Thursday, May 14, 2009

இந்தியாவை வட்டமிடும் அமெரிக்க கழுகு

A. Peter Burleigh, US Charge d’Affaires (head of mission) -
இவர் தெற்கு ஆசியாவின் நாடித்துடிப்பை அறிந்தவர். சிங்களம், பெங்காலி மற்றும் ஹிந்தி மொழிகளை சரளமாக பேசக் கூடியவர். ஒரு மாதத்திற்கு முன்பு இவர் இந்தியாவிற்கு வந்து பொறுப்பேற்றபோது யாருக்கும் இவரைத் தெரியாது. ஆனால் நேற்றிலிருந்து இந்திய அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் வல்லுனர்களின் ஊகஙகள் மற்றும் வியுகங்களுக்கு தீனிபோடுபவராகிவிட்டார்.

இந்திய பாராளுமன்றத் தேர்தலுக்கான கடைசிக் கட்டத் தேர்தலில் நாடு முழுவதும் பரபரப்பாக இருக்கும்போது, அமெரிக்க தூதரகத்தின் சார்பில் பர்களே பி.ஜே.பியின் பிரதம வேட்பாளரான அத்வானியை சந்தித்தது பல்வேறு சிந்தனைகளை தூண்டிவிட்டிருக்கிறது. அவர் அத்வானியை மட்டும் சந்திக்கவில்லை சந்திரபாபு நாயுடு மற்றும் புது அரசியல்வாதி சிரஞ்சீவியையும் சந்தித்திருக்கிறார்.

சில அரசியல்கட்சிகளும், மீடியாக்களில் ஒரு பகுதியினரும் இந்திய அரசியலில் அமெரிக்கா மூக்கை நுழைப்பதாக சந்தேகப்படுகிறார்கள். இடதுசாரிகளின் தலைமையில் உள்ள மூன்றாவது அணியில் சந்திரபாபு நாயுடு உள்ளார். ஒருவேளை மூன்றாவது அணி இந்தியாவில் ஆட்சி அமைக்க முயற்சித்தால் அதற்கு அவரும், சிரஞ்சீவி போன்றவர்களும் ஆதரவு அளிக்கக் கூடாது என வலியுறுத்தவே இந்த சந்திப்பு நடந்தாக கொதிக்கிறார்கள்.

இடதுசாரிகளின் தலைமையில் மூன்றாவது அணி அமைந்தால் அதில் அமெரிக்காவிற்கென்ன பிரச்சனை?
இடதுசாரிகள் இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்ப்பவர்கள். அதை காரணம்காட்டிதான் காங்கிரஸ் அரசை விட்டு வெளியே வந்தார்கள். ஒருவேளை அவர்கள் பதவிக்குவந்தால் அணுசக்தி ஒப்பந்தம் கிடப்பில் போடப்படும் என்று அவர்கள் பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்கள். ஆனால் அமெரிக்காவை பொறுத்தவரை ஜார்ஜ் புஷ்ஷாக இருந்தாலும் சரி, ஒபாமாவாக இருந்தாலும் சரி, இந்த ஒப்பந்தம் தொடர்வதில் குறியாக உள்ளார்கள். அதனால் அதற்கு குறுக்கே நிற்கும் எவரையும் உளவுத்துறை மற்றும் வெளியுறவுத்துறை வழியாக அமெரிக்கா தனிமைப்படுத்த நினைக்கிறது. அதே நேரத்தில் அதற்கு ஆதரவளிப்பவர்களை ஒன்று சேர்க்கவும் முயற்சி செய்கிறது. அதற்குத்தான் நாயுடு, சிரஞ்சீவி மற்றும் அத்வானி சந்திப்புகள் எல்லாம்.

அத்வானி அதாவது பி.ஜே.பியும் அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்க்கிறதே என்று சிலர் கேட்கலாம். பி.ஜே.பி, ஜெயலலிதா போன்றவர்கள் அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்க்கிறார்களே ஒழிய முழுக்க தூக்கி எறிய வேண்டும் என்று சொல்லவில்லை. அதில் சில மாற்றங்கள் செய்துகொள்ளலாம் என்றுதான் சொல்கிறார்கள். அதனால் இவர்களை ஒன்று சேர்த்து தனக்கு ஜால்ரா அடிக்க அமெரிக்கா முயற்சி செய்கிறது.

ஜால்ரா அடிப்பதைத்தான் ஏற்கனவே காங்கிரஸ் செய்து கொண்டிருக்கிறதே என்றும் சிலர் கேட்கலாம். உண்மைதான் . . . ஆனால் இன்றைய நிலவரப்படி தேர்தல் கணிப்புகளில் காங்கிரஸ் அதிக இடங்களைப் பெற்றாலும் மீண்டும் இடதுசாரிகளின் துணையின்றி ஆட்சி அமைக்க முடியாது. அப்படி அமையும் ஆட்சி இடதுசாரிகளின் தலையீட்டால் முழுக்க முழுக்க அமெரிக்கா சொல்வதை கேட்கும் அரசாக இருக்க முடியாது.

எனவே அணுசக்தி ஒப்பந்தத்தை சில மாற்றங்களுடன் ஏற்கும் பி.ஜே.பி தலைமையில் சில கட்சிகளை ஒருங்கிணைத்து இந்தியாவில் புதிய ஆட்சி அமைக்க அமெரிக்கா முயலுகிறது என்று நான் நினைக்கிறேன். இதற்கு எது காரணமாக இருந்தாலும் இது அமெரிக்காவின் அத்துமீறல்தான். இந்தத் தேர்தலிலேயே அமெரிக்க பணமும், அதிகாரமும் எங்கேயோ உள்குத்து செய்திருக்கிறதோ என்ற சந்தேகமும் வருகிறது.

”அமெரிக்கா இந்திய அரசியலின் உள்விவகாரங்களில் தலையிடுவதை வன்மையாக கண்டிக்கிறோம்” என்று இந்த சந்திப்புக்கு இடதுசாரிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.

ஆனால் ”அமெரிக்கா இந்தியத் தேர்தலில் தலையிடவில்லை. இன்னும் ஒரு மாதத்தில் ஹிலாரி கிளிண்டன் வரவிருப்பதால் அதற்கு முன்னேற்பாடாக இந்த சந்திப்புகள்” என்று மொக்கையாக ஒரு விளக்கத்தை அமெரிக்கா கொடுத்திருக்கிறது.

குழம்பியிருக்கும் இந்திய அரசியல் வானில் அமெரிக்க கழுகு வட்டமிட ஆரம்பித்திருக்கிறது. இந்தியா ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

1 comment:

butterfly Surya said...

சரியான பார்வையும் பதிவும்.

வாழ்த்துகள்.