Tuesday, May 12, 2009

ஜெயலலிதாவை எச்சரித்த சீமான்!

திரைப்படத் துறையினரின் தேர்தல் பரப்புரையை நேற்று முன்னறிவிப்பின்றி ராஜ் டிவி நேரடி ஒளிபரப்பு செய்தது. அதை உள்வாங்கி மக்கள் தொலைக்காட்சியும் ஒளிபரப்பியது. அனைவருமே உணர்ச்சிப் பிழம்பாக கொதித்தார்கள். கூட்டம் ஆர்ப்பரித்தது. நான் மக்கள் தொலைக்காட்சியில் இந்த பரப்புரையைக் கண்டேன். பிரபாகரன் என்ற பெயர் உச்சரிக்கப்படும்போதெல்லாம் ஆடியோ காணாமல் போய்விட்டு மீண்டும் வந்தது. ராஜ்டிவியில் எப்படியோ தெரியவில்லை. ஆனால் சீமான் பேச ஆரம்பித்தவுடன் ஆடியோக்காரர் எங்கேயும் கை வைக்கவில்லை.

சீமான் படு நிதானமாக ஆரம்பிக்கிறார். அவருடைய முதல் குரல் கேட்டவுடனேயே அவ்வளவு பெரிய கூட்டமும் அவருடைய குரலுக்கு கட்டுப்படுகிறது. நேரம் ஆக ஆக வேகமெடுக்கும் நீராவி இயந்திரம் போல, அவருடைய பேச்சில் அனல் கூடிக் கொண்டே போகிறது. அவருடைய பேச்சில் இலயிக்கும் அனைவரின் உணர்வுகளையும் தனது வீச்சினால் இதயத்தின் அடி ஆழம் வரை ஊடுருவிக் கிளறுகிறார். அவர் குரலை உயர்த்தும்போதெல்லாம் புலி உறுமுவதைப் போல இருக்கிறது. மகத்தான ஆளுமை. ஒவ்வொரு தமிழ் வார்த்தைக்கும் இவ்வளவு சக்தியா? அல்லது அவர் உச்சரிக்கும்போதுதான் அவ்வளவு சக்தி பெறுகிறதா?

இராமேஸ்வரத்தில் அவருடைய பேச்சைக் கேட்டேன். நேற்றைய பரப்புரை எனக்கு கிடைத்த இரண்டாவது வாய்ப்பு. இராமேஸ்வரம் பேச்சைப் போல சுருக்கமாகவும், கொந்தளிப்பாகவும் நேற்று இல்லை. காரணம் . . .

இராமேஸ்வரம் முதல் இன்று வரை மாறியிருக்கும் அரசியல் சூழல்! இலங்கைப் பிரச்சனையை அடக்கி வாசிக்க வேண்டும். இது கருணாநிதியின் அரசியல் கட்டாயம். இலங்கைப் பிரச்சனையை உயர்த்திப் பிடிக்க வேண்டும். இது ஜெயலலிதாவின் அரசியல் கட்டாயம். ஆழ் மனதுக்குப் பிடித்த கருணாநிதியை எதிர்க்க வேண்டும். அரசியல் மனதிற்குப் பிடித்த ஜெயலலிதாவை ஆதரிக்க வேண்டும். உணர்வுக்குப் பிடித்த திருமாவளவனை விட்டுத்தராதிருக்க வேண்டும். இந்த இரட்டை மனநிலை சீமானின் அரசியல் கட்டாயம்.

அவருடைய பேச்சில் இது வெளிப்படையாகவே எதிரொலித்தது. காங்கிரஸையும், சோனியாவையும், மன்மோகன் சிங்கையும் வெளுத்து வாங்கினார். ஆனால் ஒரு இடத்தில் கூட கருணாநிதியின் பெயரை உச்சரிக்கவில்லை. காங்கிரசுக்கு ஓட்டுப்போடாதீர்கள் என்று திரும்பத் திரும்ப சொன்னார். ஆனால் சூரியனுக்குப் போடாதீர்கள் என்று சொல்ல அவருக்கு நா எழவில்லை. திருமாவளவனை ஒரு இடத்தில் கூட அவர் விட்டுத்தரவில்லை. இந்த குழப்ப மனநிலையால் அவருடைய பேச்சில் அனல் கம்மியாக இருந்தது.

திடீரென ஜெயலலிதாவை ஆதரிக்க நேரிட்ட குற்ற உணர்வும் அவரை ஆட்டிப்படைத்தது. தனி ஈழம் அமைத்துத் தருவேன் என்று சொன்ன ஒரே காரணத்திற்க்காக நான் அந்த பெருமகளை ஆதரிக்கிறேன். ஆனால் தேர்தல் முடிந்தவுடன் தனி ஈழக் கோரிக்கையை கை விட்டால் . . .? (என்று என் போன்றவர்களின் சந்தேகங்களுக்கும் பதில் சொன்னார்) தேர்தல் முடிந்தவுடன் தனி ஈழக் கோரிக்கையை கை விட்டால் இதே சீமான் தமிழகம் முழுவதும் சுற்றிச் சுற்றி உங்களை எதிர்ப்பேன் என்று அதிரடியாக ஜெயலலிதாவின் பெயரைச் சொல்லாமல் முழங்கினார்.

ஆனால் சீமான் ஒன்றை மறந்து விட்டார். இன்று அக்கினிக் குஞ்சாக உலகம் முழுவதும் தமிழ் இன உணர்வை பற்ற வைத்துக் கொண்டிருக்கும் சீமான், தேர்தலுக்குப் பின் ஜெயலலிதாவை எதிர்க்கும் ஒரு நிலைக்கு வந்தால், இன்று வரை அவருடன் மேடையை அலங்கரித்தவர்கள் பலர் அவரை விட்டு விலகுவார்கள். அது மட்டுமல்ல அவருடைய வீர முழக்கத்தை வெறும் வெற்று முழக்கமாகவே மக்கள் பார்ப்பார்கள். கருணாநிதி - ஜெயலலிதாவின் அரசியல் விளையாட்டுகளில், வெட்டுப்பட்ட சாதாரண சிப்பாயாக குறுகிவிடும் அபாயம் அவருக்கு உண்டு.

ஆனால் அப்படி ஆகிவிடக் கூடாது என்று எனது மனது நினைக்கிறது. சீமானின் நண்பர்களில் ஒருவர் எனக்கும் நண்பர். ”சினிமாவையே நேசித்து, சினிமாவையே சுவாசிக்கிற ஒருத்தர் தான் சீமான்” என்று அவர் சீமானைப் பற்றிச் சொல்வார். அது ஈழப்பிரச்சனை இனப்படுகொலையாக உருவெடுக்கும் முன்பு. இன்று என்னைக் கேட்டால் ”தன் இனத்தை நேசித்து, தன் இனத்தையே சுவாசிக்கிற ஒருவர் தான் சீமான்” என்று சொல்வேன்.

ஆனால் அரசியல் விளையாட்டுகள் மிகவும் கொடூரமானவை. அதில் நேர்மையை விட துரோகங்கள் தான் அதிகம். இன்றைக்கு அவர் விரும்பாமலேயே அந்த விளையாட்டுக்குள் அவரும் இருக்கிறார். துரோகம் சீமான் என்கிற அற்புத இளைஞனை வென்று விடாமலிருக்க வேண்டும்! உணர்வுகளைப் புதைத்து, கேளிக்கையின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கும் இளைஞர்களை மீட்டெடுக்க, நாளைய தமிழினத்திற்கு அவன் தேவை!

10 comments:

Anonymous said...

முதல் முறையாய் ஒரு உருப்படியாய் ஒரு பதிவு போட்டு இருக்கிறிர்கள் நன்றி

NADESAN said...

Good warning to Jaya

malar said...

ஜெயலலிதா அரசியல் லாபத்திற்காக இலங்கை பிரச்னையை கையில் எடுத்திருக்கிறார் .

angel said...

Mega Nalla pathivu

Anonymous said...

suprerb ... but seeman always have a special place in true tamilian heart ... its true .. anbudan ella thamilan

Anonymous said...

seeman u have aspecial place in tamil people hearts


anbudan oru thamilan

அருண் பிரபு said...

mukiyamaana, avasiyamaana pathivu ungaludayathu....

nanri..

அருண் பிரபு said...

avasiyamaaana pathivu ungaludayathu..

nanri.

Anonymous said...

இங்கே இருக்கும் அரசியல் வாதிகளால் ஒன்றும் செய்ய முடியாது என்பதுதான் உண்மை

சூனிய விகடன் said...

பதிவர்களை விடுங்க......இந்த சூனியர் விகடன்காரன் இருக்கானே.....வாராவாரம் "புலிகள் வட்டாரத்தில் விசாரித்ததில் " அப்பன்டின்னு பீலா உடுவான்.....பேசினாராம் ....தாடியை சொரிந்து கொண்டே கேட்டாராம்....லேசான செருமலுடன் சிரித்தாராம்....என்று "ராம்" மொழியில் புலனாய்வு பத்திரிக்கை நடத்தி வரும் சூனிய விகடன் சூ...ல் வச்சாங்கப்பா மொளகாய ....ரசினியை தூக்கிக்கொண்டு ரொம்ப நாள் ஊர்வலம் வந்தவனுங்க இந்த ஒரு வருஷமா "ராஜீவ் காந்தி தற்கொலை தான் செய்து கொண்டார்" ங்கற ரேஞ்சுக்கு டகால்டி விட ஆரம்பிச்சுட்டானுக.......இந்த தேர்தல் முடிவுகள் சூனிய விகடன் மாதிரி மேஜை மேல உக்காந்து பீடி குடிச்சுகிட்டே ஈழம் , பிரபாகர சரிதம் என்று பாடியவங்களுக்கு ஒரு மரண அடி