சி என இன்டர்நெட் (அ) மொபைலில் டவுன்லோடு செய்ய வழிசெய்யலாம்.

C2H திரைத்துறையின் மூத்த கலைஞர்களையும் அரவணைக்க வேண்டும்
மூத்த கலைஞர்களையும் ஆதரித்து அவர்களைப் பற்றிய முறையான ஆடியோ, வீடியோ பதிவுகளை தயார் செய்து ஒரு லைப்ரரி உண்டாக்க வேண்டும். அவற்றை ரேடியோ, டிவிக்களில் ஒளிபரப்ப வேண்டும். தமிழ் சினிமா வரலாற்றை டிஜிட்டலாக எந்த பாகுபாடும் இன்றி திரைத்துறையினர், பத்திரிகைத்துறையினர், விமர்சகர்கள், தொலைக்காட்சிகள் மற்றும் அரசின் ஒத்துழைப்போடு பதிவு செய்வது கட்டாயம்.

அடுத்த தலை முறையினருக்கு வழி காட்ட வேண்டும்
இளைய இரசிகர்கள், விஷிவல் கம்யூனிகேஷன் போன்று முறையாக படித்து வரும் மாணவர்கள் என அனைவருக்கும் அவ்வப்போது Movie appreciation போன்ற வொர்க்ஷாப்களை நடத்தி தரமான படைப்புகளை இனம் கண்டு இரசித்து ஆதரவளிக்க கற்றுத்தர வேண்டும். அவர்களுடைய படைப்புகளையும் C2H வழியாக வெளியிட வேண்டும்.

மற்ற கலை வடிவங்களுடன் ஒருங்கிணைய வேண்டும்
மக்கள் ஆதரவு குறைந்துவிட்டாலும் நாடகம், நடனம் என எவ்வளவோ அபாரமான முயற்சிகள் நடந்துகொண்டே உள்ளன. C2H டிவிடிக்களுடன் அவற்றின் டிக்கெட்டுகளையும் சேர்த்தே விற்பனைக்கு கொண்டுவரும் விற்பனை முறையை அறிமுகப்படுத்த வேண்டும். அவற்றையும் C2H டிவிடி மற்றும் இன்டர்நெட் சேனல்களில் கொண்டு வரவேண்டும்.

C2H ஆடியோ/வீடியோ ஸ்டுடியோக்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் நிறுவப்பட்டு இயங்கவேண்டும்.
இவற்றின் வழியாக திரைத்துறையினர் மட்டுமல்லாமல் மாணவர்களும் பயன்பெற வழி செய்ய வேண்டும்.

போட்டியை வரவேற்று எதிர்கொள்ள வேண்டும்
C2H சரியாக வராது என்பார் சிலர். அருமையாக வரும் என்பார் சிலர். இதைவிட நன்றாக ஒன்றை கொண்டு வருகிறேன் என்று களத்தில் இறங்குவார் சிலர். இந்நேரம் பல தந்திரமான பிசினஸ் மூளைகள் விழித்துக் கொண்டிருக்கும். நிச்சயமாக போட்டி அமைப்பு ஒன்று வரும். அப்போது வெறுக்காமல், அசராமல், அஞ்சாமல் மேன்மேலும் தன்னை புதுப்பித்துக்கொண்டு தொடர்ந்து இயங்க வேண்டும்.

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக மக்களை வசீகரித்துக் கொண்டிருக்கும் சினிமா என்ற கலை நவீன வடிவங்களுடன் மேன்மேலும் வாழும், வளரும்! C2H போன்று யார் முயற்சித்தாலும் ஒரு சினிமா ரசிகனாக நிச்சயம் வரவேற்பேன். உங்களிடம் நேரடியாகவே சில புன்னகைகளையும், எண்ணங்களையும் பகிர்ந்திருக்கிறேன் என்பதால் கூடுதல் அன்புடன் வரவேற்கிறேன். சியர்ஸ்!

Monday, July 28, 2014

சதுரங்க வேட்டை - க்ரைம் டெமோ

எப்படி ஏமாந்தேன்னு தெரியல என புலம்புபவர்களுக்கும், எப்படி ஏமாற்றலாம் என யோசிப்பவர்களுக்கும் ஒரு படம்.

கதை, திரைக்கதை என எதுவுமே புதிதல்ல. ஒரு திருடன் ஒரு காதலியால் மனம் திருந்துவதும், திருந்தியபின் மீண்டும் திருட நேர்வதும் மிகப் பழைய ஸ்க்ரிப்ட். ஆனால் அவன் எப்படித் திருடுகிறான், எதைத் திருடுகிறான் என்பதை விவரிக்கும் காட்சிகள் புதுசு.

நூதன திருடர்களை கைது செய்ததும், சம்பவ இடத்தில் வைத்து எப்படி இதை திருடினாய் செய்து காட்டு என போலீஸ் ஒரு டெமோ செஷன் வைக்கும். இந்தப் படம் முழுக்க அப்படிப்பட்ட டெமோக்கள் நிறைந்திருக்கிறது. இந்த செஷன்களுக்கு இடையில் திருடன், கோஷ்டி, எதிர்கோஷ்டி, காதலி, திருந்துதல், திருந்தியபின் சூது கவ்வுதல், அதிலிருந்து மீளுதல் என சில காட்சிகளை சொருகிவிட்டார்கள்.

வீரியம் தரும் மண்ணுள்ளிப் பாம்பு, கோடீஸ்வரனாக்கும் ஈமு கோழி, ஆள் சேர்த்தாலே பணக்காரனாக்கும் எம்.எல்.எம், ஆடித்தள்ளுபடியில் பாதி விலைத் தங்கம், நாட்டுக்கே ராஜாவாக்கும் ரைஸ் புல்லிங். இவை எல்லாம் தொடர்ச்சியாக மக்களை ஏமாளியாக்கிக்கொண்டிருக்கும் கவர்ச்சிகரமான க்ரைம்கள். ஏமாற்று எனத் தெரிந்தும் காலம் காலமாக மக்களை கவருகின்ற பணத்தாசை போதை இவை.

ரஜினி உச்சம் தொட்டபோது ஒரு ”Angry youngman" வெளிப்பட்டான். சாதாரண மக்கள் தட்டிக்கேட்க முடியாத அடாவடி அடக்குமுறைகளை ஒரு சாதாரண இளைஞன் தட்டிக்கேட்டான், ஜெயித்தான் என்பது ஃபார்முலாவாக இருந்தது. இப்போதைய டிரண்ட் அப்படியே வுல்டா. அநியாயத்தைக் கண்டு பொங்குவதில்லை. அவனே அந்த அநியாயத்தை செய்கிறான். ஹீரோவே சாமர்த்தியமான திருடனாக இருக்கிறான். நன்றாக வாழ திருடுவதும், ஏமாற்றுவதும் தவறில்லை என்கிறான். தவறு செய்ய அஞ்சும் மக்கள், தன் சார்பாக ஹீரோ திருடுவதையும், ஏமாற்றுவதையும் இரசிக்கிறார்கள். அவன் திருடி ஜெயிப்பது பிடிக்கிறது. அவனை கொண்டாடுகிறார்கள்.

கல்வி, மருத்துவம், ஆன்மிகம் என எல்லாவற்றிலும் பணம்... பணம்... பணம். பணம்தான் எல்லாம் என்ற காலகட்டத்துக்கு வந்துவிட்டோம். இந்த காலகட்டத்தில் சூது நிறைந்த தலைவர்களும், அவர்களுடைய குண்டர்களும்தான் வசதியாக இருக்கிறார்கள். அவர்கள்தான் நாட்டை ஆளுகிறார்கள் என்பதால், அவர்கள் செய்கிற தவறை நாமும் செய்தால்தான் என்ன என்ற ஏக்கமும், செய்வதற்குரிய பயமும் மக்கள் அனைவரிடமும் உள்ளது.

மக்கள் இரசிகர்களாக படம் பார்க்க வரும்போது அவர்களுடைய பயத்திற்கும், ஏக்கத்திற்கும் ஒரு வடிகாலாக இன்றைய படங்கள் இருக்கின்றன. சூதுகவ்வுமில் துவங்கி சதுரங்க வேட்டை இந்த குணக்கேட்டை புரமோட் செய்யும் படங்கள்தான்.

இடைவேளை வரை சுமார்தான்.. ஆனா ரைஸ்புல்லிங்னு ஒண்ணு இருக்காமே. அதை காமிக்கிற சீன் சூப்பரா இருக்காம் என்று மக்கள் பாப்கார்ன் க்யூக்களில் பேசிக்கொள்கிறார்கள். படத்தின் ஹீரோ ரைஸ்புல்லிங் டெமோதான். நடராஜின் ஒவ்வொரு அசைவிலும் 80களில் அவ்வப்போது தலைகாட்டிய ஆர்ப்பாட்டமில்லாத ரஜினி அமர்ந்திருக்கிறார். குரலும் தோற்றமும் ஒத்துழைக்கிறது. நாயகி இஷாரா பொருத்தமான தேர்வு. கலகலப்பு படத்திற்குப் பின் இளவரசு இதில் கச்சிதமான காமெடி. ரைஸ்புல்லிங் ஏமாற்றை படமாக்கியதில் மட்டும் இயக்குநர் விநோத் குறிப்பிடும்படியாக செய்திருக்கிறார்.

படத்தை தொய்வில்லாமல் உணரவைப்பது திரைக்கதை அல்ல. வசனமும், ஒவ்வொரு க்ரைமுக்கும் முன் வரும் டைட்டில்கார்டும்தான்.

ஃபேஸ்புக், கூகுள் பள்ஸ் மற்றும் டிவிட்டரில் வசிக்கும் சென்னைவாசிகளுக்கு படம் மிகவும் பிடித்திருக்கிறது. நானும் அங்கே வசிப்பவன்தான் என்றாலும் என்னால் இதை நல்ல படம் என்று ஒப்புக்கொள்ள முடியவில்லை. இது நல்ல படம் என்று சொல்லப்படுகிற ஹிட் படம் அவ்வளவுதான்.

படத்தில் காண்பிக்கப்படாத க்ரைம் ஒன்று இருக்கிறது.  ரைஸ்புல்லிங்கை விட மோசமான க்ரைம் அது. அதன் பெயர் ரெவ்யூ ஸ்கோரிங். ஆனந்தவிகடன் போன்ற பத்திரிகைகள் இந்த க்ரைமில் கில்லாடிகளாக இருக்கிறார்கள்.  தங்களுக்கு வேண்டியவர்களின் படமாக இருந்தால் இஷ்டத்துக்கு மார்க்குகளை அள்ளி வீசி, சம்பந்தப்பட்டவர்களின் பேட்டிகளால் பக்கத்தை நிரப்பி ஏதோ காவியம் ஒன்று ரிலீஸ் ஆகிவிட்டது போல இரசிகர்களை நம்ப வைக்கிறார்கள்.

அடுத்த க்ரைம் படத்தில் இந்த போலி விமர்சகர்களை யாராவது அம்பலமாக்கினால் வரவேற்பேன்.

Thursday, July 24, 2014

அரசியல்வாதிகளின் சொத்துக்கணக்கு என்பது எப்போதும் ஒரு மோசடிக்கணக்கு

கோபாலபுரம் வீட்டைத்தவிர தனக்கு வேறு ஏதும் சொத்துகள் இல்லை என்கிறார் திமுக தலைவர் கருணாநிதி. 

அகில இந்தியாவிலும் எந்த அரசியல் தலைவரைக் கேட்டாலும் அவர்களுடைய சொத்துக் கணக்கு இந்த ரீதியில்தான் இருக்கும். சாதாரண நடுத்தர மக்களே பினாமியில் டெபாசிட் பண்ணுவதும், சொத்து வாங்குவதும், அதன் மதிப்பை குறைத்து பதிந்து கொள்வதும் சகஜமாகிவிட்டது. அப்படி இருக்கையில் நம்மை விட படு உஷாரான அரசியல்வாதிகள் தங்கள் பெயரில் சொத்துக்களை வாங்கி, அதை கணக்கிலும் காட்டுவார்கள் என்பது வெறும் கற்பனையாகத்தான் இருக்க முடியும்.

அதனால் கருணாநிதி இப்படிச் சொன்னதில் எனக்கு ஒன்றும் ஆச்சரியமில்லை. தற்போதைய பரபரப்பு நாயகர் கட்ஜீ இதே போல மற்ற அரசியல் தலைவர்களையும் கணக்கு கேட்டால் பல வியப்பான போலி சொத்துத் தகவல்கள் நமக்குக் கிடைக்கும்.

அவ்வளவு ஏன்... பதிலுக்கு பதில் கட்ஜீவை சொத்துக் கணக்கு கேட்கிறார் கருணாநதிதி. ஒருவேளை கருணாநிதியின் கேள்வியை ஏற்று கட்ஜீ கணக்கு காட்டினால், கட்ஜீவின் சொத்துக்கணக்கே நம்மால் நம்ப முடியாத குறைச்சலான கணக்காகத்தான் இருக்கும்.

ஃபேஸ்புக்கில் புதிதாக Save வசதி

அப்புறம் பார்த்துக்கலாம் என்று தவற விட்ட ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்கள் பல. இனி அந்தக் கவலை இல்லை. Save என்றாரு புது பட்டனை ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தியிருக்கிறது. பிஸியாக இருக்கும்போது Save ஆப்ஷனை தேர்வுசெய்து சேமித்துக்கொண்டு, ரிலாக்ஸாக இரவில் படுத்துக்கொண்டு அவற்றை புரட்டிப் பார்க்கலாம். நண்பர்களின் ஸ்டேட்டஸ்கள் மட்டுமல்ல அவர்கள் குவித்து வைத்த புகைப்படங்கள், வீடியோ என எல்லாவற்றையும் Save செய்துகொள்ளலாம். கிட்டத்தட்ட Book mark.

அளவுக்கு அதிகமாக Save செய்வதிலும் ஒரு இம்சை இருக்கிறது. எக்கச்சக்கமாக குவிந்து போய் நமக்குத் தேவையானதை மட்டும் எடுக்க சிரமம் ஆகிவிடும். எக்கச்சக்கமாக Book mark செய்து வைப்பவர்கள் இதுபோல விழி பிதுங்குவதை கவனித்திருக்கிறேன். இந்த பிதுங்கல்களை குறைக்க அவற்றை Sort or Index செய்து தனித்தனி தொகுப்புகளாக பார்த்துக்கொள்ளும் வசதியும் உள்ளது.


ஆனால் இந்த புது Save வசதி தற்போது iOS ஃபோன்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. ஆன்ட்ராயிடுக்கும், பிசிக்களுக்கும் வருவதற்கு இன்னும் சில வாரங்களாகும். இந்த Save ஆப்ஷனுக்கு லைக்கா டிஸ்லைக்கா என்பது பயன்படுத்தியபின்தான் தெரியும்.

சென்னை தெருக்களில் மக்களை அச்சுறுத்தும் பைக் ரேஸ்!

அசோக்நகர், கே.கே.நகர் பகுதி காவல் துறை உயரதிகாரிகள் கவனத்திற்கு! 

இரவு 8.30 மணி இருக்கும். நெரிசலான காசி தியேட்டர் சிக்னலில் நின்று கொண்டிருந்தேன். பச்சை விழுந்த அடுத்த வினாடி எங்கிருந்துதான் அந்த மோட்டர் பைக்குகள் முளைத்தனவோ. விர்ரென்று சில வினாடிகளில் உதயம் தியேட்டரை தொட்டுவிட்டார்கள். ஏற்கெனவே வேகமாகச் சென்று கொண்டிருந்த கார்கள், லாரிகள், பஸ்களுக்கு இடையே கண நேரத்தில் ஒடித்து திருப்பி எப்படித்தான் இவர்களால் ரேஸ் ஓட்ட முடிகிறதோ?

மற்றொருநாள் அதே போல் இன்னொரு சம்பவம். நெசப்பாகம் டாஸ்மாக் அருகில். இரவு 9 மணி இருக்கும். அதே இளைஞர்களாக இருக்கலாம். தைரியமாக நடக்கக்கூட வழியில்லா டிராபிக்கின் உள்ளே ஒவ்வொரு வாகனத்தையும் மெலிதாக உரசி நடுங்க வைத்துவிட்டு இரண்டு பைக்குகள் ஒன்றையொன்று துரத்திக்கொண்டு மறைந்தன.

இது போல அதே ஏரியாக்களில் மேலும் 3 சம்பவங்களை என்றால் குறிப்பிட முடியும். அதிர வைக்கும் வேகம் காரணமாக என்னால் அந்த பைக்குகளின் நம்பர்களை குறித்து வைக்க முடியவில்லை. சில நேரம் அங்கிருக்கிற பாரத் பெட்ரோலியம் பெட்ரோல் பங்கிலிருந்தே ரேஸ் துவங்குகிறது. பயங்கரம்... பெட்ரோல் பங்கில் எங்காவது மோதிவிட்டால் என்ன ஆவது?

யார் செய்த அதிர்ஷ்டமோ. ஹெல்மெட் கூட அணியாமல் மக்கள் நடமாடும் சாலைகளில் ரேஸ் ஓட்டும் அந்த இளைஞர்களுக்கு எந்த அபாயமும் ஏற்படவில்லை. பொதுமக்களுக்கும் அலறி அடங்கிய சில நிமிட இதயத் துடிப்பைத் தவிர பெரிய பாதிப்பு இல்லை. ஆனால் எல்லா நாட்களும் இதுபோல விபத்தின்றி தப்பிப்பது சாத்தியமில்லை.

நான் குறிப்பிட்டுள்ள இரண்டு சம்பவங்களின் போதும் போலீஸ் வாகனங்கள் இருந்தன. காவலர்கள் அந்த மோட்டர் பைக்குகளை பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள். அவர்களைப் பிடிப்பதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதற்குக் காரணம் அலட்சியமா? அந்த ரேஸ் இளைஞர்களின் (அரசியல்/அதிகார/பணம்) பின்புலமா? எனத் தெரியவில்லை. 

கத்திப்பாரா முதல் தி.நகர் வரை ரேஸ் - 5 பேர் - பரிசு ரூ.4000/-
லயோலா கல்லூரி முதல் கடற்கரை வரை ரேஸ்! 6 பேர் - பரிசு ரூ.1000/-
அடையாறு முதல் கடற்கரை வரை ரேஸ்! 4 பேர் - பரிசு ரூ.750/-
இதெல்லாம் கடந்த சில மாதங்களில் ரேஸ் ஓட்டிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டபோது கிடைத்த விபரங்கள். ஆனாலும் தெருக்களில் பைக் ரேஸ் ஓட்டுவது ஆங்காங்கே நடந்து கொண்டே இருக்கிறது.



இதில் கிடைப்பது பணமோ? த்ரில்லோ? எதுவாக இருந்தாலும் மக்கள் புழங்கும் சாலைகளில் ரேஸ்களை அனுமதிப்பதை ஏற்கவே முடியாது. உடனடியாக அந்த பொறுப்பில்லாத இளைஞர்களை தடுக்க வேண்டும். மக்களுக்கு பாதுகாப்பான சாலைகளைத் தர வேண்டும்

Saturday, July 19, 2014

MH 17 விமானம் சுடப்பட்ட மர்மம் : அமெரிக்கா - ரஷ்யா சண்டையாகிக்கொண்டிருக்கிறது.


மலேசியவிமானம் MH 17 சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம் பெரிய அண்ணன்களான அமெரிக்க, ரஷ்ய சண்டையாக மாறிக்கொண்டிருக்கிறது. 

33,000ம் அடி உயரத்தில் பறக்கிற விமானத்தை சுட்டு வீழ்த்த வேண்டுமானால் வலிமையுள்ள ஏவுகணை வேண்டும். அதை துல்லியமாக இயக்க நன்றாக பயிற்சி பெற்றவர்கள் வேண்டும். அப்படிப்பட்ட ஏவுகணையும், இயக்கும் பயிற்சியும் உக்ரைன் நாட்டுக் கிளர்ச்சியாளர்களுக்கு இருக்க வாய்ப்பு உண்டு. 

உக்ரைன் நாட்டுக் கிளர்ச்சியாளர்களுக்கு ரஷ்யா தொடர்ந்து பயிற்சியும் ஆதரவும் கொடுத்துவருகிறார்கள். ஏவுகணை கிளர்ச்சியாளர்களின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியிலிருந்துதான்  ஏவப்பட்டுள்ளது. எனவே ஏவுகணை இயக்கப்பட்ட விதத்தையும், ஏவப்பட்ட பகுதியையும் கவனிக்கும்போது எல்லா சந்தேகங்களும் உக்ரைன் கிளர்ச்சியாளர்களை நோக்கி குவிகிறது. 

விமானத்தை சுட்டு வீழ்த்த உக்ரைன் கிளர்ச்சியாளர்களுக்கு ரஷ்யா உதவி செய்துள்ளது என்று அமெரிக்க அதிபர் ஒபாமா நேரடியாகவே குற்றம் சுமத்துகிறார்.  

சமீபகாலமாக ரஷ்யா மீண்டும் தலையெடுக்க முயல்வதும், அமெரிக்கா எரிச்சலுடன் கவனிப்பதும் நடந்துகொண்டே இருக்கிறது. எனவே அமெரிக்காவின்  இந்தக் குற்றச்சாட்டு உண்மையா? பொய்யா? என்பதை கணிப்பது கடினம்.

உக்ரைன் அதிபர் படு கோபத்தில் இருக்கிறார். மது குடித்த கொரில்லாக்களால் இதைச் செய்ய முடியாது. நிச்சயம் ரஷ்யாவின் ஆதரவுடன் கிளர்ச்சியாளர்கள்தான் இதைச் செய்திருப்பார்கள் என்கிறார் காட்டமாக.

விமானம் வீழ்ந்து கிடக்கும் பகுதி தற்போது கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. பயணிகளின் உடல்களை அவர்கள் தான் கண்டுபிடித்து சேகரித்து வருகிறார்கள். இதனை கண்காணிக்க யாரையும் அவர்கள் அனுமதிக்கவில்லை. தைரியமாக நெருங்கிய பத்திரிகையாளர்களை வானத்தை நோக்கி சுட்டு விரட்டியடித்திருக்கிறார்கள். அப்பாவி பயணிகளின் உடல்கள் கொடுமையான வெப்பத்தில் கிடக்கின்றன. எனவே அவற்றை விரைவில் குலைந்து போகாமல் தடுக்க நாங்கள் பத்திரப்படுத்தி வருகிறோம் என்கிறார்கள். ஆனால் அவர்கள் தடயங்களை அழிக்கிறார்கள் என்று ஒபாமாவும், உக்ரைன் அதிபரும் குற்றம்சாட்டுகிறார்கள். சர்வ தேச மனித உரிமை ஆர்வலர்களை ஒரு குறிப்பிட்ட எல்லை வரை அனுமதித்துவிட்டு, அந்தப் பகுதி மக்கள் எவருடனும் பேசக்கூடாது எனச் சொல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 

பிளாக் பாக்ஸை காணோம் என்கிறது உக்ரைன். விபத்து நடந்த முதல் சில மணி நேரங்களிலிருந்தே ரஷ்யாவை குற்றம் சொல்ல ஆரம்பித்துவிட்டது அமெரிக்கா. ஒபாமாவே நேரடியாக ரஷ்யாதான் காரணம் என்கிறார். இது உக்ரைன் உள்நாட்டுப்பிரச்சனை அல்ல. இதில் உலக நாடுகளின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளது. எனவே மற்ற நாடுகளும் இதில் தலையிட்டு விசாரிக்க வேண்டும் என்று உக்ரைன் பிரச்சனையை வழக்கம்போல தனது ஸ்டைலில் சர்வதேசப் பிரச்சனையாக்க அமெரிக்கா முயல்கிறது. ரஷ்யாவோ அசரமாட்டேன்கிறது. இன்னும் விசாரணையே துவங்கவில்லை. அதற்குள் ஏன் தீர்ப்பு தருகிறீர்கள் என்று அமெரிக்காவின் மேல் பாய்கிறது. உக்ரைன் உள்நாட்டுக் கிளர்ச்சியாளர்களுக்கும் இந்த தாக்குதலுக்கும் தொடர்பே இல்லை என்று நற்சான்றிதழ் தருகிறது. இப்படி மாறி மாறி அமெரிக்காவும், ரஷ்யாவும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டு அப்பாவி மக்களையும், நாடுகளையும் பலிகொடுக்கிறார்களோ என எனக்குத் தோன்றுகிறது.


ஆனால் முக்கியமான சில கேள்விகள் இருக்கின்றன. உக்ரைன் நாட்டு கிளர்ச்சியாளர்கள் மலேசிய விமானத்தை ஏன் சுட்டு வீழ்த்தவேண்டும்? அதனால் அவர்களுக்கு கிடைக்கும் அரசியல் ஆதாயம் என்ன? ரஷ்யாவின் உத்தரவை ஏற்று இந்த தாக்குதலில் ஈடுபட்டார்கன் எனச் சொல்வது உண்மையாக இருந்தால், ரஷ்யாவிற்கு இதனால் என்ன இலாபம் என்பது தெளிவாகத்தெரியவேண்டும்.

இந்தக் கேள்விகளுக்கு ரஷ்யா வாய் திறக்கப்போவதில்லை. ஆனால்  அமெரிக்காவோ, உக்ரைன் அதிபரோ பதில் சொல்வார்கள் என்றால், மர்ம முடிச்சுகள் அவிழக்கூடும்.

Wednesday, July 16, 2014

கேப்போம்ல : முதலமைச்சராக செயல்பட இன்னும் என்னதான் வேண்டும் ஜெயலலிதாவிற்கு?

ஒரு முதலமைச்சராக செயல்பட இன்னும் என்னதான் வேண்டும் ஜெயலலிதாவுக்கு?
சட்டசபையில் எதிர்கட்சிகளே கிடையாது. பாராளுமன்றத்தில் கிட்டத்தட்ட எதிர்க்கட்சி.
இங்கு இவர் ஆட்சி. மத்தியில் அவருக்குப் பிடித்த மோடியின் ஆட்சி.
அவருடைய எதிரிகள் கருணாநிதியும், காங்கிரசும் வீழ்ந்து கிடக்கிறார்கள்.

ஆனாலும் இன்னமும் ஹோல் சேல் மளிகைக்கடை முதலாளி போலவே செயல்படுகிறார். தான் முதலமைச்சர் என்பதையே மறந்துவிட்டார். 

எதைக் கேட்டாலும் மலிவு விலை கொசுறு கொடுத்து ஃபோட்டோ எடுத்துக்கொள்கிறார்.
மின்தடை இருக்கே என்றால், மின் தடை இல்லை மின்வெட்டுதான் இருக்கு என்று வார்த்தைகளால் ஏமாற்றுகிறார்.

இலங்கைப் படையினரால் இன்னமும் மீனவர்கள் கைது தொடர்கிறதே என்றால், கச்சத் தீவை மீட்போம் என்கிறார். எப்போது என்றால் காவிரிக்காக போராடுவோம் என்கிறார். காவிரி என்ன ஆச்சு என்றால் முல்லைப் பெரியாருக்கு தாவுகிறார். முல்லைப் பெரியார் பிரச்சனைக்கு என்ன வழி என்றால் மத்திய அரசை கை காட்டுகிறார். மத்திய அரசு அந்த 7 பேரை விடுதலை செய்யுமா என்றால், கருணாநிதி ஆட்சி சரியில்லை என்கிறார்.

நடந்துகொண்டிருப்பது இவருடைய ஆட்சி. ஆனால் இவர் கருணாநிதி ஆட்சி நடக்கிறது என நினைத்துக்கொண்டிருக்கிறாரோ என்று சந்தேகம் வருகிறது. அவரை மக்கள் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பி 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் அவரை எதிர்த்து அறிக்கைவிட்டால் அதுதான் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு என்பது போல செயல்படுகிறார்.

டாஸ்மாக் வருமானத்தை பெருக்குவது. அந்த வருமானத்தில் மலிவு விலை அம்மா பிராண்டுகளை அறிமுகப்படுத்துவது, கருணாநிதியை திட்டி அறிக்கை விடுவது. இவற்றைத் தவிர இந்த 3 ஆண்டுகளில் உருப்படியாக எதையுமே செய்யவில்லை ஜெயலலிதா.

மீண்டும் கேட்கிறேன், அரசியல் வானிலை முற்றிலும் அவருக்கு சாதகமாக இருந்தாலும் ஏன் செயல்பட மறுக்கிறார்? சட்ட மன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் அவரே கற்பனை செய்யாத அளவிற்கு மக்கள் அரசியல் வெற்றியை தந்திருக்கிறார்கள். பதிலுக்கு கொஞ்சமாவது மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். நீண்டகாலத்திட்டங்கள் அறிமுகப்படுத்த வேண்டும். ஆனால் 3 ஆண்டுகள் ஆனபின்பும் அதற்கான அறிகுறியே இல்லையே. இன்னும் என்னதான் வேண்டும், ஜெயலலிதாவுக்கு?

#கேப்போம்ல  

ராமானுஜம் - திரைக்கதை இல்லாத திரைப்படம்

திரு. ஞானராஜ சேகரன் அற்புதமான, அவசியமான ஒரு பணியை செய்து கொண்டிருக்கிறார். பாரதியார், காமராஜர், பெரியார் மற்றும் ராமனுஜம் என நாம் மறந்த மேதைகளின் வாழ்க்கைகளை தனது திரைப்படங்களின் வழியாக பதிவு செய்கிறார். அடுத்த தலைமுறைக்கு இவர்களின் வாழ்க்கையை அறிமுகப்படுத்த இப்படி ஒரு பதிவு அவசியம் தேவைப்படுகிறது. அதற்காக ஒரு சபாஷ்.

ஆனால் . . . அவருடைய முயற்சிகள் எப்போதும் மேலோட்டமாகவே இருக்கின்றன. அவருடைய முயற்சியில் ஆழம் இல்லை. கதையாக நிகழ்வுகளை வரிசைப்படுத்திவிடுகிறார். இது மிகவும் கடினமானது. ஆனால் ஒருபோதும் கதையை திரைக்கதையாக்க அவர் மெனக்கெட்டதில்லை.

ஒருவரின் வாழ்க்கையை கதையாக வரிசைப்படுத்துவதை விட, ஒரு திரைப்படத்திற்கு ஏற்ற திரைக்கதையாக மாற்றுவது மிக மிக சவாலான ஒரு விஷயம். இந்த சவாலுக்கு அவர் ஒரு போதும் தன்னை உட்படுத்திக் கொண்டதில்லை. மோகமுள்ளில் துவங்கி ராமானுஜன் வரை அவர் திரைக்கதை என்ற ஏரியாவிற்குள்ளேயே வரவில்லை. அவருடைய அத்தனை படங்களும் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தாதற்குக் காரணம் திரைக்கதையில் அவர் கவனம் செலுத்தவே இல்லை என்பதுதான்.

ராமானுஜன் படத்தில் அவர் இந்தக் குறையை சரி செய்திருப்பார் என நினைத்தேன். ஆனால் இதில் இன்னும் மோசம். ராமானுஜன் வாழ்க்கையைப் பொறுத்தவரை நாம் அறிந்தது மிக மிக சொற்பமே. அதனால் சுவாரசியமான நிஜ சம்பவங்கள் இல்லவே இல்லை. திரைக்கதாசிரியருக்கு ஒரு வகையில் இது அனுகூலம். கதையை அடுத்தடுத்து நகர்த்துவதற்கும், ஒரு காலத்திலிருந்து இன்னொரு காலத்திற்கு நகர்வதற்கும் புத்திசாலித்தனமாக சம்பவங்களை கற்பித்து எழுதிக்கொள்ளலாம்.

ஆனால் துளியும் திரைக்குத் தேவையான கற்பனை ஏதுமின்றி துண்டுத் துண்டுக் காட்சிகளாக படம் நகரும்போது மனம் ஒன்ற மறுக்கின்றது. நல்லவேளையாக போரடிக்கும்போதெல்லாம் விசிலடித்து, கூச்சலிட்டு மற்றவர்களை இம்சிக்கும் எவரும் வந்திருக்கவில்லை. அதனால் மொத்த தியேட்டரும் அமைதியாக எந்த ஒன்றுதலும் இல்லாமல் இடைவேளை வரை காத்திருந்தோம்.

ராமானுஜன் என்ற கணித மேதை நமக்குள் ஏற்படுத்தி வைத்திருக்கும் பிம்பம்தான் அந்த பொறுமையைக் கொடுக்கிறது. இந்தப்படம் நாம் அறியாத யாரைப்பற்றியோ இருந்திருந்தால் நான்கைந்து காட்சிகளுக்குள் பொறுமையிழந்திருப்போம்.

ராமானுஜன் தனது கணித மேதைமையால் முதலில் வகுப்பாசிரியரை ஆச்சரியப்படுத்துகிறார், அடுத்து கோவில் பட்டரை ஆச்சரியப்படுத்துகிறார், அதற்கடுத்து வயதில் பெரிய பட்டதாரிகளை ஆச்சரியப்படுத்துகிறார், பின்னர் புரொபசரை, பிரின்ஸிபாலை, ஊர் பெரியவரை, கலெக்டரை, சென்னை பல்கலைக்கழகத்தை என ஒவ்வொருவராக வரிசையாக ஆச்சரியப்படுத்துகிறார்.  ஆனால் அவர் ஆச்சரியப்படுத்தும் காட்சிகளில் இயக்குனரும், திரைக்கதாசரியரும்  புத்திசாலித்தனமாக எதுவும் செய்யாததால் மகா போரடிக்கிறது.

கணிதத்தில் பெரிய மேதையாக இருந்தாலும் மற்ற பாடங்களை பாஸ் பண்ண முடியாத சாதாரண மாணவனாக தாழ்வு மனப்பான்மை கொண்டவனாக இருக்கிறார். தனது தந்தை உட்பட எவரும் தனது திறமையை அங்கீகரிக்காததால் வீட்டை ஓடிவிடுகிறார், இரயில் முன் படுத்து தற்கொலைக்கு முயற்சிக்கிறார், தனி அறையில் அமர்ந்து அழுகிறார்.

தனது திறமையை இந்த உலகுக்கு தெரிவிக்க அவர் தைரியமாக தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்யவில்லை. அவரது திறமை மற்றவர்களின் முயற்சியால்தான் மற்றவர்களுக்கு தெரிந்திருக்கிறது.

தன்னம்பிக்கை இல்லாத ஒரு மாபெரும் கணித மேதை தான் ராமானுஜன் என்கிற எண்ணம் நமக்கு படத்தின் இறுதியில் ஏற்படுகிறது. ஆனால் அவருடைய மனப்போராட்டங்களும், மேதைமையின் உச்சங்களும் பலமில்லாத வசனங்களால் படத்தில் சொல்லப்படுகிறது. ஆழமான காட்சிகள் மிஸ்ஸிங். Beautiful Mind படத்தில் இது போன்ற மனச்சிக்கல் கொண்ட ஒரு மேதை அபாரமாக சித்தரிக்கப்பட்டிருப்பார். அந்த அளவிற்கான ஸ்கோப் இருந்தும் ராமானுஜன் வெகு சாதாரணமாக படமாக்கப்பட்டுவிட்டது.

ரமேஷ் விநாயகத்தின் இசையில் இரண்டு பாடல்கள் அருமையாக இருக்கின்றன. பிண்ணனி இசையும் பரவாயில்லை. எடிட்டிங் லெனின். படத்தின் நீளத்தை வெட்டி எறிவதிலேயே அவருக்கு பாதி நேரம் செலவாகியிருக்கும் என நினைக்கிறேன். சில காட்சிகளை அவர்தான் வரிசைப்படுத்தினாரோ என்று கூட தோன்றுகிறது.

நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு மேதையை அறிமுகப்படுத்துகிற படம் என்பதால் மட்டும் இந்தப்படத்தை நான் வரவேற்கிறேன். அடுத்த படத்திலாவது நல்ல திரைக்கதை குழுவை வைத்துக்கொண்டு களத்தில் இறங்க வேண்டும் என திரு.ஞானராஜ சேகரனுக்கு வேண்டுகோள் வைக்கிறேன்.

பணத்தை சேமிக்க 6 வழிகள் : பணக்காரர்கள் செய்வதும் - மற்றவர்கள் செய்யாததும்


பள்ளிக்கூடம் படிக்கும்போதே சேமிக்கத் துவங்கவேண்டும்.
தற்போது ஒரு சர்வதேச நிறுவனத்தில் தலைமை அதிகாரியாக இயங்கும் எனது நண்பன் பள்ளிப்படிப்பை முடிக்கும்போது ஒரு ப்ரீமியர் பத்மினி கார் வாங்கினான். கல்லூரி முடிக்கும்போது ஒரு வீடு வாங்கிவிட்டான். நம்பினால் நம்புங்கள்... அனைத்தும் உண்டியலில் சேர்த்த பணம் மட்டுமே.

பெரிய தொகையாக சேமிக்க வேண்டும்.
சேமிப்பில் கஞ்சத்தனம் கூடாது. இயன்றவரை பெரிய தொகையாக சேமிக்க வேண்டும்.பக்கத்துவீட்டு அங்கிள் ஒருவர் சம்பளக் கவர் வந்ததும் 50 சதவிகிதத்தை RD, FD, SB என வகை பிரித்து உடனே பாங்கில் போட்டுவிடுவார். அவரது மனைவி செலவுக்கு பணம் இல்லை என்று சண்டை பிடித்தாலும் அசரமாட்டார். சேமிப்புத் தொகையிலிருந்தே அவருடைய இரண்டு மகள்களுக்கும் நயா பைசா கூட கடன் இல்லாமல் திருமணம் செய்துவிட்டார்.

வங்கிகளின் தானியங்கி (Automatic Fund Transfer) சேவைகளை பயன்படுத்தவேண்டும்
அரசாங்கத்தில் வேலை பார்த்த என் நண்பர் ஒருவர் வங்கியிலிருந்து கிடைக்கும் வட்டியை விட்டு வைக்கவே மாட்டார். RDகணக்கிற்கு மாதத்தவணையாக கட்டிவிடுவார். RD முழுமை அடைந்ததும் அப்படியே அதை FDயா மாற்றிவிடுவார்.  இவற்றையெல்லாம் செய்வதற்கு வங்கியில் சொல்லி ஆட்டோமேட்டிக் வசதிகளை வாங்கி வைத்துக்கொண்டிருக்கிறார். எனவே மழை, சோம்பேறித்தனம், அவசர செலவு என எதற்கும் வீணாகாமல் இந்த பணப்பரிமாற்றங்கள் எல்லாம் ஆட்டோ டிரான்ஸ்பராக நடந்துவிடுகிறது.

ஓய்வு காலத்திற்கு வேண்டிய தொகையை திட்டமிட வேண்டும்
நான் உட்பட நண்பர்களில் பலர் ஐம்பது வயதாகியும் வேலை செய்துகொண்டே இருக்கிறோம். ஆனால் பழம் என்று நாங்கள் கேலி செய்த நண்பன் ஒருவன், அமைதியாக மகள், பேரன், பேத்தி மற்றும் மருமகனுடன் பொழுதைக்கழித்துக் கொண்டிருக்கிறான். பென்ஷன் போல அவனுடைய சேமிப்புத் தொகையிலிருந்தே வட்டி வருகிறது. அதனால் தன் தேவைகளுக்கு யாருடைய தயவையும் எதிர்பாராமல் தலைநிமிர்ந்து வாழ்கிறான்

கிரெடிட் கார்டு தவணைகளை குறித்த தேதிக்குள் கட்ட வேண்டும்.
எனது சகோதரன் இந்த விஷயத்தில் எக்ஸ்பர்ட். தேவை பெரிதாக இருந்தால் கிரெடிட் கார்டு வழியாகத்தான் வாங்குவான். ஆனால் குறித்த தேதிக்குள் திருப்பி செலுத்திவிடுவான். இதனால் அவனுக்கு வட்டியில்லா கடன் சாத்தியமாகிறது. அவனுடைய க்ளீன் நடவடிக்கையால் வங்கியில் அவனுக்கு நல்ல பெயர். கிரெடிட் கார்டு லிமிட் ஏறிக்கொண்டே இருக்கிறது. அவனால் எல்லா அவசரத் தேவைகளையும் சமாளிக்க முடிகிறது (குறித்த காலத்தில் திருப்பிச் செலுத்திவிடுவதால்).

ஏழையைப் போல செலவழிக்க வேண்டும்
ஆஸ்திரேலியாவில் கல்லூரிப் பேராசியரியராக கை நிறைய சம்பாதிக்கும் எனது நண்பர் ஒருவர், எளிமையாக ஒரு ஏழையைப் போலத்தான் செலவு செய்வார். மால்களை முற்றிலும் தவிர்ப்பார். குழந்தைகளுக்காக மால் தியேட்டர்களுக்கு வந்தாலும் அங்கே அனாவசியமாக உணவுகளுக்கு செலவழிப்பதை தவிர்ப்பார். கார் வைத்திருந்தாலும் குடும்பத்தோடு பல இடங்களுக்கு பஸ்ஸில் சென்று வருவார். அப்படிச் சேமிக்கிற தொகையை கல்விக்கும் மருத்துவத்திற்கும் பயன்படுத்துகிற கலையை அவருடைய குடும்பமே கற்றிருக்கிறது.

முதலீடு செய்வது (Invest) என்பது பணத்தை விரைவாகப் பெருக்க ஒரு வழி. ஆனால் இதில் ரிஸ்க் உண்டு. எந்த அபாயமும் இல்லாமல் நிதி சுதந்திரத்துடன் வாழ இந்த வழிகள் உதவும் என்பது என் அனுபவப்பாடம்.