Sunday, August 17, 2008

பாலைவனத்தில் கருகும் இந்தியர்கள்

நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருப்பது போல துபாயில் வேலை செய்யும் நமது தமிழர்கள் மற்றும் மலையாளிகள் அனைவரும் வசதியாக இல்லை. இந்தியாவுக்கு லீவுக்கு வந்து போகும் வசதியுள்ளவர்கள் பிளாட்டுகளில் பத்துக்கு பத்து அறையில் ஒரு படுக்கையில் (Bed Space) வசிக்கிறார்கள். நமது சேரிகளை விட மோசமான (Labour Camps) லேபர் காம்புகளில் வசிப்பவர்கள் அதைவிட மோசமாக ஏர்கண்டிஷன் கூட வேலை செய்யாத அறைகளில் கும்பல் கும்பலாக துபாய் வெயிலில் இரவிலும் வெந்து கொண்டிருக்கிறார்கள்.

இவர்களின் மோசமான வாழ்க்கைத் தரம் பற்றி ஒரு செய்தித் தொகுப்பை வெளியிடுவதற்க்காக சில மாதங்களுக்கு முன் மக்கள் தொலைக் காட்சியில் வேலை செய்யும் நண்பரிடம் இருந்து ஒரு அழைப்பு வந்தது. அது தொடர்பாக எனது துபாய் நண்பர்கள் அனைவரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். ஒருவர் கூட துபாயை குறை கூறி பேச முன் வரவில்லை. அனைவருமே பயந்து ஒதுங்கினார்கள். எதற்கு வம்பு என்று அலறினார்கள். நான் துபாயில் அவர்களை சந்தித்தபோது, கண்ணீர் விட்டு கதறியவர்களும், தொலைபேசியில் கூட நான் இதைப் பற்றி பேச மாட்டேன் என்று மறுத்தார்கள்.

காரணம் பிழைப்பு பற்றிய பயம். தனது குடும்பத்தின் எதிர்காலத்தை பற்றின பயம். தன்னுடைய திறமை வேறு எங்கும் செல்லுபடியாகாது என்ற பயம். அதனால் பாலைவனத்தில் வெந்து செத்தாலும், அதை சகித்துக்கொண்டு நம்மில் சிலர் அங்கேயே இருக்கிறார்கள்.

உங்கள் நண்பர்களோ, குடும்பத்தினரோ, உறவினர்களோ அரபு நாடுகளில் இருந்தால் கேட்டுப்பாருங்கள். தொடர்ந்த வற்புறுத்தலுக்குப் பின் தங்கள் உண்மை நிலையை ஒப்புக் கொள்ளக்கூடும். என்னுடைய கூற்றில் எந்த மிகைப் படுத்தலும் இல்லை.

அமேரிக்காவிலோ அல்லது சிங்கப்பூரிலோ அல்லது ஆஸ்திரேலியாவிலோ அல்லது வேறு எந்த நாட்டில் வாழும் NRIகள் பெருமையாக தனது அப்பா அம்மாவை வருடத்திற்கு ஒரு முறை தாம் வசிக்கும் நாடுகளுக்கு அழைத்துச் சென்று சுற்றி காட்டுவார்கள்.

துபாயில் லேபர் காம்பில் வசிக்கும் யாராவது அப்படி பெருமை பட்டுக்கொண்டதுண்டா?

1 comment:

மங்களூர் சிவா said...

வெளி தேசங்களுக்கு செல்பவர்கள் குறைந்தது மிடில் மேனேஜர் லெவலில் செல்ல வேண்டும் லேபராக சென்றால் இந்த கதிதான். இது எமிரேட்ஸ் என்றாலும் சரி சிங்கப்பூராக இருந்தாலும் சரி.


/
அமேரிக்காவிலோ அல்லது சிங்கப்பூரிலோ அல்லது ஆஸ்திரேலியாவிலோ அல்லது வேறு எந்த நாட்டில் வாழும் NRIகள் பெருமையாக தனது அப்பா அம்மாவை வருடத்திற்கு ஒரு முறை தாம் வசிக்கும் நாடுகளுக்கு அழைத்துச் சென்று சுற்றி காட்டுவார்கள்.
/

துபாய், அபுதாபியிலும் அதுபோல நல்ல பணியில் இருப்பவர்கள் அழைத்து செல்கிறார்கள்.