Thursday, April 30, 2009

ஜெயலலிதா நினைப்பது போல இலங்கைப் பிரச்சனை ஓட்டு வாங்கித் தருமா?

கருணாநிதியின் முதல் பிரச்சாரக் கூட்டம் நமுத்துப் போன பட்டாசு. ஆனால் அவருடைய உண்ணாவிரதத்திற்குப் பிறகு தொண்டர்கள் கொஞ்சம் தெம்பாக நடப்பது போல ஒரு பிரமை. ஆனாலும் கருணாநிதி அவருடைய அடுத்த கட்டப் பிரச்சாரத்தில் இலங்கைப் பிரச்சனையை கொஞ்சம் அமுக்கியே வாசிப்பார் என்று நினைக்கிறேன். இலங்கைப் பிரச்சனையை விட ஒரு ரூபாய் அரிசியும், கலர் டிவியும் தனக்கு அதிக வாக்கு பெற்றுத் தருமென இன்னமும் அவர் நினைப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

ஆனால் ஜெயலலிதாவும், அவருடைய மீடியா மேனேஜர்களும் இலங்கைப் பிரச்சனையை பெரிய ஓட்டு வங்கியாக நினைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் இலங்கைப் பிரச்சனை நிச்சயமாக ஜெயலலிதாவிற்கு ஓட்டு வாங்கித் தராது என்றுதான் நான் எண்ணுகிறேன். ஜெயலலிதாவின் திடீர் ஈழ ஆதரவு பிரியாணியில் சர்க்கரை போட்டு சாப்பிடுவது போல, ஒட்டவே மாட்டேன்கிறது. கருணாநிதியால் ஏமாற்றப்பட்டுவிட்டதாக நினைக்கும் பல தீவிர ஈழ ஆதரவு வாக்காளர்களைத் தவிர மற்றவர்களை ஜெயலலிதாவின் திடீர் ஈழ ஆதரவு எந்த வகையிலும் பாதிக்கவில்லை. குறிப்பாக அ.தி.மு.க. கட்சித் தொண்டர்களை ஜெவின் ஈழ ஆதரவு வசனங்கள் ஈர்க்கவில்லை. ஜெவின் பிரச்சார மீட்டிங்குகளில் தொண்டர்களின் ரியாக்ஷனைக் கவனித்தால் புரியும். ஜெ கருணாநிதியை திட்டினால் கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. இலங்கைப் பிரச்சனையில் உண்ணாவிரதம் உட்பட கருணாநிதியைப் பற்றிய எந்தக் கிண்டலையும் கூட்டம் இரசிக்கிறது. ஆனால் அனல் பறக்க ஈழ ஆதரவு வசனம் பேசும் போது ஸ்..ஸ்..யம்மா என்று வெயில் தாங்காமல் வெறுமனே விசிறிக் கொண்டிருக்கிறது. அவர்களுக்குள் ஈழ உணர்வு என்பது துளியும் கிடையாது. அ.தி.மு.க தொண்டர்களைப் பொறுத்தவரையில் எம்.ஜி.ஆர் தான் தலைவர், ஜெயலலிதா அவருடைய வாரிசு, கருணாநிதி இவர்களின் எதிரி, என்று மிக சிம்பிளான மசாலாப்பட பாணியில் கொள்கை படைத்தவர்கள். அவர்களுக்கு ஜெயலலிதாவின் திடீர் பல்டியும் ஈழ ஆதரவும் இன்னமும் அஜீரணமாகவே இருப்பதாகவே எனக்குப் படுகிறது.

கருணாநிதி இம்சையால், தமிழக காங்கிரஸ் அவ்வப்போது தங்களுக்கும் இலங்கைப் பிரச்சனையில் அக்கறை இருப்பதாக அறிக்கை விட்டாலும், காங்கிரஸைப் பொறுத்தவரை பிரபாகரன் என்பவர் ராஜீவ் கொலையாளி. எனவே எந்தக் காலத்திலும் காங்கிரஸ்காரர்கள் ஈழப்பிரச்சனையை முன்னிறுத்தி அதை ஆதரிப்பவர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள். கருணாநிதியும் இதை புரிந்து கொண்டு அடக்கி வாசிக்கிறார், ஜெயலலிதாவின் குடைச்சல் காரணமாக அவ்வப்போது பட்டும்படாமல் இலங்கைப் பிரச்சனைகளை பேசுகிறார்.

அம்மா முதலில் சாதாரணமாக ஈழ ஆதரவு என்றார். தற்போது வழக்கம் போல அதிரடியாக ”படையெடுத்துப் போய் தனி ஈழம்“ என்று முழங்குகிற அளவுக்கு வந்துவிட்டார். கூட்டணித் தலைவர்களுடன் ஒரே மேடையில் கருணாநிதியை தாக்குவதை மட்டும் முன்னிலைப் படுத்தி பிரச்சாரம் துவங்கியபோது கூட்டமும், ஆர்ப்பரிப்பும் இணைந்தே இருந்தது. ஆனால் லட்டு போன்ற மின்சாரப் பிரச்சனை, அழகிரி பிரச்சனை, விலைவாசிப் பிரச்சனைகளை ஒதுக்கிவிட்டு ஈழப் பிரச்சனையை மட்டும் முன்னிலைப் படுத்தியபின் . . . கூட்டமிருக்கிறது, ஆனால் உற்சாகம் மைனஸ்.

5 comments:

கடைக்குட்டி said...

ஆனால் உற்சாகம் மிஸ்ஸிங்....

யெஸ்.. அத நானும் ஃபீல் பண்ணேன்..

Benedict Alphonse said...

neengal solvathu 100 ikku 100 % unmail.. carry on..

asfar said...

I am not a Indian, but i too feel so..
greeting

Sutha said...

//அ.தி.மு.க தொண்டர்களைப் பொறுத்தவரையில் எம்.ஜி.ஆர் தான் தலைவர், ஜெயலலிதா அவருடைய வாரிசு, கருணாநிதி இவர்களின் எதிரி, என்று மிக சிம்பிளான மசாலாப்பட பாணியில் கொள்கை படைத்தவர்கள். //

அருமையான ஆய்வு ...ஆமா நீங்க எந்த கொள்கை படைத்தவர் எண்டு சொல்லவே இல்லை?

Anonymous said...

So Vaiko diverted Jaya from people's problems to Tamil Ealam.So the victory will be caused by him not by her.