Tuesday, May 12, 2009

தி.மு.க கூட்டணி முந்துகிறது - என்.டி.டி.வி

கருணாநிதிக்குப் பிடிக்காத NDTV கருணாநிதிக்குப் பிடித்த ஒரு கருத்துக்கணிப்பை வௌயிட்டிருக்கிறது.

கணிப்பு 1 - ஏப்ரல் மாதம்
தி.மு.க கூட்டணி - 20 முதல் 22 வரை
அ.தி.மு.க கூட்டணி - 19 முதல் 21 வரை

கணிப்பு 2 - இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு முடிந்தவுடன்
தி.மு.க கூட்டணி - 21
அ.தி.மு.க கூட்டணி - 18

கணிப்பு 3 - மூன்றாம் கட்ட வாக்கெடுப்பு முடிந்தவுடன்
தி.மு.க கூட்டணி - 21
அ.தி.மு.க கூட்டணி - 18

கடைசிக்கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் ஜெயலலிதாவின் ஹெலிகாப்டர் பிரச்சாரமும், கருணாநிதியின் வீல் சேர் பிரச்சாரமும் இந்த நிலையை மாற்றாது என்றுதான் தோன்றுகிறது.

தி.மு.க மக்களுக்கு மட்டும் இலவசங்களை வழங்கவில்லை. எதிர்க்கட்சிகளுக்கும் மின்வெட்டு, விலைவாசி, வேலைவாய்ப்பில் மந்தம் போன்ற இலவசங்களை வாரி வழங்கியது. இதை விஜயகாந்த் கெட்டியாக பிடித்துக்கொண்ட அளவிற்கு அ.தி.மு.க பிடித்துக்கொள்ளவில்லை. ஸ்ரீஸ்ரீரவிசங்கர் போன்ற குருஜிக்களின் இரகசிய விசிடிக்களை பார்த்துவிட்டு, திடீரென தமிழ்தாய் வேஷம் போட்டுக்கொண்டு, தனி ஈழம் பெற்றுத் தருவேன் என்பதை தனது தேர்தல் முழக்கமாக மாற்றிக் கொண்டுவிட்டார். “தமிழ் பதிவர் உலகத்திலும்“, ”உலகமெங்கும் உள்ள சில ஈழ ஆதரவாளர்கள் மத்தியிலும்”, ”எப்போதுமே ஈழத்தை ஆதரிக்கும் ஜெ. ஆதரவாளர்களிடத்திலும்”, ”கருணாநிதியின் அரசியல் நிலையால் ஏமாந்த சீமான் போன்ற அதீத உணர்வாளர்களிடத்திலும்” இதனால் ஒரு பெரிய சலசலப்பு எழுந்துள்ளது. ஆனால் அந்த சலசலப்பு மிகக் குறுகிய ஒரு வட்டம் என்பதும், அது கூட இன்னமும் முழுமையாக தி.மு.க எதிர்ப்பாக மாறவில்லை என்பதும் என் எண்ணம். எனவே தி.மு.க ஓட்டு சிதறும் ஆனால் பதற வைக்காது. இங்கே தி.மு.க தவற விடுவது போல அங்கே அ.தி.மு.க விஜயகாந்திடம் சில ஓட்டுக்களை தவறவிடும். எனவே தி.மு.கவைப் பொறுத்தவரை கணக்கு சரியாகிவிடும் என்று நான் நினைக்கிறேன்.

மிக முக்கியமாக ”மானாட மயிலாட பார்க்க விரும்புகிற மக்களை”, ”ஈழப் பிரச்சனை குறித்து பரிதாபப்படுகிற மக்களாக” அ.தி.மு.வின் பிரச்சாரம் மாற்றவில்லை. காரணம் ஜெவின் தனி ஈழ கோஷம் சந்தேகங்களையும், ஆச்சர்யங்களையும் சமமாகத்தான் உண்டாக்கியிருக்கிறது.

கருணாநிதிக்கு அவருடைய முதுமை ஒரு அட்வான்டேஜ். அவருடைய ஆட்சியின் பலகீனங்களை அவருடைய வீல்சேர் விசிட் எளிதாக மறைக்கிறது. ஜெயலலிதாவின் தனிநபர் அட்டாக்கும், மக்களை நெருங்காத ஹெலிகாப்டர் பயணங்களும், ஓட்டுக்களை அள்ளித்தருமா என்றால் சந்தேகம்தான்.

எந்த அலையும் இல்லாத ஒரு தேர்தல். யார் பிரதமர் என்பதைப் பற்றி பேசாமல், கருணாநிதி, ஜெயலலிதா சண்டையாக மாறிப்போன லோக்கல் தேர்தல். பி.ஜே.பியெல்லாம் இந்த தேர்தலில் நிற்கிறதா என்றே பொதுமக்களுக்குத் தெரியவில்லை.

சுருக்கமாகச் சொன்னால் பா.ம.க வின் அணிமாற்றத்தால் தி.மு.க கூட்டணி 40லிருந்து 20க்குச் சுருங்கும். அ.தி.மு.க கூட்டணி ஜீரோவிலிருந்து 20க்கு விரியும்.

கருத்துக்கணிப்பின் படி தி.மு.கவின் வெற்றியாக அதன் ஆதரவாளர்கள் நினைக்கிறார்கள். ஆனால் சென்ற பாராளுமன்றத்தேர்தலில் தி.மு.க கூட்டணி 40 தொகுதிகளையும் வென்றது. அ.தி.மு.க ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை. அந்த வகையில் இது அ.தி.மு.கவிற்கு ஒரு திருப்தியான தேர்தல்தான். ஆனால் ஜெயலலிதாவின் இரகசிய பிரதமர் கனவிற்கும், அப்படி இல்லாத பட்சத்தில் எதிர் வரும் மத்திய அரசின் உதவியுடன் மைனாரிட்டி தி.மு.க மாநில அரசுக் கலைப்பிற்கும் இது உதவாது. அதே போல அவருடைய ”தனி ஈழ” கோஷத்தை மேலும் வலுவாக்கவும் இந்த ரிசல்ட் பயன்படாது.

ஆனால் இருதரப்புமே இதனால் ஏமாற்றமாக உணரும் என்பதுதான் இந்தத் தேர்தலின் ஸ்பெஷாலிட்டி!

என் கணிப்பு 1 - கடைசிக் கட்ட வாக்கெடுப்பு முடிந்தவுடன்
தி.மு.க கூட்டணி - 20
அ.தி.மு.க கூட்டணி - 19
விஜயகாந்த் - 0 (ஓரிரு தொகுதி தவிர அனைத்து தொகுதியிலும் டெபாஸிட் இழப்பார்)
அ.தி.மு.க, தி.மு.கவின் வெற்றி தோல்விகளில் வாக்கு வித்தியாசம் மிகப் பெரியதாக இருக்காது. இது விஜயகாந்திற்கு சட்டமன்ற தேர்தலில் டிமாண்டை அதிகரிக்கும்.
Post a Comment